!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, November 7, 2011

இந்த ரியல் எஸ்டேட்டுக்கு ஆப்பு வைங்கப்பா!

அணு உலை விபத்தை பற்றி கவலைப்படுகிறார்கள், ஊழலை பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் இதை விட மிகப்பெரிய ஆபத்தான மக்கள் தொகை பெருக்கத்தை பற்றியோ, அது நமக்கு கொடுக்க இருக்கும் பலவிதமான தலைவலிகளை பற்றியோ யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. சில வியாதிகள் கண்ணுக்கு தெரியும்,விகாரமாகவும் இருக்கும். வெளிப்படையாக தெரிவதால் நாம் அதை பற்றித்தான் அதிகம் கவலைப்படுவோம். இருந்தாலும் அவற்றை குணப்படுத்த மருந்து இருக்கும். ஆனால் பெரும்பாலான உயிர்க் கொல்லி நோய்கள் கண்ணுக்கு தெரிவதும் இல்லை அவற்றுக்கு மருந்தும் இல்லை. அவை மெல்லக் கொல்லும் விஷங்கள்.

மக்கள் தொகை பெருக்கமும் அது போன்ற வியாதிதான். இதனால் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப் போகும் தலைவலிகளை பட்டியலிட்டால் அது நீளும். இன்று நாம் அணுமின் நிலையங்களை நாடுவதிலிருந்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது வரை, அதோடு கொஞ்ச நாளாக எனக்கு தலை வலிப்பது வரை அனைத்துக்கும் மூலகாரணம் இதுதான். அதில் இப்போது புதிதாக ஒரு திருகுவலி வந்திருகிறது. விவசாய நிலங்களை எதற்கும் பயன்தராத மனைகளாக்கி பாழாக்குவதுதான் அது.

பணம் படைத்தவர்கள் இப்போது காலி மனைகளாக வாங்கி குவிக்கிறார்கள். நமது தேவைக்காக வீடு என்பது போய், இப்போது அது ஒரு முதலீடாக மாறிவிட்டது. அதே சமயம் அந்த மனைகளில் வீடு கட்டினால் அதற்காக வரும் வாடகையும் குறைவு, மேலும் வீடு கட்டிய பிறகு அதற்கான செலவும் முதலீடாகி விடுவதால், அப்போது அதற்கு கிடைக்கும் வருவாயும் குறைவு. எனவே காலி மனைகள்தான் இப்போதைக்கு சிறந்த முதலீடு. முதலீடு என்ற வகையில் இது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் நாட்டு நலன்?

அடிப்படை கட்டமைப்புக்காகவும் மற்றும் தொழில் துறையினரின் தேவைக்காகவும் விவசாய நிலங்கள் ஓரளவு பலி ஆகிறது. இவை அவசியமானவை. தவிர்க்க முடியாது. ஆனால் விவசாய நிலங்களை எதற்கும் பயன்படாத காலி மனைகளாக்குவதையாவது நாம் தடுக்கலாமே? ஒரு பக்கம் மக்கள் தொகையையும் தீவிரமாக கட்டுபடுத்தாமல், இன்னொருபக்கம் இந்த மக்களின் வயிற்றுக்கு ஆதாரமாக இருக்கும் விளை நிலங்களையும் இப்படி பாழாக்கினால் இது எங்கே போய் முடியும்?

தற்போதே நிலத்தின் மதிப்பு தங்கத்துக்கு இணையாக ஏறி வருகிறது. இந்தியா இன்னும் 50 கோடி மக்களை உருவாக்கப் போகிறது என்ற செய்தியையும், அதனால் மேலும் தேவை அதிகரிக்க போகிறது என்பதையும் நினைத்தால் தலை சுற்றுகிறது. தங்கத்தின் விலை ஏறுவதால் பெரிதாக ஆபத்து இல்லை. ஆனால் நிலம் அப்படி அல்ல. இது ஒரு பக்கம் விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும், அதேசமயம் வீடு, கடைகள் வாடகை உயர்வு என்ற வகையில் சாமான்ய மக்களுக்கும் கடுமையான பாதிப்பையும் கூடவே விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும்.

