கடந்த 5 ம் தேதி வெளிவந்த தினமணி தலையங்கம் `தவறான சிகிச்சை` மிக அருமை. டாக்டர்களுக்கு மட்டும் சுரணை இருந்திருந்தால் இதை படித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு விட்டு சுயபரிசோதனையில் இறங்கி இருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேசமயம் டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. ஒரு வக்கீல் தாக்கபட்டால் வக்கீல்கள் ஸ்ட்ரைக்; கண்டக்டர் தாக்கப்பட்டால் பஸ்கள் ஸ்ட்ரைக் என்று தன் இனத்துக்காக (துறை) குரல் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜாதி மற்றும் மத உணர்வுக்கு இணையாக நாட்டை நாசாமாக்க கிளம்பி இருக்கும் புது வியாதி இது.
தவறு யார் மீது என்ற ஆராய்ச்சியில் இறங்குவதில்லை. நீதி மறுக்கப்பட்டாலோ அல்லது நியாயம் கேட்டு அது தாமதமானால் மட்டுமே போராட்டம் என்ற நியதியும் கிடையாது. தனது துறையை சேர்ந்தவர்கள் பாதிக்கும் போது குரல் குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்றாலும், அவர்கள் தவறு செய்யும்போது மௌன சாமியாராக இருப்பதேன்? இதுதான் தினமணி தலையங்கத்தின் மையக்கருத்து.
ஆனால் இப்போது நக்கீரனின் அதிகப் பிரசங்கித்தனத்தை பார்த்த பிறகு பத்திரிக்கையாளர்கள் இதை எப்படி அணுகுகிறார்கள் என்று பார்க்கும் ஆவல் வருகிறது. நக்கீரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப் போகிறார்களா அல்லது இதை கண்டிக்கப் போகிறார்களா? அதைவிட வசதியாக மௌன சாமியாராக இருக்கப் போகிறார்களா? அனேகமாக மெளனமாகதான் இருப்பார்கள். இதுவரையிலான பத்திரிகை வாசிப்பு அனுபவம் அப்படித்தான் சொல்ல வைக்கிறது
இது வரை இந்த விஷயம் பத்திரிக்கைகளில் செய்தியாக மட்டுமே வந்திருக்கிறது. பத்திரிக்கைகளில் எந்த அலசலும், கருத்தும் இல்லை. இதே வேறு யாரவது சம்பந்தப்பட்டிருந்தால், இந்நேரம் அது பல இணை, துணை செய்திகள் மூலம் விலாவாரியாக அலசப்பட்டிருக்கும். இத்தனைக்கும் தற்போது பத்திரிக்கைகள் பெரும்பாலும் அம்மா ஆதரவுதான். இருந்தாலும் இது அவர்களுக்கு தலைவலிதான். முன்னே போனால் கடிக்கும், பின்னே போனால் உதைக்கும் வகை.
இங்கேயும் நக்கீரர்கள் இல்லை என்பது யதார்த்தமாக இருந்தாலும், பத்திரிகையாளர்களை பார்த்து மற்றவர்கள் மற்றுமின்றி பத்திரிக்கையாளர்களே பயப்படும் அளவுக்கு நாடு வந்துவிட்டது. காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே தெரியும்.
கடந்த காலம்
2011 ஓடிவிட்டது. இப்படி வருடங்கள் ஓடிகொண்டிருக்கும். ஆனால் அது தன் பயணத்தில் மனிதர்களுக்கு கொடுக்கும் அனுபவங்கள் மாறும். நாமும் இந்த உலகத்தை நமது அனுபவங்களின் வழியாகத்தான் பார்ப்போம். சிலருக்கு வளர்பிறை. சிலருக்கு தேய்பிறை. எனக்கு இது வழக்கம் போல இன்னொரு ஆண்டு. பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.
