!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, January 6, 2014

பார்த்ததும், கேட்டதும்



எதிலாவது குறை கண்டுபிடிக்கும் போட்டி வைத்தால் அதில் நான் முதல் பரிசு பெறுவேன் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இப்போது எதை பார்த்தாலும் கோபம் வருகிறது.

தற்போது படித்துக் கொண்டிருப்பது Dan Brown எழுதிய Digital Fortress. இதை படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது அசிங்கம். போன தீபாவளிக்கு வந்த புத்தகம். அடுத்த தீபாவளியும் போய்விட்டது. இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது எப்போதாவது தொடுகிறேன். தற்போது மீண்டும் தொட்டதற்கும் காரணம், டிவி சீரியல்கள்.

தவிர்க்கவே முடியாமல் இதை பார்க்க நேரிடுகிறது. அதுவும் 9 மணிக்கு மேல் வேறு வழியே இல்லை. இந்த சீரியல்களில் எவ்வளவோ முரண்பாடுகள். பெரும்பாலான சீரியல்கள் முரண்பாடுகளின் மூட்டைதான். இருந்தாலும் விகடன் குரூப் (தென்றல்) கொஞ்சம் ஓவர்.

பெண்களின் உலக அனுபவம் குறைவு, அவர்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள் என்பதால், இஷ்டத்துக்கு கதையை நகர்த்துகிறார்கள். பெண்களை தியாகியாக காட்டவேண்டும். ஆண்கள் முட்டாள்தனமாக ஏதாவது செய்ய, பெண்கள் தங்கள் அறிவால், பொறுமையால், நிதானமாக சிந்தித்து ஆண்களை காப்பற்றவேண்டும். கடைசியில் கணவன் மனைவிடம் வந்து `என்னை மன்னித்துவிடு` என்று சரணடைய வேண்டும். இதுதான் கதை. இதை விதவிதமாக எடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது.

சினிமாவும் இதே கதைதான். அங்கே ஆணின் ஈகோவை திருப்திபடுத்தும் விதமாக கதை இருக்கும். இருந்தாலும் அது காசு கொடுத்து பார்க்கப்படும் படம். சுடச்சுட விமர்சனமும் வந்துவிடும். அளவுக்கு மேல் காதில் பூ சுத்தினால் தயாரிப்பாளர் தலையில் துண்டை போடவேண்டியதுதான். டிவி சீரியல்களில் அந்த தலைவலி இல்லை. எனவே சினிமாக்கள் சாப்பாட்டில் செங்கல்லை வைக்கின்றன என்றால், சீரியல்கள் பொதிகை மலையையே தூக்கி வைக்கின்றன.

இது சமீபத்திய (தென்றல்) காமெடி.

மூன்று நாயகிகள். நாயகிகளில் ஒருவரின் அப்பா டிராவல்ஸ் நடத்தியவர். அவர் மண்டையை போட்டுவிட இப்போது இவரே நடத்தப் போகிறாராம். பெண் டிரைவர்களாலே நடத்தபடும் புரட்சியாம். சினிமாவாக இருந்தால் இந்நேரம் அவர் ஒரு பாட்டை பாடி முடித்தவுடன் கோடீஸ்வரி ஆகி இருப்பார். இது டிவி சீரியல் ஆச்சே. அவர் கார் கதவை திறந்து கியர் போட்டு காரை கிளம்புவதை காட்டியே 6 மாதம் சீரியலை இழுத்துவிடுவார்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்வகையில் பேசுவது அவசியமானதுதான். ஆனால் அதில் லாஜிக் கொஞ்சமாவது வேணாம்? ஏதோ உள்ளுரில் ஆட்டோ ஓட்டுவது போல் டிராவல்ஸ் நடத்த முடியுமா?

வெளியூருக்கு போகக் கூடிய ரூட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும், சில சமயம் தனியாக காரிலேயே தூங்க வேண்டும். இன்னும் எவ்வளவு தலைவலிகள்.. ஆனால் சீரியலில் இவர் ஜெயிப்பார். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது? சினிமாவுல ஆம்பளையும் சீரியல்ல பொம்பளையும் தோற்றதாக சரித்தரமே கிடையாது.

இப்படி ஒரு அபத்தமான காட்சியை பார்த்து கடுப்பாகி நான் ஆங்கில நாவலை கையில் எடுக்க, அங்கேயும் ஒரு இடத்தில் ரௌத்திரம் பொங்கியது.

ஒரு அத்தியாயம் ரொம்பவே சின்னதாக இருந்தது. இரண்டே பக்கம். அதுவும் இரண்டாம் பக்கத்தில் இரண்டே வரிகள்தான். முன் பக்கம் அதிகமாகவே இடம் விட்டு தலைப்பு. அந்த தலைப்புக்கு கீழேயும் நிறைய இடம் விட்ட பிறகுதான் இந்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது.

