இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தை அன்று மதியம் டிவியில் பார்த்தேன். ஈவினிங் கடைக்கு வந்தால், ராஜ நடராஜ அண்ணனின் இந்த தீர்மானம் குறித்த பதிவு. அவ்வளவு வேகம். இது அவருக்கு சந்தோஷமான செய்தி. எனவே உடனடியாக அவருடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
எனக்கும் இந்தியாவின் இந்த முடிவு அதன் விருப்பமான முடிவாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம். உடனே பதிவு எழுத ஆரம்பித்தேன். சில பல காரணங்களால் உடனே முடியவில்லை. ஆனால் அதற்குள் இதே பாணியில் வேறு சில பதிவுகள் வந்து விட்டன. சரி, இது பத்தோடு பதினொன்று...
சினிமாவில் இந்த காமெடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது காமெடி சீன் இல்லை. யதார்த்தத்தை பிரிதிபலிக்காத எதுவும் காமெடியாகத்தானே இருக்கும். இது அந்த வகை காமெடி. அதாவது எல்லா உதையும் வாங்கிய பிறகு, கடைசி நேரத்தில் வில்லன் மனம் திருந்திவிட்டதாக வசனம் பேசுவான். யதார்த்தமாக படங்கள் வந்த காலத்திலும் இந்த அபத்தம் சினிமாவில் உண்டு.
நிஜத்தில் மன மாற்றம் இப்படி உடனடியாக வருவதில்லை. சந்தோசம், கோபம் மட்டுமே அப்படி வெளிப்படலாம். ஆனால் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தால், பெரும்பாலானவர்கள் அதை உடனடியாக ஒப்புக்கொண்டு U டர்ன் எடுப்பதில்லை. பலருக்கு கவுரவம் தடுக்கும். எனவே மத்திய அரசின் இலங்கைக்கு எதிரான ஓட்டு நடுநிலை, வருத்தம், கோபம் என பல நிலைகளை தாண்டி வராததால், அதை ஏற்க முடியவில்லை.
`தமிழகம் கொந்தளித்ததால்...` என்று ஒரு கதை. ஆனால் அம்புலிமாமா கதையை யார் நம்புவது? எனவே இப்படி கண்கட்டு வித்தைகள் நடக்கும் போது என்னதான் நடந்திருக்கும் என ஆராயத் தோன்றும். இது அந்த அலசல்.
இலங்கையை பெரிய சிக்கலில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு இப்படி நாடகம் ஆடுகிறது
இந்த மூன்றாண்டுகளில் இலங்கை அங்கே தமிழர்களின் குறைகளை தீர்க்க முறையாக, மனபூர்வமாக முயற்சி செய்திருந்தால், இந்தியா இலங்கையை காப்பாற்ற நிச்சயம் முயற்சி செய்திருக்கும். ஆனால் இலங்கை அப்படி நடந்து கொள்ளவில்லை.
யதார்த்தம் என்னவென்றால், `இன்று ஒருவன் நல்லவனாக இருந்தால், நேற்று அவன் செய்த தவறை மன்னித்து விடு` என்பதுதான். அதிலும் நாடுகளை பொறுத்தவரையில் இதுதான் விதியே. எனவே இலங்கை அதிகார பகிர்வுக்கு முறையான முயற்சிகளை எடுத்திருந்தால், அதன் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்பட்டு அங்கே அமைதி வந்தால் போதும் என்று இந்தியாவும்,மேற்கத்திய நாடுகளும் அமைதியாக இருந்திருக்கும்.
ஆனால், இலங்கை அதிகார பரவலுக்கு தயாராக இல்லை என்ற கோபம்தான் மேற்கத்திய நாடுகளை இந்த தீர்மானத்தை கொண்டு வர செய்திருக்கிறது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் நேரம் பார்த்து `சேனல் 4 ` படக் காட்சிகளும் வெளியிடப்பட்டிருகிறது.
நியாயமாக பார்த்தால் இலங்கை இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறியதால் இந்தியாதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். ஆனால் இது அரசியல். அடக்கி வாசிக்க வேண்டும், அல்லது குள்ள நரித்தனம்தான் செய்ய முடியும்.
தமிழக கட்சிகளின் போராட்டம்.
