!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, August 6, 2011

சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part.2


சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part 1

இந்த பயணத்தில் மற்ற விஷயங்களை தொடும் முன் சிறை அனுபவத்தில் மேலும் சில விஷயத்தை பார்த்துவிடுவோம்.

ஏதாவது ஒரு விசேஷத்துக்கு அல்லது ஒரு முக்கிய நிகழ்வுக்காக நமக்கு அழைப்பு வந்தால், வருவோம் என்றோ அல்லது வர முடியாத சூழ்நிலையையோ நாம் அவர்களுக்கு தெரிவித்துவிடுவோம். அப்போதுதான் அவர்கள் அதற்கு தகுந்தாற் போல் திட்டமிட முடியும். ஆனால் நீதி மன்றத்தில் இந்த நாகரீகம் கடைபிடிக்கப்படுவதில்லை.

நீதிமன்றங்களை பொறுத்தவரையில், ஒரு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று ஒருவருக்கு தகவல் அல்லது சம்மன் அனுப்பப்பட்ட பிறகு, `வருவோம்` அல்லது `வரமுடியாத சூழ்நிலை` என்ற தகவலை அவர்கள் முன் கூட்டியே சொல்வதில்லை. நீதிபதி இருக்கையில் அமர்ந்த பிறகுதான் அவர் வராததற்கான காரணங்கள் அவரிடம் சொல்லப்படும். ஒருவேளை வழக்கறிஞர்களிடம், நீதிமன்றத்திடம் முன் கூட்டியே தகவல் சொல்லப்பட்டாலும், இந்த தகவல் மற்றவர்களுடன் பகிரப்படுவதில்லை போலிருக்கிறது. இதனால் ஒரு வழக்கு தொடர்பான அனைவரும் கோர்ட்டுக்கு வந்த பிறகு, யாரரோ ஒருவர் வராத காரணத்தால், ஒப்புக்கு ஆஜராகிவிட்டு திரும்பவேண்டிய நிலைமை. அதாவது அனைவருக்கும் அனாவசிய பயணம் மற்றும் பண விரயம்.

இந்த மாதிரி லொள்ளு பண்ணுவதில் கைதிகளும் அடக்கம். புழல் சிறைகளில், `இன்று இத்தனை கைதிகளை இந்த கோர்ட்டுக்கு அழைத்துப் போகவேண்டும்` என்ற தகவல் எஸ்கார்ட்சுக்கு சொல்லப்படும். அவர்களும் அதற்கு தகுந்த எண்ணிக்கையில் புழல் சிறைக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால் புருஷனை பார்த்த பிறகுதான் தாலியை தேடும் சில பெண்களை போல், வெளியே எஸ்கார்ட்ஸ் மணிகணக்கில் காத்திருக்க, இங்கே சிறை போலீசார் கடைசி நேரத்தில்தான் `எங்கே கோர்ட்டுக்கு போக வேண்டிய அந்த கைதியை காணோம்` என்று பிளாக்வாரியாக அலசுவார்கள். அந்த கைதியின் செல்வாசிகள், `அவன் கோர்ட்டுக்கு போய்விட்டான்` என்று சொன்ன பிறகுதான் லெட்ஜரை புரட்டுவார்கள். வேறு கோர்ட்டுக்கு போயிருப்பதை கண்டுபிடிப்பார்கள்.

தொடர் குற்றவாளிகளின் மீது பல கோர்ட்டுகளில் வழக்கு இருக்கும். ஒரு சமயம் என்னுடன் வந்த கைதி ஒருவர், `அண்ணே, திங்கள் இந்த கோர்ட், செவ்வாய் அந்த கோர்ட், புதன் அது... என்று அவருடைய பாக்கெட் டைரியை பார்த்து அடுத்த வாரத்துக்கான புரோகிராமை சொன்னார். சிறையில் பல கைதிகளுக்கு இது சர்வ சாதாரணம். எனவே சில சமயம் கைதிகளுக்கு இரண்டு கோர்ட்டுகளில் ஒரே தேதியில் வாய்தா வந்துவிடும். இதை சிறை அலுவலர்கள் முன் கூட்டியே கவனிக்க வேண்டும், அல்லது அந்த கைதியாவது எந்த கோர்ட்டுக்கு போக விரும்புகிறேன் என்பதை முன் கூட்டியே சொன்னால், காவலர்களும் அனாவசியமாக வரமாட்டார்கள். ஒரு வேளை அந்த கைதி அன்று கோர்ட்டுக்கு போயிருந்தால் முக்கியமான விசாரணை நடந்திருக்கலாம். அல்லது சாட்சி சொல்ல யாராவது வந்திருக்கலாம். அவ்வளவும் வேஸ்ட்.


