கடவுள் இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை, இங்கே ஒருவர் உறுதியாக சொல்கிறார்.
இனி இந்த வெற்றி பெற்ற மனிதரின் கதைக்குள் போவோம். இங்கே C T M என்ற பகுதியில் ஹைவேயில் ஒரு சின்ன நடைபாதை கோவில். மெலடி மாதா என்று பெயர். இதன் வரலாறு தெரியவில்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் போல் சமகாலத்தில் தீடீர் பிரபலம் ஆகியிருக்கிறார்.
விசாரித்ததில் மூலம் தெரியவில்லை. பூஜாரி எல்லாம் கிடையாது. நிர்வகிக்கிறார் ஒருவர். காலை மாலை இரண்டுவேளை பூஜை மட்டும் போலிருக்கிறது. மற்றநேரங்களில் நீங்கள் மாதாவிடம் நேரிடையாக பேசவேண்டும்.
கோவில் என்றால் இதர பொருட்கள் விற்க வேண்டுமல்லவா, அந்த கடையும் இவருடையதே. நாம் தேங்காய் உடைப்போம், இங்கே தேங்காய் வாங்கி அதை அப்படியே எரிக்கிறார்கள். அதன் மூலம் திருஷ்டி போகுமாம். அந்த விற்பனையும் இவரே.
பக்தர்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்பிக்கை வருகிறது. ஆனால் நமக்கு காங்கிரசையும் பிஜேபியையும் பார்த்தபிறகு கெஜ்ரிவால் கூட அற்புதமான மனிதராக தோன்றுவார். இது அந்த வகையாக இருக்க கூடும்.
ஒரு காலத்தில் சைக்கிளில் வந்த நிர்வாகி, தற்போது புல்லட் வைத்திருக்கிறார். செழுமை நிறையவே தெரிகிறது. இனி சிலர் என் கணவர்/பையன் கோவில் வைத்திருக்கிறார், நல்ல வருமானம் என்று பெருமைபட்டுக் கொள்ளும் காலமும் வரும்.
பக்தர்களுக்கு கடவுள் இருக்கிறாரரோ இல்லையோ, இவரை பொறுத்த வரையில் கடவுள் இருக்கிறார். அதை இவர் அடித்து சொல்வார். கடவுளே காப்பாத்து என்று நாம் இங்கே புலம்பி கொண்டிருக்க, அவர் கடவுளையே வியாபாரமாக்கி தன்னை காப்பாற்றிக் கொள்கிறார். இவரல்லவா வெற்றி பெற்ற மனிதர்.
இந்த மாதாவை பற்றி ஒரு பதிவு எழுதுவோம் என நினைத்து அந்த வழியாக போனேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் நடக்கும்போதே உள்ளே எட்டி பார்த்தேன். அப்படி பார்த்துக்கொண்டே நடக்கும்போது ஒருவர் என் கையில் ஸ்வீட் (பிரசாதம்) வைத்துவிட்டார். அட ஆண்டவா.... கோவிலுக்கு உள்ளே போகவேண்டும் என நினைத்ததற்கே ஸ்வீட்டா, உள்ளே போயிருந்தால்... நினைக்கவே சுகமாக இருந்தது.
ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை.
கடலூரில் பிரச்சினைகள் தலைதூக்கி எனக்கு மன அழுத்தம் அதிகமானபோது, கடவுள் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அப்போது அருகிலிருந்த பாடலீஸ்வரரிடம் சரணடைந்தேன். சில வருடங்கள் அவரையே சுற்றி வர, தீடிரென்று மின்னலடித்தது. ஒரு காஜல் அகர்வால் என் கடையை தாண்டிப்போனார்.
வேலை இல்லாத நேரத்தில் அந்த தேவதை எங்கே போகிறார் என நோட்டம் விட்டேன். அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி போவதை கண்டேன். அதன்பிறகுதான் எனக்கு ஞானோதயம் வந்தது. கடவுள் ஒருவரே, பாடலீஸ்வரரும் அவரே ஆஞ்சநேயரும் அவரே என்று புரிந்து கொண்டு ரூட்டை இங்கே மாற்றினேன்.
இங்கே பாடலீஸ்வரருக்கு கோவம், `ஒரு பெண்ணுக்காக என்னை மறந்தாயா` என்று. அந்த பக்கம் `நீ என்ன பார்க்க வரலைன்னு தெரியும் என்று ஆஞ்சநேயர். இருவரும் கைகொடுக்கவில்லை. கடைசியில் நான் ஜெயிலுக்கு போக வேண்டியதாயிற்று. அதுவும் தோல்வி.
இங்கே அகமதாபாத் வந்த பிறகு பல வருடங்களாக நாகர்வேல் அனுமானிடம் தஞ்சம். அவரும் கவனிப்பதுபோல் தெரியவில்லை. இருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு என ஃ பைலை அவர் எடுக்கும் நேரத்தில் நான் இப்படி மெலடிமாதா பக்கம் திரும்பினால் அவருக்கு கோபம் வருமா?
இது அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாகிவிடும்.
ஒரே குழப்பம், என்ன செய்வது?
2 comments:
//என் கணவர்/பையன் கோவில் வைத்திருக்கிறார், நல்ல வருமானம் என்று பெருமைபட்டுக் கொள்ளும் காலமும் வரும்//
ஹா.. ஹா.. ஸூப்பர் காமெடி நண்பரே...
வாங்க கில்லர்ஜி,
மாத்தி யோசி என்பதை இவர்களிடம்தான் கற்கவேண்டும்
Post a Comment