!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, November 4, 2025

மோடி கோவிலுக்கு போவதும், அமெரிக்காவின் மதச்சார்பின்மையும்


முகநூலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். சமீபத்தில்தான் கவனித்தேன். அதாவது மோடி அடிக்கடி கோவிலுக்கு போகிறாராம். அதை தொலைக்காட்சிகள் அடிக்கடி காட்டுகிறார்களாம். இதை வைத்து ஒரு மேதாவி எழுதிய கருத்தை, இந்த ஜேம்ஸ் வசந்தன் எனும் இன்னொரு மேதாவி அவருடைய முகநூலில் பகிர்ந்திருந்தார். வழக்கம்போல் ஜேம்ஸ் வசந்தனின் அடிவருடிகள், அதாவது சிறுபான்மை சிந்தனையாளர்கள், வந்து அவர்களுடைய கருத்துக்களையும் வாந்தி எடுத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் அதிபர் சர்ச்சுக்கு போவதை காட்டமாட்டார்களாம், இஸ்லாமிய நாடுகளில் மன்னர்கள்/ஷேக்குகள்/ மசூதிக்கு போவதை காட்டமாட்டார்களாம். அந்த அளவுக்கு அவர்கள் சமதர்ம கொள்கையை கடைபிடிப்பவர்களாம். இதுதான் அந்த பதிவின் முக்கிய கருத்து. ஆனால் இந்தியாவில் மதவாதம் எப்படி இருக்கிறது பாருங்கள் என எல்லோரும் கோரஸாக வருத்தப்பட்டிருந்தார்கள்.

இந்த பதிவை எழுதியவர் ஒரு கிறிஸ்துவர், பகிர்ந்தவர் ஒரு கிறிஸ்துவர் அங்கே வந்து வாந்தி எடுத்த பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் என்பதுதான் உண்மை. மற்றபடி அவர்கள் படிக்க விரும்பிய தகவல்களை படித்து, அதை மட்டும் ஆர்வத்தோடு நமக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்ல மறந்த /மறைத்த தகவல்களை நாம் இங்கே பார்ப்போம்.

அதற்கு முன் ஒரு சின்ன காமெடி. இங்கே அகமதாபாத்தில் நான் வேலை செய்த இடத்தில், பக்கத்தில் இருந்த ஒரு கம்பெனியின் முதலாளி வந்தார். இங்கிருந்த ஊழியர்களிடம் மொபைல் போன் வாங்கி ஏதோ செய்தார். தெரிந்த ஒரு நிறுவனத்தின் முதலாளி என்பதாலும் எல்லா ஊழியர்களும் போனை போனை கொடுத்ததால், ஏதோ காரணம் இருக்கும் என நானும் கொடுத்தேன்.

அதில் என்னவோ செய்தவர் `போன் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது` என்று சொன்னார். `என் வாழ்க்கை அதைவிட ஸ்லோ, அதையே என்னால் சரி செய்யமுடியவில்லை` என மைண்ட் வாய்ஸில் சொல்லிவிட்டு அவரை பார்த்து புன்னகைத்தேன்.

`ஒடிபி வர்றதுக்கு ரொம்ப லேட்டாவுது` என்று அவர் சொன்ன போதுதான் எனக்கு பகீர் என்றது. என் போனில் ஒடிபி வாங்கும் அளவுக்கு அவருக்கு என்ன வேலை? இவர் ஏதோ வில்லங்கம் செய்கிறார் என்பது புரிந்தது. வங்கியில் வேறு கோடிக்கணக்கில் பணம் இருக்கிறதே என பதைபதைத்தேன். அதன்பின் அதுசரி நம்ம அகௌண்ட்டுல பணம் இருந்தாத்தானே தலைவலி என சமாதானமானேன்.

