கடலூருக்கு வந்த சோதனை கொடுமைதான். சுனாமி தாக்கிய அன்று, காலை 9 மணிக்கு கூத்தப்பாக்கத்திலிருந்து வண்டியில் கடைக்கு வந்து கொண்டிருந்தேன். சினிமாவில் பார்ப்பதைப் போல் மக்கள் கூட்டமாக எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சியை கண்ட எல்லோருக்கும் திரும்பி ஓட வேண்டும் என்றுதான் தோன்றும். எனவே நானும் திரும்பி விட்டேன். இரண்டாவது முறை கடைக்கு அருகில் வரை வந்துவிட்டேன். அப்போது பல தெரிந்த முகங்களும் `திரும்பி போங்க` என்று கத்தி கொண்டே ஓட, இந்த முறையும் ஓட்டம்.
அவர்கள் ஓடிய வேகத்தை பார்த்தால் கிட்டத்தட்ட கடலூர் பஸ் ஸ்டாண்டை அலை தொட்டுவிட்டதை போன்ற தோற்றம். அந்த நேரம் பார்த்து கடலூர் புதுப்பாளையத்துக்கு போன்கள் வேலை செய்யாததால், சந்தேகம் மேலும் வலுத்தது. சந்தேகமும் வதந்திகளும் மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தும் என்பதை நேரடியாக கண்ட சம்பவம் அது. இந்த முறை `தானே` புயல் கடலூரின் அடிப்படை கட்டமைப்பை பெருமளவு சீரழித்திருகிறது.
31 ம் தேதி நண்பரின் தாயார் வெளியூர் போகிறார். நானும் விடுதலை ஆன பிறகு கடலூருக்கு போகாததால், இங்கே செண்ட்ரலிலேயே வந்து பார்ப்பதாக சொல்லி இருந்தேன். ஆனால் எந்த வண்டி, பயண நேரம் போன்றவற்றை ஊர்ஜிதப்படுத்த 30 ம் தேதி போன் போட்டால்... ஸ்விட்ச் ஆப் என்று செய்தி. என் கடைக்கு போட்டாலும் அதே செய்தி. `தானே` இவ்வளவு கொடூரமாக நாசத்தை உருவாக்கி இருக்கும் என்று எதிர்பார்க்காததால், காராணம் தெரியாமல் முழித்தேன். எனவே ஸ்டேஷனுக்கும் போகவில்லை.
அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து அவர் ஊருக்கு போவதாக போன் வந்த பிறகு போய் பார்த்தேன். அம்மாவை வழி அனுப்ப நண்பன் மனைவி மற்றும் குழந்தைகள் சகிதம் வந்திருந்தான். மாமியார் மீது மருமகளுக்கு இவ்வளவு அக்கறையா என்று நான் ஆச்சர்யப்படுவதற்கு முன் பதில் வந்துவிட்டது. அம்மாவை வழி அனுப்ப பிள்ளை கிளம்புகையில், `இங்கேதான் பூகம்பம் வரப்போகுதாமே... நாங்களும் வருகிறோம்` என்று கிளம்பிவிட்டார்களாம். இந்த வதந்தியும் மக்களை பாடாய் படுத்தியிருகிறது.
மேலும் விசாரித்ததில் கடலூர் நிர்மூலமாகி இருப்பது தெரிந்தது. பெரும்பாலான மரங்கள் வீழ்ந்துவிட்டதாம். ஏதோ ஒரு கோவிலில் ஜெனரேட்டர் ஓட `அதில் சார்ஜ் பண்ண பிறகுதான் நான் பேசினேன்` என்றான்.
இதையெல்லாம் கேட்கும்போது கோபம்தான் வருகிறது. சுனாமி நாம் எதிர்பாராத ஓன்று. ஆனால் புயலை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல கடலோர மாவட்டங்கள் சந்தித்திருகின்றன. அது என்ன விதமான பாதிப்புகளை உருவாக்கும் என்று பழைய அனுபவங்கள் அரசுக்கு உணர்த்தி இருக்கும். எனவே அதற்கு தகுந்த நிலைக்கு அரசு தயாராக இருந்திருக்க வேண்டும்.