அடப்பாவிங்களா.. இதுல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா அந்த இரண்டு வரி முதல் பக்கத்துலையே வந்துருமே? ஆனால் செய்யவில்லை.

விலை அதிகமாக இருக்க வேண்டுமென்றால் பக்கங்களும் அதிகமாக இருக்க வேண்டுமே? அதற்காக செய்யப்படும் மோசடி. இந்த நாவலில் பக்கங்களை சுருக்கினால் குறைந்தது 50 பக்கங்களை குறைக்கலாம்.

பெரும்பாலான பிரசுரங்கள் இந்த மொள்ளமாரித்தனத்தை செய்கின்றன. மரம் வளர்ப்போம் என்று ஊருக்கு உபதேசம். இன்னொரு பக்கம் இப்படி ஒரு அபத்தம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வாக்கிங் கிளம்பினேன். அங்கே ஒரு காட்சி....

வேண்டாம்.. உலகம் அப்படித்தான். நாம்தான் கண்ணை மூடிக்கொள்ளவேண்டும்.

வளர்பிறையும், தேய்பிறையும்

முதல் முறை நூலகம் போன போது நிறைய வார இதழ்களை இருக்க, அதில் எத்தனை வீட்டுக்கு எடுத்து செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. சமீபத்தில் போனபோது `புஸ்தகம் இனி வந்தாதான் உண்டு` என்றார் நூலகர். பசிச்சவன் மேய்ஞ்ச கதையாய், மிக விரைவாக படித்திருக்கிறேன். ஆனந்த விகடன், குமுதம், கல்கி என மூன்று இதழ்கள் மட்டும் வருகின்றது. பழசாக இருந்தாலும் பரவாயில்லை என இருந்தவற்றிலும் கிளறி சில எடுத்துவந்தேன்.

அதில் கல்கி பார்த்தேன். சில மனிதர்களை பார்த்தால் `என்ன ஆளே மாறிட்டீங்க?` என்று கேட்போம். அப்படி கேட்க வேண்டிய அளவுக்கு கல்கியும் உருமாறிவிட்டது (நான் இப்போதுதான் பார்க்கிறேன்). மாற்றம் உள்ளடக்கத்திலும். சினிமா செய்திகள் அதிகரித்திருக்கிறது. மார்கெட்டை பிடிக்க அதுதானே வழி? அதில் செய்தி ஒன்றையும் கவனித்தேன். அது செய்தி மாதிரி தெரியவில்லை. paid news மாதிரித்தான் இருந்தது. அதாவது கல்கியும் இன்றைய காலத்தில் `கலந்து`விட்டது.

இதில் கவனித்தது இயக்குனர் பிரபு சாலமன் கதை. வாழ்கையின் படிகளை தாண்டிய கதை. சுவாரசியமாக சொல்லி இருக்கிறார். 90 களில் சினிமா துறையில் வேலை பார்த்த போது, ஒரு சமயம் மாத சம்பளம் 400 தானாம். அவர் அப்பா மாதம் 1000 அனுப்புவாராம். இதில்தான் அவர் தன் குடும்ப (திருமண) வாழ்கையை ஓட்டி இருக்கிறார். ஆச்சர்யம்தான்.விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.

இந்த செய்தி அதே 90 களில் என் வாழ்கை நினைவுக்கு வந்தது. அவர் சொன்ன வருமான அடிப்படையில் பார்த்தால் அப்போது நான் பணக்காரன்தான். பேச்சலாரக இருந்ததால் தினம் ஓட்டல் சாப்பாடு என்ற வகையில் செலவு அதிகம்தான். இருந்தாலும் எல்லா செலவுகளும் போக மாதம் 3000- 5000 மிச்சம் செய்தேன்.

ஊரிலிருந்து, `நான் வந்து துணையாய் இருக்கிறேன்` என்று ஆயா சொல்ல, ஒரு வீட்டை வாடகை பிடித்து, வீட்டுக்கு தேவையான முக்கியமான பொருட்களை ஒரே நேரத்தில் வாங்கிப்போட்டேன். இதை பார்த்த அந்த வீட்டு ஓனர், `இதெல்லாம் நீ எதுக்கு வாங்கன?` உன் மாமனார் வாங்கித் தருவார்` என்றார். தமிழ்நாட்டின் எழுதப்படாத சட்டத்தை நான் மீறி இருக்கிறேன் போலிருக்கிறது. அப்போது நான் செய்த செலவுக்கு ஒரு பிளாட் வாங்கலாம். 3 0 - 5 0 ஆயிரத்துக்கு பிளாட் கிடைத்தது.

