!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, August 31, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டத்தினால் கிடைத்த லாபம் + நஷ்டம்


இரண்டாவது சுதந்திரப் போர் (?) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் யார் ஜெயித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யாமல் ஜனநாயகம் ஜெயித்தது என்றே சொல்வோம்.  அரசு அன்னாவின் மிரட்டலுக்கு பணிந்தும் போகவில்லை, அதேசமயம் மீண்டும் ஒரு முறை அவரை கைது செய்து அவருடைய உண்ணாவிரதத்தை முறியடிக்காமல் யதார்த்தமாகவும் செயல்பட்டிருகிறது.

அன்னாவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து போயிருந்தால் பலர் இந்த பிளாக்மெயில் முறையை பின் பற்ற ஆரம்பித்திருப்பார்கள். அல்லது அடக்குமுறை மூலம் இதை அடக்கி இருந்தாலோ ஏற்கனவே அரசியல்வாதிகளின் மீது கோவத்தில் இருக்கும் மக்கள் மேலும் அந்நியப்பட்டுப் போயிருப்பார்கள். ஆக எதற்கும் இடம் கொடுக்காமல் இரண்டு பேரும் இறங்கி வந்தது பாராட்டுக்குரியது.

ஆனால் ஒரு விஷயத்தில் அன்னா ஜெயித்துவிட்டார். சில வருடங்களுக்கு முன் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி அப்போதைய இணை கமிஷனர் நவீன் சாவ்லாவை நீக்க சொல்லி அரசுக்கு பரிந்துரைத்தது ஞாபகமிருக்கிறதா? அவருடைய பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. இருந்தாலும் நவீன் சாவ்லா மீது புகார் வெளிப்படையாக வந்துவிட்டதால், அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் எந்த வித குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காமல் அடக்கி வாசிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டார்.

அதேபோல் அன்னாவும் ஊழலை ஒழிப்பது பற்றி பரபரப்பாக விவாதிக்கப் படவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டார். பாராளுமன்றம், `உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம்` என்று சம்பிரதாய தீர்மானம் போட்டிருந்தாலும், ஊழலை கட்டுப்படுத்த ஓரளவுக்காவது கடுமையான சட்டம் கொண்டுவந்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தை அரசியல்வாதிகளுக்கு தற்போதைய சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது. ஒரு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால், அந்த பிரச்சினையின் மீது அனைவரின் கவனத்தையும் கொண்டுவர வேண்டும். அந்த வகையில் அன்னாவுக்கு இது வெற்றிதான்

அதேசமயம் இந்த அன்னா டீமின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் பல விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது, அன்னா உட்பட பலரும் அரசியல்வாதிகளை மிக மோசமாக விமர்சித்தது.காங்கிரசையோ, பிஜேபியையோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளையோ, அவரவர் அரசியல் பார்வைக்கு தகுந்தாற் போல் திட்டினால் பரவாயில்லை, பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல்வாதிகளையும் அயோக்கியர்கள் என்று திட்டுவது அபத்தமானது மட்டுமில்லாமல் ஆபத்தானதும் கூட. 

மக்களின் இந்த மனநிலைக்கு என்ன காரணம், நம்நாட்டு அரசியல் ஏன் இப்படி இருக்கிறது என்பதை ஆராயும் முன், எனக்கு மட்டும் ஏன் அரசியல்வாதிகளின் மீது கோபம் வரமாட்டேன்கிறது என்பதற்கான காரணத்தை முதலில் சொல்லிவிடுகிறேன்.

எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் அதீத ஈடுபாடு இருக்கும். மண், பொன், பெண் என பலவிதமாக இருக்கும். எனக்கு அரசியல் மீது, அதாவது நாட்டின் மீது வந்தது. இந்த ஆர்வம் எந்த அளவுக்கு என்றால், ஒரு சமயம் ஒரு பெண் என்னை திரும்பி பார்க்க வைக்க... ஒரு நாள் (வயசுக் கோளாறில்) அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடிக்க பின் தொடர்ந்தேன். ஆனால் வழியில் `இந்தியா அணுகுண்டு வெடிப்பு; உலக நாடுகள் ரியாக்க்ஷன்` என வால் போஸ்டர் தொங்கியதால்... அந்த பெண்ணை மறந்துவிட்டு இந்தியா டுடே வாங்கி படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதேபோல் நண்பர்கள் எல்லாம் பைக் வாங்க வேண்டும். பந்தாவாக ஊரை சுற்ற வேண்டும் என்ற கனவில் இருக்க... நானோ ஒரு கம்ப்யுட்டர் வாங்க வேண்டும், உலகின் முன்னணி பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். வாங்கியதும் அதைத்தான் செய்தேன். ஏன், எதற்கு, எப்படி என தெரியாமலே வந்த ஆர்வம் இது.  