இதில் கொடுமை என்னவென்றால், நம்மிடம் இருக்கும் நிலபரப்பில் கிட்டத்தட்ட பாதி விவசாயத்துக்கு ஏற்றது. இருந்தும் என்ன பயன்? நம் நாட்டில் பட்டினிச் சாவும் நிற்கவில்லை, வறுமையும் ஒழியவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகு நமது மக்கள் தொகை நான்கு மடங்கு கூடி இருக்கிறது. நமது மக்கள் தொகை 150 கோடியை தொட்ட பிறகுதான் அது கட்டுபடுத்தப்படுமாம். அதை கூட உறுதியாக சொல்ல முடியாதாம். இன்னொருவர் இந்தியா இருநூறு கோடியை தொடும் என்று பயமுறுத்துகிறார்.

எந்த வகையில் பார்த்தாலும் இது இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியை தரும். இதன் பாதிப்பு பல துறைகளில், பல வகைகளில் இருக்கப் போகிறது. எனவே எதிர்வரும் ஆபத்தை சமாளிக்க இப்போதே திட்டமிட வேண்டாமா?

பொதுவாகவே மனிதர்களிடம் உள்ள குறை என்னவென்றால், பிரச்சினைகளை சந்திக்காதவரை எல்லோரும் தன்னம்பிக்கை பற்றி வாய் கிழிய பேசுவார்கள். ஆனால் எதையாவது இழந்த பிறகுதான் அவர்களுக்கு எச்சரிக்கை உணர்வு வரும். 

கோவில்களுக்கோ அல்லது விஷேஷங்களுக்கோ வரும் மனிதர்களை கவனியுங்கள். அவர்களின் செயலை வைத்தே நாம் சில விஷயங்களை கணிக்கலாம். சிலர் வண்டியை பார்க் செய்வதிலிருந்து செருப்பை விடுவது வரை அலட்சியமாக இருப்பார்கள். வேறு சிலரோ வண்டிக்கு எத்தனை வகைகளில் பூட்ட முடியுமோ அத்தனையும் செய்துவிட்டுதான் வருவார்கள். இவர்கள் நிச்சயம் வண்டியை திருடர்களிடம் இழந்திருப்பார்கள். இவர்கள் சந்தேகப் பேர்வழிகள் அல்ல. அவர்களுக்கு அனுபவம் பேசுகிறது. அவ்வளவுதான்.

நாம் நமது மக்கள் தொகையை 50௦ அல்லது 70 கோடி என்ற அளவில் கட்டுபடுத்தி இருந்தால், நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சினைகள் உருவாகி இருக்காது. வேலை இல்லா திண்டாட்டம் என்று சொல்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல. 50 பேர் போகக் கூடிய பஸ்ஸில் 100 பேரை ஏற்றிக் கொண்டு `எல்லோருக்கும் இடம் கொடு` என்று கண்டக்டரை பார்த்து கோஷமிட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இன்று இந்தியாவின் நிலைமை. 

ஒரு குழந்தை ஒரு வயிறோடு மட்டுமில்லை, இரண்டு கைகளோடும் பிறக்கிறது என்று வசனம் பேசலாம். ஆனால் வெறும் கையில் முழம் போட முடியாது. நிலம் மற்றும் தண்ணீர் என் இரண்டு அடிப்படை ஆதாரம் தேவை. மக்கள் தொகை பெருக்கத்தால் இரண்டுமே தற்போது பற்றாக்குறைதான்.  தொழில் துறை மூலம் (வளர்ந்த நாடுகளைப் போல்) பெருமளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். இருந்தாலும் இந்தியா ஒரு விவசாய நாடு எனவே நாம் அதைத்தான் அதிகமாக கவனிக்க வேண்டும் என்று பழங்கதை பேசும் மக்களிடம் என்ன செய்வது.

