தலைவலியில் மிகப் பெரிய தலைவலி அரசியல்வாதியாக இருப்பதுதான். மற்ற துறைகளில் அதை தொடர்ச்சியாக கவனிப்பதன் மூலம் அந்த துறை குறித்து ஆழ்ந்த அறிவை பெறமுடியும். ஆனால் அரசியலுக்கு அப்படி சொல்ல முடியாது. இது பல துறைகளை கட்டி ஆளும் துறை என்பதால் எதிலும் உங்களால் பாண்டித்தியம் பெற முடியாது. சில துறைகளில் ஆர்வம் காரணமாக கூடுதலாக கவனிக்கலாம். அவ்வளவுதான்.
இங்கே வாரம் ஒரு பிரச்சினை எழும்பும், உடனே அது குறித்த ஆராய்ச்சியில் மூழ்குவோம். அதில் ஓரளவு புரிதல் வருவதற்குள் இன்னொரு பிரச்சினை நம் கவனத்தை ஈர்க்கும். இப்படி அங்கே இங்கே மேய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதே தலைவலிதான் அரசியல் குறித்து எழுதுபவர்களுக்கும்.
நானும் இப்படித்தான். என்னுடைய வாசிப்பும் அப்படி இப்படி தடம் மாறிக் கொண்டே இருக்கும். கொஞ்ச நாள் அணுசக்தி குறித்த வாசிப்பு என்றால், அடுத்த மாதம் அணைகள் குறித்த ஆராய்ச்சி. இப்படி ஓரளவு தகவலை தெரிந்து கொண்டு ஒரு பதிவு போட்டாலும், அந்த துறை குறித்த புரிதல் இன்னும் கற்கும் அளவிலேயே இருக்கும்.
இருந்தாலும் ஏதாவது ஒரு துறையில் எனக்கு அதிகம் ஆர்வம் வந்ததென்றால் அது ஷேர் மார்கெட்தான். காரணம், பணத்தாசை. ஷேர் மார்க்கெட் பற்றி எனக்கு தெரிய வந்தபோது நான் லாட்டரி வியாபாரம் செய்து வந்தேன். வருமானம் அன்றைய சூழ்நிலைக்கு திருப்தியானதுதான். ஆனால் மனசாட்சிக்குதான் பதில் சொல்ல முடியவில்லை. குடிப்பவன் கூட ஒரு நாளைக்கு ஓரளவுக்குத்தான் குடிக்க முடியும். ஆனால் லாட்டரி அப்படி அல்ல. லட்சங்களை சில வாரங்களில் சிலர் அழித்த கதையெல்லாம் கேள்விபட்டிருக்கிறேன்.
இருந்தாலும் நான் புத்தனில்லையே, ஒரு விஷயத்தை தவறு என்று உணர்ந்த பிறகு உடனடியாக அதை தூக்கி எறிவதற்கு. சரியான மாற்று கிடைத்த பிறகுதான் கைவிட வேண்டும் என தொடர்ந்தேன். மாற்றுத் தொழில்கள் அனுபவத்தை மட்டுமே கொடுத்தது, நம்பிக்கையை தரவில்லை.
எனவே ஷேர் மார்கெட் ஒரு துறையாக அதுவும் கோடீஸ்வரனாகும் வாய்ப்பும் தெரிய, இதை அதிகம் கவனித்தேன். அப்போதெல்லாம் இதற்காக கடலூரிலிருந்து சென்னைக்கு மாமா வீட்டுக்கு வந்துவிட்டு, அப்படியே பாரிஸ் வருவேன். அங்கே ரோட்டோரமாக புது வெளியீடுக்கான் (IPO) பாரம் பிளாட்பாரத்தில் அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் promoters equity, projected EPS என்றெல்லாம் கவனித்து சில பாரம் எடுத்துக்கொண்டு வருவேன்.
இங்கே லாட்டரி வியாபாரத்திலும் ஒரு காமெடி உண்டு. இங்கே சீட்டை வாங்கியவனுக்கு ரூ. 5000 பரிசு என்றால், அதே அளவு சீட்டை விற்பவர்களுக்கும் வரும். இது ரெகுலர் இன்கம் இல்லாமல் எக்ஸ்ட்ராவாக வருவது. எனவே அப்படி வரும் வருமானத்தை புதிய IPO வில் முதலீடு செய்வேன். அப்போது குறைந்தது வாரம் 4, 5 IPO வெளிவரும். அப்ளை பண்ணுகிறேனோ இல்லையோ, பெரும்பாலான ஃபாரம் படித்து விடுவேன். அனேகமாக ஆங்கிலம் கற்க என்னை டிக்சனரியை தூக்க வைத்தது இவைதான்.
