!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, July 28, 2026

கரூர் தீர்ப்பு — இது நல்ல விஷயம்தான்!

மதுரை உயர் நீதிமன்றம், கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்ட கருத்துகளும் வரவேற்கப்பட வேண்டியவை. "இவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது தவறு" என ஏற்கனவே ஒரு பதிவில் நானும் எழுதியிருக்கிறேன். எனவே, இது ஒரு நல்ல தீர்ப்புதான். ஆனால், 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நினைப்பவன் நான் இல்லை; ஒருவேளை அது 'மில்க்' ஆகவும் இருக்கலாம்!

இங்கே, ஆளுங்கட்சியின் முடிவை எதிர்த்து ஒரு தீர்ப்பு — அதுவும் மிக விரைவாக — வரக் காரணம் என்ன?

Friday, July 24, 2026

நீட்- என்ன செய்யலாம்?


இந்தத் தலைவலி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது; முடிவு வந்தபாடில்லை. என்னதான் பிரச்சினை?

எல்லாத் துறைகளிலும் ஓர் அடிப்படைத் தேர்வு வைத்து, "இந்த மாணவன் இதில் தேறுவானா?" என்று கணித்து அவர்களுக்கு மட்டும் இடம் கொடுப்பது நல்ல விஷயம்தான்.

பல பேருக்குப் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான உடல் தகுதியும் வலியைத் தாங்கும் மனஉறுதியும் இருக்கிறதா என்று தேர்வு வைப்பது போல், மருத்துவத் துறையிலும் வைப்பதில் தவறில்லை.

Saturday, July 18, 2026

மகாத்மா காந்தி, பெரியார், இப்போது விஜய்


இது ஒரு அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி. எனவே குறிப்பாக விஜய்யை வெறுப்பவர்கள் கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்வது நல்லது.

நான் நீண்ட காலமாக ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன். 20 ஆண்டுகளாக எவ்வளவோ கணக்குகள் போட்டு, நஷ்டமாகி, நொந்து போய் ஒரு வழியாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் வெற்றியில் இருக்கிறேன். அதாவது சமீபகாலமாக நஷ்டம் என்ற செய்தியே கிடையாது. இது ரொம்ப லேட்தான். இருந்தாலும், 'பெட்டர் லேட் தென் நெவர்' என்ற மனநிலை.

இப்படி ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் விலை ஏறிய ஷேர்களை மட்டும் ஆராய்வேன். அதில் சில ஒற்றுமைகள் தெரியும். அதே ஒற்றுமை வேறு ஷேர்களில் தெரிந்தால் உடனே வாங்கிவிடுவேன். அதில் 70 சதவிகிதம் எனக்கு லாபம்தான்.

Thursday, July 16, 2026

பழனி முருகனுக்கே பஞ்சாமிர்தமா?



பழனி முருகர் கோவிலுக்குச் சொந்தமான (?) நிலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. உயர் நீதிமன்றம் அந்த பதிவை ரத்து செய்துவிட்டது. இது நல்ல விஷயம். ஆனால் அதேசமயம் இங்கே பல தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் உருவாகியிருக்கிறது.

முதல் குழப்பம் அறநிலையத்துறை ரமேஷ் மீது பழி சுமத்துவது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஒரு லாஜிக் வேண்டும். விஜய் ஊழலை அனுமதிக்கமாட்டார் என்பது தெரிந்த உண்மை. ஒருவேளை அவரும் தடம் மாறினாலும் அதற்கும் சில வருடங்கள் ஆகும்.

ஒருவேளை விஜய் ஊழலை (தேர்தல் செலவுக்கு) ஓரளவுக்கு அனுமதித்தாலும், ரமேஷ் போன்றவர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர். இப்படி பொறுப்புக்கு வந்த உடனே யாரும் இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். அதுவும் 100 கோடி ஊழல் செய்யும் அளவுக்கு துணிச்சல் நிச்சயம் வராது. இங்கே யாரையும் யோக்கியன் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எதார்த்தம் என்ற அடிப்படையில் பார்த்தால் இங்கே ஊழலுக்கு வாய்ப்பில்லை.