உணவுக்கு அடுத்தபடியாக, மின்சாரமும், போன் வசதியும்தான் முக்கிய தேவை. மின்சாரம் இல்லாததால் தண்ணீர் இல்லை. பாலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய். தகவலை பரிமாற்ற போன் வசதி இல்லை. நெட்வொர்க் சரியானாலும், மொபைலுக்கு சார்ஜ் செய்யக் கூட கரண்ட் இல்லை. இவற்றை மட்டும் அரசு விரைவாக, தற்காலிக ஏற்பாடாக, வழங்க முடியாதா?
`தானே` புயல் சில மாவட்டங்களைதான் சூறையாடி இருக்கிறது. எனவே மற்ற நகரங்களிலிருந்து உதவியை திருப்பிவிடுவது பெரிய விஷயமில்லை. கடலூரில் நான் பார்த்த வரையில் பெரும்பாலான கடைகளில் ஜெனரேட்டர் இருக்கிறது. பிற நகரங்களிலிருந்தும் சில நாட்களுக்காக இவற்றை வரவழைத்திருக்கலாம். இலவசமாகவோ அல்லது கட்டணத்திற்கோ சில மணிநேரங்களுக்கு அதுவும் தண்ணீருக்கு மட்டும் என முடிந்தவரை வீடுகளுக்கு கொடுத்திருக்கலாம்.
ஒரு முறை கரண்ட் இல்லை. முக்கியமான கிரிகெட் மேட்ச். அடுத்த அரை மணிநேரத்தில், ஜெனரேட்டர் கடன் வாங்கி, மேட்ச் பார்த்தார் ஒருவர். அது சாத்தியமென்றால், ஒரு ஒருங்கிணைப்போடு சேவை மனப்பான்மையோடு மக்கள் செயல்பட்டால், இதுவும் சாத்தியம்தான்.
பிரச்சினை என்னவென்றால், நம் நாட்டில் புண்ணியம் தேடுவது என்றால் பிச்சைக்காரர்களுக்கு சோறு போடுவதும் பழைய துணிகளை தானம் பன்னுவதும்தான். அவர்களுக்கு இதை தாண்டி வேறு எதுவும் சேவை லிஸ்டில் வராது. மக்களுக்கு என்ன தேவை என அறிந்து உதவும் பாணி நம்மிடம் இல்லை.
சில நாட்களுக்கு முன் கடையிலிருந்து மறுபடியும் போன். `ஸார்.. இங்க மறுபடியும் ஒரு புயல் வரப்போவுதுன்னு பேசிக்கிறாங்க... இங்க கரென்ட் இல்லாததால நியுஸ் பாக்கமுடியல` என்றார். இணையத்தில் செய்திகளை தேடிவிட்டு, `அப்படி எதுவும் இல்லை. வதந்திகளை நம்பவேண்டாம்` என்றேன். போன் பேசியதால் `கரென்ட் வந்துவிட்டதா` என்று கேட்டதற்கு, ஒரு முன்னணி நகை கடையில் ஜெனரேட்டர் ஓடியதால் தெரிந்தவர்கள் மூலம் அங்கே சார்ஜ் செய்தோம் என்றார். இத்தனைக்கும் என் கடை இருக்கும் பாடலீஸ்வரர் கோயில் தெரு நகரின் மையப் பகுதி. இங்கேயே நிலைமையே இப்படி என்றால், பல கிராமங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இந்தியா இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தியது.
4 comments:
நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
வாங்க ரத்னவேல் சார்
உங்களின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
ETHAI SOLVATHU.. MIKAVUM VARUNTHUKIREN...
"நம் நாட்டில் புண்ணியம் தேடுவது என்றால் பிச்சைக்காரர்களுக்கு சோறு போடுவதும் பழைய துணிகளை தானம் பன்னுவதும்தான். அவர்களுக்கு இதை தாண்டி வேறு எதுவும் சேவை லிஸ்டில் வராது"
:-)))))))
Post a Comment