இந்த ஒரு வருடமாக பதிவுகளிலேயே மூழ்கி இருந்ததால், அனுபவம் என்று பார்த்தால் அது பதிவுலகில்தான் அதிகம். இதுவரை எழுதிய பதிவுகளை கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன். முன்னேற்றம் தெரிகிறது. அதிகம் வாசித்தே பழக்கப்பட்ட எனக்கு, தொடர்ந்து எழுதி கொண்டிருப்பது புது அனுபவம்தான். அனுபவம் எனக்கு வேகமாக படிக்க கற்றுக் கொடுத்துவிட்டது. ஆனால் வேகமாக எழுததான் முடியவில்லை. கடந்த வருடம் இந்த குறையத்தான் நான் முழுமையாக உணர்ந்தேன். சிலர் தினம் ஒரு பதிவை சர்வசாதாரணமாக வெளியிடுவதைப் பார்த்தால் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, கூடவே பொறாமையும் வருகிறது.
எனக்கு வாரம் ஒரு பதிவே பெரிய விஷயம்தான். எந்த பதிவை எழுத ஆரம்பித்தாலும் அது ஏதோ ஒரு சந்தேகத்தை கிளப்பி விடுவதால், அதற்கான பதிலைத்தேடி இணையத்தில் மூழ்க வேண்டி இருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், என்ன எழுதப் போகிறோம் என்ற கரு உருவானாலும், அதை விரைவாக பதிவாக மாற்ற முடியவில்லை. அந்த திறமை இன்னும் எனக்கு வசப்படவில்லை. இந்த ஆண்டு அது எனக்கு கை கூட வேண்டும் என வேண்டுதல்.
அப்படியே இது வரை எனது பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் திரும்பி பார்த்தேன். ஓரளவு திருப்திதான். இங்கே வாழ்த்துக்களும் உண்டு. வசவுகளும் உண்டு. இருந்தாலும் நான் வெகு சிலவற்றை மட்டுமே (5 அல்லது 6 ) மட்டுமே அழித்திருக்கிறேன். மற்றவை எல்லாம் ஆரோக்கியமான பாராட்டுக்களும் விமர்ச்சனங்களும்தான். இப்படி வாழ்த்தியவர்களுக்கும், நாகரீகமாக விமர்சனங்களை முன் வைத்த அனைவருக்கும் என் நன்றி.
இங்கே பதிவுலகில் சிலர் அனானியை விரும்புவதில்லை போலிருக்கிறது. ஆனால் நான் அப்படி இல்லை. முகத்துக்கு நேரே (வெகு சிலரை தவிர்த்து) குறைகளை சொல்வதை அநாகரீகமாக கருதும் சமுதாயத்தில், நல்ல நண்பர்கள் கூட தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு விமர்சிக்கலாம். எனவே எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை. நாகரீகமாக சொல்லுங்கள். அவ்வளவுதான்.
Deja vu ( தம்பி, உனக்கு பணத்திமிர் அதிகம்!)
ஒரு முறை வழக்கம் போல் எனக்கு கோவம் வந்தது. ஓட்டலுக்கு சாப்பிட போனேன். மெனு கார்டில் ஏதோ ஒரு டிஷ்ஷை பார்த்து ஆர்டர் கொடுத்தேன்.ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை.எனவே அதை அப்படியே ஒதுக்கிவிட்டு என்னுடைய பேவரைட் அயிட்டத்துக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.
எனக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெரியவர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணத்தின் அருமை தெரிந்தவாராக இருந்திருப்பார். அப்படியே கொஞ்சம் கிராமத்தின் சாயலும் அவரிடம் இருந்தது. படித்தவராக, நகரத்தவராக இருந்தால் கண் முன்னே நடப்பது சரியல்ல என்றாலும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவது அநாகரீகம் என்று ஒதுங்கிப் போயிருப்பார்கள். ஆனால் இவர் வெள்ளேந்தியாக இருந்தார். எனவே பட்டென்று சொல்லிவிட்டார்.