பின்னர் அவர் `ஒடிபி ஆகயா` என்று சொல்லி அந்த ஒடிபியை கொடுத்து என் போனில் அவருடைய இமாலய கடமையை முடித்தபிறகுதான் போனை என்னிடம் கொடுத்தார். அப்படி என்னதான் என் போனில் அவர் செய்தார் என பார்த்தபோதுதான் விதி என்னை பார்த்து சிரித்தது.

`வாழ்த்துக்கள்.. நீங்கள் பிஜேபியில் உறுப்பினராகிவிட்டிர்கள்` என அதில் மெசேஜ் இருந்தது. என்னத்த சொல்றது. தமிழ்நாட்டில் மக்களிடம் திமுக ஒடிபி கேட்டதை தடுக்க சொல்லி நீதிமன்றம் வரை போனதை கவனித்தோம். இங்கே பிஜிபி அப்படியெல்லாம் கிடையாது. நேரா போனையே வாங்கிக்குவோம் என்ற வகை. இப்படியாடா கட்சியை வளர்ப்பீங்க என தலையில் அடித்துக்கொண்டேன்.

இருந்தாலும் நான் இப்போது வேறு வழியில்லாத பிஜேபி உறுப்பினர். இனி சிபிஐ, அமலாக்கத்துறை, சுப்ரீம் கோர்ட் என யாரா இருந்தாலும் சரி,  என் மீது கை முடியாது.

இது ஒரு கிளை செய்திதான். இதை அகமதாபாத் காமெடிகள் என படித்துவிட்டு நகரவும். மற்றபடி பிஜேபி மீது வெறுப்பும் இல்லை, காதலும் இல்லை. யார் செய்தாலும் தப்பு தப்புதான் என்ற வகை நான்.

இனி பதிவுக்குள் போவோம். பொதுவாகவே மனிதர்கள் ரொம்பவே வித்தியாசமானவர்கள். அவர்களின் பேச்சை கேட்டு பல நேரங்களில் நானும் குழம்பிப்போயிருக்கிறேன். சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு உறவினர் வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்தேன். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒரு விசேஷத்தில் ஒருவர் என்ன அழைத்த விதம் சரியில்லை. நான் அதை பொருட்படுத்தவில்லை. வீடே இல்லாத மனிதனுக்கு மரியாதையை என்ன வாழுது என்ற சித்தாந்தத்தில் நான் இருந்தேன்.

ஒரு உறவினர் அதை கவனித்தார். `நீ கல்யாணம் பண்ணி குடும்பமா இருந்தா அவங்க உன்னை முறையா கூப்பிட்டிருப்பார்கள்` என்று சொன்னார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. கல்யாணம் பண்ணி குடும்பம் பண்ணாதான் உலகம் உன்னை மனிதனாக/ அறிவாளியாக நினைக்கும் என ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார். அதற்கான வாய்ப்பு அறவே இல்லை. இருந்தாலும் குடும்பஸ்தர்கள் அறிவாளிகள் என்ற கருத்தை அன்று அவர் எனக்குள் விதைக்க முயற்சித்தார்.

இது நடந்தது திங்கட்கிழமை என்று வைத்துக்கொள்வோம். புதன்கிழமை காட்சி மாறியது. அன்று யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை எங்கோ செய்துவிட்டார். அவரை இவர் மிக கடுமையாக விமர்ச்சித்தார். `அறிவுக்கெட்டத்தனமா செய்யறான். அது இது.... ` என அர்ச்சனை கடுமையாக இருந்தது. யார் அவர் என்று கவனித்தால் அவர் ஒரு குடும்பஸ்தர். இவருடைய திங்கட்கிழமை சித்தாந்தத்தின்படி குடும்பஸ்தர்கள் அறிவாளி என்றால், அறிவாளிகள் எது செய்தாலும் அது சரியாகத்தானே இருக்கும்? ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு புதன்கிழமை/வியாழக்கிழமை என பல நாட்களை பார்த்துவிட்டேன். இதேதான் நிலைமை.

