சமீபத்தில் NDTV யில் ராணுவம் குறித்த ஒரு டாக் ஷோ பார்த்தேன். பல கருத்துக்கள் பேசப்பட்டன. காஷ்மீரில் ஒரு பகுதிக்கு சரக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் மகனை பறி கொடுத்தவர் பேசினார். இந்தியாவில் மட்டும்தான் ஒரு இஞ்சின் மட்டுமே கொண்ட ஹெலிகாப்டர் சேவையில் இருந்ததாம். அதில் இவர் மகன் பலியாகி இருக்கிறார். `நாட்டுக்காக உயிர் கொடுப்பது வேறு. ஆனால் தகுதி அற்ற தளவாடங்களின் மூலம் ஏற்படும் விபத்தால் யாரும் பலியாகக் கூடாது` என்றார்.
அடுத்து கவனித்தது, போபார்ஸ் சிண்ட்ரோம். இந்த ஊழல் மீடியாவில் கடுமையாக கிழிக்கப்பட்டதால், பல ராணுவ அதிகாரிகள், அவ்வளவு சீக்கிரத்தில் முடிவெடுப்பதில்லையாம். இந்த புதுத் தலைவலி தற்போது ராணுவத்தை ஆட்டிப் படைக்கிறது. இதனால் ஒரு பக்கம் ஆயுத பற்றாகுறை இருக்க, இன்னொரு பக்கம் அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பிய கொடுமையும் நடந்திருக்கிறது.
இந்த விவாதத்தின் மூல காரணம் ராணுவம் குறித்து தற்போது வரும் செய்திகள்தான். அதிலும் எந்த ஒரு விவாதத்திலும் ஊழல் மட்டுமே பிரதானப்படுத்தப்படுகிறது. ஆனால் ஊழலுக்கு வழி வகுக்கும் வேறு பல குறைகளும் இருக்கிறது. அது அபூர்வமாகவே கவனிக்கப்படுகிறது.
குறை 1
சென்னையில் ஒரு ராணுவ அதிகாரி பாதாம் பருப்பு பறிக்க வந்த ஒரு சிறுவனை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் பத்திரிகைகளாலும், மக்களாலும் அவர் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்பட்டார்.
அவரை விமர்சிக்கும் முன், `ஒரு சிறுவனை கொல்லும் அளவுக்கு அவர் போனது ஏன்? இவர் ஏற்கனவே இது போன்ற அடாவடி செய்து அவப்பெயர் பெற்றிருக்கிறாரா?` என்ற ஆராய்ச்சியில் யாரும் இறங்கவில்லை.
அவர் நல்லவரோ, கெட்டவரோ, அந்த தகவலை நான் படிக்கவில்லை/ கவனிக்கவில்லை. ஆனால் மனிதர்களை படிக்கும் முயற்சியில் சில விஷயங்களை கவனித்திருக்கிறேன்.
சிறு வயதில் சித்தி கொடுமையை பற்றி பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் இல்லை. இருந்தாலும் பலர் இப்படி கேட்டதன் காரணமாகவோ என்னவோ, பெண்களின் பேச்சுக்களை அதிகம் கவனித்திருக்கிறேன்.
இதில் சித்திகள் கொடுமையை கூட சில யதார்த்தங்களின் அடிப்படையில் மன்னித்துவிடலாம். ஆனால் பல பெண்கள் பிரச்சினையை அணுகும் விதம் இருக்கே, அது வடிகட்டிய அயோக்கியத்தனம். தன பிள்ளைகளுக்கு ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு ஒரு நியாயமும் சொல்வார்கள். இந்த முரண்பாட்டை தொடர்ந்து கவனித்ததில் நான் ஒரு முடிவுக்கே வந்துவிட்டேன். அதாவது பாம்புக்கு பல்லில் மட்டும்தான் விஷம்....
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அப்படி தன பிள்ளைகளுக்கு என ஸ்பெஷல் பாசம் காட்டும் பெண்கள் கூட சில சமயம் பிள்ளைகளை பின்னி எடுப்பார்கள். வேடிக்கை பார்க்கும் நமக்கே பயம் வரும்.