தமிழகத்தின் பிரதான இரண்டு கட்சிகளை வழிக்கு கொண்டுவருவது காங்கிரசுக்கு பெரிய விஷயமில்லை. அதுவும் திமுக...சான்சே இல்லை. திமுகவால் சும்மா மிரட்டி பார்க்கத்தான் முடியுமே தவிர, அந்த எல்லையை தாண்டி ஒரு அடி கூட வைக்க முடியாது.
அதோடு ஊழல் வழக்குகளில் சிக்கிய கட்சிகளை, அதை காட்டி மிரட்டியே வழிக்கு கொண்டு வருவதுதான் காங்கிரசின் பாலிசி. முலாயம் சிங், மாயாவதி, லாலுபிரசாத் என பட்டியல் போடலாம். தமிழகத்தின் முக்கியமான இரண்டு தலைகளும் நீதிமன்றத்தில் மாட்டிகொண்டிருக்கின்றன. அப்படி இருக்கையில் இவர்கள் மிரட்ட, அதை பார்த்து மத்திய அரசு பயந்து முடிவெடுத்தது என்பது நம்பும்படி இல்லை.
இது லாஜிக்
அனேகமாக மத்திய அரசே தமிழக கட்சிகளை தூண்டிவிட்டு இப்படி ஒரு காரியத்தில் இறங்கி இருக்கலாம். காங்கிரசை நேரடியாக திட்ட முடியாத சூழ்நிலையில், கலைஞர் கி வீரமணியை ஏவி விடுவார். அந்த பார்முலாதான் இது.
காரியம் ஆகும்வரை இந்தியாவுக்கு தலை ஆட்டிவிட்டு, ராஜபக்சே இப்போது அகங்காரத்தில் ஆடுகிறார். அவர் மட்டுமில்லை, பலர் இப்படித்தான்.
எனவே மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளை தூண்டி விட்டு, `நீங்கள் போராட்டங்கள் நடத்துங்கள். உங்களுக்கு பயந்து நான் ஓட்டு போட்டதாக இருக்கட்டும். இதுதான் நம் எல்லோருக்கும் நல்லது` என்றும் முடிவெடுத்திருக்கலாம்.
அதேசமயம் இலங்கைக்கு ஆதரவாக சில திருத்தங்களையும் இந்தியா கொண்டுவந்ததே?
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது அரசியலில் நடக்காத விஷயமா என்ன? இது அந்த வகையாகவும் இருக்கலாம்.
இனி என்ன ...?
அமெரிக்காவின் தீர்மானம் ஒரு ஆரம்பம். நம் நாட்டில் சில வழக்குகள் நீர்த்துப் போவதும் உண்டு. சில, மெல்ல மெல்ல காலை சுற்றி தலைக்கு வருவதும் உண்டு. எப்போதோ பதியப்பட்ட ஒரு வழக்கு இப்போது பா ம க விற்கு தலைவலி தரவில்லையா? அதேபோல் இலங்கைக்கும் இது பின்னர் தலைவலியாக மாறிப் போகலாம். அதை உணர்ந்து இலங்கை முறையான அதிகார பகிர்வுக்கு தயாரானால் அதற்கு நல்லது.
முரண்டு பிடித்தால் ஈழம் ஒன்றே தீர்வாகி விடும். நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் வரையில், மற்றவர்கள் அதில் அதன் நலனில் தலையிட தயங்குவார்கள் என்று. இது சொந்த அனுபவமும் கூட. தற்போது அங்கே வெற்றிடம் உருவாகிவிட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவும் மறைமுகமாக அந்த வேலையை ஆரம்பித்துவிட்டது.
இங்கே இலங்கை தமிழர்கள் சந்தோஷப்பட இன்னொரு லாஜிக் இருக்கிறது. இங்கே கலைஞரும் சரி, மாயாவதியும் சரி, மிகத் திறமையாக (ஒரு தேர்தலில்) கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்கள். ஆனால் அது கொடுத்த அகங்காரத்தில் அடுத்த தேர்தலில் காணாமல் போனார்கள். ராஜபக்ஷேவின் பேச்சும் தற்போது அப்படித்தான் இருக்கிறது.
அதுமட்டுமின்றி, இன்றைய உலக அரசியலை பொறுத்தவரையில்,மேற்கத்திய நாடுகள்தான் இன்னமும் உலகை ஆள்கிறார்கள். அவர்களையும், இந்தியாவையும் பகைத்துக் கொண்டால், அது தலைவலியை விலைக்கு வாங்கிய கதைதான். இதில் பிரச்சினை என்று வந்தால் ரஷ்யா இந்திய ஆதரவு நிலையைத்தான் எடுக்கும். வெறும் சீனா என்ற கார்டை வைத்துக் கொண்டு இலங்கை ரொம்பநாள் துள்ள முடியாது.
