சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.
குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.