சமீபத்தில் சில செய்திகளை படித்தபோது இந்தியா எப்பேற்பட்ட அற்புதமான அறிவாளிகளை கொண்ட நாடு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
இது அதில் ஓன்று. இந்தியா சீனாவிலிருந்து இந்தியர்களை விசேஷ விமானம் மூலம் அழைத்து வந்திருக்கிறது. நல்லதுதான். ஆனால் ஒரு விஷயம் இடித்தது. நான் இது தொடர்பாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது இன்னொரு செய்தியையும் கவனித்தேன். வழக்கமாக எங்கேயும் நடப்பதுதான். அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை பதுங்குவது.
அதாவது கோரோனோ பீதியால் நோய் பரவிய அந்த சில வாரங்களில் எல்லோரும் மாஸ்க் வேண்டும் என நாயாய் அலைந்திருக்கிறார்கள்.
இங்கேயிருந்து காலியாக போன விமானத்தில் நம்மிடம் இருந்த மாஸ்குகளை முடிந்தவரை கொண்டுபோய் கொடுத்திருக்கலாம். ஆனால் நம் ஆட்கள் செய்யவில்லை. நான்கு நாள் கழித்து, நம் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார். `இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். தேவைப்பட்ட உதவிகளை செய்கிறோம்` என்று கடிதமும் எழுதுகிறார். உதவி என்பது இப்படி கேட்டு செய்வதா ?
சீனா இந்தியாவைவிட பலமானதுதான். இந்த உதவியும் சாதாரமானதுதான். இந்த நேரத்தில் அவர்களுக்கு இது அவசியம் தேவை. கொண்டுபோய் கொடுத்திருக்கலாம்.
நமது நண்பர் ஒருவர் வேலையைவிட்டு நின்று விட்டார். முதலாளிக்கும் கோவம் வரும் என்பதை இவர் உணரவில்லை. தொழிலாளிக்கும் ரோஷம் உண்டு என்பதை முதலாளி உணரவில்லை. வேறு இடத்துக்கு வேலைக்குப்போன சில மாதங்களிலேயே இவருடைய வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. புது முதலாளி இவரை பற்றி தெரியாததால் அவ்வளவாக உதவவில்லை. மருத்துவ செலவு கண் பிதுங்கியது.
பழைய முதலாளி இதை கேள்விப்பட்டு வந்தார். நலம் விசாரித்தவர், அவரை தனியே அழைத்துப்போய், சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் பாக்கட்டில் கொஞ்சம் பணத்தை வைத்து `செலவுக்கு வைத்துக்கொள்` என்று சொல்லிவிட்டார். இதை அவரால் மறுக்கமுடியாது.
இதுவே நாலுபேர் மத்தியில் `உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் சொல்` என்றால், இவர் கேட்டிருப்பாரா? அவரிடம் வேலை செய்யாத நிலையில் நிச்சயம் மறுத்திருப்பார். அது அவருக்கு கவுரவமாக இருந்திருக்கும். அவ்வளவுதான். (பின்னர் இவர் மீண்டும் அங்கேயே வேலைக்கு போய்விட்டார்.)
உதவி செய்யும் மனிதர்கள் இப்படித்தான். இவர்கள் கேட்டு செய்யமாட்டார்கள். அதுவும் நாலுபேர் மத்தியில் நிச்சயம் கேட்கமாட்டார்கள்.
ஆனால் நம்ம மோடிஜி எது செஞ்சாலும் நாலுபேர் பார்க்கற மாதிரி செய்யறவர்.
இதே கதைதான் பாகிஸ்தானுக்கும், நம் ஆட்களை அழைத்து வந்தாகிவிட்டது. பாகிஸ்தான் அப்படி செய்யவில்லை. ஏதாவது காரணம் இருக்கலாம். சீனாவில் உள்ள பாகிஸ்தானிகள் இணையத்தில் இதை குறிப்பிட்டு கதறும்போது மனது நெருடுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அனைத்து அண்டை நாடுகளையும் கேட்டதாம். அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இந்தியாவை ஜன்ம எதிரியாக பார்க்கும் பாகிஸ்தான் இந்திய உதவியை ஏற்குமா?
இங்கே வார்த்தைகளும் நோக்கமும்தான் முக்கியம். `நாம இந்த வாரம் புல்லா காஷ்மீர்ல சண்டை போடுவோம், அது வேறே. இது மனித நேய உதவி. நாங்க அவங்களை அழைத்து வந்து, சரியானதும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுகிறோம்` என்று இம்ரான்கானிடம் பஞ்ச் டயலாக் பேசியிருக்கலாம்.
இந்த பக்கம், சீனாவிடம் `உனக்கு பேஷண்டுகளை கவனிக்கவே நேரம் பத்தாது. இதுல இவங்களை எப்படி கவனிப்பாய் ? எனவே விதிமுறைகளை பார்க்காமல் அனுப்பிவை` என்று அங்கே கொஞ்சம் செண்டிமெண்ட் காட்டியிருக்கலாம்.
சந்தேகம்தான். ஆனால் நாம் சிலருக்கு உதவ வேண்டும் என முயற்சித்தால் எதுவும் சாத்தியம். பெரும்பாலான உடைந்துபோன உறவுகள் இக்கட்டான நேரத்தில் உதவுவதன் மூலம் இணைந்திருக்கின்றன.
2 comments:
முதலாளி, தொழிலாளி கதை அருமையான உவமை நண்பரே...
நன்றி கில்லர்ஜி,
யதார்த்தத்தை புரிந்து கொள்ள எவ்வளவோ அனுபவங்கள் கதைகள் இருக்கின்றன. நாம்தான் உணர்வதில்லை
Post a Comment