எனவே இலங்கை அரசு தமிழர்களுக்கு சம உரிமை கொடுத்தால் நல்லது. அல்லது கொடுக்க மறுத்தாலும் நல்லதுதான். அது ஈழ விடுதலையை தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கிவிடும்.
அமைதி போராட்டமும், ஆயுத போராட்டமும் தனி ஈழத்துக்கு பலம் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது இலங்கையின் தான் தோன்றித்தனத்தால் அதுதான் தீர்வு என்று உலக நாடுகளை நம்பவைத்துவிடும். எப்படியோ, சம உரிமை அல்லது ஈழம் என ஏதோ ஓன்று இலங்கை தமிழர்களுக்கு காத்திருக்கிறது.
12 comments:
//எப்படியோ சம உரிமை அல்லது ஈழம்//
மிக சுலபமாக சொல்லிவிட்டிர்கள். தனி ஈழம் என்று ஒரு எத்தியோப்பியா தான் உருவாகும்.
சிவானந்தம்,
இத்தீர்மானத்தின் உள் நிறைய அரசியல் இருக்கு,
அமெரிக்காவைப்பொறுத்த வரையில் ,
இலங்கையில் படைத்தளம் அமைக்க முடியாமல்(இந்திரா வின் அரசியலும் ஒரு காரணம்) 2200 கி.மிக்கு அப்பால் இந்திய கடலில் டீ கோகார்சியாவில் தளம் அமைத்துக்கொண்டு ஆசிய வட்டாரத்தை பருந்து பார்வைப்பார்க்கிறது. இப்படியான சூழலில் சமிபகாலத்தில் திடீர் என சீனா இலங்கையின் தோஸ்தாக மாறி வலம் வருகிறது, நாம் புக முடியாத இடத்தில் சீனாவா என அம்மெரிக்காவுக்கு ஒரு கடுப்பு.
இந்தியாவைப்பொறுத்த வரையில் , இலங்கையில் பாகிஸ்தான்,அமெரிக்கா, சீனா எல்லாம் நடமாடக்கூடாது என பல வகையிலும் விட்டுக்கொடுத்து , அனுசரனைக்காட்டியும் ,எல்லாம் அனுபவித்து விட்டு சீனாவோடு டூயட் பாடும் போக்கு பிடிக்கவில்லை. நம்ம முறைப்பொண்னை வேற ரெண்டு தடியனுங்க டாவடிக்கிறாங்களே ,இந்த பொண்ணும் சிரிச்சு பேசுதே என்பது போல ஒரு எரிச்சல் எனவே அதிருப்தியை காட்ட இத்தீர்மானம்.
பிரிஞ்சு போன கேர்ல் பிரண்டை பத்தி யாராவது தப்பா சொன்னா பழைய பாசத்துல அப்படி சொன்னவன அடிக்க போறக்ஹீரோ போல இந்தியா நாங்க இன்னும் உனக்காக காத்திருக்கோம் சமர்த்தா எங்க பக்கமே இருக்கனும்னு ஒரு மெசேஜ் சொல்ல இலங்கைக்கு சாதகமான திருத்தம் என ஆளுக்கொரு ஆசை இத்தீர்மானத்தின் பின் இருக்கு.
மேலும் இலங்கை இந்தியாவை விட்டு விலகி விடாமல்ல் இருக்கவே இந்தியா விரும்புகிறது, இந்த பட்ஜெட்டில் கூட இலங்கைக்கு 290 கோடி கடன் கொடுத்து இருக்கு. இது போல எப்பவும் கொடுத்தே வருகிறது ,அதை எல்லாம் வாங்கி மக்கள் பணி செய்யாமல் ஆயுதம் வாங்கி அழிப்பது இலங்கையின் வழக்கம்.இலங்கையின் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்வதும் இந்தியாவே. எல்லாம் அனுபவித்துக்கொண்டு ஆட்டம் காட்டுவது இலங்கையின் வாடிக்கை.
என்ன இந்த முறை கொஞ்சம் கடுப்பாகி எதிரா ஓட்டுப்போட்டு இருக்கு, கொஞ்சம் தாஜா செய்தால் போதும் இந்தியா வழக்கம் போல வாயை மூடிக்கொள்ளும்.