தண்ணீர் பஞ்சமாக இருக்கட்டும் அல்லது எரிபொருள் பற்றாக்குறையாக இருக்கட்டும், இதற்கெல்லாம் காரணம் எது? நம் உடலில் தானத்திற்காக ரத்தம் எடுத்தாலும் இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று விதிமுறை வகுத்திருக்கிறோம். அந்த விதிமுறை நம் பூமிக்கு கிடையாதா?

இந்த 60 ஆண்டுகளில் 80 கோடி மக்களை நாம் கூடுதலாக உருவாக்கி இருக்கிறோம். ஆனால் அதற்கு இணையாக நமது இயற்கை வளங்கள் வளரப் போவதில்லை. ஆனால் அதை அளவுக்கதிகமாக உறிஞ்சி எடுத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த 80 கோடி மக்களுக்கு குடியிருப்பு வழங்குவதற்கே பெருமளவு விவசாய நிலத்தை நாம் இழந்திருக்கும் நிலையில், இனி வரப்போகும் 50 கோடி மக்களுக்கும் வீடு தேவை. இப்படி எல்லா விளை நிலங்களையும் குடியிருப்புகளுக்காக பாழடித்தால், இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

ஆக மக்கள் தொகை பெருக்கத்தால் இவ்வளவு தலைவலிகளை சந்தித்த பிறகும், அரசு இன்னும் மயிலே மயிலே இறகு போடு என்ற பாணியில் இன்னும் பிரச்சாரத்தையே நம்பி இருக்கிறது. கடுமை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதை உணரவில்லை.

சில விஷயங்களை நம்மால் தடுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் எங்கே நம்மால் முடியுமோ அங்கேயாவது நாம் கடுமையை காட்டலாம். அதில் முக்கியமானது மக்கள் தொகையை கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுபடுத்துவதும், சூழ்நிலையின் அவசியம் கருதி குடியிருப்புக்காக அடுக்கு மாடி கட்டிடங்களை தீவிரமாக ஆதரிப்பதும்.

அரசு எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள். 

1 : எந்த பயனும் தராமல் காலியாக இருக்கும் நிலங்களுக்கு ஆண்டு தோறும் கடுமையான வரியை விதிப்பது.

2 : அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் பலவித சலுகைகளை அளிப்பது. புதிய கட்டிடங்களுக்கு 10 வருடத்திற்கு முத்திரைத்தாள் தேவையில்லை என்று சொன்னால் கூட வரவேற்கத்தக்கதுதான்.   

3 : தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருந்தாலும், இன்னும் தீவிரமான நடவடிக்கை தேவை. பெரும்பாலும் கீழ்மட்ட மக்கள்தான் அரசின் குடும்ப நலத் திட்டத்தை பின்பற்றுவதில்லை. எனவே இரண்டு குழந்தைக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு தனிப்பட்ட ரேஷன் கார்ட் வழங்கி பலவிதமான (அரசின் இலவசங்கள் உட்பட) சலுகைகளை குறைக்க வேண்டும்.

இந்த வார கண்டனம்.

வேறு என்ன? அண்ணா நூலகத்தை மாற்றும் திட்டத்தைதான். இதைபற்றி பலர் எழுதிவிட்டார்கள். நண்பர் உண்மைத்தமிழன் வார்த்தைகளால் விளாசிவிட்டார். அதை நான் அப்படியே வழி மொழிகிறேன்.

நூலகங்கள் அவசியமான ஒன்று. அறிய புத்தகங்களை பாதுகாக்கவும், அனைத்து துறை தொடர்பான நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒரு பிரமாண்டமான நூலகம் கட்டப்பட்டதை கலைஞர் ஆட்சியில் (ஊழலையும் தாண்டி) நடந்த நல்ல செயல்களில் ஒன்றாகவே கருதப்படும். (நிச்சயம் இது நீதி மன்றங்களால் காப்பாற்றப்படும்.)

