வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றபோது கவனித்த விஷயங்களை ஒரு பதிவாக போடுவோம் என்று எழுத ஆரம்பித்தால், அது ஆரம்பத்திலேயே சிறை அனுபவத்தை ஞாபகப்படுத்தியது. எனவே அது குறித்த சில பதிவும் போட்டாயிற்று. இனி நான் கவனித்த மற்ற விஷயங்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்ஸை தேடும்போதே எனக்கு அரசுத் துறைகளின் மீது கோவம் வர ஆரம்பித்தது. தகவல்கள் தெளிவாக இல்லாததால் நம்மால் சரியாகத் திட்டமிடவும் முடியவில்லை, கூடவே அலைச்சலும். அதுதான் எனது கோவத்தின் காரணம்.
மறுநாள் காலை 10 மணிக்கு மேல்தான் விசேஷம். ஆனால் அதற்கு தகுந்தாற் போல் நங்கநல்லூரில் இருந்து கிளம்புவது சாத்தியமில்லாததால், 12 மணிக்கெல்லாம் கோயம்பேடு வந்துவிட்டேன். எனவே நேரம் ஒரு பிரச்சினை இல்லை, பொறுமையாகவே போகலாம். என்ன... பஸ் மாறாமல் கோவிலுக்கே போகும் வண்டியைத்தான் தேடினேன்.
சில நிமிட தேடலுக்குப் பின் வண்டி கிடைக்க, அந்த பஸ் கண்டக்டரிடம், `வண்டி எப்போ கிளம்பும்?` என்று கேட்டதற்கு, `இதோ... எடுத்துருவோம்` என்றார். இந்த `இதோ`வுக்கு யாராவது சரியான விளக்கம் கொடுத்தால் நல்லாயிருக்கும். பஸ்ஸில் போய் அமர்ந்தவுடன் எனக்கு முன் அமர்ந்திருந்த இருவர், `இதோ எடுக்கிறேன் சொல்லி அரை மணி நேரம் ஆவுது... இன்னும் எடுக்கல` என்று புலம்பியதை கேட்டேன்.
அவர்கள் வந்து அரைமணி நேரம் ஆனது உண்மையானால், வண்டி கிளம்பபோகிறது என்றுதான் அர்த்தம். ஆனால், இந்த 6 மணிநேர பயணத்தில் தூங்கிக் கொண்டு போகும் அளவுக்கு அந்த பஸ் கண்டிஷனாக இல்லாததால், என்ன செய்யலாம் இந்த வண்டியிலேயே போவோமா இல்லை இறங்கி விடுவோமா என்ற தயக்கத்தில் இருந்தேன்.
அந்த நேரம் ஒரு பெண் வந்து `என்னங்க... சீட்டு தனித்தனியா இருக்குங்க. வேற வண்டி பாப்போம்` என்று வெளியே யாருக்கோ குரல் கொடுக்க.... நான் பெருந்தன்மையாக(?) `நீங்க இங்க உக்காருங்க`என்று இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு இறங்கி விட்டேன்.
அடுத்த வண்டியில் ஏறும் முன் கண்களாலேயே அந்த பஸ்ஸின் தரத்தை ஓரளவுக்கு ஊர்ஜிதபடுத்திக் கொண்டாலும், அந்த பஸ்ஸின் கண்டக்டரோ டிக்கட்டை கையில் கொடுத்த பின்தான் உள்ளே போக விட்டார். எனவே இனி இறங்க முடியாது. இருந்தாலும் அந்த பஸ் பரவாயில்லை. அந்த பயணத்தில் அடிக்கடி கண் விழித்துப் பார்த்தாலும், வைத்தீஸ்வரன் கோவில் வந்ததே தெரியவில்லை.