அப்போது அறியாத வயது என்பதால் அந்த prospect ல் சொல்லப்பட்ட அததனையையும் நம்பினேன் (இப்போது நேரெதிர்). அதிலும் பல நிறுவனங்களில் oversubscribe ஆகி கிடைக்காது. எனவே நேரடியாகவே மார்கெட்டை பற்றி தெரிந்து கொள்ள சென்னையில் ஒரு ஷேர் புரோக்கரை பார்க்க, அங்கே மார்கெட் பற்றிய அறிமுகம். அதேசமயம் நான் புத்தகப் புழு என்பதால் முடிந்தவரை புத்தகங்கள் மூலமாகவும் புரிதல்.
கால ஓட்டத்தில் கடலூரிலும் ஷேர் புரோக்கர்கள் வந்து, பின்னர் NSE terminal வந்து எல்லாம் டீமேட் மயமாக, ட்ரேடிங் சுலபமானது. இதற்கிடையில் நான் விட முடியாத அந்த லாட்டரி தொழிலுக்கு `அம்மா`வே சுபம் போட்டுவிட, நானும் வேறு ரூட்டுக்கு கொஞ்சம் `சமாளித்து` மாறிவிட்டேன்.
இதுவல்லவா அட்வைஸ்
இருந்தாலும் ஷேர் மார்கெட் என்னை தூங்கவிடாமல் பண்ண, அந்த ஆராய்ச்சியும் தொடர்ந்தது. ஒரு முறை (கடலூரில்) ஒரு ஷேர் புரோக்கரிடம் ஏதோ சந்தேகம் கேட்க, அவர் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிவிட்டார். எனவே இந்த அட்வைஸ்.
``சிவானந்தம், இப்ப நாம்ப ஒரு வண்டி வாங்கனா என்ன பண்ணுவோம்? அதை ஓட்ட கத்துக்குவோம். சின்ன சின்ன பிரச்சினையை சரி பண்ற அளவுக்கு தெரிஞ்சி வச்சிக்குவோம். அவ்வளவுதானே? வண்டியை முழுசா பிரிச்சி மேயறது நமக்கு தேவையா? அதை மெக்கானிக் பாத்துக்குவாங்க. விட்ருங்க.``
மேலும் நிறைய சொன்னார். அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது. பிடித்திருந்ததும் கூட. கற்றுக் கொள்ள இந்த உலகத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. அதற்காக எல்லாவற்றையும் மூளையில் ஏற்றிக் கொள்ள வேண்டுமா? நான் ஒரு ஸ்மால் இன்வெஸ்டார். எனவே அதற்கு தேவையான தகவலை தெரிந்து கொண்டால் போதும் என நிறுத்திக் கொண்டேன். அதிலும் ஷேர் மார்கெட்டில் வெளிப்படையாக சொல்லப்படும் fundamental தியரியை விட்டுவிட்டு, ஆபரேட்டரை மட்டும் ஆராய ஆரம்பித்தேன்.
இந்த 2g பதிவை போடும் முன் கூட இணையத்தில் சில கேள்விகளோடு மேய்ந்தேன். ஆனால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கவில்லை. அந்த புரோக்கர் சொன்ன அட்வைஸ் எனக்குள் ஆழமாக பதிந்துவிட்டதால், நானும் ஓரளவுக்கு மேல் ஆராயவில்லை.
எனவே அனுபவ அறிவோடும் கிடைத்த தகவலோடும் அந்த பதிவை எழுதினேன். அதிலும் சில இடங்களில் நாம் அனுமானிக்க வேண்டி இருக்கும். ஒரு விசேஷத்துக்கு ஒருவர் வண்டியில் வருகிறார். பின் சீட்டில் ஒரு பெண் மற்றும் குழந்தைகள். இங்கே அவர்களை பற்றிய நம்முடைய அனுமானம் என்ன? கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என்பதுதானே? . 95 சதவிகிதம் இதுதான் இருக்கும். 5 சதவிகிதம் மாறுபடலாம்.
அதேபோல் யுனினார் பற்றி நெட்டில் எந்த வகையில் தேடினாலும் அது `நான் யுனிடெக்குடன்தான் வருவேன்` என்று அடம் பிடித்தது. NSE மற்றும் BSE ல், யுனிடெக் அவ்வப்போது யுனிடெக் வயர்லஸ் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இது அதன் வாரிசு என அனுமானித்தேன். இப்போதும் அந்த அனுமானம்தான்.
இந்த லைசன்சுக்காக யுனிடெக் வயர்லஸ் அரசுக்கு பணம் செலுத்தி இருக்கும். அந்த பணம் யார் செலுத்தியது? யுனிடெக் நிறுவனம் சாராத அந்த முதலாளியின் தனிப்பட்ட பணம் என்றால், யுனிடெக் சார்பாக அந்த நிறுவனம் பற்றி எக்சேஞ்சுக்கு ஏன் தகவல் தெரிவிக்க வேண்டும்? இது போன்ற கேள்விகெல்லாம் பதில் கிடைக்கவில்லை. இது என் `மனைவின் குழந்தை` மாதிரி ஏதாவது இருக்கலாம். எனவே ரொம்ப குழப்பிக்காமல் விட்டு விட்டேன்.