Saturday, July 11, 2026

இவர்களுக்கு அரசு வேலையா?

கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கும், அதனால் உயிரை இழந்தவர்களுக்கும் உதவி செய்வது என்பது நல்ல விஷயம்தான். இங்கே ஒரு வகையில் தவறு விஜய் மீது இருந்தாலும், பல வகைகளில் தவறு அப்போதைய அரசின் மீதும் இருக்கிறது.

ஒருவர் ஒரு துறையில் எவ்வளவுதான் வெற்றியாளராக இருந்தாலும், பிற துறைகளில் அவர்களின் அனுபவ அறிவு குறைவாகவே இருக்கும். இத்தகைய நேரங்களில், அந்தக் குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் இவர்களுக்குச் சரியான வழிகாட்ட வேண்டும்.

சமீபத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த குழப்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். புதிதாக வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யாமல், பழைய திமுக சார்புடைய வழக்கறிஞர்களை விடுவித்துவிட்டார்கள். ஆனால், மாற்று ஏற்பாடு செய்யாமல் இப்படிச் செய்யக்கூடாது என்று அமைச்சருக்குத் துறை சார்ந்த (திராவிட விசுவாச) அதிகாரிகள் ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே, "இவர்கள் தவறு செய்யட்டும்" என்ற நோக்கில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள். கடைசியில் பழி அமைச்சர் மீது விழுகிறது.

Sunday, July 5, 2026

இந்த வியாதிக்கு மருந்தில்லை

நாட்டில் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. அதில் இந்த அவதூறு வழக்குகளும் இப்போது புதிதாக தலைவலிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தத்தில் நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் பல லட்சம் வழக்குகளில் இவைகளும் பதிவாகி, மேலே நகர முடியாமல் நின்றுவிடுகின்றன.

இதில் பெரிய தலைவலி என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் என்பது எது, அதன் எல்லை எது என்று நிர்ணயிப்பதுதான். இணையங்களிலும் முகநூலிலும் பின்னூட்டங்களைக் கவனித்தால் அநாகரிகமான வார்த்தைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அங்கே அவர்கள் சராசரி மனிதர்கள் என்பதால் அதை ஓரளவுக்குப் பொறுத்துக் கொள்ளலாம் (ஜீரணிக்கலாம்).

Thursday, July 2, 2026

இதுதாண்டா அரசியல்!

அதிமுக கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிவருகிறது. விஜய் அங்கேயிருந்து எம்.எல்.ஏக்களை ஒட்டுமொத்தமாகக் கணிசமாகத் தூக்குவார் என்று பார்த்தால், இ.எம்.ஐ கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கிறார். அதுவும் நல்லதுதான்; எல்லோரும் ஒரே நேரத்தில் முடிவெடுக்க மாட்டார்கள். 

என்னதான் இருந்தாலும் அது அவர்களுக்குத் தாய் கழகம், அதை விட்டுவிட்டு வர யாருக்கும் எளிதில் மனசு வராது. எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என எதிர்பார்த்திருக்கலாம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம் என அவர்கள் தயங்கியிருக்கலாம். ஆனால், எடப்பாடிக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. "கட்சியை விட நான்தான் முக்கியம்" என்ற இறுமாப்பு அவருக்கு. எனவே, இனி அதிமுக மெல்லச் சாவதைத் தவிர வேறு வழியில்லை.

அதுசரி, விஜய் இப்படி ஒரு கட்சிய உடைப்பது சரியா?

Saturday, June 27, 2026

சோஃபா (கவுண்டமணி) மாடல்


இன்னும் ஆறு மாதத்திற்கு தவெக குறித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது. காரணம், எதிர்க்கட்சிகளிடம் நேர்மையோ திறமையோ இல்லை. எனவே, அவர்களைப் பாராட்டி எழுத வேண்டிய அவசியம் இல்லை. நாம் தோற்றுவிட்டோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், இவர் எப்படி ஜெயிக்கலாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். வியாதி இவர்களிடம் இருந்தால் மருந்தை இவர்கள்தானே சாப்பிட வேண்டும்? அந்த உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. இன்னொரு தோல்வி அவர்களை நசுக்கிவிடும். அதுவரை அவர்கள் புலம்பட்டும்.