இப்படி யதார்த்தமாக பிரச்சினையை அணுகாமல், நெகடிவ் புப்ளிசிட்டி மூலம் அவர் உடனடியாக தண்டிக்கப்பட்டார். இப்போது இந்த சம்பவத்தை கவனித்த மற்ற ராணுவ அதிகாரிகள் என்ன நினைப்பார்கள்? இனி அந்த ராணுவ காம்பவுண்டுக்குள் தீவிரவாதியே வந்தாலும் யாரும் சுடமாட்டர்கள். இதுதான் பரபரப்பு அரசியலால் நாட்டுக்கு கிடைக்கும் லாபம்.
இப்படி யதார்த்தமாக பிரச்சினையை அணுகாமல், நெகடிவ் புப்ளிசிட்டி மூலம் அவர் உடனடியாக தண்டிக்கப்பட்டார். இப்போது இந்த சம்பவத்தை கவனித்த மற்ற ராணுவ அதிகாரிகள் என்ன நினைப்பார்கள்? இனி அந்த ராணுவ காம்பவுண்டுக்குள் தீவிரவாதியே வந்தாலும் யாரும் சுடமாட்டர்கள். இதுதான் பரபரப்பு அரசியலால் நாட்டுக்கு கிடைக்கும் லாபம்.
ஊழல் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. ஊழல் ஊழல் என்று கத்துகிறோமே தவிர, ஏன் ஊழல் நடக்கிறது? அதிலும் எல்லா கட்சிகளும் ஏன் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றன என்ற கேள்வி யாருக்கும் எழுவதில்லை. அதேசமயம் இந்த பரபரப்புக்கு பயந்து ஊழலும் குறையவில்லை. எதிர்மறையாக நேர்மையானவர்கள்தான் இந்த கூச்சலால் மிரண்டு போய் முடிவே எடுப்பதில்லை.
குறை 2
புழல் சிறையில் இருந்து வாய்தாவுக்காக கோர்ட்டுக்கு வந்து காத்திருந்தோம். அங்கே ஒரு வக்கீல் கோர்ட் ஆர்டர்லிக்கு ஒரு (கேஸ்) புக்கை கொடுத்தார். அதை வாங்கிய ஆர்டர்லி, அதிலிருந்த பணத்தை எடுத்து வேகமாக தன் பாக்கெட்டில் வைத்தார்.
முறையான பணமாக இருந்தால் அதில் இவ்வளவு ரகசியம் தேவையில்லை. அதிலும் அவர் அதை பாக்கெட்டில் போட்ட விதமே சொல்லும் இது லஞ்சம் என்று. ஆனால் கோர்ட் ஆர்டர்லிக்கு எதற்காக கொடுக்க வேண்டும்?
நீதிமன்றங்களில் யாருக்கும் டோக்கன் போடுவதில்லை. காலையில் வருபவர் மாலை வரை காத்திருப்பதும், சிலர் வந்தவுடன் வாய்தா வாங்கிக் கொண்டு போவதும் உண்டு. இப்படி வேகமாக வேலை முடிய அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை. கோர்ட் ஊழியரை கவனிப்பதால் நமது வழக்கு வேகமாக நீதிபதியின் கவனத்துக்கு போகும்.
இதை கோர்ட் ஆர்டர்லி செய்கிறாரா அல்லது அப்படி செய்பவருக்காக வாங்குகிறாரா என்பது வேறு விஷயம். ஆனால் மற்ற கைதிகளிடம் பேசியதில் `இப்படி இருக்கலாம்` என்றார்கள். அதுவும் நம்பும்படிதான் இருக்கிறது. வக்கீல்களுக்கு பல வேலைகள் இருக்கும். வெறும் வாய்தாவுக்காக பலமணி நேரம் காத்திருக்க முடியாது. எனவே இப்படி `செலவு` செய்வது அவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும்.
குறை 3
ஒரு விசாரணை சிறைவாவாசியை வேறு ஒரு சிறையில் இருந்து புழலுக்கு மாற்றினார்கள். அவருக்கு A கிளாஸ் வசதி இருந்தது. ஆனால் இங்கே மாற்றலாகி வந்து கொஞ்ச நாளாகியும் அவருக்கு அந்த வசதி கிடைக்கவில்லை. உத்தரவு காப்பி அந்த ஜெயிலிருந்து வரவில்லையாம்.
