டிவி சீரியல்களில் யாரோ ஒரு பெண், ஒரு குடும்பத்தைப் பற்றி ஏதாவது போட்டுக் கொடுத்து அவர்களின் நிம்மதியைக் கெடுக்கப் பார்ப்பார். இப்போது அரசியலில் ஊடகவியலாளர்கள் அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்தத் தேர்தல் ஊடகவியாளர்களுக்கு மிகப்பெரிய அவமானத்தைக் கொடுத்துவிட்டது; அதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெளியே ‘இட்ஸ் மிராக்கிள், வாழ்த்துகிறோம்’ என இளித்தாலும், உள்ளுக்குள் இருக்கும் எரிச்சலை எப்படித் தீர்ப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
சரி, அவர்கள் என்னதான் சொல்கிறார்கள், எப்படி சமாளிக்கிறார்கள் என்று நானும் சில பேட்டிகளைக் கவனித்தேன். கிட்டத்தட்ட எல்லாம் சீமான் ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது. அதாவது, மக்களுக்கு அறிவில்லையாம்! அதனால்தான் இந்த முடிவாம்! ஒரே டெம்ப்லேட்.
இந்த வியாதிக்கு தற்போதைக்கு எந்த மருந்தும் இல்லை. கணக்கில் முட்டை வாங்கிய புலிகள் இவர்கள். இன்னும் சில மாதங்களுக்கு யாரைப் பார்த்து குலைப்பது என்று தெரியாமல் இப்படிப் புலம்பிக்கொண்டுதான் இருப்பார்கள்.
அடுத்து, இப்போது அவர்கள் கையில் எடுத்திருப்பது விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை. அவர் முதல்வரானதும் மகளிர் உரிமைத் தொகை, இலவச கேஸ் மற்றும் இதர உதவிகளை மறுநாளே செய்ய வேண்டுமாம். அதைத்தான் இப்போது பெரும்பலான பேச்சாளர்கள் வலியுறுத்துகிறார்கள். நியாயமாக பார்த்தால் விஜய்க்கு ஓட்டுப் போட்டவர்கள்தானே கவலைப்பட வேண்டும்? இவர்களுக்கு ஏன் வலிக்கிறது?
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வது, நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்பதற்காகப் பொய் சொல்வது என்பதெல்லாம் வாழ்க்கையில் சாதாரணமானதுதானே? காதலிக்கும்போது சொல்லும் வார்த்தைகள் திருமணத்திற்குப் பிறகு வலுவிழந்துவிடும் என்பது எல்லாப் பெண்களுக்கும் தெரியும். எனவே, தேர்தல் வாக்குறுதி என்பது சூழ்நிலையைப் பொறுத்து மாறும்; அதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
திமுகவிடமும் அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தி, ஊழலைக் குறைத்து, வாரிசு அரசியலை ஓரம் கட்டி நல்லாட்சி கொடுத்திருந்தால் திமுகவிற்கு இந்தத் தோல்வி வந்திருக்காது.
தேர்தலுக்கு முன்னால் இப்படிச் சாத்தியமில்லாத வாக்குறுதிகள் கொடுப்பது தவறுதான். ஆனால் என்ன செய்வது? "எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் நாட்டில் நீங்களும் அப்படித்தானே இருக்க வேண்டும்".
திராவிடக் கட்சிகள் இந்த அபாயகரமான விளையாட்டை ஆரம்பித்து வைத்துவிட்டன. எனவே, விஜய்க்கும் வேறு வழியில்லை. இவை அந்த வகையான வாக்குறுதிகளே. நிறைவேற்றினால் சந்தோஷம், இல்லாவிட்டால் மக்கள் தண்டிக்கப்போகிறார்கள்.
ஓட்டுக்குப்பணம் என்ற முறையையும் இவர்கள்தான் கொண்டு வந்தார்கள். மக்கள் அதற்கு இப்போது விடை கொடுத்துவிட்டார்கள். அதேபோல் இந்த ‘வாக்குறுதி’ வியாதியும் விரைவில் முடிவுக்கு வரும்.
விஜய் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து த.வெ.க-விற்கு வாக்களித்தவர்களே பொருட்படுத்தப்போவதில்லை. எனவே, ஊடகவியலாளர்களே... நீங்கள் வழக்கம்போல் உங்கள் மேதாவித்தனத்தை மட்டும் காட்டுங்கள், வில்லித்தனம் வேண்டாம்.
ஏழைகளின் பர்கர்
இப்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் 'ஊடகவியலாளர்' என்ற போர்வையில் பேசும் பலருக்கு எதுவும் தெரிவதில்லை. அவர்கள் சொன்ன கணக்குகள் எதுவும் பலிக்கவில்லை. இருந்தாலும், இன்னமும் அவர்களைப் பலர் அழைத்து பேட்டி எடுக்கிறார்கள். ஏன்?
வறுமைதான் காரணம். எல்லா ஊடகங்களுக்கும் இப்போது வருமானம் குறைந்துவிட்டது. இணைய ஊடகம் கொஞ்சம் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், அங்கேயும் வருமானம் குறைவுதான். எனவே, அவர்களுக்குக் குறைந்த ஊதியத்தில் பேச, ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பேச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள். பணம் குறைவாக இருந்தால் தரமும் குறைவாக இருக்குமல்லவா? அதுதான் தற்போது நாம் காணும் சூழ்நிலை.
`உங்களுக்கு அறிவு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; ஏதோ அரை மணி நேரம் எதையாவது நம்பும்படி பேசத் தெரிந்தால் போதும்` என்று சொல்லியே ஆள் தேடுவார்கள் போலிருக்கிறது. இவர்களை 'ஏழைகளின் பர்கர்' (Poor man's burger) என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், வெளியே தங்களை ஊடகவியலாளர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். ஏதோ சிலருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்று நாம் இதைக் கடந்து போக வேண்டியதுதான்.
இனி இவர்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் இந்தத் தேர்தல் நமக்குச் சொல்லும் பாடம்.
0 comments:
Post a Comment