!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, December 30, 2013

டெல்லி: என்ன செய்யலாம்?


photo-india today

டெல்லியில் ஒருவழியாக ஆம் ஆத்மி பார்ட்டி அதிகாரத்துக்கு வந்துவிட்டது. யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களோ அவர்களின் ஆதரவிலேயே ஆட்சி! விதி வலியது என்று சொல்வார்களே, அது இதுதானா!

இருந்தாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் யாரையும் குறை சொல்ல முடியாது. எரிகிற கொள்ளியில் எது பரவாயில்லை என்று மக்கள் தேர்தலில் முடிவெடுக்கிறார்கள். அதேபோல், எந்த முடிவெடுத்தாலும் அது முரண்பாடாக போய் முடியும் நிலையில், அரசியல்கட்சிகளுக்கும் வேறு வழியில்லை. `பரவாயில்லை` என்ற முடிவை எடுக்க வேண்டியதுதான். அரவிந்த் கேஜ்ரிவாலின் முடிவு அந்தவகைதான்.

இங்கே மீண்டும் ஒரு தேர்தல் உறுதியாக தெரிகிறது. காங்கிரஸ் காலை வாரினால் பழியை அவர்கள்மேல் போடலாம் என அரவிந்த் கேஜ்ரிவாலும், அதிகாரத்துக்கு வந்தபிறகு வழக்கம்போல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் ஆம் ஆத்மியின் ஆதரவு குறையக் கூடும் என காங்கிரசும் கணக்கு போடுகிறது. இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த புதுப் பொண்டாட்டி மோகம் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். நஷ்டம் காங்கிரசுக்குதான் அதிகம். 

காங்கிரசை பொறுத்தவரையில் எல்லாமே அவர்களுக்கு தலைவலிதான்.  அமைச்சரவையில் பங்கு என்றால் அந்த ஆட்சியை 5 ஆண்டுகள் ஆதரிப்பதில் அர்த்தம் இருக்கிறது. வெளியில் இருந்து கொண்டு 5 வருடம் ஆதரித்தால் அதுவும் முட்டாள்த்தனம்தான்.

ஆம் ஆத்மி கட்சியும்  காங்கிரசின் கடந்தகால ஊழலை நோண்டும். இப்போதே பிஜேபி அதை `உடன்படிக்கை` என அரசியலாக்கிகொண்டிருக்கிறது. ஆகமொத்தத்தில் அரசை கவிழ்த்தாலும் சிக்கல், கவிழ்க்காவிட்டாலும் சிக்கல்.  காங்கிரசின் நிலை அந்தரத்தில். காங்கிரசுக்கு ஒரே வழிதான் இருக்கிறது. ஏதாவது முடிவெடுக்க வேண்டுமென்றால், ரொம்ப யோசிக்காமல் டாஸ் போட்டு பார்க்க வேண்டியதுதான்.

இங்கே நாம் வேறு சில கணக்குகளை பார்ப்போம். 

நடந்து முடிந்த டெல்லி தேர்தலுக்கு 40 கோடி செலவாகி இருக்கிறதாம். இது தோராய கணக்குதான். அதேசமயம் ஒரு உறுதியான அரசு அமைய மீண்டும் ஒரு 4 0 கோடி செலவழிப்பதில் தவறில்லை. ஆனால் இரண்டு தலைவலிகள் இருக்கிறது. ஓன்று, மீண்டும் இழுபறிக்கான சாத்தியங்கள். மற்றொன்று, வேட்பாளர் செலவு.

இந்தியாவில் ஊழலுக்கு முக்கிய காரணமே வேட்பாளர்கள் நிறைய செலவு செய்வதுதான். அது பல நூறு/ஆயிரம் கோடிகளில் இருக்கும். மீண்டும் ஒரு தேர்தல் என்றால் வேட்பாளர்களின் நிலை? 