இங்கே விஜய் அவர்களின் நிர்வாகக் கோளாறுகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் இவையெல்லாம் அரசியலில் ‘சாதாரணமப்பா’ என கடந்து போகக்கூடியவைதான்.

Friday, June 26, 2026

மோடியின் `நீண்ட நாள் பிரதமர்` சாதனை?

இந்த அலப்பறை கொஞ்ச நாளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. மோடிக்கு ஒரு தலைவராக, சில குறைகளைத் தவிர்த்து, நான் நல்ல மதிப்பெண் கொடுப்பேன். ஆனால், அந்த மதிப்பெண் எவ்வளவு என்பதில் ஒரு கணக்கு வேண்டாமா? 35 வாங்கினாலும் தேர்ச்சிதான், 90 வாங்கினாலும் தேர்ச்சிதான். எனவே, இங்கே மதிப்பெண் வழங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஜெயிப்பது சாதனை; ஆனால், போட்டியாளர் ஜிம்பாப்வேயாக இருந்தால்?

Tuesday, June 23, 2026

பேசுங்கள் CM சார்...

தேர்தல் தோல்விக்குப் பின், திமுக மற்றும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அரசியலில் விமர்சனம் தேவைதான். ஆனால், அதை எங்கே செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா? இப்போதைக்கு அவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது; எப்போது வரும் என்றும் தெரியாது.

"முதல்வர் விஜய் பேச மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்! அவருக்கு எதுவுமே தெரியவில்லையாம்!"—இதுதான் இப்போதைய ஹாட் டாபிக். ஆனால், அவருக்கு ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது; சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. அவர் ஒரு வெற்றியாளர், அது போதாதா?

Wednesday, June 17, 2026

தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையும், மிஸ்டர் கோபிநாத்தும்

இங்கே நான் வெள்ளை அறிக்கை பற்றிப் பேசப்போவதில்லை. காரணம், நான் புள்ளிவிவரங்களை அவ்வளவாக நம்புவது கிடையாது. அதுவும் நாட்டின் நிதிநிலை என்றால் அதில் நட்சத்திரங்களை விட அதிகமான புள்ளிவிவரங்கள் இருக்கும். எந்தப் புள்ளி எங்கே இணையும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். அதாவது, பல விஷயங்களில் சில விஷயங்களைப் போட்டு இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.

எனவே, இந்த பேட்டியின் மூலம் நான் கவனித்த வேறு விஷயங்களைப் பார்ப்போம். பொதுவாக மனிதர்களில் மூன்று வகை. சம்பாதித்துக் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த சாதனையாளர்கள் சிலர்; உழைக்காமல், பரம்பரைச் சொத்தை விற்றுத் குடும்பத்தை ஓட்டுபவர்கள் சிலர்; கடன் வாங்கியே குடும்பத்தை நடத்தி, அதைச் சாதனையாகச் சொல்லும் சிலர். இந்தத் திராவிடக் கட்சிகள் மூன்றாவது வகை போலிருக்கிறது. அதிலும் மாநிலத்தைக் கடனாளியாக்கிவிட்டு அவர்கள் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.

Friday, June 12, 2026

மார்ட்டின்.... ஒருவேளை இப்படி இருக்குமோ?

விஜய் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து மார்ட்டின் குடும்பம் செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. இவர்கள் ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்தவர்கள்தான். ஆனால், இப்போது இவர்களது பெயர் அதிகம் வரக் காரணம் என்ன?

இரண்டே காரணங்கள்தான். திராவிடக் கட்சிகளின், முக்கியமாக திமுகவின் தியரியின்படி, நீங்கள் அவர்கள் பக்கம் இருந்தால் சமூகப் போராளி, அறிவாளி, நல்லவர், நாலும் தெரிந்தவர். ஆனால், எதிர்ப்பக்கம் போய்விட்டால் கதை முடிந்தது; இது அப்படியே தலைகீழாக மாறிவிடும்.