எனக்கு தீர்ப்பு வரும் நாளன்று என்னை மட்டும் கோர்ட்டுக்கு அழைத்து செல்ல ஐந்து காவலர்கள் வந்திருந்தார்கள். எனக்கு தூக்கிவாரி போட்டது. வழக்கமாக ஒரு ஆளுக்கு இரண்டு காவலர்கள்தான் வருவார்கள். எதற்கு ஐந்து பேர்? எனக்கு தண்டனை கொடுக்கப் போகிறார்களா? அதனால்தான் கடுமையான காவலா? வாய்ப்பில்லை என்றாலும், பலவிதமான சிந்தனைகள் எனக்குள் ஓடியது. விளைவுகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் நான் ஜெயிலுக்கு வந்தேன். எனவே சில நிமிட கலவரத்திற்கு பிறகு மனம் அமைதியானது.

உண்மையில் அன்று மூன்று பேர் கோர்ட்டுக்கு போகவேண்டும். அந்த கணக்கில்தான் ஐந்து காவலர்கள் வந்திருந்தார்கள். ஆனால் இரண்டு கைதிகள் வரவில்லை. வேறு கோர்ட்டுக்கு போயிருப்பார்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கும்.

இங்கே குறிப்பிட்டிருப்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வல்ல. நான் கோர்ட்டுக்கு போகும் போதெல்லாம் இதுபோன்ற ஏதாவது ஒரு காட்சியை பார்த்திருக்கிறேன்.

இதேபோல்தான் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சாட்சிகள் விஷயத்திலும் நடக்கிறது. திடீர் உடல்நலக் குறைவால் நடக்கும் சம்பவங்களை விட்டுவிடுவோம். ஆனால் மற்ற சமயங்களில் நாங்கள் இன்று லீவு, வரமாட்டோம் என்ற செய்தியை முன் கூட்டியே தெரிவிப்பதன் மூலம் பலருடைய பயணத்தை தடுக்கலாம்.

அதேபோல் ஒரு வழக்கு நடக்கும் போது, அது தொடர்பாக நீதிபதி சந்தேகம் கேட்டால் பதில் சொல்ல ஸ்டேஷனிலிருந்தும் ஒரு போலீசார் வருவார். பல சமயம் கால் கடுக்க நின்று விட்டு எந்த விசாரணையும் நடக்காமல் அடுத்த வாய்தா தேதியை மட்டும் குறித்துக் கொண்டு போவார். அப்படி ஒரு முறை வந்த ஒருவர் `எந்த வேலையும் இல்லாம தண்டத்துக்கு வரவேண்டியதா இருக்கு` என்று கொஞ்சம் கடுப்பாகவே சொன்னார். 

அதேபோல் சிறையிலும் பல கைதிகள், `கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்` என்ற கதையாய் வழக்கு இழுக்கப்படுவதை சொன்னார்கள். அப்போதுதான் இந்த பதிவுக்கான கரு எனக்கு தோன்றியது. அனாவசியமாய் வாய்தா வாங்குவதே ஒரு முறைகேடு. ஆனால் அதையாவது ஒழுங்காக செய்யக்கூடாதா?

அதிலும் மற்ற அனைவரையும் விட நீதிபதி லீவு போட்டால் பலருக்கு சிரமம். எனவே `இன்று இந்த வழக்கில் விசாரணை இல்லை` என்பதை, அல்லது `இன்ன தேதியில் நீதிபதி லீவு` என்ற தகவலை அன்று கோர்ட்டுக்கு வரவேண்டிய அனைவருக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லும் நிலை வேண்டும்.  