அதன்பின் இங்கே அகமதாபாத் வந்தேன். இங்கேயும் அதே தலைவலிதான். திடிரென்று திங்கட்கிழமை தியரி வெளியே வரும். அதன்பின் அவர்கள் சொன்னதையே மறந்துவிட்டு வரிசையாக மற்ற நாட்களில் குடும்பஸ்தர்களையே கழுவி ஊற்றுவார்கள். இதை கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் கவனித்துவிட்டேன். 

`யோவ்.. உங்களுடைய திங்கட்கிழமை தத்துவத்திற்கும் மற்ற நாட்களில் நீங்க பேசற பேச்சுக்கும் சம்மந்தமே இல்லையே` என கேட்கத்தோணும். ஆனால் வீடில்லாதவனுக்கு மரியாதையும் கிடையாது கோவமும் வரக்கூடாது என்ற அனுபவ பாடம் பலமாக எனக்குள் பதிந்துவிட்டதால் மனிதர்களிடம் பழகுவதை குறைத்துக்கொண்டு அரசியல், இணையம் என்று இங்கே உலா வந்தால், இங்கேயும் அதே தலைவலி.

ஒரு வீடியோவில் ஸ்டாலின் /உதயநிதியை கழுவி ஊற்றுவார்கள். சரி வேறு ஏதாவது ஒன்றை கவனிப்போம் என்றால், அங்கே இ பி ஸ், ஓ பி எஸ், அண்ணாமலை, சீமான் என எல்லோரையும் யாராவது ஒருவர் மிகவும் தரம் தாழ்ந்து விமர்ச்சிப்பார்கள். இவர்களெல்லாம் கல்யாணம் செய்து குடும்பம் நடத்துகிறார்கள். அப்படியென்றால் அவர்களும்... வேண்டாம்... சினிமா பார்க்கும்போதும், குடும்பஸ்தர்களோடு பேசும்போது லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது. அவ்வளவுதான்.

அத்துடன் வரலாறு படைத்த சில பல மறைந்த தமிழக/இந்திய /உலக தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவ்வப்போது ஆராய்ந்திருக்கிறேன். சில வித்தியாசமான புள்ளி விவரங்கள் மற்றும் அவர்களுக்கிடையே இருந்த சில ஒற்றுமைகளையும் கவனித்தேன். அவை வெளிப்படையாகவே இருக்கிறது /தெரிகிறது. இருந்தாலும் அதையெல்லாம் யாரும் வெளியில் சொல்லமாட்டார்கள். நானும் சொல்லமாட்டேன். ஏனென்றால் அதை நான் இங்கே எழுதினால் நீங்கள் இன்று இரவு சாப்பிடமாட்டீர்கள், தூங்கவும் மாட்டீர்கள்.

இன்னொரு விஷயத்தையும் பார்த்துவிடுவோம். 

ஒருவன் நன்றாக படிக்கிறான் என்றால் பரிட்சையில் அவன் வாங்கும் மார்க் நிஜத்தை சொல்லிவிடும். ஒருவன் நிறைய சம்பாதிக்கிறான் என்றால் அதை அவன் வீட்டில் இருக்கும் ஆடம்பர பொருட்கள் சொல்லும்.

மாப்பிள்ளையின் அப்பா, `என் பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறான்` என்று சொன்னாலும், `மாப்பிள்ளை வீடு பார்க்கிறோம்` என்று அங்கே இருக்கும் பொருட்களை/ வசதியை வைத்து கிராஸ் செக் செய்யும் சமூகம்தான் நாம். 

இப்போது நிலைமை மாறிவிட்டது எல்லோரும் EMI பணக்காரர்களாக இருக்கிறார்கள். அதனால் எவன் ஒரிஜினல் பணக்காரன் என கண்டுபிடிப்பது சிரமம். எனவே இங்கே மனிதர்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை விட, அவர்களின் வாழ்க்கை முறையை கவனித்து எடை போடுவது சரியான நடைமுறையாக இருக்கும்.