இது மட்டுமின்றி லாட்டரி வியாபாரம் வருமானத்தை கொடுத்தாலும், திருப்தியை தராததால் மாற்று தொழில் முயற்சி என நான் விட்ட பணமும் தனி. பைனான்ஸ், ரெடிமேட், பாஸ்ட் ஃபுட், லைப்ரரி, DTP, (விளம்பர) பத்திரிக்கை, வீடியோ கேம்ஸ் etc.. என பல தொழில்களில் காலை வைத்திருப்பேன். எல்லாம் ஆர்வக் கோளாறு. இதில் ஷேர் மார்கெட் தனி. இப்படி பல துறைகளில் விட்ட பணத்தில் பத்து பிளாட் வாங்கி போட்டிருந்தால், நானும் இப்போது கோடீஸ்வரன்தான். எல்லாம் காலத்தின் கோலம்.

நீதி: குரங்கு கையில் கிடைத்த பூமாலையும் அனுபவம் இல்லாதவன் கையில் பணமும் அதோகதிதான்.

இங்கிலீஷ்

ஒரு பழைய படம். விஜயன் கதாநாயகன். ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஆற்றில் இறங்கி சாகும்போது சொல்வார், `நான் செய்ததிலேயே மிக மோசமான செயல் உங்களையும் என்னைப்போல் மாற்றியதுதான்` என்று.

சமீபத்தில் சில டிவி நிகழ்சிகளை கவனித்தபோது இதுதான் நினைவுக்கு வந்தது. நிகழ்சிகளில் நடுவர்களாக இருக்கும் டி. ராஜேந்தரும், `பட்டிமன்ற` ராஜாவும் தற்போது இங்கிலீஷ் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதில், `பட்டிமன்ற` ராஜா மிக அருமையாக கலப்பு இல்லாமல் தமிழில் பேசுவார். ஆனால் இந்த நாசாமாய் போன நடிகைகள்/தொகுப்பாளினிகள் இவர்களையும் கெடுத்துவிட்டார்கள்.

திருப்பதிக்கு போனா மொட்டை போடுவதுதான் அழகு என்பதுபோல், சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் பீட்டர் விடும் போது நாமும் அதையே செய்வோம் என இவர்களும் மாறிவிட்டார்கள். இந்த வியாதி முற்றும் முன் ஏதாவது செய்யவேண்டும்.

எனக்கு அறசீற்றம் பொங்குகிறது. ஆனால் என்ன செய்வது? எனக்கு பில்டிங், பேஸ்மென்ட் எல்லாமே (இப்போதைக்கு) வீக். எனவே யாராவது தமிழ் உணர்வாளர்கள், இப்படி தமிழ் நிகழ்சிகளில் ஆங்கிலம் பேசி பந்தா பண்ணும் நடிகைகளில் சில பேரின் மண்டையாவது உடைத்தால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

நிஜத்தில் கூட செய்யவேண்டாம். சில டாடா சசுமோக்களில் ரவுடிகளை ஏற்றிக்கொண்டு கையில் ஏதாவது ஆயுதத்தை காட்டினால் போதும், இந்த நடிகைகளின் வாயிலிருந்து தமிழ் அமுதமாக கொட்ட ஆரம்பிக்கும்.

`அமைதியாக இருங்கள்` என்று சத்தமாக சொல்வதுபோல், நாட்டுக்கு நல்லதை கூட கெட்ட வழியில் போய் செய்ய வேண்டிய சூழ்நிலை. அதாவது இவர்கள் நம்மையும் கெடுத்துவிட்டார்கள்.

7 comments:

Philosophy Prabhakaran said...

நீர் சரியான ஆணாதிக்கவாதியா இருப்பீர் போல இருக்கே :))) பெண்கள் டிராவல்ஸ் கம்பெனி வைத்து நடத்துவது உமக்கு பிடிக்கவில்லையோ...?

அதுசரி, சீரியல்களை பற்றி எழுதிவிட்டு மீனா படம் போட்டிருக்கீங்க... மீனா'ன்னு உங்களுக்கு பிடிக்குமா ?

கோடீஸ்வரன் ஆகக்கூடிய அளவிற்கு சொத்தை நீங்கள் தவறவிட்டிருந்தாலும் இப்ப உங்களுக்கு அதைவிட முக்கியமான விஷயம் கிடைத்திருக்கிறதே - அனுபவம். சந்தோஷப்படுங்கள்.

வவ்வால் said...

Sivanandam,

//Dan Brown எழுதிய Digital Fortress. இதை படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது அசிங்கம். போன தீபாவளிக்கு வந்த புத்தகம். அடுத்த தீபாவளியும் போய்விட்டது. இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது எப்போதாவது தொடுகிறேன். தற்போது மீண்டும் தொட்டதற்கும் காரணம், டிவி சீரியல்கள்.//


Digital fortress might be published around year 2000,cos I have red it around the year 2002 ,so that book is more than 10 year older one!!!

Hi...hi ... How is it? So now, tell me who is eligible for "finding fault master" award?

