இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது. நிறைய தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தலைப்பில் நிறைய எழுதலாம் என்றாலும், முக்கியமானவற்றை மட்டும் கவனிப்போம்.
இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், இது போன்ற தொங்கு சட்டமன்றம் ஒரு நிரந்தரத் தலைவலி. எனவே, இதற்குத்தான் முதலில் தீர்வு தேவை. என்ன செய்யலாம்?
ஓட்டலுக்குச் செல்கிறோம்; கையில் காசு குறைவாக இருந்தால் என்ன செய்வோம்? 'அளவுச் சாப்பாடு' அல்லது இருப்பதற்குத் தகுந்தாற்போல் சாப்பிடுவோம். அதே கொள்கைதான் இங்கேயும்.
இனி இது போன்ற சூழ்நிலை வந்தால், அதிகபட்ச எம்.எல்.ஏ-க்கள் கொண்ட கூட்டணி அல்லது கட்சிக்கு, 2 ஆண்டுகால 'அளவுச் சாப்பாடு' போடலாம். அதாவது, ஆளுங்கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வைத்தே ஆட்சி அமையுங்கள் என்று சொல்லிவிடலாம்.
அந்த ஆட்சி தவறான பாதையில் போனால்?
எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் அதிகாரம் இருக்கும்; அதைப் பயன்படுத்தி ஆட்சியைத் தீர்மானிக்கலாம். எனவே, அது ஒரு பிரச்சினை இல்லை.
சட்டம் எப்படி இயற்றுவது?
இந்த விதிவிலக்குக் காலத்தில் 'கட்சி கொறடா' (Whip) உத்தரவு செல்லாது என அறிவிக்கலாம். இதனால், இது போன்ற அரசுகள் ஒரு சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டம் கொண்டுவந்தால், சட்டத்தின் நலன் கருதி உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும். சட்டம் உண்மையிலேயே நல்லதாக இருந்தால் நிறைவேறும். தொடர்ந்து மூன்று முறை இந்த அரசால் கொண்டுவரப்படும் சட்டங்கள் தோற்கடிக்கப்பட்டால், அந்த ஆட்சிக்கு 'குட்பை' சொல்லிவிடலாம்.
ஆட்சியைப் பிடித்தவுடன் எதிர்க்கட்சிகளை உடைத்து பெரும்பான்மை பெற்றுவிடுவார்களே?
இதற்கான சாத்தியம் அதிகம். எனவே, எந்த ஆட்சி சிறுபான்மை பலத்தோடு பதவி ஏற்று, அதன் பிறகு பெரும்பான்மை பெற்றாலும், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே 'வேலிடிட்டி' என்ற உறுதியான சட்டம் வேண்டும். எப்படியும் தேர்தல் வரப்போகிறது என்பதால், கட்சிகளை உடைக்காமல் நல்லாட்சி கொடுக்க அவர்கள் முயற்சிக்கலாம்.
தேர்தலுக்குப் பின் முரண்பாடான கூட்டணி உருவானால்? (உதாரணம்: திமுக - அதிமுக)
இது முரண்பாடு என்றாலும் ஜனநாயக முறைப்படி பெரும்பான்மைதான். எனவே, அவர்களுக்குப் பொருந்தக்கூடிய வேறு ஒரு சட்டம் தேவை. இவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; ஆனாலும் இவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள்தான் கால அவகாசம். மீண்டும் மக்களைச் சந்திக்க வேண்டும். ஏன் இப்படி ஒரு முரண்பட்ட கூட்டணி தேவைப்பட்டது என்பதை மக்களிடம் விளக்கி, மக்களின் தீர்ப்பை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆதரவு தருவதிலும் விலகுவதிலும் இருக்கும் இழுபறிகளை எப்படிச் சமாளிப்பது?
தேர்தல் முடிந்து இது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டால், ஒரு வாரத்திற்குள் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை ஆளுநரிடம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். "நாங்கள் இவர்களை ஆதரிக்கிறோம்" அல்லது "எதிர்க்கட்சியாக அமர்கிறோம்" என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லத் தவறினால், அவர்களின் தொகுதிகளில் மட்டும் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்ற பயம் இருக்க வேண்டும்.
இது போன்ற சுதந்திரமும் நிர்பந்தமும் அரசியல் கட்சிகளுக்கு வந்தால், அரசியல் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கும்.

0 comments:
Post a Comment