இந்த கோரோனா காலத்தில் சில வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அது நம் மனதில் பதிந்தும் விட்டது. ஆனால் அந்த வார்த்தைகள் அனைத்தும் வேறு ஒரு துறையில் பொருத்தி கவனித்தால் அது சில ஆச்சர்யமான செய்திகளை தருகிறது.
PEAK
Peak, herd immunity, vaccine இவைதான் தற்போது நாம் கொரோனா காலத்தில் மிகவும் பயன்படுத்தும் வார்த்தைகள். முதல் அலையில் கொரோனா 1 லட்சத்தை நெருங்கி இறங்கியது. இரண்டாவது அலையில் அது 4 லட்சத்தை தொட்டு விட்டு இறங்கியது.
ஆரம்பத்தில் இது எந்த அளவு போகும் என தெரியாமல் திணறினோம். அது 3க்கு கீழே போய் 2, 1 லட்சம் என இறங்கிய பிறகு, இனி இது இந்த அலையில் மட்டுமின்றி அடுத்த அலையிலும் இந்த அளவுக்கு ஏறாது என தெரிகிறது. இதே தியரியை நாம் தமிழக அரசியலில் பொருத்தி பார்த்தால் அங்கேயும் ஒரு சுவாரசியமான செய்தி தெரிகிறது.
இங்கே ஊழல் நடக்கிறது, அது இனியும் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஊழலின் முதல் அலை அம்மா ஆட்சியில் டான்சி மற்றும் சில ஊழல்கள் என பரபரப்பாகி நம்மை திகைக்க வைத்தது.
வழக்கம் போல் மக்களின் / சட்டத்தின் அலட்சியம் காரணமாக கொஞ்சம் அடங்கிய அந்த அலை பின்னர் அய்யா ஆட்சியில் 2g ஊழல் என பிரமாண்டம் எடுத்தது. அது கொடுத்த அதிர்ச்சியும் விளைவுகளும் மிக கடுமையாக இருக்க, அந்த அலையும் அடங்கியது. அதன் பிறகு இமாலய ஊழல் அலை என எதுவும் காணோம்.
அந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் நாம் தமிழகத்தில் ஊழலின் உச்சத்தை தொட்டு விட்டோம் என தெரிகிறது. இனி அது இறங்குமுகமாகத்தான் இருக்கும். அதேசமயம் எல்லா தொற்று நோய்களும் ஆரம்பத்தில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அடங்கினாலும், அது அவ்வப்போது வரும் seasonal disease ஆக இருக்கும் என்பதும் எதார்த்தம். அந்த வகையில் இனி தமிழகத்தில் ஊழலும் அப்படித்தான் இருக்கும். இது தியரி. நாமும் நம்புவோம்.
Herd immunity
இதுதான் நடந்து முடிந்த தேர்தலில் நான் கவனித்த சுவாரசியமான, சந்தோஷபடவேண்டிய விஷயம்.
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக நமக்கு இருந்தது. தொற்று நோய் நம்மை தாக்கும்போது, ஓன்று தடுப்பூசி கண்டுபிடித்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, மருந்து இல்லாத நிலையில், நம் உடல் இயற்கையாகவே அந்த நோயை எதிர்த்து போராடும் சக்தியை பெற்றுவிடும். இதைத்தான் நாம் கொரோன விஷயத்தில் Herd immunity என அதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஓட்டுக்கு பணம் விஷயத்திலும் அப்படித்தானே நடக்கவேண்டும். அரசு ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை தண்டிக்கவேண்டும். அப்படி நடந்தால் இது குறையும். ஆனால் கொடுப்பதே ஆட்சியாளர்கள் எனும்போது என்ன செய்வது? இதற்கு மருந்தே இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெர்ட் மெண்டாலிட்டி இங்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
ஒரு காலத்தில் பணம் கொடுத்தால் கண்டிப்பாக அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. இப்போது எல்லோரும் பணம் கொடுப்பதால், பணமும் கொடுக்கணும் கூடவே தகுதியும் இருக்கனும் என மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிகாரம் கையில், ஊழல் செய்த பணமும் நிறைய, அதில் மக்களுக்கு கொடுத்ததும் அதிகம் என்ற நிலையில் அதிமுக தோற்கிறது என்றால், இனி பணம் தமிழக மக்களை ஏமாற்றாது என தெளிவாக தெரிகிறது. அவர்கள் எல்லோரிடமும் வாங்கி கொண்டு அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு போட்டுவிடுகிறார்கள். இந்த சந்தை மனப்பான்மை `ஓட்டுக்கு நோட்டு` என்ற வியாதியையும் கட்டுப்படுத்திவிட்டது. இனி அரசியல்வாதிகள் பணம் கொடுக்க யோசிப்பார்கள். அந்த பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. எனவே இதுவும் சந்தோஷமான செய்திதான்.
தற்போதைய திமுக அரசு சிறப்பான ஆட்சியை கொடுக்குமா என தெரியாது, ஆனால் நிச்சயம் நல்லாட்சியாக அதாவது மோசமான பேர் எடுக்கும் ஆட்சியாக இருக்காது என நம்பலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இதற்கு பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது. நானும் ஏதாவது ஒரு சம்பவம் சொல்லாமல் பதிவை முடிக்கமாட்டேன். அந்த வகையில் ஒரு சம்பவம்.
