இப்போதெல்லாம் தமிழ் தேசியம் பேசுவது என்பது ஒரு பேஷனாகிவிட்டது. யூ டியூபில் ஏதாவது ஒரு வீடியோ பார்த்தாலும் அதுல சைடுல எவனாவது ஒருத்தன் இதைப்பற்றி பேசுகிறான். இது மெடிக்கல்ல கிடைக்குமா அல்லது மருந்து கடையில கிடைக்குமான்னு தெரியல, கிடைச்சா வாங்கி பாத்து ஏதாவது கருத்து சொல்லலாம்.
நான் ஷேர் மார்கெட்டை விடாமல் துரத்துபவன். அந்த வகையில் தொழில்துறை செயல்படும்விதம் மற்றும் அவர்களுடைய சிந்தனை எல்லாம் ஓரளவு கவனித்தே ஆகவேண்டும். அந்த வகையில் ஒரு விஷயம் இங்கே .
பொதுவாக வியாபாரத்தில் இறங்குவோர் அந்த பொருளை உற்பத்தி செய்யும் முன் சந்தையில் அதற்கு வரவேற்பு இருக்குமா என கள நிலவர ஆராய்ச்சி செய்வார்கள்.
இதற்கும் ஒரு கதை உண்டு. ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனம் இப்படி ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இரண்டு பேரை ஒரு ஊருக்கு அனுப்பியது. அதில் ஒருவன், `சார், இந்த ஊர் மக்கள் யாரும் செருப்பே போடுவதில்லை. எனவே நம்முடைய வியாபாரம் இங்கே எடுபடாது` என்றான். . இன்னொருவன், `சார் இந்த ஊர் மக்கள் செருப்பே போடுவதில்லை, அதன் அவசியத்தை, பலனை இவர்களுக்கு புரியவைத்தால், நமக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும்` என்றான்.
இங்கே கள நிலவரம் ஒன்றுதான் ஆனால் பார்க்கும் விதம்தான் வேறு. அதேபோல் இந்த தமிழ் தேசிய வியாபாரிகள் இந்த கருத்தை தமிழ்நாட்டில் விற்க முனையும் முன் இதுபோன்ற விஷயங்களை கவனித்தார்களா என தெரியவில்லை, ஆனால் அதனை நான் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில், அதாவது எம்ஜிஆர் -சிவாஜி, கமல் -ரஜினி , விஜய் -அஜித் என உச்சகட்ட நடிகர்களின் எந்த ஒரு காலகட்டத்தை எடுத்து பார்த்தாலும் ஒரு விஷயம் புரியும், அல்லது நீங்கள் அதை கவனித்திருக்ககூடும்.
இவர்கள் அனைவரும் தேசபக்தி சார்ந்த அல்லது இந்திய ராணுவ வீரராக சில/பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாண்மை சூப்பர் டூப்பர் ஹிட். இதில் விஜயகாந்த், அர்ஜுன் என பல அடுத்த கட்ட நடிகர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
காஷ்மீர் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற, எல்லைக்கு அருகே இருக்கும் ஹிமாச்சல், பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டு நடிகர்கள்தான் நிறைய வசனம் பேசியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாடு தேசியநீராட்டத்தில் இணைந்துவிட்டது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இன்னொரு சமகால உதாரணம்.
சரி, இதையே மாற்றி பார்ப்போம். ஒருவேளை தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்த்தேசியத்தின் அவசியத்தை புரியவைத்தால் வியாபாரம் அமோகமாக இருக்குமா?
தமிழ் தேசியம் என்ற வாதம் தமிழ்நாட்டில் எடுபடவேண்டுமென்றால், இந்தியாவில் தமிழகம் பல வகைகளில் பின் தங்கி இருந்தால்தான் அது சாத்தியம். ஆனால் நிஜத்தில் மற்றவர்கள் தென்மாநிலங்களை, குறிப்பாக தமிழகத்தை, பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம்.
எனவே இங்கே சீமானின் `வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை` என்ற டைலாக்கைத்தான் எடுத்துவிட வேண்டும்.
இப்படி ஏகப்பட்ட தியரி கண்ணுக்கு தெரியும் அளவில் இருக்க இதையெல்லாம் கவனிக்காமல் ஏகப்பட்ட விளக்கெண்ணை அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் இங்கே விலைபோகும் என கனவுகாண்கிறார்கள்.
அதேசமயம் இவர்கள் காலஓட்டத்தில் காணாமல் போகத்தான் போகிறார்கள். இருந்தாலும் அவ்வப்போது இந்த அளப்பறைகளின் வீடியோக்களை பார்க்க நேர்வதால் அவர்களில் யாராவது கவனிக்கட்டும் என்பதற்காக இந்த பதிவு.
0 comments:
Post a Comment