Saturday, June 6, 2026

அண்ணாமலை சாதிப்பாரா?

இருக்கும் சூழ்நிலைகளை பார்த்தால் அது சிரமம் என்றுதான் தெரிகிறது. அதாவது ஒருவன் குடும்பத்தோடு ஓட்டலுக்கு சாப்பிட போனானாம். அங்கே "நிறைய செலவாகிறது" என்று புலம்பியிருக்கிறான். அதற்கு மனைவி "எதுக்கு புலம்பறீங்க? நான் பணம் கொடுக்கிறேன், பர்ஸை கொடுங்கள்" என்று சொன்னாளாம். இது எப்படி இருக்கு?
அதே கதைதான் இங்கேயும். கணவனும் மனைவியும் எப்படி வேறு வேறு இல்லையோ அதேபோல் பாஜகவும் அண்ணாமலையும் வேறு வேறு அல்ல. பாஜகவும் தமிழ்நாடு அரசியல் புரியாமல் அதே டீயை வேறு கிளாசில் கொடுக்கிறார்கள். இது பலிக்குமா என தெரியவில்லை.
நிஜத்தில் தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஜெயிக்கவேண்டுமென்றால் யாரோ ஓர் எதிரி வேண்டும். அவர்களை இலக்காக வைத்து, அவர்கள் செய்யும் குறைகளைச் சுட்டிக் காட்டித்தான் அரசியல் செய்யமுடியும். அப்படி அண்ணாமலை யாரை எதிர்த்து அரசியல் செய்வார்?

Friday, June 5, 2026

ரொம்ப யோசிக்கறாங்களாம்...!


தமிழக அரசியல்வாதிகளிடம் இப்போது ஒரு புது நோய் பீடித்திருக்கிறது. அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்! ஒரு புது முடிவை எடுக்கப்போகிறார்களாம்! அதையும் விரைவில் (?) எடுப்பார்களாம்! அப்படி ஒரு முடிவை விரைவாக எடுத்து கடைசியில் படுகுழியில் விழுவார்களாம்! 

அதிமுக - பிஜேபி கூட்டணி இப்படித்தான் கடும் இழுபறியில் மிக விரைவாக முடிவெடுத்தார்கள். கடைசியில் இருவருக்கும் நஷ்டம். காங்கிரஸ் - திமுக கூட்டணியும் இப்படித்தான் இழு இழு என இழுத்து விரைவாக கூட்டணி அமைத்தார்கள். அங்கேயும் இருவருக்கும் கோவிந்தாதான். தேமுதிக ஒரு வருடமாக யோசித்து விரைவாக முடிவெடுத்தார்கள். அதுவும் அதோகதி.

Thursday, May 28, 2026

ஐயா விஜய் சாமி நியூஸ் கொடுங்க... ஊடகவியலாளர்கள்!

தமிழகத்தில் தற்போது இந்த குரல்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்துவிட்டன. இது இந்தியா முழுவதுக்கும்னா வியாதி என்றாலும் தமிழ்நாட்டில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற முதல்வர் விஜய்யை பார்த்து டில்லியில் இருந்த ஊடகவியாளர்களின் அந்த குரல், எனக்கு நிஜமாக தெருக்களில் அடிக்கடி கேட்கும் `அந்த குரல்களை` நினைவுபடுத்திவிட்டது.

ஏன் இந்த நிலைமை?

முதல் காரணம், தமிழகத்தில் கல்வி அறிவு அதிகம். அதைவிட அதிகம் வாசிப்பு ஆர்வம். ஒரு காலத்தில் பத்திரிக்கைகளாக இருந்த அவை தற்போது கூடுதலாக இணையமாகவும் மாறி இருக்கிறது. எனவே அவர்களுக்கு செய்தி என்ற தீனி அடிக்கடி தேவை.

Tuesday, May 26, 2026

தவெக வை நோக்கி.. வரிசையில் மற்ற எம் எல் ஏக்கள்...

முடிவெடுப்பது எப்படி முக்கியமோ அதேபோல் அதை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், அப்போதுதான் அது பலனளிக்கும்.