``தம்பி, பிடிக்கலேன்னாலும் அதை சாப்பிடனும். வாங்கிட்ட பிறகு இப்படி காசை வேஸ்டாக்கக் கூடாது. ``
``பணத்தோட அருமை உங்களுக்கு தெரியல`` என்றும் அட்வைஸ். அப்புறம் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சபித்திருப்பார். ஆனால் நான் எதையும் பொருட்படுத்தவில்லை. அன்று நான் 50 ரூபாயை வீணாக்கி இருக்கலாம். ஆனால் என்னுடைய பிரச்சினையே வேறு.
நான் வாழ்ந்தது பெரும்பாலும் விருந்தாளி வாழ்க்கை என்பதால், அங்கே எனக்கு இருந்தது இரண்டே ஆப்ஷன்தான். சாப்பாடு பிடிக்காவிட்டால் வயிறு சரியில்லை என்று சமாளிப்பது. அல்லது கஷ்டப்பட்டு அதை ஜீரணிப்பது. அங்கே குறை சொல்வதோ, அப்படியே வைத்துவிடுவதோ அநாகரீகம்.
ஆனால் இது ஓட்டல். அதுவும் என் பணம். ஏதோ ஆர்வக் கோளாறில் சொல்லிவிட்டாலும், எனக்கு பிடிக்காத ஒன்றை நான் எதற்கு சாப்பிட வேண்டும்? நிராகரிக்கும் உரிமையை நான் இங்கே பயன்படுத்தலாம். எனவே பயன்படுத்தினேன். இங்கே பணம் எனக்கு பொருட்டல்ல. எனவே அவருடைய முனுமுனுப்பை பொருட்படுத்தாமல் நான் அதை அப்படியே வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன். நிச்சயம் அவர் என்னை பணத்திமிர் பிடித்தவன் என்று நினைத்திருப்பார். இமேஜ் பற்றிய கவலை எனக்கு இருந்தாலும், சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் நாம் தவறான நபராக பதியும் வாய்ப்பும் இருக்கிறது. இதை தவிர்க்க முடியாது.
அந்த பெரியவர் சொன்ன ஆலோசனை நல்லதுக்குத்தான். எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால் எனக்கு பொருந்தாது. இதை நான் அவருக்கு விளக்க முடியாது.
இந்த சம்பவம் நடந்து பத்து வருடத்திற்கும் மேல் இருக்கும். சமீபத்தில் வயதொன்று கூடியது. பிறந்த நாளன்று ஓட்டலுக்கு போய் திருப்தியாய் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருந்தேன். இந்த முறை அதே அனுபவம். என்னுடைய வாழ்க்கை முறை பெரிதாக மாறாததால், நானும் மாறவில்லை. ஆனால் இது சென்னை என்பதால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதையே யாரும் கவனிப்பதில்லை. எனவே என்னுடைய பணத்திமிரை யாரும் கவனிக்கவில்லை.
இந்த வார காமெடி
தேர்தல் கமிஷன்தான். உபியில் மாயாவதி மற்றும் யானை சிலைகளை துணிகளால் மூடவேண்டுமாம். இந்தியாவின் மிக மோசமான அரசியல்வாதிகளில் மாயாவதியும் ஒருவர். அதில் சந்தேகம் இல்லை. ஒரு வேளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இந்த சிலைகளை சுக்குநூறாக உடைக்கப்பட்டாலும் வரவேற்பேன். ஆனால் இருக்கும் சிலைகளை மூடுவது என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இங்கே தமிழகத்தில் இரட்டை இலை, உதய சூரியன்தான் முக்கிய சின்னம். இங்கே அப்படி ஒரு கோரிக்கை வந்தால் என்னவாகும்.. மயக்கம்தான் வருகிறது.
