திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது. தீபம் அணைந்துவிட்டிருக்கலாம், ஆனால் செய்திகளில் இன்னும் சில வாரம் எரியும். கடந்த ஆண்டே இதை கவனித்தேன். இந்த ஆண்டு அது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு என்பதும், இங்கே பிஜேபி வளர துடிக்கிறது என்பதும் புரிகிறது.
இதில் அரசியல் இருப்பதும் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் யார் எந்த நோக்கத்துக்காக போராடினாலும், நேரம் காலம் பார்த்து போராடினாலும் நியாயம் யார் பக்கம் என்பதையும் கவனிக்க வேண்டுமல்லவா.
உடனடியாக எழுத வேண்டாம் என்று செய்திகளை கவனித்தேன். அதில் ஒரு விஷயம். 100 ஆண்டுகாலமாக பிள்ளையார்தான் இந்த தீபத்திற்கு சாட்சியாக இருக்கிறார். இப்போது தீடிரென்று ஏன் மாற்றவேண்டும்? மேம்போக்காக பார்த்தால் நியாயமாக தெரியும். அதையே திருப்பி கேட்டால்.
நீண்டகாலமாக இங்கே ஜாதி, பலதார திருமணம், பெண் அடிமைத்தனம் என்ற பிற்போக்குத்தனம் இருந்தது. இந்த திராவிட கட்சிகளின் வாதத்தின் அடிப்படையில், மாற்றம் தேவையில்லை என்றால் அவற்றை அப்படியே தொடரலாமா? இதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
எனவே இங்கே விவாதிக்க வேண்டியது தற்போது இவர்கள் தீபம் ஏற்ற முயற்சிக்கும் தீபத்தூண் சரியான ஒன்றா என்பதுதான்.
இங்கே மேலும் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கற்பூரம் என்பது கடவுளுக்கு காட்டுவது. ஆனால் தீபம் என்பது இருட்டை போக்கும் ஒளி, அது தெரு விளக்குகளை போல் எப்போதும் உயரத்தில்தான் இருக்கவேண்டும்.
தகவல் தொடர்பு வளராத காலத்தில், கடவுளுக்கு ஆராதனை முடிந்துவிட்டது, இனி நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம் என மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் காரணமாக இது போன்ற தீபத்தூண்களை அதிகபட்ச உயரத்தில் அமைத்திருக்கிறார்கள். அந்த அடைப்படையில் தீபத்தூண் உச்சி பிள்ளையாரைவிட உயரத்தில் இருக்கிறது. எனவே லாஜிக் என பார்த்தால் அதுதான் சரி.
இங்கே இன்னொரு செய்தியும் வருகிறது. அது தீபத்தூண் இல்லையாம். நிலஅளவை கல்லாம். ஆள்ளில்லாத ஊரில் டீக்கடை என்பதுபோல் அவ்வளவு உயரத்தில் ஆடு மேய்க்கவே எவனும் போவமாட்டான், அங்கே யாருக்கு வாய்க்கால் வரப்பு தகராறு ஏற்பட்டு இப்படி ஒரு எல்லையை நிர்ணயிக்க வேண்டிய அவசியம்?
அதுவும் வெள்ளைக்காரர்கள் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்வதில் அபாரமான ஆர்வம் உள்ளவர்கள். அப்படி ஏதாவது இருந்திருந்தால் அதை பதிவு செய்திருப்பார்கள். அப்படி எதுவும் வரவில்லை. எனவே இவை எல்லாமே `சொல்லப்படுகிறது` வகை.
இது நீதித்துறை உருவாக்கிய குழப்பம். அந்த கால பிரைவி கவுன்சிலும் சரி அவர்களின் வாரிசான இந்திய நீதித்துறையும் சரி, எந்த தீர்ப்பிலும் ஏதாவது ஒரு கோளாறை வைத்துவிடுவார்கள். சமீபத்தில் கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயித்த வழக்கில் யாருக்குமே புரியாத ஒரு தீர்ப்பை கொடுத்து, இரண்டு தரப்பும் வெற்றி என்று சொன்னார்களே. அதே கதைதான்.
ஒருவேளை சுதந்திரத்திற்கு முன்பிருந்த மதக்கலவர சூழ்நிலை காரணமாக அதை தவிர்ப்பதற்கு பிரைவி கவுன்சில் அங்கே தீபம் ஏற்ற தடை விதித்திருக்கலாம்.
இனி என்ன செய்யலாம்?
இப்போது இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஓன்று, தமிழ்நாட்டு மக்கள் கல்வி அறிவில் முன்னேறிவிட்டார்கள், இங்கே மதக்கலவரம் நடக்க வாய்ப்பில்லை, எனவே இந்து மத சம்பிரதாயப்படி திருப்பரங்குன்றத்தில் இருக்கும் அதிகபட்ச உயரமான தீபகல்லில் தீபம் ஏற்றும் நடைமுறையை மறுபடியும் கொண்டுவருவது.