இதை இவர் பேச்சு வாக்கில் மற்ற கைதிகளிடம் சொல்ல, அவர்கள், `நீங்க `முறையா` போய் கேளுங்க. சீக்கிரம் வரும்` என்று சொல்லி சிரித்தார்கள். அதன் பிறகு அவரும் போய் கேட்க அந்த மாற்றமும் அவருக்கு கிடைத்தது.
மேலே சொன்ன கடைசி இரண்டு சம்பவங்களிலும் லஞ்சம் கைமாறி இருப்பது உண்மை. இருந்தாலும் சட்டவிரோதமான காரியம் எதுவும் நடக்கவில்லை. நேரத்தை மிச்ச்படுத்த ஒரு வக்கீல் லஞ்சம் கொடுக்கிறார். சட்டப்படி கிடைக்க வேண்டிய ஒரு வசதியை லஞ்சம் கொடுத்து அடைகிறார் ஒரு கைதி. இவை ஊழல் மாதிரி என்று சொல்லக் கூடிய நிர்வாகக் கோளாறு. அதாவது நமது நிர்வாகக் கோளாறு ஒருவனை தவறு செய்யத் தூண்டுகிறது.
இடைத்தரகர் கூடாதாம்!
சமீபத்தில் `வெங்காயம்`படம் குறித்த செய்திகளை படிக்கும் போது, இந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. அதைவிட முக்கியமாக எங்கும் நிறைந்துவிட்ட ஒரு யதார்த்தம் சுடுகிறது.
ஒருவர் தரமான படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அதை வெற்றிகரமாக சந்தைபடுத்த முடியவில்லை. பணம் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், சந்தைப்படுத்துத்தல் என்பதும் ஒரு திறமை. அது எல்லோருக்கும் கை வராது. இன்று பல உற்பத்தியாளர்கள் மார்கெட்டில் நிலைத்து நிற்க காரணம், இந்த திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வதுதான். இன்னும் சொல்லப்போனால் ஒரு உற்பத்தியாளன் வியாபாரிகளுக்கு கூடுதலாய் கொடுத்தால்தான் வியாபாரத்தில் வெற்றி பெறமுடியும் என்ற அளவுக்கு மார்கெட் போய் விட்டது.
நிலைமை இப்படி இருக்கையில், ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கும் போது அதில் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்ற அரசின் கொள்கையை என்னவென்று சொல்வது? அரசின் கொள்கை அடிப்படையில் பார்த்தால் இது லஞ்சம். ஆனால் வியாபாரிகளின் பார்வையில் இதுதான் அங்கீகரிக்கப்பட்ட வியாபார முறை.
இன்னொரு சூழ்நிலையையும் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு பொருள் தரமானது என நிரூபிக்கப்பட்ட பிறகும், அதற்கான உத்தரவை தராமல் சிலர் வேண்டுமென்றே தாமதபடுத்துகிறார்கள். அல்லது போபார்ஸ் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு சிலர் முடிவெடுக்காமல் தயங்குகிறார்கள். இப்போது அந்த வியாபாரியின் நிலை என்ன?
ஒரு பொருளை சில மாதம் சும்மா வைத்திருந்தாலே அவருக்கு நஷ்டம். அப்படி நஷ்டத்தை தவிர்க்கவும், வியாபாரத்தை விரைந்து முடிக்கவும் அந்த வக்கீலைப் போல் அவர் `செலவு` செய்ய தயாராய் இருக்கலாம். ஆனால் இதை நாம் ஊழல் என்று சொல்ல முடியுமா?
இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலையும், தீர்வையும் நாம் தேடவேண்டும். சமீபத்தில் இது குறித்த செய்திகளில் மூழ்கி இருந்தபோது, இடைத்தரகர் என்பது தவிர்க்க முடியாத ஓன்று என்பதால் அரசு அதை அங்கீகரிக்க வேண்டும் என்ற வாதம் பலம் பெறுவதை காண முடிகிறது. அரசும் இதை ஒழுங்குபடுத்தி விட்டால் பல தலைவலிகள் குறையும்.