இதே தியரிதான் அந்த கிறிஸ்துவ அறிவுஜீவி சொன்ன அமெரிக்காவிற்கும், அரபு நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் பிரதமர் கோவிலுக்கு போகிறார். சரி. தன் மத அடையாளத்தை வெளிப்படையாகவே கட்டிக்கொள்கிறார். சரி. சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது, ஆமாம் சொல்லப்படுகிறது. சரி. ஆனால் அதையும் மீறி இங்கே சிறுபான்மையினர் எண்ணிக்கை (ஓட்டுரிமை உள்ள மக்களாக) கிட்டத்தட்ட 20 சதவிகிதம் இருக்கிறது.
 
டிரம்ப் வந்து, சட்டவிரோத இந்தியர்களை கை -கால் விலங்கிட்டு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பிய நேரம். இங்கே ஒரு குஜராத்திய கிறித்துவரிடம் `50 லட்சம் செலவு செய்து பணமும் போய் இந்த அவமானம் தேவையா` என்று பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய உறவினர்கள் பலர் அமெரிக்கா, கனடா நாடுகளில் இருப்பதாக சொன்னார்.  `என்னையும் அழைக்கிறார்கள்` என  எதேச்சையாக சொன்னார்.

`விசா கிடைப்பது சிரமமாயிற்றே?` என நான் கேட்க, `அதெல்லாம் பிரச்சினையில்லை. விசா கேட்கும்போது நாங்கள் baptized சர்டிபிகேட் இணைத்தால் எங்களுக்கு (கிறிஸ்துவர்களுக்கு) சிரமமில்லாமல் விசா கிடைத்துவிடும் என்று சொன்னார். இந்த செய்தி எனக்கு புதுசு.

அதன்பிறகு அவர்களுக்கு குடியுரிமையும் விரைவாக கிடைத்துவிடும் போலிருக்கிறது. இதுதான் இந்த கிறிஸ்துவ நாடுகளின் லட்சணம். அவர்கள் சிரித்துக்கொண்டே சிறுபான்மையினரை வளரவிடாமல் நசுக்குகிறாரகள். நாமும் மதம் மாறினால்தான் முன்னேற முடியும் என்ற தியரியில் அங்கே செல்பவர்களும் மாறிவிடுவார்கள். 

அதாவது அங்கே வேலைக்கு/சுற்றுலாவுக்கு  போகும் மனிதர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குடியுரிமை உள்ளவர்களில் சிறுபான்மையினரின் சதவிகிதம் பத்தை தாண்டக்கூடாது. அதற்கு தகுந்தாற்போல்தான் குடியுரிமை வழங்கப்படும். இதுதான் அவர்களின் கொள்கை.  இதைத்தான் புள்ளிவிவரமும் சொல்கிறது. இந்தியாவில இது 20 சதவிகிதம் என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன். 

இப்போது சொல்லுங்கள் சிறுபான்மையினர் எங்கே பாதுகாப்பாக இருக்கிறார்கள்  அவர்களின் சதவிகிதம் எங்கே கூடுகிறது என்று. இதை நான் சொன்னால் நம்பமாட்டீர்கள் அல்லவா, எனவே இதையும் படியுங்கள்.

சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தானின் ஃப்ரைடே டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். அங்கே உள்ள அஹமதி என்ற முஸ்லீம் பிரிவை பற்றிய கட்டுரை அது. எழுதியவரும் ஒரு அஹமதி முஸ்லிம்தான் கட்டுரையில், `தீவிர மதஉணர்வு உள்ள பிஜேபி ஆட்சியில் கூட முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார். ஆனால் பாகிஸ்தானில் நாங்கள்...` என புலம்பியிருந்தார். இதை என்னவென்று சொல்வது?

