!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 17, 2012

ஒரு முட்டாளும், ஒரு அப்பாவியும்..

சில நாட்களுக்கு முன் கவனித்த செய்தி இது. பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் IPL மேட்ச் பார்க்க ஃப்ரீ டிக்கெட் கேட்டதாகவும், அதற்கு இவர்கள் மறுத்ததால் மைதானத்தை சுத்தம் செய்ய மறுத்ததாகவும் டைம்ஸ் நவ் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பபட்டடது.

அது தொடர்பான விவாதத்தில், அர்னாப் ஏதோ ஒரு செக்க்ஷ்னை சொல்லி, `இப்படி கேட்பது குற்றமாகும்` என மிரட்ட, அந்த பக்கம் இருந்த அரசியல்வாதி (துணை மேயர்), அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். கூடவே, `பத்திரிகையாளர்களும் கவர் வாங்குவதில்லையா?` என அவர்களையும் வம்புக்கு இழுத்தார்.

ஒரு பக்கம் சட்டத்தின் மீது பயமின்மை, இன்னொரு பக்கம் தான் செய்யும் தவறை நியாயபடுத்த, `நீ மட்டும் யோக்கியமா?` என கேள்வி. இதுதான் இன்றைய அரசியல் என்பதை இந்த பேட்டி நிரூபித்தது. .

எனக்கும் எந்த ஒரு செய்தியையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் பழக்கம் இல்லாததால், கொஞ்ச நாள் கழித்து அந்த செய்தியையும்,அது குறித்த பின்னூட்டங்களையும் கவனித்தேன். செய்தி வழக்கம் போல் திரிக்கபட்டிருக்கிறது. .

இது தனியார் போட்டி என்பதால், பாதுகாப்பு வழங்கும் காவல்துறைக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதே கணக்குதானே மாநகராட்சிக்கும் வரும்? நாட்டு நலன் என்ற அடிப்படையில் வராத ஒரு போட்டிக்கு அரசு துறை ஏன் செலவு செய்ய வேண்டும்? எனவே இதற்கும் IPL அமைப்பாளர்கள் முறையான பணம் கொடுத்து வழி செய்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.

இவர்கள் கட்டவேண்டிய முறையான தொகையை  மாநகராட்சி கேட்காமல் இருக்க, கவுன்சிலர்களுக்கு லஞ்சம் கொடுத்திருகிறார்கள். அதுதான் இலவச டிக்கெட்டாக உருமாறி இருக்கிறது.

இதில் அரசியல்வாதிகளை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அவர்கள் ஏன் கேட்கிறார்கள் என்ற காரணத்தையும் ஆராய்ந்துவிட்டு, இரண்டு மோசடி செய்கிறார்கள் என ஒரு சேர வெளிச்சம் போட்டு காட்டி இருக்க வேண்டும். ஆனால் ஆரமபத்தில் வந்த செய்தி, அரசியல்வாதிகள் மோசடி செய்கிறார்கள் என்ற வகையில் இருந்தது.   இதற்கு சரியான தலைப்பு என்னவென்றால், `இரண்டு திருடர்கள்` என்பதுதான்.

ஒரு முட்டாளும், ஒரு அப்பாவியும்

சிறைக்கு நான் போன சில மாதங்களிலேயே திருட்டு வழக்கில் இரண்டு பேர் வந்தார்கள். நீண்ட நாட்களாக ஒரு சமையல் காண்ட்டிராக்டரிடம் வேலை செய்பவர்கள். அதில் ஒருவருக்கு முதலாளியுடன் தகராறு ஏற்பட்டு அவர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்.

இதனால் கோபமான அவர், முதலாளிக்கு பாடம் புகட்ட அவர் வீட்டில் திருட முடிவு செய்தார். அப்படி திருடும் முன், `முதலாளி ஊருக்கு போய்விட்டாரா?` என அங்கே வேலை பார்க்கும் நண்பனிடம் கேட்க, இவர் இப்படி திட்டமிட்டிருப்பது தெரியாமல், நண்பன்தானே கேட்கிறான் என்கிற நம்பிக்கையில், `ஆமாம்` என அவரும் பதில் சொல்லி இருக்கிறார்.

திருடியவர் போலீசிடம் மாட்டிய பிறகு இந்த விஷயம் தெரியவர, இவரும் கூட்டாளி என சந்தேகப்பட்டு, உள்ளே தள்ளிவிட்டார்கள்.

திருடியவர் ஒரு முட்டாள்த்தனமான காரியம் செய்திருக்கிறார் என்றாலும், மற்றவர் தவறு என்று சொல்லும் அளவுக்கு கூட எந்த காரியமும் செய்யவில்லை. நண்பன் ஒரு கேள்வி கேட்க அதற்கு இவர் யதேச்சையாக பதில் சொல்லி இருக்கிறார். எனவே இவரை உள்ளே போட்டது தவறுதான். ஆனால் யதார்த்தம் என்று ஓன்று இருக்கிறதே. இவர் எங்களுடன் 1 மாதம் இருந்தார். அந்த பழக்கத்தில் இவர் அப்பாவி என்பதை உணர முடிந்தது.