அதேபோல் அரசு அதிகாரிகள் எந்த ஒரு முடிவையும் குறிப்பிட்ட காலவரைக்குள் எடுக்காவிட்டால் அது தண்டனையில், அபராதத்தில் போய் முடியும் என்ற நிலையும் வந்தால் பாதிக்கும் மேற்பட்ட ஊழல்கள் குறைந்துவிடும்.
9 comments:
enna venam eluthalam appati elutharinga siruvanai sutta ranu veerar ungalatothu kevalamana pathivu
சிவானந்தம்,
மாறுப்பட்டு பார்க்கிறீர்கள் ஆனால் ஆக்கப்பூர்வமாக அல்ல :-))
பலமாக அடித்தாலும் அம்மாக்கள் கத்தியால் குத்துவதில்லை, பொறுமையை சோதித்தே இருந்தாலும் துப்பாக்கியால் சுடக்கூடிய குற்றமோ அல்லது தேவையோ இல்லை.
காவல்துறை,சட்டம் எல்லாம் அறிந்தவர் மைனர் கொலையே செய்திருந்தாலும் தூக்கு தண்டனைக்கொடுப்பதில்லையே, அப்படி இருக்கும் போது எரிச்சல் ஊட்டினால் சுடலாமா?
விரைந்து முடிக்க வேண்டும் என இடைத்தரகர்களை அங்கிகரித்தால் இன்னும் பெரும் ஊழலில் தான் போய் முடியும். முதலில் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்ய தேவை இல்லை. பணம் செலவு ஆகாமல் திரும்ப வந்தால் நல்லது தான்.
குறைவான தளவாடங்கள் இருந்தாலும் தரமாக இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும்.
ராணுவம் வைத்துக்கொண்டு ராணுவ ரீதியாக என்ன தீர்வுக்கண்டிருக்கிறோம் சும்மா கொஞ்ச நேரம் பாக்கிஸ்தானுடன் சுட்டுவிட்டு பின்னர் பேச்சு வார்த்தை தான் நடத்துகிறோம்.
இந்திய ராணுவத்திற்கு டிரக் கூட வெளிநாட்டில் தான் வாங்கணுமா? அப்போ என்ன வளர்ச்சியை நாம் கண்டோம்?
திரு. சிவானந்தம் அவர்களுக்கு, தங்களது கருத்துக்கள் எப்போதுமே என்னை ஈர்ப்பது வழக்கம். ஆனால் எரிச்சல் படுத்தியதற்காக, சுட்டுக் கொள்வேன் என்பது நியாயம் போல் தாங்கள் சித்தரிப்பதில் இருந்து நான் முரண்படுகிறேன். துப்பாக்கி வைத்திருக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம், பொறுமை இழந்தால், மக்களை சுட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாயிருந்தால், நாட்டில் எவ்வளவு பேர் உயிரிழக்க வேண்டியிருக்கும்?!!
-அன்புடன் கண்ணன்
சிவா!நான் போகிற இடத்துக்கெல்லாம் வவ்வால் முந்தி(ரி)க்கொள்கிறார்:)
மாற்றுப்பார்வை மேலோட்டமாகப் பார்த்தால் சரி மாதிரியே படுகிறது.ஆனால் ஆழ்ந்து யோசித்தால் சரியில்லை.எதிலும் வியாபார அணுகுமுறையோடு பணமாற்றம் நிகழ்வதால் மட்டுமே ஊழல் வளர்கிறது.சிலவற்றில் நமக்கு லாபம் கிடைக்கிறதென பரிசளிப்பதற்கும்,நட்பு ரீதியாக கொடுப்பதற்கும் பணம் கைமாறினால்தான் காரியம் ஆகும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
கோர்ட் ஆர்டர்லிக்கு வாழ்க்கை தேவைக்கான சம்பளம் இருக்கும் பட்சத்தில் கையூட்டு என்பது தவறே.இதனை எப்படி சமாளிக்கலாமென்றால்,வரி, ஸ்டாம்ப் போன்ற அரசு வருவாயை அதிகப்படுத்தி ஊதியம் மற்றும் ஏனைய வசதிகளைப் பெருக்குவது மூலமே கையூட்டை நிறுத்த முடியும்.
