!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, May 23, 2026

இனி விஜய்யை எதிர்க்க வேண்டும்

ஆமாம் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிட்டது. திராவிட கட்சிகள் ஆணவத்தோடு இருக்கின்றன எனவே அதற்கு ஒரு மாற்று இருந்தால்தான் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலை இருந்ததால் நான் விஜய்யை ஆதரித்தேன்.

நிலைமை இப்போது தலைகீழ். எப்படி பார்த்தாலும் இனி திராவிட கட்சிகள் எழுந்து நிற்கும் வாய்ப்பு குறைவு. அந்த அளவுக்கு மரண அடி இரண்டு கட்சிகளுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி எதிர்க் கட்சியே இல்லாமல் ஒரு அரசு இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே இனி இவருக்கு ஒரு மாற்றை தேட வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டோம்.

இப்போது அமைந்திருக்கும் தவெக அமைச்சரவை கூட்டணி அப்படியே அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தொடரலாம்.. எதிரே இருக்கும் கட்சிகளில் திமுக, அதிமுக, பிஜேபி, நாம் தமிழர் என யாரும் ஒன்றாக போட்டி போடும் வாய்ப்பும் இல்லை. இவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதில் ரொம்ப தூரம் போய்விட்டதால், இவர்களில் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அது தற்கொலை கூட்டணியாகத்தான் இருக்கும். அந்த வகையில் தமிழக அரசியல் குறைந்தது அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை விஜய்க்கு ராஜயோகம்தான்.

சினிமாவாகட்டும் அரசியலாகட்டும், ஆரம்பத்தில் தேறாது என்ற நிலைதான் விஜய்க்கு. ஆனாலும் காற்று இவருக்கு சாதகமாக இருக்கிறது. மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது.

அதேசமயம் இப்படி திடீரென மேலே பறந்தவர்கள் அதே வேகத்தில் கீழே விழுந்ததையும் இந்திய அரசியல் கவனித்திருக்கிறது. ஜெகன்மோகன் (ரெட்டி), அரவிந்த் (கெஜ்ரிவால்) என்று முன்னுதாரணம் இருக்கிறது. எனவே விஜய்க்கும் அந்த நிலை ஏற்படலாம். அவர் ஊழல் செய்வதற்கான வாய்ப்பு குறைவு, குடும்ப ஆட்சி இருக்காது, ரவுடியிசம் குறையும். ஆனால் அனுபவமின்மை காரணமாக நிச்சயம் எங்கேயாவது இடரும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடந்து விஜய் கீழே விழ வேண்டும் என்றால், அடுத்த மாற்று என்ற ஓன்று கைவசம் ரெடியாக இருக்க வேண்டும். அதாவது இனி எதிர் கட்சியான திமுக தலைமையில் 6 கட்சிகள் இருந்தாலே அதிகம். அதுவும் இங்கே தவக ஹவுஸ்புல் என்பதால் வேறு வழியில்லாமல் அங்கே இருப்பார்கள். திமுகவில் கடைநிலை இளிச்சவாய தொண்டன் மட்டும் அங்கே இருப்பான். மற்ற அடுத்த நிலை தலைவர்கள் இப்போதே தவெகவிற்கு தூது விட்டிருப்பார்கள். அவர்களுக்கு தெரியும் இனி திமுகவிற்கு எதிர்காலம் கிடையாது அதுவும் உதயநிதி தலைமையில் அறவே கிடையாது என்பது.

இந்த பக்கம் திமுக கோமாவில் என்றால், அதிமுக சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புங்க என்ற நிலை. கட்சி ஏற்கனவே உடைந்து, இனி சிதறு தேங்காயாக நாலா பக்கமும் தெறிக்கப் போகிறது. அங்கேயும் இதே போல் எதுவும் தெரியாத தொண்டர்கள் இருப்பார்கள். இந்த அடிமட்ட தொண்டர்கள் இப்படியேதான் இருப்பார்கள். இணையங்களில் ஆய் உய் என கோஷம் போட்டு தோற்றுக்கொன்டே இருப்பார்கள். அதைவிட கொடுமை அவர்கள் ஆதரித்த கட்சி தோற்றதற்கான காரணங்களை விதவிதமாக கண்டுபிடித்து சொல்வார்கள்.

சீமானை நான் மனுஷங்க லிஸ்டிலேயே சேர்க்கவில்லை. அதனால் அவரை பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவரும் அதை புரிந்து கொண்டு கட்சியை வளர்க்காமல் குடும்பத்தை வளர்க்க போய்விட்டார்.

சரி என்ன செய்ய வேண்டும்?

நிச்சயம் ஒரு மாற்று தேவை. விஜய் நல்லாட்சி கொடுப்பார் என்பது நம்பிக்கை, இருந்தாலும் ஒரு மாற்று ஏற்பாடு என்பது பிராக்டிகல்.

எனக்கு இந்த சிந்தனை ஓடுபோதுதான், அதிமுகவில் எடப்பாடி செல்லாக்காசாக ஆகிவிட்டதால், அங்கே நடிகர் சூர்யாவை அழைத்து அவர் தலைமையில் ஒரு மாற்று வேண்டும் என்று முகநூல் பதிவில் ஒரு கருத்தை கவனித்தேன். இது ஓரளவுக்கு தேவையானதுதான்.