ஒரு படத்தில் கவுண்டமணி, `ஏம்பா, வேனெல்லாம் வைச்சி கடத்தி இருக்காங்களாம்பா..பாத்து போட்டு கொடுங்கப்பா` என்று சொல்லுவார். அந்த கதைதான் ஆகும். `ரெண்டு எலக்க்ஷன்ல செலவு பண்ணி இருக்கேன். கமிஷன் கொஞ்சம் பார்த்து கொடுங்கப்பா` என்று அவர்களும் நியாயமாய் கெஞ்சும் நிலை வரும்.

இந்த தலைவலி மற்றுமின்றி, ஒரு தொங்கு சட்டமன்றம் அமைந்தால் அதன்பிறகு நடக்கும் அனைத்தும் ஜனநாயக படுகொலைதான்.

ஆட்சி யாரும் அமைக்கவில்லை என்றால் மக்களால் தேர்ந்தேடுக்கபடாத கவர்னர் ஆட்சி நடத்துவார். இது ஒரு ஜனநாயக படுகொலை. இவர் கொள்கை முடிவு எடுக்கமுடியாது. அடுத்த ஆட்சி அமையும்வரை நிர்வாகம் ஸ்தம்பிக்கும்.

டெல்லியில் நடந்தது போல் தேர்தலுக்கு முன் சண்டை போட்டவர்கள் தேர்தலுக்கு பின் ஒற்றுமை காட்டுவார்கள். இது இரண்டாவது படுகொலை. எல்லாவற்றைவிடவும் மிக மோசமானது  இதுபோன்ற சூழ்நிலையில் எம் எல் ஏக்கள் விலைபோவது.

எனவே இவற்றை  தவிர்க்க வேறு உபாயங்களை தேடுவதுதான் சரியான வழியாக இருக்கும். 

DUCKWORTH LEWIS 

கிரிக்கெட்டில் டக் வொர்த் லீவிஸ் என்று ஒரு ரூல்ஸ் உண்டு. விளையாட்டை மழை ஓரளவுக்கு தடுத்தால் ஏதோ ஒரு கணக்கில் அதை அனுசரித்து விளையாடுவது. அதேபோல் அரசியலுக்கும் சில முறைகளை பரீசிக்கலாம்.

பெரும்பான்மைக்கு 20 சதவிகிதம் வரை குறைந்தால், தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியையே ஆட்சி அமைக்க அனுமதிக்கலாம். இப்படி அமையும் ஆட்சி பாதி ஆட்சி காலத்தை கொண்டிருக்கும் என்று சொல்லலாம்.

சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சட்டங்கள் நிறைவேற்ற மெஜாரிட்டி தேவை. நியாயமான சட்டங்களை பொறுத்தவரையில் அரசியல் கட்சிகள் அனுசரித்து போகும் என்பதால் அது ஒரு பெரிய தலைவலியாக இருக்காது.

அதேசயம் ஒரு அரசு தொடர்ந்து 3 முறை சட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்ற முடியாயாமல் பின்வாங்கினால் (அ) தோற்றுப் போனால், மீண்டும் மக்களை சந்தியுங்கள் என சொல்லிவிடலாம். 6 மாதத்தில் மறு தேர்தல் என்பதைவிட இது கொஞ்சம் சுமாராக இருக்கும். 

அல்லது 6 மாதத்தில் மறுதேர்தல்தான் வழி என்றால், அதில் முதல் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட முடியும் என்றாவது ஒரு வழிமுறையை கொண்டுவரலாம்.

இது மாநிலத்துக்குதான். மத்தியில் இந்த கணக்கு செல்லுபடி ஆகாது. அங்கே ஜனாதிபதி ஆட்சி செய்யும் வாய்ப்பே இல்லாததால், எப்படியும் ஒரு அரசை கொண்டு வந்துவிடுவார்கள். எனவே மாநில அரசியலுக்கு மட்டுமாவது ஒரு மாற்று ஏற்பாடு தேவை. 

இனி தொங்கு சட்டமன்றம் இந்தியாவின் நிரந்தர தலைவலி. மாற்று வழியை யோசியுங்கள். 