காங்கிரஸ், விசிக போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே விஜய் பக்கம் திரும்பியிருந்தால், இன்று கணிசமான எம் எல் ஏக்களும் மேலும் பல மந்திரிகளும் கிடைத்திருக்கும், கோட்டைவிட்டுவிட்டார்கள்.

இப்போதும் அதே நிலைதான். தற்போது தவெக வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளும் மட்டமான அரசியல் செய்யும் கட்சிகள் அல்ல, எனவே விஜய்க்கு ஆபத்து இல்லைதான். இருந்தாலும் ஒரு நிரந்தர ஆட்சியை உறுதி செய்ய, அடுத்த தேர்தலுக்கு முன் மேலும் ஒட்டு வங்கியை கூட்டுவதற்கும், சில `இழுபறிகள்` விஜய்க்கு தேவை. இதைத்தான் எல்லா கட்சிகளும் செய்தன, செய்கின்றன. எனவே அரசியல்வாதியாக விஜய்யும் அதைத்தான் செய்வார்.

Saturday, May 23, 2026

இனி விஜய்யை எதிர்க்க வேண்டும்

ஆமாம் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிட்டது. திராவிட கட்சிகள் ஆணவத்தோடு இருக்கின்றன எனவே அதற்கு ஒரு மாற்று இருந்தால்தான் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலை இருந்ததால் நான் விஜய்யை ஆதரித்தேன்.

நிலைமை இப்போது தலைகீழ். எப்படி பார்த்தாலும் இனி திராவிட கட்சிகள் எழுந்து நிற்கும் வாய்ப்பு குறைவு. அந்த அளவுக்கு மரண அடி இரண்டு கட்சிகளுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி எதிர்க் கட்சியே இல்லாமல் ஒரு அரசு இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே இனி இவருக்கு ஒரு மாற்றை தேட வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டோம்.

Tuesday, May 19, 2026

திராவிட கட்சிகள்.....கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு

மழை விட்டும் இன்னும் தூவானம் நிற்கவில்லை. இன்னமும் விஜய் கொடுத்த அதிர்ச்சியைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை; விதவிதமான வியாக்கியானங்கள். விஜய், திமுக கூட்டணிக் கட்சிகளை எப்படி அழைக்கலாம்? அவர்கள் தீய சக்தி இல்லையா? அதிமுகவை எப்படி உடைக்கலாம்? இப்படி திமுக மற்றும் அதிமுக ஆதரவு ஊடகவியலாளர்களின் புலம்பல் ஓவராக இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலும் தலைவலிதான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு கோளாறு வந்துவிடுகிறது. `இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது` என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ஒருவேளை அந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், இந்தத் திரைமறைவு குதிரை பேரங்கள் குறையும்.

இங்கே கவனிக்கப் போவது விஜய் செய்தது சரியா தவறா என்ற விமர்சனங்களைத்தான்.

Sunday, May 17, 2026

கட்டாயப் போக்குவரத்துச் சேவை

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு நாட்டைப் பெருமளவில் பாதிப்பதாகக் கூறி, பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்தியிருக்கிறார். இது நல்ல விஷயம்தான். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், தொலைத்த பொருளைத் தொலைத்த இடத்தில் தேடாமல், "அங்கே இருட்டாக இருக்கிறது" என்று கூறி வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடுவதுதான்.

பிரதமர் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும்படியும், 'கார்ப்பூலிங்' (Carpooling) போன்ற கூட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறார். அறிவுரை ஓகே, நடைமுறை?

பொதுவாகச் சாலையில் செல்லும் போக்குவரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் கிட்டத்தட்ட 50-60 சதவீதத்தினர் தனி நபர்களாகவே பயணிக்கிறார்கள். அவர்களின் பின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதை ஏன் நகர்ப்புறப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

Sunday, May 10, 2026

எது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?

"ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்."

விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சை எழுந்தபோது, இதற்கான சம்பிரதாய நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று நானே யோசித்தேன். இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் இதில் ஒரு குழப்பம் இருப்பது இயல்புதான். ஆனால், இதற்கான சரியான வழிமுறை என்ன?