இந்த வாரம் அதிகம் படித்தது என்கவுண்டர் தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள்தான். `இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்கவுண்டர் கூடாது` என்று சிலர்.
`இறந்தவர்களுக்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் `பல அரசியல் ஊழல் பேர்வழிகளும், போலீஸ் கொள்ளைகாரர்களும் வெளியில் இருக்க, இந்த கொள்ளையர்களை மட்டும் ஏன் பலிகடாவாக்க வேண்டும்` இது வேறு சிலர்.
வாதப்படி பார்த்தால் எல்லாம் சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் யதார்த்தம் எப்போதுமே வேறுவிதமாகத்தான் இருக்கும்.
முதலில் இந்த குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்ற வாதத்தை பார்ப்போம். இதற்கு ஒரே ஒரு கதை போதும். நீங்கள் யதார்த்தவாதியாய் இருந்தால் புரிந்து கொள்வீர்கள்.
இவர் நமக்கு தெரிந்தவர்தான். இவருடைய ஒரு வாரிசுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் சரியில்லை. ரொம்ப இல்லை. ஓரளவுதான். இருந்தாலும் பெற்றாகிவிட்டதே. எனவே அவர்களும் விடாப்பிடியாக மருத்துவம் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களால் பணம் சேமிக்க முடியாமல் இதற்கே செலவானது.
அதன்பிறகு சொல் புத்தியோ அல்லது சுய புத்தியோ, இப்படி செலவானால் மற்ற பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழ, டாக்டரை பார்ப்பது குறைந்தது. அதன் பிறகு அவர்கள் தங்கள் கடமைகளை முடித்த பிறகு, நமக்கு பின் இந்த வாரிசை யார் கவனிப்பார்கள் என்ற கவலை எழ, ஒரு கட்டத்தில் வேண்டுமேற்றே முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் `மேலே` அனுப்பி விட்டார்கள்.
இதை விட சிம்பிளாக இன்னொரு லாஜிக் இருக்கிறது. உங்களுடைய பிள்ளை இரண்டாவது முறையும் பெயிலானால் என்ன செய்வீர்கள்? மாடு மேய்க்கத்தான் லாயக்கின்னு திட்டிட்டு வேலைக்கு அனுப்புவீர்கள்.அதன்பிறகு படிக்கும் பிள்ளைகளின் மீதுதான் உங்களின் கவனம் இருக்கும்.
இதுதான் யதார்த்தம் என்றாலும், இதில் உள்ள கொடுமையான யதார்த்தம் என்னவென்றால், தனக்கு என்று வரும் போது இப்படி யதார்த்தமாக முடிவெடுப்பவர்கள், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும்போது மட்டும் தர்மசீலராக மாறிவிடுகிறார்கள்.
அதிலும் படிக்காத பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாததன் மூலம் பெற்றோர்களுக்கு தண்டச் செலவு குறையும். ஆனால் அரசுக்கு அப்படி இல்லை. இங்கே நல்ல குடிமகன்களை விட, கெட்ட பிள்ளைகளால்தான் அரசுக்கு சிறை, வழக்கு என பலனற்ற செலவு. இந்த செலவை எல்லாம் மிச்சப்படுத்தினால் எத்தனை குழந்தைகளுக்கு கல்வி வழங்கலாம் என்பதை நினைக்கும் போதுதான் கோபம் தலைக்கேறுகிறது.எனவேதான் குற்றவாளிகளுக்கு பயம் வர இது போன்ற என்கவுண்டர்கள் நடைபெறும்போது, அதை ஆதரிக்க வேண்டியதாகிவிடுகிறது.
அதேசமயம், `நமது அமைப்பில் குறை இருந்தால் அதை சீர்திருத்தவேண்டும், அதுதானே நியாயம்?` என்று சிலர் கேட்கலாம். எல்லோருக்கும் அந்த ஆசைதான். ஆனால் அத்தைக்கு எப்போது மீசை முளைத்து நாம் அவரை சித்தப்பா என கூப்பிடுவது? இந்தியா போன்ற நாடுகளில் சாதாரண சீர்திருத்தங்கள் வருவதற்கே பல வருடங்களை பேசி வீணாக்குவார்கள். அதுவரை காத்திருந்தால் நாடு கொள்ளைகாரர்களின் கூடாரமாகிவிடும்.