ஆனால் இணையம் மூலம் உலக பத்திரிக்கைகளை படிக்க ஆரம்பித்த பிறகுதான் அதன் விஸ்தீரணமும் சில தலைவலிகளும் புரிந்தது. இணையத்திலோ செய்திகளுக்கு பஞ்சமில்லை என்பதால், அந்நாட்டு அரசியல் மற்றும் இந்தியா தொடர்பான செய்திகள் என என் வாசிப்பை சுருக்கிக் கொண்டேன்.

சில வருடங்கள் இப்படி உலகம் சுற்ற ஆரம்பித்த பிறகுதான் ஒன்றை புரிந்து கொண்டேன். எப்படி கணவனை குறை சொல்லாத மனைவிகள், மருமகளை குறை சொல்லாத மாமியார்கள் இருப்பது சாத்தியமில்லையோ, அதேபோல் அரசியல்வாதிகளை குறை சொல்லாத நாடும் கிடையாது. இந்த பதிவை வாசிக்கும் இந்த நிமிடம் ஏதாவது ஒரு நாட்டின் பத்திரிக்கையை படியுங்கள். அதில் யாராவது சிலர் அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று புகார் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களை பொறுத்தவரையில் சில உதாரணங்கள் போதும். என்னதான் ஒரு வண்டியை பல வருடமாக நீங்கள் ஓட்டிக்கொண்டு அதன்மூலம் ஓரளவு வண்டியைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் உங்களை மெக்கானிக் என்று எப்படி சொல்ல முடியாதோ, அதேபோல் சராசரி மக்கள் தினசரி (ஏதோ ஒரு) பேப்பர் படிப்பதாலோ அல்லது அவ்வவ்ப்போது தேர்தலில் வாக்களிப்பதாலோ அவர்களுக்கு அரசியல் அறிவு வளர்ந்துவிட்டதாக சொல்லமுடியாது.

ஒருவனை மடப்பையன் மவன் என்று மற்றவர்கள் திட்டலாம். ஆனால் பெற்றவர்கள் திட்டலாமா? அப்படி திட்டினால் இங்கே மடப்பையன் என்பது யாரைக் குறிக்கும். பெற்றவனைத்தானே? ஒட்டுமொத்தமாக நம் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் மோசமானவர்கள், ஊழல்வாதிகள் என்று நீங்கள் சொன்னால் அதற்கு ஒரே அர்த்தம்தான். மக்கள் சரியில்லை என்பதுதான். தென்னை மரத்தில் மாங்காய் காய்ப்பது எப்படி சாத்தியமில்லையோ, அதேபோல் மக்கள் நல்லவர்களாகவும் ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் மட்டும் கெட்டவர்களாகவும் இருக்க வாய்ப்பில்லை. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல சேலை என்று சும்மாவா சொன்னார்கள். எனவே நாம் அரசியல்வாதிகள் மீது காறி துப்பவில்லை நம் மீதேதான் துப்புகிறோம் என்பதை உணராமலே திட்டிக் கொண்டிருக்கிறார்கள். (இந்த மேதைகள்தான் கொஞ்ச நாட்களாக டிவியை ஆக்கிரமித்திருந்தார்கள்.) 

எனவே ஒரு நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்டுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் அரசியலை முழு நேரத்தொழிலாக கொண்டு அதனை ஓரளவு புரிந்து வைத்திருப்பவர்கள். எனவே அவர்களின் கருத்தை மட்டுமே நான் அதிகம் தேடிப் படிப்பேன்.

நான் கவனித்த வரையில் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இந்த மூவரும் அரசியல்வாதிகளை குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் குறை சொல்ல நியாயமான காரணங்கள் இருந்தாலும், அந்த துறைகளுக்கான நிர்பந்தம் அவர்களை குறை சொல்ல தூண்டுகிறது என்பதும் உண்மை.