அதேசமயம், இந்த வழக்குக்கு இன்று விசாரணை இல்லை, வாய்தாததான் வழங்க வேண்டும் என்பது நீதிபதிக்கே (பல வழக்குகளில்) கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்பதால், மற்றவர்களுக்கு தகவல் தந்து அவர்கள் வராமல் தடுக்கும் வாய்ப்பும் குறைவு. எனவே இந்த அபத்தங்களுக்கும் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.



இந்த பதிவுகளை நான் எனது அனுபவம், கவனித்தது மற்றும் காதில் வாங்கிய செய்திகளின் அடிப்படையில், அனுமானத்தில் எழுதியிருக்கிறேன்.

15 நாட்களுக்கு ஒரு முறை வாய்தா என்றால், அதை அப்படியே எடுத்துக் கொள்ளகூடாது. எனக்கு முதல் மூன்று மாதம், அதாவது குற்றப் பத்திரிக்கை வழங்கும் வரை, சிறையில் இருக்கும் உள் நீதிமன்றத்திலேயே 15 நாட்களுக்கு ஒரு முறை வாய்தா வழங்கப்பட்டது. வழக்கு தொடங்கப்பட்டபின், வெளி கோர்ட்டில், அதிகப்பட்சமாக 75 நாள் வாய்தா கொடுத்தார்கள். ஆனால் போதைப் பொருள் வழக்கில் வந்தவர்களுக்கு வருஷக் கணக்கில் 15 நாள் வாய்தாதான். அதேபோல் பெரும்பாலான வழக்குகளிலும் இதுதான் நிலைமை.

இந்த பதிவை வெளியிடும் முன், சில நீதிமன்ற நடவடிக்கைகளை முழுமையாக தெரிந்து கொள்ள, தெரிந்த அல்லது பதிவுலகில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு போன் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒருவருடன் நட்பு கொள்ள ஆரம்பித்தால், `ஏன் ஜெயிலுக்கு போனீங்க?`  என்ற தவிர்க்க முடியாத கேள்வியை கேட்க ஆரம்பிப்பார்கள். அப்புறம் நான் பொய் சொல்ல வேண்டி வரும் என்பதால் தவிர்த்துவிட்டேன். எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி நான் குறிப்பிட்டதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்தப்படும்.            





5 comments:

Rathnavel Natarajan said...

நல்ல விபரங்கள்.
வாழ்த்துக்கள்.

சிவானந்தம் said...

வணக்கம் ரத்னவேல் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Indian said...

திரு. பிரபு ராஜதுரை மற்றும் திரு. ஜெயராமன் என இரு வழக்குரைஞர்கள் பதிவுலகில் நடமாடுகிறார்கள். அவர்களின் பார்வையில் உங்கள் இடுகை படுமென நம்புகிறேன்.

நீதிமன்ற வாய்தா முறையை எளிமையாக்க கணிணிமயமாக்கம் நல்ல பலனைத் தரும் என்று தோன்றுகிறது.

சிவானந்தம் said...

நிச்சயம் கணினிமயமாக்கம் சில பலன்களைத் தரும்.

ஆனால், கோர்ட்டுக்கு ஆஜராக வேண்டியவர்கள் தங்கள் நிலையை முன் கூட்டியே சொல்லும் சூழ்நிலை வரவேண்டும். அந்த தகவலை அந்த வழக்கு சம்பந்தபட்ட மற்றவர்களுக்கு நீதிமன்ற அலுவலரே சொல்லிவிடுவது நல்லது. அல்லது போன் மூலம் விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பாவது வேண்டும். தற்போதைய கணினிமயமாக்குவதில் இந்த பிரச்சினையை கவனிப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மாற்றம் வரும் என்று நம்புவோம்.

Indian said...

உங்களின் இடுகையை படித்து வரும்போதே இதனை எப்படி மேம்படுத்த முடியும் என்ற எண்ணவோட்டம் ஓடிக் கொண்டிருந்தது. அதனால்தான் கணிணிமயமாக்கம் உதவக்கூடும் என்று சொன்னேன். அரசாங்கத்தை நம்புவதைவிட தன்னார்வலர்கள் யாராவது திறமூல சொவ்வறைகளைக் (software) கொண்டு தேவையான அப்ளிகேஷனை உருவாக்கித் தர முடியும்.

Post a Comment