பொருளாதார ரீதியாக இந்தியர்கள் அதிகம் செலவழிப்பதில்லை என்பதும் கூட உற்பத்திகள் பெருகாமல் போவதற்கோ அல்லது தரக்குறைவான பொருட்கள் உற்பத்திக்கான காரணம் எனலாம்.
சினம் அடக்குவது இயல்பாய் மனிதனுக்கு வராத ஒன்று என்ற போதிலும் சினம் அடக்குவதில் பாதி தவறுகள் இல்லாமல் போகும் சாத்தியங்கள் உண்டு.குற்றங்களுக்கும்,பிரிவினைகளுக்கும் கோபம் முக்கிய காரணம் எனலாம்.கோபத்திற்கும் பாரதி சொன்ன ரௌத்திரம் பழகுவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
வியாபாரத்தின் அடிப்படையே உற்பத்தி,இதர செலவுகள்=லாபம் என்ற அடிப்படையில் இருக்கும் போது கையூட்டு செலவும் உற்பத்தியையும்,நிகர லாபத்தையும் பாதிக்கும்.எனவே அங்கீகரிக்கப்பட்ட வியாபாரத்திலும் கையூட்டு தவறே.
மூன்று பக்கம் கடலை வைத்துக்கொண்டு ராணுவ செலவுகளை அதிகரித்துக்கொண்டே போவதை விடவும்,நீ என்ன பெரிய ஆளான்னு பாகிஸ்தான் இந்தியாவிடம் மல்லுக்கட்டுவதையும் விடவும் இந்திய பாகிஸ்தான் புரிந்துணர்வில் ராணுவ செலவுகளைக் குறைத்து மக்கள் நலத்தில் கவனம் செலுத்தலாம்.சியாச்சினில் போய் டெண்டு போட்டு உட்கார்வது இரு நாட்டுக்குமே நல்லதல்ல.
ஆமா!உங்க பதிவு ஏன் சினிமாவுல போய் உட்கார்ந்து கொண்டது?
எல்லோரும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மாறுபடுவதால் அதற்கு பொதுவாகவே பதில் சொல்லி விடுகிறேன். நான் இந்த பதிவில் சொல்ல நினைத்தது போபார்ஸ் சிண்ட்ரோம் பற்றி. அதற்கு ஏதாவது உதாரணம் சொல்வோம் என நினைத்ததில் அந்த ராணுவ அதிகாரியை இழுத்தேன்.
ஆனால் அந்த செயலை நான் நியாயப்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். நிச்சயம் கிடையாது. சிறுவர்கள் கொலையே செய்தாலும் அது குற்றமல்ல, அறியாமை என்பதும் தெரியும். ஆனால் எல்லோரும் எனது கருத்தை குறையாக சொல்லும்போது அப்படி ஒரு தொனி வந்துவிட்டது தெரிகிறது. அதற்காக வருந்துகிறேன்.
இரண்டாவது, பத்திரிக்கை செய்திகளை நான் அப்படியே நம்புவதில்லை. சிறை அனுபவத்திற்கு பிறகு இது இன்னும் அதிகமாகி விட்டது. சில வழக்குகளில் பத்திரிகை படித்து அதனால் உருவாகி இருக்கும் பிம்பத்துக்கும், அந்த நபரை நாங்கள் (கைதிகள்) நேரடியாக விசாரிக்கும் போது கிடைக்கும் அபிராயத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கும். எனவே இதன் தாக்கமும் என் பதிவில் இருக்கும்.
///மக்களின் சிந்தனைகளை புரிந்து கொள்ள ஒரு சிறந்த உதாரணம், சென்னையில் ராணுவத்தினர் சுட்டு ஒரு சிறுவன் பலியான சம்பவம். நடந்தது உண்மையில் கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை. ஆனால் ராணுவத்தின் இந்த செயல் தொடர்கதையா அல்லது விதிவிலக்காக நடந்த சம்பவமா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். ///
`இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லையா?` என்ற பதிவில் நான் அந்த செயலை கண்டித்து அப்போதே எழுதி இருக்கிறேன். ஆனால் இந்த முறை வார்த்தைகளை கோர்ப்பதில் இடறி இருக்கிறேன்.