இதுவும் அகமதாபாத் செய்திதான். சில மாதங்களுக்கு முன் சாண்டோலா என்ற பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகள் அகமதாபாத் மாநகராட்சியால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் பங்காளதேசிகள். அது மட்டுமின்றி அப்போது குஜராத் முழுக்க நடந்த ரெய்டில் ஏராளமான பங்காளதேசிகள் பிடிபட்டிருக்கிறார்கள்.

இந்த தகவல்கள் சொல்லும் செய்தி என்ன? 

நீங்கள் அரபு நாட்டுக்கு வேலைக்கு போய், அங்கே உங்களை பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எப்படியாவது தப்பித்து வந்துவிட வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால் உங்கள் உறவினரையோ, நண்பர்களையோ அழைத்து `எல்லாரும் இங்க வாங்க நாம்ப எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கஷ்டப்படலாம் என்றா சொல்விர்கள்?

குஜராத்தில் இந்த காமெடிதான் நடக்கிறது. ஒரு புறம் பிஜேபி ஆட்சியில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று பிரசாரம். இன்னொருபக்கம் இந்தியாவில் பிற பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் மட்டுமன்றி பங்களாதேஷ் முஸ்லிம்களும் இங்கே குஜராத் வந்து செட்டிலாகிறார்கள். 

என்னதான் குஜராத்தில் வளர்ச்சி இருந்தாலும், என்னதான் பங்களாதேஷ் முஸ்லிம்கள் வறுமையில் இருந்தாலும், மனிதன் எப்போதும் வளர்ச்சியை மட்டுமின்றி, பாதுகாப்பான இடத்தை நோக்கித்தானே நடப்பான்? 

பங்காளதேசிகள் இந்தியாவுக்குள் வறுமையின் காரணமாக நுழைகிறார்கள். இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி வருபவர்கள் சிறுபான்மையினரின் சொர்க்கமான மேற்கு வங்காளத்திற்கு முதலில் வருகிறார்கள். அப்படியே இந்தியாவின் எல்லா பகுதியையும் கவனிக்கிறார்கள். நிச்சயமாக குஜராத் கலவரம் மற்றும் இது மோடியின் மாநிலம் என அவர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி தெரிந்தும்/தெரியாமலும் வருகிறார்கள். மோடி மதவாதியாக சிறுபான்மையினரின் எதிரியாக இருந்தால், சில நாட்களிலேயே அதை தெரிந்துகொண்டு குஜராத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு ஓடிப்போயிருப்பார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த சட்டவிரோத பங்காளதேசிகள் சில ஆண்டுகள் குஜராத்திலேயே வசிக்கிறார்கள். நிஜத்தை உணர்கிறார்கள். அதன்பின் மேலும் பல பங்காளதேசிகளை இங்கே குஜராத்துக்கு வரவழைக்கிறார்கள் என்றால் குஜராத் அவர்களுக்கு நிச்சயம் சொர்க்கம் என்றுதான் பொருள்.

எனவே இந்தியாவின் பிரதமர் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும், இந்தியா மதசார்பற்ற நாடாகத்தான் இருக்கிறது, எப்போதும் இருக்கும்.  ஆனால் அமெரிக்கா, அரபு நாடுகளின் இந்த போட்டோசெஷன் செகுலரிஸம் பிளேயிங் பார் த கேலரி வகை. எந்த காரணம் கொண்டும் 10 சதவிகிதத்தை தாண்டவிடமாட்டார்கள்.

எனவே ஜேம்ஸ் வசந்தன் போன்ற அறிவுஜிவிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது. புள்ளிவிவரம் எனும் நிஜம் எப்போதும் நம் கண் முன்னேயே இருக்கும் அது எப்போதும் உண்மையையே சொல்லும். அதை ஒழுங்காக ஆராய்ந்தாலே போதும் என்பதுதான். 

0 comments:

Post a Comment