மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.
இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.
ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.
தேசிய அளவில் மத்திய கல்வி மந்திரி தேவேந்திர பிரதான் அதற்கு புள்ளி வைத்திருக்கிறார். இனி பிஜேபி அமைச்சர்கள்/ நிர்வாகிகள் என ஒவ்வொருவராக ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ மோடியை சிக்கலில் மாட்டிவிடுவார்கள். இங்கே அண்ணாமலை `கெட் அவுட் மோடி` என சொல்லிப்பாருங்கள்` என கொழுப்பாக பேசி தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.
அண்ணாமலை சீமானின் கசின் போலிருக்கிறது. 10 கேள்வி கேட்டால் 15 கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு இருவரும் வாயை வளர்த்திருக்கிறார்கள். இந்த வாய்தான் அவர்களை ஆரம்பத்தில் பிரபலமாகி வளர்ந்துவிடும். பின்னர் அதே வாய்தான் ஏதாவது அபத்தமாக பேச வைத்து இவர்களின் கவிழ்த்துவிடும். அதுதான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது.
சில மாதங்களுக்கு முன் `அண்ணாமலை வந்துவிட்டார்` என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது நான் கணித்து சொன்னது சரிதான் போலிருக்கிறது. வாயால் வடை சுட்டு பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் பெரும்பாலான பேர்வழிகள் இப்படித்தான் ஏடாகூடமாக பேசுகிறார்கள்.
இவர்களின் உதார் பேச்சுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் பெண்கள் மயங்கலாம். ஆனால் அதன் பின் அந்த பெண்களுக்கு உண்மை தெரிந்துவிடும். இப்போது அந்த பெண்களுக்கு, அதுவும் குழந்தை பிறந்த பிறகு, வேறு வழியில்லை, ஜீரணித்துக்கொள்கிறார்கள். ஆனால் மக்கள் அப்படியில்லை. தூக்கி குப்பையில் போட்டுவிடுவார்கள். இது சீமானுக்கு நடக்க போகிறது. அண்ணாமலைக்கு நடக்கும். 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து சாதனை படைத்திருக்கும் மோடியே தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கும்போது, இங்கே அண்ணாமலைக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது. காலம் இவருக்கும் பாடம் எடுக்கும்.
அடுத்து இவ்வளவு சர்ச்சைக்கும் காரணமான தேவேந்திர பிரதான் யார் என்று ஆராய்ந்தால் ஓன்று தெரிந்தது. இவரும் ஒரு சில்வர் ஸ்புன் பாய். அதாவது இவர் மத்திய பிரதேசத்தின் (கனடா) ஜஸ்டின் டிரூடோ. அப்பா முன்னாள் மத்திய அமைச்சர். இப்படி பணக்கார, அதிகாரத்தில் இருந்த தலைவர்களுக்கு பிறக்கும் வாரிசுகள் எல்லாமே இப்படித்தான். தன்னை ஒரு அதிமேதாவி என நினைத்துக்கொள்வார்கள். ராகுல் காந்தி, ஸ்டாலின், உதயநிதி என எல்லாமே இந்த வரிசைதான். ராகுல் காந்திக்கு அதிர்ஷ்டம் இல்லை, ஸ்டாலினுக்கு இருக்கிறது, எனவே இவர் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்.
இப்போதும் அதிர்ஷ்டம் ஸ்டாலினை கைவிடவில்லை. அண்ணா பல்கலைக்கழக பாலியல் கொடூரம் மற்றும் பல ரவுடியிசம் என திமுக கடுமையான விமர்ச்சனத்தில் சிக்கி தவிக்கும்போதும், அதுவும் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், இப்படி ஒரு தேவையில்லாத பெரியார் மற்றும் மும்மொழி பிரச்சினையை கொண்டு வந்து ஸ்டாலினை பிரபலமாக்கிவிட்டார்கள்.
அதாவது குடும்பத்திற்குள் சண்டை இருக்கும் ஆனால் குடும்பத்தோடு வெளியாள் சண்டைக்கு வந்தால் என்னவாகும், எல்லாரும் ஒன்றுபடுவார்கள். அந்த வகையில் காற்று தற்போது திமுகவிற்கு சாதகமாகத்தான் இருக்கும்.
போதாதற்கு அவருடைய எதிரிகள் எடப்பாடி, பிஜேபி, விஜய், சீமான் என யாரும் ஒற்றுமையாய் இல்லை. இவர்களில் எடப்பாடியும் விஜயும் சேர்ந்தால், கொஞ்சம் உதிரிகளும் சேர்ந்தால் ஓரளவுக்கு தாக்குபிடிப்பார்கள். ஆனால் சீமானும் பிஜேபியும் ஓன்று சேர்வது சந்தேகம்தான். எப்படி பார்த்தாலும் ஓட்டுக்கள் பிரியப்போகிறது. இது திமுக கூட்டணிக்கு சாதகம்.
இனி மும்மொழி கொள்கைக்கு வருவோம். நான் நிச்சயம் இதை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை எல்லா மாணவர்களுக்கும் இரண்டு மொழியே போதுமானது.
இங்கே அகமதாபாத்தில் பலர் என்னிடம் `சவுத்மே எஜுகேஷன் அச்சாஹே` என்றுதான் சொல்கிறார்கள். இங்கே மும்மொழி கொள்கைதான். எந்த மீடியம் எடுத்தாலும் இதுதான் நிலைமை. மக்கள் தங்கள் தாய் மொழியில்தான் குஜராத்தியில்தான் பேசுகிறார்கள். அதில் பிரச்சினையில்லை. மாணவர்களின் கல்வி தரம்தான் சிக்கல். அதுவும் அரசு பள்ளிகளில் படித்தால் படு மோசம். மாணவர்கள் மூன்று மொழிகளையும் கற்கவேண்டி இருப்பதால் இந்த சிக்கல். தமிழகத்திலும் நாளை இந்த நிலை ஏற்படும்.
இது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை, உதாரணங்களை சொல்லிவிட்டார்கள். நானும் சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. இருந்தாலும் இந்த முறை ஆச்சர்யமாக தமிழ்நாட்டிலும் சிலர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
இங்கே இதை நான் பிஜேபியின் கெட்ட நேரமாகத்தான் பார்க்கிறேன். அதன் விளைவுதான் எதாவது ஒரு சிக்கலில் தானாக போய் மாட்டிக்கொள்கிறார்கள். இப்போதைக்கு பிஜேபிக்கு கூட்டணியின் மூலம் மெஜாரிட்டி இருக்கிறது. இருந்தாலும் இந்த ஆட்சி முழுமையாக நீடிக்குமா என எனக்கு ஒரு சந்தேகம்.
காலம் தீடீர் திடீர் என ஏதாவது ஒரு அதிர்ச்சியை நமக்கு காட்டும். ஒரு கோடி கொடுத்து அமெரிக்காவுக்கு போனவன் இப்படி கை ,கால்களில் விலங்குகளோடு இந்தியாவுக்கு திரும்ப வேண்டியிருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டான். இப்படிப்பட்ட ஒரு தீடீர் அதிர்ச்சி ஏதாவது ஒரு ரூபத்தில் பிஜேபிக்கு வந்தாலும் வரலாம்.
மொத்தத்தில் அதிர்ஷ்டம் மோடியை கைவிடுகிறது, அதே அதிர்ஷ்டம் ஏதோ ஒரு விதத்தில் ஸ்டாலினுக்கு தொடர்ந்து கை கொடுக்கிறது.
0 comments:
Post a Comment