கட்டுரையாளர்களை விட்டுவிடுவோம் அவர்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. மனதில் பட்டதை சொல்லக்கூடியவர்கள். இவர்களுடைய விமர்சனம் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் இருக்கும். காரணம் அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் பத்திரிக்கையாளர்கள் சில நிர்பந்தத்துக்கு பலியாக வேண்டி இருக்கும். ஆளுங்கட்சியை ஆதரித்து எழுதினால் ஜால்ரா என்பார்கள். எதிர்த்தால் கவிழ்க்க முயற்சி என்பார்கள். எனவே இரண்டையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய நிர்பந்தம்.

எதிர்கட்சிகளுக்கு வேறு வழியே இல்லை. அரசை குறை சொல்லி கொண்டிருப்பதுதான் இவர்களுடைய வேலை. அதாவது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி. அவர்களுக்கு உள்ள நிர்பந்தம் அப்படி.

கீழே உள்ள படத்தை பாருங்கள். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்களும் ஆனால்அரசியலும் செயல்படும் விதம் புரியும்.

மற்ற துறைகளில் நீங்கள் யாரையும் எதிரியாக கருதவேண்டாம். ஒரு பத்திரிக்கையோ, நீதிபதியோ அல்லது அரசு ஊழியரோ தவறான பாதையில் போனால், அத்துறையை சேர்ந்த மற்றவர்கள் அதை எதிர்த்து வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதை செய்வதில்லை.  இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இத்துறையில் ஒருவர் மேலே போக மற்றவரை கீழே இழுக்க வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் தரம் இருந்தால் நீங்கள் உயர்வது நிச்சயம்.

அரசியல் விளையாட்டு 

ஆனால், அரசியல் அப்படி இல்லை. இங்கே உங்கள் எதிரி கீழே வந்தால்தான் நீங்கள் மேலே போகமுடியும். எனவே இவர்கள் அரசை ஏதாவது ஒரு காரணத்திற்காக குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அரசியல் விளையாட்டு அப்படி.

மேலே சொன்னவை ஜனநாயக நாடுகளில் பொதுவாகவே இருக்கும் நிர்பந்தங்கள். ஆனால் நம்நாட்டில் இந்த தியரிகளுக்கு இடம்கொடுக்காமல் காங்கிரஸ் கட்சி ஏகப்பட்ட குளறுபடிகளுக்கும், ஊழலுக்கும் இடம் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இந்த விமர்சகர்கள் அன்றைய ஆட்சியாளர்களைதான் குறை சொல்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களை குறை சொல்லும் விமர்சனங்கள் எந்த ஒரு நாட்டிலும் தவிர்க்க முடியாதவை. அதுவும் ஜனநாயக நாட்டில் இது சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் இந்த அரசியல்வாதிகளின் மீதான தொடர்ந்த விமர்சனம், மக்களுக்கு நமது அரசியல் அமைப்பின் மீதே அவநம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இந்த அவநம்பிக்கையை அன்னா, கிரண்பேடி மற்றும் சிலரின் அபத்தமான விமர்ச்சனங்கள்  மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

அரசியல்வாதிகள் மீதான தற்போதைய குற்றச்சாட்டுகளை ஒதுக்கிவிட்டு, `இந்திய அரசியல் உண்மையிலேயே தரம்தாழ்ந்து விட்டதா, இந்த அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு குட்டிசுவராகிவிடுமா?` என்ற கேள்வியை நான் மேலே சொன்ன மூவரிடமும், மைக்கை நீட்டாமலும்,  `உங்கள் பதிலை யாரிடமும் சொல்லமாட்டோம்` என்ற உத்தரவாதமும் கொடுத்து கேளுங்கள், அப்போதுதான் அவர்கள் உண்மையை சொல்வார்கள். 

நமக்கு காங்கிரசுக்கு பதிலாக ஒரு மாற்று கிடைத்தாலும் ஜனநாயகத்துக்கு மாற்று இல்லை. எனவே பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்காமல், ஒவ்வொரு தேர்தலிலும் முடிந்தால் சரியான நபர்களை தேர்ந்தெடுப்போம் அல்லது மோசமானவர்களை தோற்கடிக்க ஒன்றுபடுவோம். இதுதான் நம்மிடம் இருக்கும் ஒரே வழி.


0 comments:

Post a Comment