நம்பிக்கை அளிக்கும் மனிதர்கள் நடிகனாக இருந்தாலும் ஜெயிக்க முடியும் என்பதை தமிழகம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது. அந்த வகையில் நடிகர்கள் தைரியமாக அரசியலில் இறங்கலாம். அதற்கு சூர்யா நிச்சயம் பொருத்தமானவர்தான்.

சம்பாதித்தோம் ஜாலியாக வாழ்ந்தோம் என்றில்லாமல், ஒரு அறக்கட்டளை அமைத்து பல ஏழை மாணவர்களுக்கு உதவியிருக்கிறார். அதுவும் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் நடந்த விஷயம். விஜய் அதை செய்தாலும், அவர் அரசியலை மனதில் வைத்து செய்த்தவர்.

அந்த காலத்தில் சோழ வம்சத்துக்கு வாரிசு இல்லை என்ற நிலை ஏற்பட்டபோது, மகள் வழி பேரனான ஒரு தெலுங்கு குலோத்துக சோழனை சோழ நாடு மன்னனாக அடைந்தது. அதுபோல் அதிமுகவில் அவர் சேர விருப்பப்பட்டால், அவர்களுக்கு இருக்கும் கட்டமைப்பை நடிகர் சூர்யா பயன்படுத்திக்கொள்வதும் நல்லதுதான்.

இருந்தாலும் அதிமுக ஒரு உளுத்துப்போன கட்டை. அதில் பயணம் என்பது சிரமம்தான். அதே நேரம் தற்போது கல்யாணம் பண்ணுவதுதான் சிரமம். கட்சி ஆரம்பிப்பது மிகவும் சுலபம். இந்த தேர்தலில் பிரமாண்டம், பணம் என எதையுமே ஒரு பொருட்டாக கருதாமல் வாக்குகள் விழுந்திருக்கின்றன. எனவே சூர்யா போன்ற கொஞ்சம் அறிமுகமான நபர்கள் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தலாம். புதுமுகமாக இருக்கும் என்பதால், அவர் தலைமையில் அதிமுக மற்றும் பிற கட்சிகள் ஒரு கூட்டணியாக போட்டியிட்டால், அது ஓரளவுக்கு விஜய்க்கு எதிராக பலமாக இருக்கும். சூர்யாவிற்கு அரசியல் ஆர்வம் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

மறுபடியும் மறுபடியும் நடிகர் பின்னாலதான் ஓடணுமா என்று கேட்கலாம். தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நம்பிக்கை அளிக்கும் ஒரு தலைவர் என் கண்ணுக்கு தெரியவில்லை.

அண்ணாமலை என்று சிலர் உளறுவார்கள். இந்த ஐ ஏ எஸ், ஐ பி ஸ் எல்லாம் பிராய்லர் கோழிகள் மாதிரி. நிர்வாகத்துக்காகவே வளர்க்கப்பட்டவர். இவர்கள் நல்ல நிர்வாகியாக இருப்பார்கள். தலைவர்களாக ஒருபோதும் மாறமாட்டார்கள். இவர்களுக்கு உத்தரவுக்கு கீழ்படிந்தே பழக்கம். துணிச்சலான முடிவெடுத்து தலைவர்களாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த 70 ஆண்டு கால இந்திய அரசியலில் இப்படி படித்தவர்கள் மேலே ஏறி வந்ததாக சரித்திரம் இல்லை. ஒருவேளை அதை உடைத்து அவர் மேலே வந்தால் சந்தோஷம்தான்.

இருந்தாலும் பிஜேபி கட்சியை சார்ந்தவர் என்ற அடையாளத்தோடு அவர் இருந்தால் அது சிரமம்தான். இங்கே தமிழ்நாட்டில் பிஜேபி என்பது பிராமணர்கள் நடத்தும் கட்சி அல்லது பிராமணர்கள் கை காட்டும் நபர்களை தலைவராக கொண்ட கட்சி. இந்த பிம்பத்தை பிஜேபி உடைக்காத வரை பிஜேபிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இல்லை.

எனக்கு அந்த அளவுக்கு பிராமண துவேஷம் இல்லை. தகுதி உள்ளவர் யாராக இருந்தாலும் மேலே வரட்டும். ஆனால் அவர்களில் சிலரின் பேச்சை, பதிவுகளை, கருத்துக்களை இணையங்களில் கவனித்தால், பெரியார் ஒரு தீர்க்கதரிசி என்பது புரியும்.

இங்கே ஒரு முரண்பாடு என்னவென்றால் வட மாநிலங்களில் நான் கவனித்த வரை பிராமண துவேஷம் தமிழ்நாடு அளவுக்கு இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அவர்கள் மீது இந்த அளவுக்கு வெறுப்பு.

பெரியார் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு காரணமும் இருக்கிறது. அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு புரியும். அதை இன்னொரு நாள் எழுதுகிறேன்

0 comments:

Post a Comment