Odin Diet
ஒரு நாள் நான் வாங்கிய ஷேர் upper side freeze ஆனது. அது குறைவான equity என்பதால் மறுநாளும் freeze ஆகலாம். எனவே காத்திருந்தேன். மறுநாளும் அதேபோல் ஆனது. அதற்கு மேல் ஆபத்து என்பதால் காலையிலேயே விற்கும் ஆர்டர் கொடுத்தேன். அங்கே இருந்தது இரண்டு டெர்மினல். அதிலும் Bull மார்கெட். நான் அங்கே இருந்தாலும், அந்த கும்பலில் என்னுடைய ஆர்டரை வேகமாக போட முடியவில்லை. freeze ரேட்டில் ஒரே ஒரு ஷேர் விற்றது. பின்னர் அதை விலை குறைந்து விற்றாலும், புரோக்கரிடம் புலம்பினேன்.
அதற்கு அவர், `உங்ககிட்ட சிஸ்டம் இருக்கு, நெட்டும் இருக்கு. அதுல Odin Diet சாப்ட்வேர் போட்டுக்குங்க. நீங்களே ட்ரேட் பண்ணலாம்` என்று சொன்னவர், அதையும் இன்ஸ்டால் பண்ணி கொடுத்துவிட்டார்.
அதன் பிறகு என்னுடைய கம்ப்யூட்டரில் சிகப்பு மற்றும் ப்ளு கலரில் அந்த டிரேடிங்கை பார்த்தும் எனக்கு பசி மறந்தது. ஏதாவது ஒரு பார்முலா இருக்கும். அதை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை உற்சாகத்தை தந்தது. எதிர்காலம் நம்பிக்கையை கொடுத்தால் நிகழ்காலம் சொர்க்கமாக இருக்கும் அல்லவா! எனவே நான் வானத்தில் மிதந்தேன். ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் தலையில் கை வைத்தேன். அந்த கதை வேண்டாம். விட்டுவிடுவோம்.
இங்கே என்னால் லாப நஷ்டத்தை கணக்கு போட முடியவில்லை. நஷ்டம் என்ன லாபம் என்ன என்பது பலவகைப்படும். சில இடங்களில் நாம் தோற்றிருந்தாலும், அது நமக்கு கொடுக்கும் பாடம் விலை மதிப்பில்லாதது.
என்னை பொறுத்த வரையில், ஒரு IPO ஃபாரம் படிக்க டிக்ஸ்னரியை தூக்கியவன், பின்னர் தினம் நியூயார்க் டைம்சும், சிட்னி மார்னிங் ஹெரால்டும் படிக்க முடிந்தது ஷேர் மார்கெட்டால்தான். அதாவது இன்டைரக்ட் லாபம். ஆக ஏதோ ஒன்றை இழந்தோம் ஏதோ ஒன்றை அடைந்தோம் என திருப்திதான்.
அதே சமயம் `விருந்தாளி` வாழ்கை என்னை கொதி நிலைக்கு கொண்டு வந்திருந்ததால், கோடீஸ்வரனாக ஆகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமின்றி விரைவாகவும் ஆகவேண்டும் என துடித்தேன். ஒருவேளை நிதானமான மனநிலையில் நான் கவனித்திருந்தால் ஷேர் மார்கெட் எனக்கு வசப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இப்போதும் எனக்கு உண்டு.
எப்படியோ பிளாட்பாரத்தில் இருக்கும் பாரம் வாங்க சென்னைக்கு போனவன், நினைத்த உடன் புரோக்கர் உதவியின்றி நானே ஷேர் வாங்கும் அளவுக்கு அதை புரிந்து கொண்டேன்.
இது லாட்டரியை விட மிகப் பெரிய மோசடியாக இருந்தது. இருந்தாலும் லாட்டரியில் 100 சதவிகிதம் அழிவு. ஆனால் ஷேர் மார்கெட்டில் மக்களிடம் சுருட்டப்படும் பணத்தின் மதிப்பு அதிகமாக இருந்தாலும், அடிப்படையில் இது பொருளாதாரத்துக்கு தேவையான ஒரு ஆரோக்கியமான கட்டமைப்புதான். அரசியலை போலவே இங்கேயும் மோசடி பேர்வழிகள் தண்டிக்கப் படவேண்டும். அவ்வளவுதான்.
2 comments:
ஷேர் மார்கெட் பற்றி ஒரு சிறு முதலீட்டரின் பார்வையில் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
ஷேர் மார்க்கெட் மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செருப்பில் அடிக்கும் .ஷேர் மார்க்கெட்டில் பணம் போடாமல் இருப்பதும் தவறு ,எல்லா பணத்தையும் போடுவதும் தவறு !
Post a Comment