இங்கே அகமதாபாத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி. கோரோனோவுக்கு முந்தையது. இரவு சாப்பாடு ஆரம்பமானது. சாப்பிடும் வரிசையில் சில சிறுவர்கள். முகமே சொல்லும் தமிழர்கள் இல்லை என்பதை. அந்த பகுதியில் இருக்கும் ஏழை சிறுவர்கள். அவர்களை கவனித்துவிட்ட `நம்மவர்` அவர்களை துரத்திவிட்டார்.
பின்னர் பந்தி முடிந்தது. சில உணவுகள் மீந்தது. இப்போது அந்த நம்மவர் சொல்கிறார், `எதையும் வீணாக்காதீங்க. பக்கத்துல ஏழைகளுக்கு கொடுத்திடுங்க` என்று. இது நல்ல செயல்தான். பல இடங்களில் கவனிக்கலாம். அதுவும் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர் சாப்பிட்ட பிறகுதான் நாம் சாப்பிடுவோம். எனவே இதை நான் இங்கே குறையாக குறிப்பிடவில்லை.
ஆனால் மனிதர்களை நான் பல விதங்களில் கவனித்த வரையில், பசிக்கு சாப்பாடு போடும் மனிதர்களை விட தன் பசி அடங்கிய பின் சாப்பாடு போடும் மனிதர்களே இங்கே அதிகம். அந்த ஒரு விஷயத்தை மட்டும் நாம் இங்கே எடுத்துக்கொள்வோம்.
நம்மவர்
நான் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்துக்காக பதிவு எழுத ஆரம்பிப்பேன் பின்னர் அது முழுமை பெறாமல் அப்படியே டிராப்டில் நின்று விடும். நம்மவர் கமல் ஒரு பேட்டியில் `மக்களுக்கு சேவை ` என பேசியதை கேட்டு கோபம் கொண்டு அவருக்காக எழுதிய பதிவில் இந்த உதாரணத்தை எழுதினேன். அதுதான் இங்கே.
கமல் அரசியலில் இறங்கியிருக்கிறார். சந்தோஷம். நடந்து முடிந்த தேர்தலில் சறுக்கியும் இருக்கிறார். அதுவும் சந்தோசம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நான் அரசியலில் இறங்கியிருக்கிறேன் என்று அவர் சொன்னால் அது பாதிதான் உண்மை.
நிஜத்தில் அவர் பணம், புகழ் மற்றும் பல என எல்லாமே திருப்தியாக பார்த்துவிட்டார். அவருடைய திரைப்பட வாழ்க்கை அந்திம காலத்தில் இருக்கிறது. எனவே இனி அவருக்கு தேவையில்லாத, பயன்படாத காலங்களை மக்களுக்காக ஒதுக்கி இருக்கிறார். சேவை எப்போது செய்தாலும் வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அவரின் இந்த செயல் சிறந்த முன்னுதாரணமாக சொல்லமுடியாது.
ஸ்டாலின்
கிட்டத்தட்ட ஸ்டாலின் கதையும் அப்படித்தான். அவர் இளமையிலேயே அரசியலுக்கு வந்துவிட்டது நல்ல தொடக்கம் என்றாலும், இதற்கு மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மட்டும்தான் காரணம் என்று சொல்லமுடியாது.
ஒரு மளிகை கடைக்காரர் பையன் 15 வயதில் கடைக்கு வந்து வியாபாரம் செய்வதும், ஒரு விவசாயின் மகன் சிறு வயதிலேயே நிலத்தில் இறங்குவதும் இயற்கையான நிகழ்வு. அதேபோல் ஒரு அரசியல்வாதியின், அதுவும் முதல்வரின் பிள்ளை, அரசியலுக்கு வந்தார் என்றால் அதுவும் இயற்கைதான். ஆனால் தகுதி? அது கேள்விக்குறியாகவே இருந்தது.
எனக்கும் ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. இதற்கு முன் `1g vs 2g` என்ற பதிவில் முதல் தலைமுறை வெற்றியாளர்களான மோடி மற்றும் எடப்பாடி போன்றவர்களை வாரிசு தலைவர்கள் வெல்வது சிரமம் என்ற தொனியில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை மீறி இவர் வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவும், சுற்றிலும் ஜால்ரா கூட்டமாகவும் இருப்பதால் அவர்களால் பல விஷயங்களை கவனிக்க முடிவதில்லை. அது அவர்களை எதேச்சாதிகாரிகளாக மாற்றிவிடுகிறது.
ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த நீண்டகால ஓய்வில் அது போன்ற சிக்கல்களை சந்திக்காமல், அவர் பல விஷயங்களை கவனித்திருக்கிறார்/படித்திருக்கிறார் என தெரிகிறது. அது அவருடைய தற்போதைய நிர்வாக முடிவிலும் தெரிகிறது.
`உன் நண்பன் யார் என சொல் நீ யார் என நான் கூறுகிறேன்` என வசனம் ஓன்று உண்டு. அந்த வகையில் இறையன்பு அவர்களை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் என தெரிகிறது.
அது மட்டுமின்றி மேலும் சில அமைச்சர்களின் பேச்சும் செயலும் தமிழகம் நல்லாட்சியை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகிறது. இதுவும் நல்ல செய்தி. வரவேற்போம்.