பொதுவாக இந்த பயணம் திருப்தியாகவே இருந்தாலும், சில குறைகளும் இருந்தது. அதுவும் இந்த அரசு போக்குவரத்து கழகத்தால் பல முறை அவஸ்த்தை பட்டது நினைவுக்கு வந்தது. சில தகவல்களை சுலபமாக தெரிந்துகொள்ளும் நடைமுறை இவர்களிடம் கிடையாது.
இன்றைய எலெக்ட்ரானிக் யுகத்தில், வண்டி கிளம்பும் நேரத்தை டிஜிடல் டிஸ்ப்ளேவாக பஸ்ஸின் முன்புறம் காட்டிவிட்டால் பிரச்சினையே இல்லை. இது பிரயாணிகளுக்கு பல வகைகளில் உபயோகமாக இருக்கும். சில கண்டக்டர்கள் ஒழுங்காக பதில் சொன்னாலும், தினம் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்கும் எரிச்சலாகத்தானே இருக்கும்? வண்டி புறப்படும் நேரம், அது போய் சேரும் நேரம், இடையில் வரும் முக்கிய ஊர்களை அடையும் (தோராய) நேரம் போன்ற தகவல்களை ப்ரோகிராம் செய்து டிஸ்ப்ளேவில் ஓடவிட்டால், பயணம் செய்பவர்கள் அதற்கு தகுந்தாற்போல் திட்டமிடமுடியும். இன்றைய சாப்ட்வேர் உலகில் இதற்காக அதிகம் செலவும் ஆகப்போவதில்லை.
சத்யம் மல்டிபிலக்சில் பாருங்கள். மூன்று மணி நேரம் படம் பார்ப்பதற்கே எவ்வளவு விரிவான தகவல்களை டச் ஸ்கிரீன் மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறார்கள். அந்த அளவுக்கு ஹைடெக்காக இல்லைஎன்றாலும் ஓரளவுக்காவது இவர்களும் செய்யலாம்.
பஸ்ஸில் இடம் கிடைக்க வேண்டும் அதுவும் அந்த இடம் சௌகர்யமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நாம் பஸ்ஸைப் பார்த்ததும் விரைவாக ஏறி இடம் பிடிக்கிறோம். ஆனால் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பிறகு, ஏதாவது சாப்பிடுவோம் அல்லது ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால், பஸ்ஸை விட்டு இறங்கவும் தயக்கமாக இருக்கும். இந்த `இதோ எடுப்போம்` என்பது ஐந்து நிமிடமா அல்லது அரை மணி நேரமா என்பது தெரிந்தால்தானே நாம் நிதானமாகவோ அல்லது அவசரமாகவோ நம் வேலையை முடிக்க முடியும்? கண்டக்டரிடம் கேட்டால் இவரும், `இதோ எடுத்திருவோம்` என்றார். `போய் ஏதாவது சாப்ட்டுட்டு வரலாமா?` என்றால் அதற்கும் `ம்.. போய்ட்டு வாங்க` என்றார். ஆக, பஸ் எத்தனை மணிக்கு கிளம்பும் என்ற தகவல் இவர்கள் வாயிலிருந்து வராது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால்தான் கிடைக்கும் போலிருக்கிறது.
அப்படியும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு காலை 6 மணிக்கெல்லாம் வந்துவிட்டேன். மற்றவர்கள் எல்லாம் 8 மணிக்கு மேல்தான் வருவார்கள் என்பதால், அதுவரை நடந்தே நகர்வலம் வந்தேன். கொஞ்சம் பிரபலமான கோவிலாக இருந்தாலும் நகரம் வளர்ச்சி அடையவில்லை. நடந்தே முழு ஊரையும் பார்த்துவிடக் கூடிய அளவுக்கு சிறியதாக இருந்தது.
எப்படியோ நகர்வலம் முடித்து, லாட்ஜில் குளித்து முடித்து நான் விரைவாக தயாராகிவிட்டாலும் மற்றவர்கள் யாரும் வரவில்லை. சரி, வரும்வரை கொஞ்சம் படுப்போம் என்று படுத்தால் நகர்வலம் நடந்தே போன களைப்பில் தூங்கிவிட்டேன்.