இரண்டாவது, தீபம் ஏற்றி மக்களுக்கு தகவல் சொல்லும் முறையை விஞ்சான வளர்ச்சி அவசியமில்லாமல் செய்துவிட்டதால், தீபத்தை எங்கே ஏற்றினாலும் பிரச்சினை இல்லை என்று, உச்சி பிள்ளையாரையே நிரந்தர சூப்பர்வைசராக மாற்றிவிடுவது. எனக்கும் இதில் உடன்பாடுதான்.
ஆனால் பிரச்சினை வேறு எங்கோ இருக்கிறது என்று நான் நினைக்கிறன். அதாவது மக்கள் தொகை பெருகுகிறது, அதன் காரணமாக விரிவாக்கம் அல்லது பல்வேறு தலைவலிகள் என்பது முருகனுக்கும், தர்காவுக்கு தேவைப்படுகிறது.
தற்போது கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அதுவும் திராவிட அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் நிச்சயம் கோவிலை விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் அந்த தர்கா எப்படி இருக்கிறது, விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா, அதன் காரணமாக ஏதாவது தலைவலியை உருவாக்கிக்கிறதா என்று எந்த செய்தியும் இல்லை.
அங்கே மலையில் முஸ்லிம்கள் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. இங்கேதான் தலைவலி ஆரம்பிக்கிறது. நாங்கள் உங்கள் உணர்வுகளை மதிக்கமாட்டோம். இது எங்களுக்கு உரிமையான இடம். இங்கே நாங்கள் சாப்பிடுவதில் என்ன தவறு என்று சட்டம் பேசினால்?
அப்படியா சேதி, நாங்களும் அதே வழியில் வருகிறோம், தீபத்தூண் இருக்குமிடம் முருகர் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. எனவே நாங்களும் எங்கள் உரிமையை நிலைநாட்டுவோம் என்று இந்துக்கள் அதே பாணியில் களம் இறங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எனவே இது tit for tat வகையாக இருக்கலாம்.
இன்னொரு பக்கம் தர்காவில் ஆடுகளை பலியிடும் பழக்கம் உண்டு என உரிமை கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. 1920 முன்னால் பலியிடுதல் பழக்கம் இருந்ததாக நிரூபித்தால் அது பற்றி பரிசீலிப்போம் என்று ஒரு கோர்ட் சொல்லியிருக்கிறது. அது உண்மையா என்று தெரியவில்லை.
அதாவது 1920 முன்னால் பலியிடும் பழக்கம் இருந்ததாக நிரூபித்தால் அவர்களுக்கு அனுமதியாம். ஆனால் 1920 முன்னால் இந்த தீபத்தூண் வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது என்பது வரலாறு. அதை இந்த திராவிட போராளிகள் ஏற்று கொள்ள மாட்டார்களாம். இவையெல்லாம் என்ன லாஜிக் என்றே புரியவில்லை.
இன்னொரு பக்கம் ஒரு திராவிட அடிவருடி சொன்னார். தீபம் தீபம்தானே அதை எங்கே ஏற்றினால் என்ன என்று. எவ்வளவு அறிவுப்பூர்வமான வார்த்தை. அறிவாலயத்திலேயே படுத்து தூங்குவார் போலிருக்கிறது. எனவேதான் அறிவு இப்படி பொங்கி வழிந்துவிட்டது.
கலைஞர் மறைந்த போது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில புதைக்காமல் மெரினா பீச்சேதான் வேணும்னு அடம் பிடிச்சாங்களே அது எந்த வகை? ஏன் உடலை எங்கே புதைத்தால் என்ன? மண் மண்தானே என்று அப்போது இந்த திராவிட தலைவர்களுக்கு தோன்றியதா? வடிவேலு சொன்னமாதிரி அவங்களுக்கு வர்றது மட்டும்தான் ரத்தம் போலிருக்கிறது.
இது ஒரு சாதாரண பிரச்சினை. ஆனால் மெரினாவில் புதைத்தால்தான் கலைஞருக்கு தூக்கம் வரும் என்று திமுகவினரும், அங்கே பிரியாணி சாப்பிட்டால்தான் செரிக்கும் என முஸ்லிம்களும் ஒரு சித்தாந்தத்தை தூக்கிப்பிடிக்கும்போது, அந்த தீபதூணில்தான் நாங்கள் ஏற்றுவோம் என்று இந்துக்கள் அடம் பிடிப்பதிலும் தவறில்லை. அதாவது எல்லோரும் கிறுக்கனா இருக்கும்போது நாமும் அதே பாதையில் போகவேண்டும் என்ற மனநிலை. இதற்கு மருந்தே இல்லை.
கடைசியாக, வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய எனும் எல்லா சாம்ராஜ்யங்களும் வீழ்ந்திருக்கின்றன. மீண்டும் பல நூற்றாண்டுகள் கழித்து தலைதூக்கியிருக்கின்றன. எனவே இந்த திராவிட சாம்ராஜ்யம் நிரந்தரம் என்று இன்றைய திராவிட தலைவர்கள் நினைத்தால் அது ஒரு அறியாமையாகத்தான் இருக்கும்.

0 comments:
Post a Comment