இந்த என்கவுண்டருக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளும் போலீசாரும் உத்தமர்களா?
போலீசாரை பற்றி மற்றவர்களை விட ஜெயிலுக்கு போன எங்களுக்கு ஒரு சதவிகீதம் கூடுதலாகவே தெரியும். போலீசார் போடும் பொய் கேஸ்களையும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் பற்றியும் ஜெயிலில் பல கதைகள் கேட்டிருக்கிறேன். அது அவ்வப்போது என் பதிவுகளில் வரும். ஆனால் இப்போது உதாரணத்துக்கு தமிழக அரசியலையே எடுத்துக் கொள்வோம்.
கடந்த திமுக ஆட்சியின் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்தார்கள். 2g ஊழலும், குடும்ப ஆட்சியும் அவர்கள் மீது வெறுப்பை உருவாக்கி இருந்தது.
அந்த ஆட்சிக்கு முடிவு கட்ட மக்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அதிமுக தலைமையிலான அணியை ஆதரிப்பதுதான். ஆனால் அம்மாவின் வரலாறும் மக்களுக்கு தெரியும். இவரும் ஊழல் பேர்வழி, அகங்காரம் பிடித்தவர் என்பதால் இவரை ஆதரிக்க மாட்டோம் என மக்கள் மெளனமாக ஒதுங்கி இருந்தால் தமிழகத்தின் கதி என்னவாகி இருக்கும்?
இந்த விஷயத்தில் ஒரு ஊழல்வாதியை அழிக்க இன்னொரு ஊழல்வாதியை ஆதரிக்க மனம் தயங்கவில்லை.
ஒருவேளை வனவாசத்தில் இருந்த அம்மா திருந்தி இருக்கலாம். இரண்டு கழகங்களும் ஊழல் பேர்வழிகள் என்றாலும் 2g க்கு பிறகு திமுக தான் மெகா ஊழல் கட்சி என்றாகிவிட்டது. எனவே இவர்களை எப்படியாவது அப்புறபடுத்த வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்பட, மக்களும் அதன் அடிபடையில் முடிவெடுத்தார்கள். இப்படி அரசியலில் யதார்த்தமாக சிந்தித்தவர்கள், இந்த என்கவுண்டர் விஷயத்தில் மட்டும் மாறுபடுகிறார்கள்.
நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்கள் நல்லது செய்தாலும் அதிலும் குறை காணும் மனப்பான்மை நம்மிடம் இருக்கிறது. போலீசாரும் மக்களின் காவலன் என்ற பெயரை இழந்துவிட்டதால், அவர்கள் செய்தது நன்மையே என்றாலும் அது சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
கூடங்குளம்
மேலே சொன்ன அதே வாதங்கள்தான் இங்கேயும். அதாவது அரசியல்வாதிகள் மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டார்கள். எனவேதான் அவர்களின் வாதங்கள் இங்கே எடுபடவில்லை.
அணுமின் நிலையங்களை ஆபத்தானவைதான். ஆனால் எரிபொருளுக்கு மாற்று இல்லாமல் இந்த உலகம் சந்திக்கப்போகும் ஆபத்துகளை கணக்கிடும்போது, இதை ஆதரிக்க வேண்டியதாகிவிடுகிறது. ஆனால் இதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் காரணங்கள் இருக்கே, அது ஒரு கொடுமை!
முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கும் பஸ்ஸில் ஒரு பயணி (ஜெர்மனி) இறங்கியதை, ஸாரி, இறங்கப் போவதாக அறிவித்திருப்பதை சொல்பவர்கள், மீதி 29 பேர் அதில் பயணிப்பதையும், புதிதாக சிலர் இந்த வண்டியில் ஏற இருப்பதையும் வசதியாக மறைத்து விடுகின்றனர்.
`கல்யாணத்துக்கு முதல் நாள் மாப்பிளைக்கு எய்ட்சுன்னு தெரிஞ்சா அந்த கலயாணத்த நிறுத்துவதுதானே புத்திசாலித்தனம்?` என்று கேட்கிறார் ஒரு யதார்த்தவாதி
நம்மாலும் திருப்பி கேட்க முடியும். `உங்க மாப்பிள்ளைக்கு எயிட்ஸ் என்று தெரிந்தவுடன் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் பெண்ணிடம், `2022 வரை `குடும்பம்` நடத்து, அதன்பிறகு டைவர்ஸ் வாங்கி விடுவோம் என்றா சொல்வீர்கள்? அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? அதுவரை அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வராதா?