ரொம்ப ஓவரா போவாதீங்க

இந்த உபதேசம் ஆம் ஆத்மி கட்சியினருக்குத்தான். இவர்களுக்கு அரசு பங்களா வேணாமாம். பாதுகாப்பும் ரொம்ப தேவையில்லையாம். இதெல்லாம் மேம்போக்காக பார்த்தால் நல்லவிதமாக தோன்றும். ஆனால் எதார்த்தத்தில் முட்டாள்த்தனம்தான்.

சாதாரண மனிதனாக இருக்கும்போது உங்களை பார்க்க உங்களின் மாமனும் மச்சானும் மட்டுமே வருவார்கள். ஆனால் அமைச்சர்கள் ஆன பிறகு வரும் கூட்டம் அப்படியா. பல வி ஐ பிக்களும், மக்களும் வருவார்களே, அவர்களுக்கு வசதியும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டியது அவசியம்தானே?

இன்னொரு தலைவலியும் உண்டு. ஒரு சராசரி ஏரியாவில் அமைச்சர்கள் இருந்தால் அக்கம் பக்கம் வசிக்கும் மக்களுக்கே இது உபத்திரவம் ஆகிவிடுமே. இன்னும் சில மாதங்களில் அவர்களே `நீங்கள் அரசு பங்களாவுக்கு போய் சேருங்கள்` என்று கும்பிடு போடாத குறையாய் சொல்வார்கள். அதுதான் நடக்கும் பாருங்கள்.

சிக்கனமாக இருக்கிறேன் என்று டிரயினில், பஸ்ஸில் பிரயாணிப்பதும இன்னொரு வகை அபத்தம். இப்படி பயணிப்பதில் அரை மணி நேரம் தாமதமாக ஆனாலும், அந்த நேரத்தில் எத்தனை ஃபைல்கள் பார்க்கலாம்? அங்கே முடிவெடுப்பதில் தாமதமானால் ஏற்படக்கூடிய நஷ்டங்கள் எவ்வளவு?

எனவே மீண்டும் அதைத்தான் சொல்வேன். ஓவரா ஃபிலிம் காட்டாதீங்க. சில செலவுகள் அவசியமானவை. அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3 comments:

சேக்காளி said...

//சிக்கனமாக இருக்கிறேன் என்று டிரயினில், பஸ்ஸில் பிரயாணிப்பதும இன்னொரு வகை அபத்தம். இப்படி பயணிப்பதில் அரை மணி நேரம் தாமதமாக ஆனாலும், அந்த நேரத்தில் எத்தனை ஃபைல்கள் பார்க்கலாம்? அங்கே முடிவெடுப்பதில் தாமதமானால் ஏற்படக்கூடிய நஷ்டங்கள் எவ்வளவு?//
இம்புட்டு நாளும் பைல் பாத்ததினாலேயும்,முடிவெடுத்ததுனாலேயும் குடிக்க தண்ணியே கெடைக்கல.ஆத்துக்கு போனா அங்கே கோடையில பாலும் குளிர்காலத்துல தேனுமாத்தான் ஓடுது.போங்கப்பா இனி பஸ்ஸூம்,ரயிலுமாவது கொஞ்சம் மேம்படுதான்னு பாப்போம்.

வவ்வால் said...

Sivanandam,

Now no tamil ,will , come back soon, Aam aathmi honey moon with cong will last long till loksaba election only.

சிவானந்தம் said...

வாங்க சேக்காளி,

இம்புட்டு நாளா இருந்த அரசியல்வாதிங்க ஆணி புடுங்கறமாதிரி நடிச்சாங்க. ஆனா இவங்கத்தான் ஆணியை பிடுங்கப் போறாங்களே. அதனால ஒரு அரை மணிநேரம் கூடுதலா ஆபிஸ்ல இருந்தா இன்னும் நிறைய பிடுங்கலாம்ங்கிற ஆசைதான்.

மத்தபடி சில சமயம் இப்படி பிரயாணம் செய்து மக்களின் கஷ்டங்களை உணர்ந்தால் சரிதான்.

வாங்க வவ்வால்,

உங்க பின்னோட்டம் வந்தா தானே பதிவுக்கு அழகு. விரைவில் வாருங்கள்.

Post a Comment