ஆனாலும் மக்கள் கல்லை கடவுள் என்று நம்புவது போல இப்போதும் ஒரு நம்பிக்கையில் இருக்காங்க. எது எப்படியோ ஓட்டை சட்டியா இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தா சரி என்பதான மனோபாவம் தான்.
இதில் மாநிலக்கட்சிகளின் மிரட்டல் தான் காரணம் என்பது காக்கா பனம் பழம் தான்.இதற்கே ஜீவியில் கழுகார் செய்தியில் பிரதமர் முன்னரே இத்தீர்மானத்தினைப்பற்றி சொல்லிவிட்டாராம், தெரிந்துக்கொண்டே உண்ணாவிரம் என்றெல்லாம் கலைஞர் அறிக்கை விட்டு புரட்சி செய்துள்ளார் என போட்டுள்ளார்கள்.
ஹி..ஹி இது பற்றி நிறைய ராஜ் பதிவிலும் பேசியாச்சு ஆனாலும் விடாம தொடருது :-))
@Anonymous said...
///மிக சுலபமாக சொல்லிவிட்டிர்கள். தனி ஈழம் என்று ஒரு எத்தியோப்பியா தான் உருவாகும்.///
அவ நம்பிக்கை வேண்டாம் நண்பரே.
நீங்கள் இலங்கையை சேர்ந்தவராக இருந்தால் இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். ஏனென்றால் நீங்களே அதை விரும்பவில்லை என தெரிகிறது. ஆனால் இது வேறு மாதிரி போகலாம். அது இப்போது வேண்டாம்.
அவ நம்பிக்கை ஒன்றும் இல்லை நண்பர். தனி ஈழம் ஒன்று அமைந்தால் அது எத்தியோப்பியா என்பது தான் யதார்த்தம். ஆனால் நல்ல காரியம் என்னவென்றால், இலங்கை தமிழர்களின் அதிஷ்டம் அமெரிக்காவுக்கு தனி ஈழம் என்ற எண்ணம் மருந்துக்கு கூட கிடையாது.வவ்வால் சார் சிறப்பான விளக்கம் தந்துள்ளார்.
தமிழக கட்சிகளின் ஈழ கூத்துக்களே நடக்கிறது.
ஒன்றிரண்டு அரச எலும்புப் பொறுக்கிகளைத் தவிர அத்தனை தமிழனின் கனவும் நனவும் தமிழீழமே. அது தான் தமிழனின் உண்ணதவாழ்விற்கும் சுதந்திர வாழ்விற்கும் நிம்மதிக்கும் வழிசமைக்கும். எதியோப்பியா போனற் வரண்ட நாடல்ல என் ஈழம். அங்கே உழைப்பாளிகள் புத்திஜீவிகள் நிறையவே உண்டு. ஆசியாவின் தலைசிறந்த நாடக மலரும்.
வாங்க வவ்வால், நடராஜன் அண்ணன் பதிவில பின்னோட்டம் கொஞ்சம்தான் படிச்சேன். இப்ப மறுபடியும் போய் பார்த்தா, அது இன்னும் முடியல போலிருக்கு. ரொம்ம்ம்ம்ப நீளமா இருக்கு. நமக்கு இவ்வளவு வேகம் தாங்காது. சூழ்நிலைகளும் அப்படி.
இங்க நீங்க சொன்ன கருத்தக்களும் சரிதான். ஆனால் இந்தியா இந்த முறை ஏமாறாது என்றுதான் நான் நினைக்கிறேன். இது தமிழக அரசியலில் நிரந்தர தலைவலியாக இருக்கும் என்பதால், இந்த முறை ஏதோ ஒரு தீர்வு வரும். எனவே இலங்கை வழிக்கு வரும்.
@ anonymous
//அமெரிக்காவுக்கு தனி ஈழம் என்ற எண்ணம் மருந்துக்கு கூட கிடையாது.///
அமரிக்காவுக்கு இருக்கோ இல்லையோ, இந்தியாவுக்கு தனி ஈழம் அமைவதில் தயக்கம் இருக்கலாம். ஆனால் இலங்கை இனியும் தமிழர்களுக்கு உரிமையை மறுத்து, சீனா என்ற பூச்சாண்டியை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால், இந்தியா அதை துண்டாடத்தான் நினைக்கும். இந்திய ஜனநாயகம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. எனவே காஷ்மீர் பற்றிய பயம் இல்லாமல் இந்தியா அந்த வேலையை வேறுவிதமாக செய்யும்.
