சில புதிய தமிழ் திரட்டிகள் வருவது போல் தெரிகிறது. அதில் ஒன்றை கவனித்தேன்.
தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓன்று. இது எளிமையாக இருந்தது மட்டுமின்றி நீண்டகாலம் தாக்குபிடித்ததுதும் கூட. ஆனால் லாபமற்ற சேவைகள் கடைசியில் காணாமல் போவதுபோல் இதற்கும் முடிவு வந்தது.
பதிவர்கள் கூட லாபம்/அங்கீகாரம் என எதிர்பார்த்துதான் வருகிறார்கள். அவர்கள் எண்ணங்கள் நிறைவேறி அல்லது நிறைவேறாமல் தங்களுடைய பாதைகளை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்மணம் நின்றபோது அது வலித்தது.
புதிய எழுத்தாளர்களுக்கு தமிழ்மணம் ஒரு அருமையான தளம் அமைத்து கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தையும், செம்மைப்படுத்திக் கொள்ள வாய்ப்பையும் அளித்திருந்தது. அது தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்பு.
குறைந்த பட்சம், `இதுதான் பிரச்சினை..இதை சமாளித்து நடத்த விருப்பமுள்ளவர்கள் நடத்தலாம்` என்று மற்றவர்களுக்கு வழி விட்டிருக்கலாம். அதையும் இவர்கள் செய்யவில்லை. கடைசியில் இவர்களும் ஒரு `அ அ` வாக இருக்கிறார்கள்.
தற்போது புதிதாய் முயற்சி செய்யும் நண்பர்களும் அதே தவறைதான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. வாழ்த்துவோம், வரவேற்போம். ஆனால் நிர்வாக செலவுக்கு வழி?
இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதில் பணம் வசூலிக்கும் முறைக்கும் ஏதாவது சுலபமானதாக ஓன்று இருக்கும். அதை இவர்கள் முயற்சிக்க வேண்டும்.
பதிவுகளை பதிய விரும்புபவர்கள்,ரூ 100 க்கு ரீசார்ஜ் செய்தால் 10 பதிவுகள் பதியலாம்.ரூ 1000 வருடம் கொடுத்தால் தினம் 2ஜிபி.. சாரி தினம் 2 பதிவு போடலாம் என்று பணம் கேட்கலாம். அநேகமாக பதிவர்கள் கொடுப்பார்கள்.
வாசிப்பவர்களுக்கு மாதம் ரூ 35 அல்லது 49 என கட்டணம் வைக்கலாம். அமேசான் 10 ரூபாய்க்கு படிக்க புக் தர்றான். பத்தே போதும் என்றால் paytm நம்பர் கொடுத்து வசூல் பண்ணலாம். வந்தவரை லாபம். கடந்த காலங்களில் பதிவர் கூட்டம் நடந்த போது இதை பற்றி விவாதித்திருக்க வேண்டும்
இன்னொரு வழியும் இருக்கிறது. ஒரு காலத்தில் லைப்ரரியில் புத்தகம் படிக்கும்போது சில புத்தகங்கள் இருக்கும். விலை போட்டிருக்கும். கடைகளில் கிடைக்காது. யாராவது ஒரு புரவலர்/ நிறுவனம் பணம் கொடுக்கும். அவர்களின் விளம்பரம் மட்டும் அந்த புத்தகங்களில் வரும்.
அதேபோல் இந்த திரட்டிகள் நிறுவனங்களை அணுகலாம். அவர்கள் அளிக்கும் நிதிக்கு பதிலாக அவர்களின் விளம்பரம் பதிவுகளில் வெளியிடப்படும் என கேன்வாஸ் செய்யலாம். அது html கோடாக இல்லாமல் இமேஜாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு போராட்டத்தில் பெரும்பாலான பதிவர்கள் இப்படி போட்டோ போட்டிருக்கிறார்கள்.
இந்த முறை ஒரு மாற்றமாக, அந்த இமேஜை பதிவுக்குள்ளேயே இணைப்போம் என்றும், கூடவே, பதிவை எழுதுபவர்கள், `இந்த வாரம் இந்த பதிவை உங்களுக்கு வழங்குவது சுடர்மணி பனியன் ஜட்டிகள்..ஒரு முறை அணிந்து பாருங்கள், உலகத்தையே மறந்து விடுவீர்கள்.` (வேறு ஸ்பான்சர் இருந்தால் அவர்களையும் சேர்த்து) என்று எழுதிவிட்டுத்தான் பதிவை தொடங்க வேண்டும் என்று பதிவர்களுக்கு சொல்லிவிட வேண்டும்.
அப்படியும் யாரும் மசியவில்லையா, இன்னொருவர் இருக்கிறார். சரவணா ஸ்டோர் ஓனர். விளம்பரங்களில் நடித்தவர் இப்போது சினிமாவிலும் என்று கேள்வி. அவரிடம் போய் `வெளியாகும் உங்களின் அத்தனை படத்திற்கும் எங்கள் பதிவர்கள் அற்புதமான பாசிட்டிவ் விமர்சனம் எழுதுவார்கள். அப்படி எழுதாதவர்களை நாங்கள் எங்கள் திரட்டியிலிருந்தே தூக்கி விடுவோம் என்று மிரட்டியிருக்கிறோம் என்று சொல்லுங்கள். மனிதர் பணத்தை பையில் போட்டு தருவார்.
நிறைய வழி இருக்கிறது.
இங்கே நகைசுவைக்காக சில விஷயங்களை சொல்லி இருந்தாலும் திரட்டி நடத்த விரும்புபவர்கள், அல்லது பதிவர் சங்கம் நடத்துபவர்கள் இந்த வாய்ப்புகளை முயற்சிக்கலாம்.
கடைசியாக,
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தது போல், ஐடியா கொடுத்த என்னிடமே யாரும் பணம் கேட்க கூடாது. எனக்கு மட்டும் லைஃ டைம் உறுப்பினர் வசதியை இலவசமாய் கொடுத்துவிட வேண்டும்.