@ வவ்வால்
///பலமாக அடித்தாலும் அம்மாக்கள் கத்தியால் குத்துவதில்லை, பொறுமையை சோதித்தே இருந்தாலும் துப்பாக்கியால் சுடக்கூடிய குற்றமோ அல்லது தேவையோ இல்லை.///
வவ்வால், அம்மாக்கள் தன் பிள்ளையை கத்தியால் குத்துவதில்லை என்பது 99 சதவிகித மக்களுக்கு தெரியும். உதாரணத்துக்கு சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது.
//காவல்துறை,சட்டம் எல்லாம் அறிந்தவர் மைனர் கொலையே செய்திருந்தாலும் தூக்கு தண்டனைக்கொடுப்பதில்லையே, அப்படி இருக்கும் போது எரிச்சல் ஊட்டினால் சுடலாமா?//
இதை நானும் கண்டித்திருக்கிறேன். அதேசமயம் ஒரு வயதான நபர் தீடீரென்று படு முட்டாள்தனமான காரியத்தில் இறங்குவாரா? வயது ஏற ஏற மனிதர்கள் பக்குவப்படுவார்கள் என்பதுதான் யதார்த்தம். எனவே இவருடைய முட்டாள்தனமான செயல் லாஜிக்காக இல்லாததால் இதில் கருத்து சொல்வது சிரமம்.
//விரைந்து முடிக்க வேண்டும் என இடைத்தரகர்களை அங்கிகரித்தால் இன்னும் பெரும் ஊழலில் தான் போய் முடியும். முதலில் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்ய தேவை இல்லை. பணம் செலவு ஆகாமல் திரும்ப வந்தால் நல்லது தான்.//
இது போட்டி நிறைந்த உலகம். எனவே இடைத்தரகர்கள் கமிஷன் பெறலாம் கொள்ளை அடிக்க முடியாது.
ராணுவ செலவு என்பது இன்ஷூரன்ஸ் மாதிரி. விபத்து நடக்காது என நம்பினாலும் என்றாவது நடந்துவிட்டால் அன்று படு முட்டாளாக காட்சி அளிப்போம்.
///குறைவான தளவாடங்கள் இருந்தாலும் தரமாக இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும்.
இந்திய ராணுவத்திற்கு டிரக் கூட வெளிநாட்டில் தான் வாங்கணுமா? அப்போ என்ன வளர்ச்சியை நாம் கண்டோம்?//
இதை நானும் வழிமொழிகிறேன்.
@ கண்ணன்
///தங்களது கருத்துக்கள் எப்போதுமே என்னை ஈர்ப்பது வழக்கம்.//
எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் இருப்பது சந்தோசம். இந்த முறை நான் தெளிவாக இல்லை போலிருகிறது.
துப்பாக்கி வைத்திருக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம், பொறுமை இழந்தால், மக்களை சுட்டுக் கொள்வார்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாயிருந்தால், நாட்டில் எவ்வளவு பேர் உயிரிழக்க வேண்டியிருக்கும்?!!
இதை நிச்சயம் நானும் ஆதரிக்கவில்லை. ஆனால் விதிவிலக்காக நடக்கும் சம்பவங்களை வைத்து நாம் பரபரப்பை உருவாக்குவதால் மற்றவர்கள் பயந்துவிடுகிரார்கள் என்ற அர்த்தத்தில் சொல்ல வந்தேன்.