சற்று நேரம் கழித்து, `வந்துவிட்டோம்.... கோவிலுக்குள் இருக்கிறோம்` என்று போன் வர... நானும் கோவிலுக்கு கிளம்பினேன். கோவிலுக்குள் காலடி எடுத்து வைப்பதற்குள் `அய்யா....! என்று குரல். பிச்சைக்காரர்கள். கடவுள் மீது நம்பிக்கையும், நம்பிக்கை இல்லாமலும் ஊசலாடுபவர்கள், இப்படி கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களை பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
எனக்குள்ளும் எம் ஆர் ராதாவைப் போல் ஒரு கிராஸ் கேள்வி எழுந்தது. 24 மணி நேரமும் தன் காலடியிலேயே இருக்கும் இவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியாத இறைவன், எப்போதோ ஒரு முறை வந்து பார்க்கும் நம் பிரச்சினையை எங்கே தீர்க்கப் போகிறார்? ஆன்மீகவாதிகளிடம் இந்த கேள்விக்கு பதில் இருக்கும். சொல்லட்டும். கேட்போம்.
ஆனால் நான் இந்த சிந்தனையோடுதான் கோவிலுக்குள் நுழைந்தேன்.
பயணம் தொடரும்.
3 comments:
கோயில் வாசலில் பிச்சையெடுப்பவர்கள் பரிதாபத்திற்குறியவ்ர்களல்ல - குறிப்பாக புகழ்வாயந்த மக்கள்கூடும் கோயில்களில். இவர்கள் இவ்விடங்களைக் குத்தகைக்கு எடுத்த மாதிரி. வேறெவரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களில் சிலருக்கு குடுமபங்களும் சொந்த வீடுகளும் இருக்கும். பிச்சையெடுப்பது இவர்களுக்குத் தொழில். அதில் கிடைக்கும் வருமானம் கணிசனமானது.
உழைப்பே இல்லாமல், ஊர் மக்களை கடவுள் பேரால் - அஃதாவது கோயிலுக்கு வருபவர்கள் தானம் வழங்காவிட்டால் கடவுள் கோபப்படுவார் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்தி - ஏமாற்றும் இவர்களுக்கு ஏன் கடவுள் உதவி செய்யவேண்டுமென்கிறீர்கள் சிவானந்தம் ?
@anonymous
உங்கள் கருத்து 100 சதவிகிதம் உண்மையானது. எனவேதான் நானும் இப்போதெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு காசு போடுவதில்லை. அதற்கு பதில் அனாதை இல்லங்களுக்கு முடிந்ததை விசேஷ நாட்களில் அனுப்பி இருக்கிறேன்.
ஆனால் எந்த சமுதாயத்திலும் உண்மையிலேயே உதவி தேவைப்படும் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை. இதிலும் போலிகள் புகுந்துவிட்டதால் நம்மால் எதையும் செய்யமுடியவில்லை.
இதுமட்டுமில்லை, இப்போதெல்லாம் பலர் `நாங்கள் அநாதை ஆசிரமம் நடத்துகிறோம் டொனேஷன் கொடுங்கள்` என்று கேட்டு பில் புக் சகிதம் பல நகரங்களுக்கு வசூலுக்கு போக ஆரம்பித்திருக்கிறார்கள். இதிலும் எத்தனை போலியோ? இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பினாலும், சில சமயம் இவர்கள் உண்மையிலேயே சேவை மனப்பான்மை உள்ளவர்களோ என நினைத்து மனம் சங்கடப்படுவதென்னவோ உண்மை.
நல்ல பதிவு.
பயணத்தில் இப்படி இடையூறுகள் தவிர்க்க முடிவதில்லை.
வாழ்த்துக்கள்.
Post a Comment