ஒரு விஷயம் ஆபத்து என்று தெரிஞ்ச உடனே அதை கைவிடுவதுதானே புத்திசாலித்தனம்? ஆனால் அப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு நாள் குறிக்கிறார்கள் என்றால், அதன் பின்னே ஏதோ நிர்பந்தம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? பணக்கார நாடுகளே இப்படி நிர்பந்தத்தில் தவிக்கும் போது, ஏழை நாடுகளை பற்றி என்ன சொல்வது?
மேலும் ஏதாவது பேசினால், `உடனே வீட்டை காலி பண்ணிவிட்டு இங்கே வந்து குடியேறு` என்று வசனம் பேசுவார்கள். இதற்கு நான் ஏற்கனவே ஒரு பதிவில் பதில் சொல்லிவிட்டேன். ஆனால் ஒரு விஷயத்தை மறுபடியும் வலியுறுத்தலாம்.
கூடங்குளத்தில் வசிக்கும் அப்புசாமி மற்றும் குப்புசாமி மீது யாருக்கும் வஞ்சமில்லை. அவர்களுடைய வம்சமே அழிந்து போகவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. அரசாங்கம் பல திட்டங்களை கொண்டுவரும். அவை நாட்டுக்கு அவசியமான திட்டங்களாகவே இருக்கும். இதில் அவர்கள் காசு பார்ப்பார்கள். அதுதான் ஊழல்.
ஆனால் ஊழலுக்காகவே அவர்கள் ஒரு திட்டம் போடுவார்கள் என்றோ, அதிலும் சொந்த நாட்டு மக்களையே அழிக்க வேண்டும் நோக்கத்தோடு ஒரு திட்டம் போடுவார்கள் என்பதெல்லாம் அபத்தமான கற்பனை.
அதிலும் கொள்கைரீதியாக மாறுபட்ட காங்கிரஸ், பி ஜே பி, கம்யுனிஸ்ட் கட்சிகள் போன்றவை இப்படிப்பட்ட திட்டத்தை ஆதரிக்கும் நிலையில் அதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நமக்கு ஊழல்வாதிகளை அழிக்க ஒரு உத்தமபுத்திரன் வேண்டும். கொள்ளையர்களை அழிக்க குறை சொல்ல முடியாத போலீஸ் வேண்டும். அதேபோல் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத எரிபொருள் வேண்டும். இப்போதைக்கு இது ஆசை தோசை அப்பளம் வடை கதைதான்.
2 comments:
யதார்த்ததைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள்.. இன்னும் ஆரம்பிக்கப்படாததால்தான் கூடங்குளத்தை இழுத்து மூட சொல்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் கல்பாக்கத்திலும் இதே ஆபத்துக்கள் இருக்கின்றன என்றாலும் யாரும் அதுபற்றி பேசவில்லை.
ஆபத்துக்கள் இருக்கும் என தெரிந்த பின்பும், அதை ஆயுள்காலத்துக்குபிறகு மூட ஆகும் சிரமங்களையும், அணுக்கழிவு மேலாண்மையையும் கருத்தில் கொண்டும், இந்த கூடங்குளத்தை திறக்காமல் இருப்பதே மேல் எனப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் ஒரு கல்பாக்கம் நமக்கு போதும் என்றே எண்ணுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.in/
வாங்க சங்கர். யதார்த்தம் என்பது விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாமல் அனுசரித்து போவதுதான். அந்த அடிப்படையில் கூடங்குளத்தை பாருங்கள்.
அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என்று வசனம் பேசினாலும், குறைந்த transmission loss உள்ள நாடுகள், மானியம் கொடுத்தாவது ஒரு துறையை காப்பாற்றும் அளவுக்கு வசதி உள்ள நாடுகள், இதில் உள்ள ஆபத்தை அனுபவபூர்வமாக உணர்ந்த நாடுகள், அணு குண்டே தேவை இல்லாத நாடுகள் போன்றவை எல்லாம் இதை கைவிட மறுக்கையில், நாம் மட்டும் என்ன செய்வது? இது ஒரு unavoidable evil எனபதுதான் என் கருத்து.
Post a Comment