கிரானைட் வழக்கில் கைது செய்யப்பட்ட பி ஆர் பழனிச்சாமி அனைத்து வழக்குகளிலும் பெயில் கிடைத்து வெளியில் வந்துவிட்டாராம். இது சமீபத்தில் படித்த செய்தி. இவர் மீது 35 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் வரக்கூடுமாம்.
பொதுவாக ஒருவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. இதை வலியுறுத்தி ஒரு பதிவும் போட்டிருக்கிறேன். ஐந்துக்கு மேல் போனால் காப்பு உறுதி என்ற பயம் ஓரளவுக்காவது குற்றவாளிகளை கட்டுபடுத்தும்.
அதேசமயம் அதிக வழக்குகள் உள்ளவர்களுக்கு பெயில் மறுக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. அனைத்து வழக்குகளும் தள்ளுபடி ஆகும் வாய்ப்பில்லை. ஏதாவது ஒன்றில் நிச்சயம் தண்டனை கிடைக்கும். அதில் இந்த சிறைவாசம் கழிந்துவிடும். எனவே, நான் அப்பாவி, தேவையில்லாமல் சிறையில் இருந்துவிட்டேன் என குறை சொல்லும் வாய்ப்பு இங்கே வராது.
அந்த அடிப்படையில் இந்த பி ஆர் பழனிச்சாமிக்கும் மொத்த வழக்குகளில் 10௦ சதவிகித வழக்குகளில் தண்டனை என பார்த்தாலே தண்டனை உறுதிதான். எனவே நியாயமாக இவருக்கு பெயில் மறுக்கப் பட வேண்டும்.
ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். இவருக்கு பெயில் கொடுப்பதுதான் நல்லது. இவர் மீது இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அப்படி சொல்ல வைக்கிறது.
இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிமன்றத்திலோ அல்லது வேறு வேறு இடங்களிலோ இருக்கலாம். அதிலும் நம்ம நீதித்துறை விதிமுறைகளை அப்படியே பின்பற்றக் கூடியவை. ஒரே நீதிமன்றத்தில் ஒருவர் மீது நாலு வழக்கு இருந்தாலும் அதை ஒரே நாளில் வைக்க மாட்டார்கள். நாலும் நாலு நாளாகத்தான் இருக்கும். இந்த லட்சணத்தில் பி ஆர் பழனிச்சாமி சிறையில் இருந்தால் அவ்வளவுதான்.
இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிமன்றத்திலோ அல்லது வேறு வேறு இடங்களிலோ இருக்கலாம். அதிலும் நம்ம நீதித்துறை விதிமுறைகளை அப்படியே பின்பற்றக் கூடியவை. ஒரே நீதிமன்றத்தில் ஒருவர் மீது நாலு வழக்கு இருந்தாலும் அதை ஒரே நாளில் வைக்க மாட்டார்கள். நாலும் நாலு நாளாகத்தான் இருக்கும். இந்த லட்சணத்தில் பி ஆர் பழனிச்சாமி சிறையில் இருந்தால் அவ்வளவுதான்.
இவரை தினம் ஏதாவது ஒரு கோர்ட்டுக்கு வாய்தாவுக்காக அழைத்துக் செல்ல வேண்டும். இந்த வழக்குகளும் வருடக் கணக்கில் நடக்கும். வி ஐ பி என்பதால் கூடுதல் பாதுகாப்பு வேறு. இப்படி இவரை அழைத்துப் போக போக்குவரத்து, எஸ்கார்ட் என செலவு செய்தே தமிழ்நாடு போலீஸ் திவாலாகிவிடும்.
இவ்வளவு செலவு செய்து வழக்கை நடத்தி கடைசியில் நீதிபதி 1500 ரூபாய் அபராதம் விதிப்பார். அது ஒரு கொடுமை. என்னதான் விலைவாசி ஏறினாலும் நீதிமன்றங்களில் மட்டும் அபராதம் ஏறாது. எனவே இவருக்கு பெயில் கொடுத்ததுதான் சரி. இவரை போல் பல வழக்குகள் உள்ள கைதிகளுக்கும் இதுதான் சரி.
இப்போது அவர் உடல் நலம் இருக்கும் நிலையில் அவர் எத்தனை வருடம் இருப்பாரோ, அதுவும் சொல்லமுடியாது. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்து தீர்ப்பு வரவும் பல வருடங்கள் ஆகும். அப்படி தண்டனை கிடைத்தாலும் அந்த தண்டனையை நிறுத்தி வைக்க அப்பீல் வசதியும் உண்டு. ஆக மொத்தத்தில் சத்தியமா இவர் தண்டனையை அனுபவிக்கப் போவதில்லை.
பெயில் கொடுத்தால் இவர் தண்டனையை அனுபவிக்க போவதில்லை. எப்படியாவது தண்டிக்கவேண்டும் என்ற நோக்கில் பெயில் கொடுக்காவிட்டால், வாரத்தில் 5 நாள் கோர்ட்டுக்கு நகர்வலம் வந்து அரசுக்கு தண்டச் செலவு வைப்பார். என்னதான் செய்யறது? catch 22 தான்.
இதுதான் இந்தியா. இங்கே குற்றவாளிகளுக்கு சாதகமாக எவ்வளவு நடைமுறைகள்!
சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால் பணம்
சமீபத்தில் ஒருவர் போதைப் பொருள் வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்றார். ஆனால் இன்னும் 6 மாதத்தில் விடுதலை ஆகி விடுவார். அதாவது இந்த 9 ஆண்டுகளாக அவர் விசாரணை கைதியாகவே இருந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக மாதம் இரண்டு முறை நகர்வலம். பலர் இப்படி இருக்கிறார்கள். வாரம் மூன்று முறை வெளிக்கோர்ட் போகும் கைதிகளும் உண்டு.
நான் வெளிக்கோர்ட்டுக்கு போகும் போதெல்லாம் இதையும் கவனிப்பேன். பல கைதிகள் தனியாக போவார்கள். பாதுகாப்புக்கு ஒரு எஸ் ஐ மற்றும் இரண்டு காவலர்கள். இப்படிபட்டவர்கள் வெளிஊர் பயணம்தான்.
நான் இருந்த பிளாக்கில் ஒரு ஈழத் தமிழர், மாதம் ஒரு முறை புழலில் இருந்து மதுரைக்கு போனார். பல சமயங்களில் இது வெறும் வாய்தாதான். போதைப் பொருள் என்பதால் பெயிலும் கிடையாது. எனவே 15/30 நாட்களுக்கு ஒரு முறை வாய்தா நீட்டிக்கும் காமெடி நடந்துகொண்டிருக்கும்.
2009ல் ஏழு வருடம் முடிந்துவிட்டது என்றார். இந்த மதுரை வழக்கிற்கும் இத்தனை ஆண்டுகள் போயிருப்பார். நான் இருந்த இரண்டரை ஆண்டு காலமும் அவர் போனார். அது உறுதியாக தெரியும். நான்கு பேர் மதுரைக்கு போய் வர செலவுகளை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.
இன்னொருவர் திருச்சி (அ ) கோயம்புத்தூர் சிறையில் தப்பிக்க பார்த்திருக்கிறார். அவரை புழலுக்கு அனுப்பிவிட்டார்கள். இனி இவர் மாதம் இருமுறை இங்கிருந்து அங்கே போகவேண்டும்.
எங்க ஊர்க்காரர் (கடலூர்) ஒருவர் இருந்தார். அப்படி இப்படி போய் கடைசியில் எனக்கு தெரிந்தவரின் நண்பர் என தெரிந்தது. ஆனால் ரவுடி. இவரை புழலிலிருந்து கமாண்டில் வேறு ஊர் சிறைக்கு மாற்றினார்கள். சேலம் என்று நினைக்கிறேன்.
உள்ளே கைதிகளுக்கு ஆபத்து இருந்து அல்லது ரொம்ப தொந்தரவு செய்தால் வேறு ஜெயிலுக்கு மாற்றிவிடுவார்கள். இவர் அப்படி போனவர்தான்.
அவர் இங்கே இருந்தாலாவது கும்பலோடு கும்பலாக கோர்ட்டுக்கு போவார். அதன்பிறகு கடுமையான பாதுகாப்போடு அங்கே இருந்து தாம்பரத்துக்கு வருவார். சென்னையில் வேறு ஒரு கோர்ட்டிலும் இவர் மீது வழக்கு இருந்தது.
ஒரு முறை தாம்பரம் கோர்ட்டுக்கு போனபோது பார்த்தேன். நலம் விசாரித்த பிறகு, புழலில் அவர் நண்பர்களுக்கு `ஏதாவது சொல்லவேண்டுமா` என்றேன். `நான் போன்ல பேசிட்டேன்` என்றார். நான் வாயை மூடிக் கொண்டேன்.
இங்கே நமக்கு தெரியவருவது ஒன்றுதான். குற்றவாளிகளை தண்டிப்பதாக நினைத்து , பல அபத்தமான நடைமுறைகளால், அரசு பொருளாதார ரீதியாக தன்னையே தண்டித்துக் கொள்கிறது என்பதுதான்.
சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்று சொல்வார்களே, அதுபோல் இவர்களுக்கு சிறையில் சோறு போடும் செலவு குறைவாக இருக்க, இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், வழக்கை நடத்தவும் அநியாயத்துக்கு அரசு செலவு செய்கிறது.
மக்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக, கருணையாக பேசுவதற்கு, இப்படிப்பட்ட நடைமுறை செலவுகள் அவர்களுக்கு தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த டெல்லி கற்பழிப்பு சம்பவத்துக்கு பின்னரும் சன் நியுஸ் விவாதத்தில் ஒரு பெண் சொல்கிறார். இதை காரணமாக வைத்து தூக்கு தண்டனைக்கு அரசு வக்காலத்து வாங்குமாம். இன்னொருவர், காமன் சென்ஸ் உள்ளவர்கள் யாரும் மரண தண்டனையை ஆதரிக்க மாட்டார்கள் என்றார்.
எனவேதான் இந்த பதிவு எழுதும் எண்ணம் வந்தது. அடுத்த முறை என்கவுண்டர்களை, தூக்கு தண்டனைகளை எதிர்க்கும் முன், ஒரு முறை நகர்வலம் வாருங்கள். தெருவில் உறங்கும் மனிதர்களை பாருங்கள், கல்வி அறிவு கிடைக்காத குழந்தைகளை பாருங்கள். அரசு தனது நிதி ஆதாரத்தை செலவு செய்வதில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கே புரியும்.
3 comments:
ஸரியா சொன்னிங்க சார்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
@ ஆரிப்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ அவர்கள் உண்மைகள்
வணக்கம் நண்பரே.
இந்த புத்தாண்டில் பதிவுலகில் எனக்கு முதல் வாழ்த்து. நன்றி.
உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.அனைவருக்கும் இந்த ஆண்டு நல்லபடியாக அமையட்டும்.
Post a Comment