இது இன்று இணைக்கப்பட்ட செய்தி
தினமணி இன்றைய (11-1-2011 ) இதுவல்ல சுதந்திரம்! என்ற தலையங்கத்தில் (இன்றைய) நக்கீரனின் செயலை நக்கீரனாக இருந்து விமர்சித்திருக்கிறது. பாராட்டுக்கள்.
இது இன்று இணைக்கப்பட்ட செய்தி
தினமணி இன்றைய (11-1-2011 ) இதுவல்ல சுதந்திரம்! என்ற தலையங்கத்தில் (இன்றைய) நக்கீரனின் செயலை நக்கீரனாக இருந்து விமர்சித்திருக்கிறது. பாராட்டுக்கள்.
8 comments:
அருமை நண்பரே
http://ambuli3d.blogspot.com
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
வேலை நிறுத்தம் அலுத்து விட்டது. யாரும் அனுதாமும் படுவதில்லை. மாறாக அதை செய்பவர்கள் மீது எரிச்சல்தான். புதிய முறைகள் கண்டுபிடிக்க அவசியம் வந்துவிட்டது.
சுரணை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பல பேர் கண்டுக்க மாட்டார்கள். த்ன் வேலை முடிந்தால் போதும் என்று, நடக்கிற அநீதிகளை கண்டுகாமல் போய்கினே இரரு என்பது தான் தற்போதிய நடைமுறை.
ஒருவேளை நமக்கு உறுத்தினால் , மலையிட்டு கெட்ட பேர் வாங்கி, முத்துரை குத்திக் கொள்ளலாம்!
Sorry for the mistakes.:-(
// நிராகரிக்கும் உரிமையை நான் இங்கே பயன்படுத்தலாம். எனவே பயன்படுத்தினேன்.//
இது ஒரு மிக subtle-ஆன விஷயம். அனுபவப்பட்டவர்களாலேயே உணர முடியும். ஓரளவிற்கு என்னால் உணர முடிந்தது
@ ambuli 3D said...
//அருமை நண்பரே//
நன்றி நண்பரே.
இந்த விளம்பர பார்முலாவ விடமாட்டீங்களா? இனி அதுபோல் வந்தால் வெளியிடமாட்டேன்.
@Rathnavel said...
//நல்ல பதிவு.
வாழ்த்துகள்.//
வணக்கம் ரத்னவேல் சார்.
உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
@Vetrimagal said...
///சுரணை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பல பேர் கண்டுக்க மாட்டார்கள். த்ன் வேலை முடிந்தால் போதும் என்று, நடக்கிற அநீதிகளை கண்டுகாமல் போய்கினே இரரு என்பது தான் தற்போதிய நடைமுறை.
ஒருவேளை நமக்கு உறுத்தினால் , மலையிட்டு கெட்ட பேர் வாங்கி, முத்துரை குத்திக் கொள்ளலாம்!///
வாங்க வெற்றிமகள். அநீதிகளை கண்டும் காணாமல் போகமுடியாது. அதை தடுக்க முடியாவிட்டாலும், அதை வெளிச்சம் போட்டு காட்டவோ, கண்டிக்கவோ முடியும். எனவே அதையாவது செய்வோம். காலம் மாறும், காத்திருப்போம்.
@bandhu said...
// நிராகரிக்கும் உரிமையை நான் இங்கே பயன்படுத்தலாம். எனவே பயன்படுத்தினேன்.//
இது ஒரு மிக subtle-ஆன விஷயம். அனுபவப்பட்டவர்களாலேயே உணர முடியும். ஓரளவிற்கு என்னால் உணர முடிந்தது.///
உண்மைதான் நண்பரே. பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் தெரியும் என்பதுபோல் சில வாழ்கை முறையை அந்த வழியில் வாழ்ந்தால்தான் புரிந்து கொள்ளமுடியும்.
இப்போதெல்லாம் பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. புன்னகையோடு ஒதுங்கிக் கொள்கிறேன். அவர்களுக்கு புரியவைப்பதை விட ஒதுங்குவதுதான் வசதியாக இருக்கிறது.
Post a Comment