சமீபத்தில் பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சீமானின் `எனக்கு ஒரு வீடு கூட இல்ல` என்ற தன்னடக்கத்தை நன்றாக கிழித்து ஒரு வீடியோ போட்டிருந்தார். சீமானின் மனைவி மற்றும் மாமியாரின் சொத்துக்களையும் அவர் வெளியிட, அதற்கு சீமான் பதிலளித்த, ஸாரி பல்லிளித்த கதையும் சூப்பர்.
ஆனால் எனக்கு எதையுமே எதார்த்தமாக பார்த்து பழகிவிட்டது. எல்லோரும் அவரை மோசடி பேர்வழி என முத்திரை குத்தினாலும் அவருடைய செயல்பாடுகள் மற்றும் உடல் மொழி அவரை அப்படி காட்டுவதாக எனக்கு தோணவில்லை. காரணம், மோசடி நபர்களிடம் கொஞ்சமாவது திறமை இருக்கும். பின்னர் மாட்டிக்கொள்வார்கள், அது வேறு விஷயம். ஆனால் எதிரி எப்போது ஏமாறுவான் என எதிர்பார்த்து சரியான நேரத்தில் சுருட்டுவார்கள். இந்த திறமை நிச்சயம் அவர்களிடம் இருக்கும்.
இங்கே இவருடைய அரசியல் பயணத்தை பார்த்தால் இவருக்கு அப்படி ஒரு தகுதி இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து சளைக்காமல் பிரச்சாரத்தில் இருக்கிறரர். 4 சதவிகித ஓட்டை இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே காட்டிவிட்டார். அதுவும் கடந்த தேர்தலில் வெற்றிக்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அதிமுக சற்று அதிகமாகவே இருந்தது.
இந்த சூழ்நிலையில் அவர் அந்த பலவீனத்தை பயன்படுத்தி அங்கேயோ அல்லது அதை காட்டி இங்கேயோ பேரம் பேசியிருக்கலாம். கொஞ்சம் வளைந்திருந்தால் இவரும் கோடிகளில் குளித்திருக்கலாம். இந்நேரம் ராமதாஸ் போல் எதாவது ஒரு பண்ணை வீட்டில் மரம் செடி நட்டு இயற்கையையும், அப்படியே தன்னையும், பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் நாம் அவரை குறை சொல்ல முடியாது.
ஒருவகையில் இவர் ஒரு (உருப்படாத) கொள்கை உடைய அரசியல் தலைவர் என்றுதான் கணிக்க வேண்டும். இரண்டாம் புலிகேசி என்பதுபோல் இவர் அரசியலில் இரண்டாவது வைகோ.
குண்டு பல்ப்
இந்த செய்தியையும் கவனித்தேன். தமிழ்நாட்டில் எல்லா விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டர்பொருத்தும் பணி நடைபெறுகிறதாம். காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதுதான்.
நல்ல செய்திதான். ஆனால் இதிலும் ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சம்பவம். ஒரு வீட்டில் காலையில் தோட்டத்தில் இருந்த பாத்ரூமுக்கு போனால், அங்கே விடிய விடிய குண்டுபல்ப் எரிந்து கொண்டிருந்தது. `இரவு இதை நிறுத்தி விடலாமே?` என்று கேட்டதற்கு , `எல்லா பல்ப் எரிந்தாலும் எங்களுக்கு பில் குறைவாத்தான் வரும்` என்று பதில். காரணம் அப்போது ஏழைகளுக்கு 100- யூனிட் மின்சாரம் இலவசம் (என்று நினைக்கிறன்). எனவே அவர்களுக்கு பெரும்பாலும் குறைவாகத்தான் பில் வருமாம். இதுதான் இலவசத்தின் லட்சணம்.
ஒரு பக்கம் மின் பற்றாக்குறை இருக்க, இன்னொருபக்கம் இலவசம் என்ற காரணத்திற்காக இப்படி பல வகைகளில் விரயம். இதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்போதுதான் கணக்கெடுக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். எவ்வளவு வேகமாக இந்தியாவில் குறைகளை கண்டுபிடித்து சரி செய்கிறார்கள் பாருங்கள்! நாடு விளங்கிடும்.
மாமியார் உடைத்தால் ...
இது தேசிய செய்தி. கர்நாடகா மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்திருக்கிறது. இதை விமர்சனம் செய்த காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத், யாரும் கழுத்தில் கத்தி வைத்து மதம் மாற கட்டாயப்படுத்துவதில்லை. ஒருவரின் செயல், அவருடைய நன்னடத்தைத்தான் மற்றவர்களை அவர்களின் பாதையில் போக வைக்கிறது என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எதார்த்தம் என்பது வேறு அல்லவா. அதுவும் அரசியல் நிகழ்வுகளை அதிகம் கவனிக்கும் ஆசாத்துக்கு தெரியாதா பல மன மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது என்று.
காங்கிரசிலிருந்து எத்தனையோ பெருந்தலைகள் பிஜேபிக்கு தாவி இருக்கிறார்கள். அவர்கள் கழுத்தில் பிஜேபி கத்தியையா வைத்தது? பாதி பேருக்கு பதவி ஆசை, மீதி பேருக்கு அங்கே மரியாதை இல்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு. எனவே தாவிவிட்டார்கள்.
மத மாற்றங்களிலும் இதுதான் நடக்கிறது. இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான். இங்கே மற்ற மதத்தினரை பிஜேபி குறை சொல்கிறது. அதேசமயம் அதே கொள்கையைத்தான் பிஜேபி அரசியலில் கடைபிடிக்கிறது.
இங்கே நாம் யாரை குறை சொல்வது?