Digital fortress was written ahead of time,snowden episode now only came out, but dan brown conceived that concept during the 2k era itself!!!


So no need to feel ashamed for reading it very late, this book is worth for reading at any time!


# .//பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்வகையில் பேசுவது அவசியமானதுதான். ஆனால் அதில் லாஜிக் கொஞ்சமாவது வேணாம்? ஏதோ உள்ளுரில் ஆட்டோ ஓட்டுவது போல் டிராவல்ஸ் நடத்த முடியுமா //

Female can do administration of the travels and hire male drivers, these kind of travel agencies already run by females, even female car drivers are available for female passengers,


In chennai few agencies provide female "acting drivers" for our own car or their rented car. Benz,Audi, like luxury cars also available for rent with drivers according to our preference.

சிவானந்தம் said...

வாங்க பிலாசபி,

//// நீர் சரியான ஆணாதிக்கவாதியா இருப்பீர் போல இருக்கே :))) பெண்கள் டிராவல்ஸ் கம்பெனி வைத்து நடத்துவது உமக்கு பிடிக்கவில்லையோ...?///

நான் டிராவல் பண்ணும்போது ஆண் டிரைவர், இப்ப பெண் டிரைவர்ன்னா கோவம் வருமா வராதா? :-))

///அதுசரி, சீரியல்களை பற்றி எழுதிவிட்டு மீனா படம் போட்டிருக்கீங்க... மீனா'ன்னு உங்களுக்கு பிடிக்குமா ?///

இனிமே கொண்டைய மறைக்கிற மாதிரி பதிவு எழுதணும்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். சில நடிகைகளின் மண்டையை உடைக்க வேண்டும் என்று சொன்னேன். இந்த விதிமுறை மீனாவுக்கு பொருந்தாது. என்ன இருந்தாலும் நான் மீனாவின் முன்னாள் ரசிகன். அதனால..அன்பா சொல்லுங்க. அவங்க கேப்பாங்க

////கோடீஸ்வரன் ஆகக்கூடிய அளவிற்கு சொத்தை நீங்கள் தவறவிட்டிருந்தாலும் இப்ப உங்களுக்கு அதைவிட முக்கியமான விஷயம் கிடைத்திருக்கிறதே - அனுபவம். சந்தோஷப்படுங்கள்.///

இப்படி எதையாவது நினைச்சி மனசை தேத்திக்க வேண்டியதுதான். வேற வழி...

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

இப்பதான் தமிழ் மொழியை காப்பாத்தனும்னு பதிவு போட்டிருக்கேன்,ஆனா நீங்க ஏன் உஜாலாவுக்கு மாறிட்டீங்க?

///Hi...hi ... How is it? So now, tell me who is eligible for "finding fault master" award?///

பதிவுலகில் பின்னூட்டவாதிகளை கவனித்தால் சத்தியமா அந்த தகுதி உங்களுக்குதான் இருக்கு. சந்தேகமே வேண்டாம்.

///Digital fortress was written ahead of time,snowden episode now only came out, but dan brown conceived that concept during the 2k era itself!!!///

அவங்க எப்பவுமே அட்வான்ஸா சிந்திக்கறவங்க. அதான் டாப்புல இருக்காங்க.

///Female can do administration of the travels and hire male drivers, these kind of travel agencies already run by females, even female car drivers are available for female passengers,///

மேனேஜ்மென்ட் என்றால் ஓகே. ஆனால் கதை அப்படி போகவில்லை. எல்லாமே பெண்கள்மயமாம். உள்ளுர்ல ஏர்போர்ட்லேந்து ஓட்டலுக்கு வரணும் என்றால் பரவாயில்லை. அதை தாண்டி என்றால் அது சிக்கல்தான்.

//In chennai few agencies provide female "acting drivers" for our own car or their rented car. Benz,Audi, like luxury cars also available for rent with drivers according to our preference.///

பிலிம் நியூஸ் ஆனந்தன்னு ஒருத்தர் இருக்கார். அவர் சினிமா தகவல்களின் களஞ்சியம். ஆனா உங்களுக்கு என்ன பட்டம் கொடுக்கறது? எந்த சப்ஜெக்டை தொட்டாலும் தகவல் வந்து விழுகிறது.

வவ்வால் said...

Sivanandam,

//இப்பதான் தமிழ் மொழியை காப்பாத்தனும்னு பதிவு போட்டிருக்கேன்,ஆனா நீங்க ஏன் உஜாலாவுக்கு மாறிட்டீங்க? //

Hi...hi .to save tamil only I'm typing in English instead of taminglish
Right now I have trouble in tamil in put lappy soon will come in tamil avatar :-))

வவ்வால் said...

சிவானந்தம்,

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

இனிய 2014 மற்றும் பொங்கல் வாழ்த்துகள்

Post a Comment