ஆனால் போலீசாருக்கு அப்படி இல்லை.அவர்களுக்கு எல்லோரையும் சந்தேகப்பட்டே பழக்கம். அதிலும் தினம் பல குற்றவாளிகளை சந்திக்க, அதில் எல்லோரும் `நான் உத்தமன்` என சாதிக்க, அதை அப்படியே நம்ப முடியாது. எனவே போலீசாரை பொறுத்த வரையில், சந்தேகத்திற்கான அறிகுறி தெரிந்தாலே நீங்கள் உள்ளே வர வேண்டியதுதான்.

இது பொதுவான அபிப்ராயம். ஆனால் இந்த இருவர் விஷயத்தில் இவர்கள் தொழில்முறை திருடர்கள் அல்ல என்பதை போலீசார் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டார்கள்.

எப்படி என்றால், திருடியவர் நகை முழுவதும் அப்படியே போலீசாரிடம் கொடுத்துவிட்டார். உண்மையான திருடர்கள் அப்படி செய்யமாட்டர்ர்கள். அவர்களை பொறுத்த வரையில் கொஞ்சம் `ஜாலியாக` செலவு செய்து விடுவார்கள். கொஞ்சம் புதையலாகும். மீதிதான் போலீசார் வசம் வரும். அதிலும் போலீசார் கொஞ்சம் கை வைக்க, மீதிதான் இழந்தவர் கைக்கு போகும். இதுதான் திருட்டு வழக்குகளில் நான் பலர் சொல்ல நான் கேட்டது, கவனித்தது.

இந்த வழக்கில், திருடியவர் முழு நகையையும் அப்படியே ஒப்படைக்கவே, ஒரு போலீஸ் அதிகாரிக்கு சப்பென்று போய்விட்டதாம். `ஏண்டா...கொஞ்சமாவது செலவு பன்னக்கூடாதா?` என்று சோகமாக கேட்டிருக்கிறார். அவருக்கு ஏன் சோகம் என்றால், இந்த திருட்டில் அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் போனதுதான்.

உணமையான திருடர்கள் நகையை எங்கேயாவது விற்றிருப்பார்கள். அந்த நகையை வாங்கியவன், இந்த கேஸில் மாட்டாமல் இருக்க போலீசாரை கவனிப்பான். அதுவும் போச்சு. 

இவர் நிஜமான திருடர் இல்லை என்பதால், நீதிபதியிடம், யதேச்சையாக, `நான்தான் எல்லாம் நகையும் கொடுத்துட்டேனே, என்னை மன்னிச்சு விட்ருங்கய்யா` என்று உண்மையை பேசிவிட்டால், போலீசாருக்கு சிக்கல். நீதிபதிகளுக்கும் இந்த வணடவாளம் தெரியும் என்றாலும், வெளிப்படையாக கோர்ட்டில் சொல்லிவிட்டால் அவர் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். எனவே இந்த நகையிலும் கணக்கில் குறைக்க முடியாது. அதுதான் அந்த அதிகாரியை சோகத்தில் தள்ளிவிட்டது.

தொழில் முறை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அப்படி போட்டுக் கொடுக்க மாட்டார்கள். முதலில் வழக்கை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அப்படியே ஏதாவது சொன்னாலும், இவர்கள் குற்றவாளிகள் என்பதால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். ஒருவேளை துணிச்சலாக போலீசுக்கு எதிராக பேசினாலும் ஆபத்து அவர்களுக்குதான். அவர்கள் மீது இருக்கும் மற்ற எல்லா வழக்குகளும் வலுவடையும். பெயிலை மறந்துவிட வேண்டியதுதான்.

போலீசை அனுசரித்துப் போனால், உங்கள் மீது 30 வழக்குகள் இருந்தாலும், 31 வது வழக்குக்கும் பெயில் கிடைக்கும்.இங்கே போலீசார் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

இதில் அந்த முழு அப்பாவி என்னிடம், `அண்ணே...ஜெயில்ன்னா ரொம்ப மோசமா இருக்கும்ன்னு பயன்தேன்னே. உங்களை மாதிரி நல்லவங்கள பாத்த  பிறகுதான் எனக்கு உயிர் வந்தது` என்றார்.

எனக்கு ஆச்சர்யம். பல வருடங்கள் பழகியவர் இதை சொன்னால் அது அங்கீகாரம். ஆனால் 15 நாள் பழக்கத்தில் ஒருவர் இந்த வார்த்தையை சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? லாஜிக் இடிக்குதே. அவரையே கேட்டேன். அதற்கு அவர், `இங்கே எல்லாரும் கெட்ட வார்த்தை நிறையா பேசறாங்க. நீங்க அப்படி பேசல. அப்ப நீங்க நல்லவர்தானே` என்றார்.

அந்த அளவுக்கு வெகுளித்தனமான குணம். மிக நாகரீகமாக பேசும் மோசடி மனிதர்களை இவர் சந்திக்கவில்லை போலிருக்கிறது. இது 2008 ல் நடந்த சம்பவம். அந்த இருவரும் இந்த வழக்கிலிருந்து போலீசாரால் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் நம்பிக்கையும். என்ன நடந்ததோ?

0 comments:

Post a Comment