ஆனால் இலங்கையில் மற்ற தமிழர்களை பொறுத்தவரையில், எல்லா தமிழர்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு காம்பரமைஸ் வரலாம். அதாவது இப்படி நடக்கலாம், அப்படி நடக்கலாம் என்று நான் கணக்கு போடுவது. ஒரு சில சாத்தியங்கள் கண்ணுக்கு தெரியும் வரை அதை பற்றி விவாதிக்காமல் இருப்பதுதான் நல்லது. எனவே நான் அதை எழுதவில்லை.
@anonymous
///ஒன்றிரண்டு அரச எலும்புப் பொறுக்கிகளைத் தவிர அத்தனை தமிழனின் கனவும் நனவும் தமிழீழமே. அது தான் தமிழனின் உண்ணதவாழ்விற்கும் சுதந்திர வாழ்விற்கும் நிம்மதிக்கும் வழிசமைக்கும். எதியோப்பியா போனற் வரண்ட நாடல்ல என் ஈழம். அங்கே உழைப்பாளிகள் புத்திஜீவிகள் நிறையவே உண்டு. ஆசியாவின் தலைசிறந்த நாடக மலரும்.///
இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என நினைத்து கடைசியில் வெளியிட்டிருக்கிறேன். காரணம் உங்களின் பின்னோட்டம் மற்ற இலங்கை தமிழர்களின் கவலையை நியாயப்படுத்துகிறது.
மற்றவரின் வார்த்தையில் கண்ணியம் தெரிகிறது. உங்கள் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இருந்தாலும், அதில் அகங்காரமும் கலந்திருக்கிறது.
நாகரீகத்தை கடைபிடியுங்கள். இனி இது போல் வந்தால் வெளியிடமாட்டேன்.
//ஒன்றிரண்டு அரச எலும்புப் பொறுக்கிகளைத் தவிர....//
நண்பர்- இதை சொல்லும் அதே பாசிய கூட்டம் தான் தனி ஈழம் என்று ஒரு வதை முகாம் அமைத்து இலங்கை தமிழர்களை சுரண்ட ஆசைபடுகிறது.ஏற்கெனவே இவர்களுடைய மாதிரி வடிவமைப்பு தனி ஈழத்தில் சொல்லெணா துன்பங்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்துவிட்டார்கள்.எத்தியோப்பியா என்ற தமிழ் தனி ஈழம் வேண்டாம்.
சகோ.சிவானந்தம்!தாமதமாகவே உங்களின் பதிவை நோக்கினேன்.எனவே தாமதமான பின்னூட்டம்.தாமதமாக பின்னூட்டமிடுவதிலும் ஒரு நன்மை என்னவென்றால் மாற்றுக்கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்ளும் வசதி என்பதால் அனானி சகோதரரின் பின்னூட்டத்திலிருந்தே பின்னூட்ட கச்சேரியை துவங்கலாம்.
ஈழப்பிரச்சினையை பிரபாகரன் துதி என்ற நிலையில் இல்லாமலும்,விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு என்ற நிலையைக் கடந்தும் இயக்கத்தின் போராட்ட தேவையையும்,கூடவே பிரிந்து நின்ற நிலையில் அனைத்து போராளிகளின் வரலாறாக மட்டுமே பார்ப்பது சரியாக இருக்கும்.எனவே அனானி சகோதரரின் எத்தியோப்பியா என்ற சொற்பதம் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு நிலையில் நின்று கூறும் கருத்தாக உணர்கிறேன்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு எதிரான நிலையில் கொரில்லா இயக்கமாக போராடுவது என்ற நிலையிலிருந்து மட்டுமல்லாமல் இராணுவம்,கடல் பலம்,வான் படை என்ற கட்டமைப்போடு அரசு நிர்வாகம் என்ற நிலையில் ஈழத்தமிழர்கள் ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள்.அங்கீகரிக்கப்பட்ட தேசம் என்ற நிலையில் பிரதேச வாதங்கள் பேசப்பட்டாலும் (இந்தியாவில் பிரதேச வாதம் இல்லையா என்ன?)இந்தியா என்ற கட்டமைப்பில் தமிழகம் அடுத்த கரையில் இருக்கும் நன்மையால் எத்தியோப்பியாவெல்லாம் சாத்தியமேயில்லை.மாறாக வளமான இரு குட்டி தேசங்களாக தமிழர்களும்,சிங்களவர்களும் வாழக்கற்றுக் கொள்ளலாம்.