ஆனால் வருத்தம் என்னவென்றால், அந்த நூலகத்திலும் நல்ல தரமான புத்தகங்கள் இருந்திருக்கும். ஒரு நல்ல மனிதனாக அல்லது தலைவனாக இருக்க என்ன தகுதிகள் வேண்டும் என்று அவை வழிகாட்டி கொண்டிருக்கும். அவற்றையெல்லாம் கலைஞர் படித்திருந்து, அதன்படி நடந்திருந்தால் அவருடைய ஆட்சிக்கும் ஆபத்து வந்திருக்காது, நூலகத்திற்கும் வந்திருக்காது.


6 comments:

இருதயம் said...

அருமையான் பதிவு

Jayadev Das said...

இந்தக் கட்டுரையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அருமையாக எழுதியுள்ளீர்கள். நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் அக்கறையில்லை என்பது ஒருபுறம், இன்னொரு புறம் ஓட்டு அரசியல். ஒருத்தருக்கு ஒரு வீடுதான் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை ஏன் அமல் படுத்தக் கூடாது? மேலும் வீட்டு மனைகளை ஏன் தரிசு நிலங்களுக்கு மாற்றக் கூடாது? அடுத்து ஆற்று மணலை கொள்ளையடித்த பின்னர் விவசாயம் எப்படி நடக்கும் என்ற புத்தி 88 வயதான கிழவனுக்கோ அல்லது இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கோ ஏன் தெரியவில்லை? லண்டனில் தேம்ஸ் நதி மேலிருந்து பார்த்தல் அடி வரை கண்ணாடி போல பளிச் என்று தெரிகிறது, இங்கு ஏன் எல்லாம் ஆலைகளில் இருந்து வரும் விஷக் கழிவுகளாலும், சாக்கடைகளாலும் நிரம்பப் படுகிறது? இது நாடே அல்ல, எல்லாம் அயோக்கியப் பயல்கள். இதைக் காப்பாற்ற ஆண்டவன்தான் வர வேண்டும்.

சிவானந்தம் said...

@ இருதயம்

///அருமையான் பதிவு///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

@ ஜெயதேவ தாஸ்

வணக்கம் நண்பரே. ஒரு நபருக்கு ஒரு வீடு என்பது நல்ல திட்டம்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மற்ற விஷயங்களில் பல சிக்கல்கள் இருக்கிறது. உதாரணம் மக்கள் குடியிருக்க தண்ணீர் மிகவும் அவசியம். எனவே அதனடிபடையில் குடியிருப்புகள் என்பது பெரும்பாலும் விவசாய நிலங்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இன்றைய யுகத்தில் தரிசு நிலத்தில் அது சாத்தியமா என்பதை அரசு ஆராய வேண்டும்.

///இது நாடே அல்ல, எல்லாம் அயோக்கியப் பயல்கள். இதைக் காப்பாற்ற ஆண்டவன்தான் வர வேண்டும்.///

யாராவது ஒருவர் வந்துதான் நாட்டை காப்பாற்றவேண்டும் என்று ஒரு நாட்டின் மக்கள் நினைத்தால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. நாடு என்பது ஊர் கூடி தேர் இழுப்பதை போன்றது. நாம் உண்மையான அக்கறையோடு தேரை இழுப்போம். மாற்றம் வரும் என காத்திருப்போம்.

Anonymous said...

In Western countries there is something called property tax. If the land/house is not where the owner lives the yearly property tax on it is more...India should implement something like this.

The land price in chennai is more than the price in a world class city like chicago but the income is 10 times less. This is absurd and the govt should do something to prevent this.

சிவானந்தம் said...

//In Western countries there is something called property tax. If the land/house is not where the owner lives the yearly property tax on it is more...India should implement something like this.///


Good idea. let us hope some politician reading this and takes this suggestion to the concerned minister.

///The land price in chennai is more than the price in a world class city like chicago but the income is 10 times less///

you are absolutely right. the price is not in tandem with reality. one reason for this unusual rise is, there is no good investment opportunity for the people. And the sheep mentality among the people also drawing more people to this sector.

Alternative investment opportunities and stringent laws by the govt can arrest the situation.

Unknown said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள் இது நாட்டுக்கு அவசியமானதே

Post a Comment