@ நடராஜன்
வாங்க நடராஜன் சார்
///கோர்ட் ஆர்டர்லிக்கு வாழ்க்கை தேவைக்கான சம்பளம் இருக்கும் பட்சத்தில் கையூட்டு என்பது தவறே.இதனை எப்படி சமாளிக்கலாமென்றால்,வரி, ஸ்டாம்ப் போன்ற அரசு வருவாயை அதிகப்படுத்தி ஊதியம் மற்றும் ஏனைய வசதிகளைப் பெருக்குவது மூலமே கையூட்டை நிறுத்த முடியும்.///
நான் நிர்வாகக் குறையை சுட்டிக் காட்டி இருக்கிறேன். என்னால் ஒருவனுக்கு சலுகை காட்டமுடியும் என்ற சூழ்நிலை இருக்கும் வரை ஊழல் வளரும் . அதை களைய வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் கருத்து. மற்றபடி சம்பளம் ஏற்றினாலும் கையூட்டு குறையாது
///சினம் அடக்குவது இயல்பாய் மனிதனுக்கு வராத ஒன்று என்ற போதிலும் சினம் அடக்குவதில் பாதி தவறுகள் இல்லாமல் போகும் சாத்தியங்கள் உண்டு.குற்றங்களுக்கும்,பிரிவினைகளுக்கும் கோபம் முக்கிய காரணம் எனலாம்.கோபத்திற்கும் பாரதி சொன்ன ரௌத்திரம் பழகுவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.///
சிறையில் ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்கே ஒரு டாக்டர், `நீங்கல்லாம் செத்து தொலையாம ஏண்டா உயிரை வாங்கறீங்க` என்றார் ஒருவரிடம். வரிசையில் நின்றுகொண்டிருந்த நான் அதிர்ச்சி அடைந்து திரும்பிவிட்டேன். மற்ற கைதிகளிடம் சொன்னால், `இதுக்கே இப்படியா! நீங்க ஆஸ்பிட்டல்ல போய் படுத்து பாருங்க, இன்னும் மோசமா இருக்கும்` என்றார்கள்.
நான் இருந்த செல் மினி மருந்தகம் என்பதால், மாத்திரையை இங்கேயே வாங்கிக் கொண்டேன். அப்புறம் யதார்த்தமாக யோசித்ததில், டாக்டர் மீதான கோபமும் தணிந்தது. தினம் பல கிரிமினல்களை பார்த்து பார்த்து, அவர்களுடன் மல்லுகட்டி இவரும் மரத்துப் போய்விட்டார். இப்படி அனுபவங்களை பார்பதால்தான் ஒரு தவறை கண்டிப்பதோடு மட்டுமின்றி, அவர்களின் பார்வையிலும் பிரச்சினையை பார்க்க தூண்டுகிறது.
//மூன்று பக்கம் கடலை வைத்துக்கொண்டு ராணுவ செலவுகளை அதிகரித்துக்கொண்டே போவதை விடவும்,நீ என்ன பெரிய ஆளான்னு பாகிஸ்தான் இந்தியாவிடம் மல்லுக்கட்டுவதையும் விடவும் இந்திய பாகிஸ்தான் புரிந்துணர்வில் ராணுவ செலவுகளைக் குறைத்து மக்கள் நலத்தில் கவனம் செலுத்தலாம்.சியாச்சினில் போய் டெண்டு போட்டு உட்கார்வது இரு நாட்டுக்குமே நல்லதல்ல.///
பாகிஸ்தானுடனான பிரச்சினை தீர்ந்தாலும் இந்தியாவின் ராணுவ செலவு குறையப் போவதில்லை. அதற்கு காரணம் சீனா. அவர்களோடு போட்டி போட முடியாவிட்டாலும், தற்காப்பு தேவை.
//ஆமா!உங்க பதிவு ஏன் சினிமாவுல போய் உட்கார்ந்து கொண்டது?///
சினிமா உதாரணம் சொன்னதால் லேபிளில் சினிமா இருந்திருகிறது.
அதாவது தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் பெற்ற தாய் கூட கோபத்தின் எல்லையை தொடுவார் என்பதுதான் யதார்த்தம். அப்படி இருக்கையில் அந்த ராணுவ அதிகாரியின் பொறுமையை இந்த சிறுவர்கள் எந்த அளவுக்கு சோதித்தார்களோ?
முயல் பிடிக்கிற நாய் மூஞ்சை பார்த்தல் தெரியாதா?
அவர் சுடும் அளவிற்கு அந்த சிறுவன் தீவிரவாதி இல்லையே?
by : selvam
செல்வம், கொஞ்சம் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அந்த வார்த்தைகள் அந்த செயலை ஆதரிக்கும் அர்த்தம் தருவதை உணர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தேன்.இப்போது மறுபடியுமா?
பின்னூட்டங்களில் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். தற்போது அந்த வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்.
Post a Comment