இனி பதிவை நோக்கி நகர்ந்தால் இரு விசயங்களின் அடிப்படையில் அரசியலை உள்நோக்க கற்றுக்கொள்ள வேண்டும்.முதலாவதாக ஊடகம் வாயிலாக நீரோட்டம் பார்ப்பதோ அல்லது திசை திருப்பல்,வதந்திகள் அல்லது நிகழ்வுகளின் அடிப்படையில் ஊடகச் செய்திகள்.இரண்டாவதாக ஊடக கருத்துக்கள் ஒன்றாக இருக்க அரசு ரீதியாக கடித தொடர்பும்,வெளியுறவுக்கொள்கையும் அமைவதை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம்.
India doesn't support any country specific resolution என்று பிரணாப் முகர்ஜி சொன்னதும்,கிருஷ்ணா பாராளுமன்றத்தில் ம்இலங்கை பல்லவி பாடியதும் மேனன் உள்பட இந்தியாவின் இலங்கை சார்ந்த வெளிநாட்டுக்கொள்கையாக இருக்க கூடும்.ஆனால் அதனைத் தொடர்ந்து India is inclined to vote against Sri lanka at UN என்ற தீர்மானத்துக்கு 3 தினங்களுக்கு முன்பான மன்மோகன் சிங்கின் அறிக்கைக்கு காரணமென்ன என்பதில் இந்திய,இலங்கையின் வெளியுறவுக்கொள்கை உறவின் விரிசல் வெளிப்பட்டு விட்டது எனலாம்.தி.மு.க,அ.தி.மு.கவின் பாராளுமன்ற குரல் கிரியா ஊக்கியென்றோ அல்லது சாக்கு என்று மட்டுமே கொள்ளலாம்.அமெரிக்க தீர்மான ஆதரவு என்ற நிலைப்பாட்டோடு தீர்மான வரைவின் வரிகளை இலங்கைக்கு சாதகமாக மாற்றியதில் இந்தியா இல்ங்கையை சார்ந்தே நிறக விரும்புகிறதென்பதும்,தொடர்ந்து மன்மோகன் India introduced a balanced resolution at UN என்பதும் இலங்கையை சமாதானப்படுத்தும் நிலையாக இருந்தாலும் இந்தியாவின் அரசு ரீதியான கடிதத்திற்கு இலங்கை இதுவரை பதில் சொல்லாததும் இனி இந்தியா,இலங்கை சார்ந்த உறவு எப்படி நகரும் என்பதை இலங்கையின் அடுத்த இந்தியா சார்ந்த நகர்வைப் பொறுத்தே கணிக்க இயலும்.
இனி என்ன என்பதனை ஊடக செய்தியாக கவனித்தால் ராஜப்க்சே ரொம்ப முறுக்கிக் கொள்வதாகவே தெரிகிறது.அடுத்த மார்ச் மாதம் வரை நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொண்டு இலங்கை பிரச்சினை நகரும் என்று சொல்ல இயலும்.உலகத் தமிழர் பேரவை,நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற கட்டமைப்புக்கள் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செயல்படுவதைப் பொறுத்தும்,தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகள் மறந்து ஈழத்தமிழருக்காக இந்தியாவின் மத்திய அரசுக்கு தரும் அழுத்தம் மூலமாகவும்,இலங்கை சம உரிமை என்ற தீர்வை தராது காலம் கடத்துவதைப் பொறுத்தும் ஈழத்தமிழர்களுக்கு பதிவின் தலைப்பைப் போல இனி நல்லதே நடக்கும் வாய்ப்புக்கள் உண்டு.நன்றி.
வாங்க நடராஜன் சார்.
எதியோப்பியா சாத்தியமில்லைதான். ஆனால் விரோதம் கொண்ட இரு நாடுகள், அதன் விளைவாக ராணுவ செலவு, அந்த சுதந்திரத்திலும் மற்ற தமிழர்களின் நிலைப்பாடு என்று பல நிலைகளை பார்த்து அவர் அந்த வார்த்தையை உப்யோகித்திருகிறார். அந்த வார்த்தைகள் மனவருத்தங்களால் அல்ல, காயங்களால் வந்திருக்க வேண்டும்.
Post a Comment