!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, February 1, 2012

இவர் டாக்டரா, வியாபாரியா?

சிறை அனுபவம் குறித்த் பதிவு அனுமார் வால் போல் நீள்கிறது. முழுவதையும் எழுதிவிட்டுத்தான் அதை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். இதற்கிடையில் வேறு சில அனுபவங்கள். பதிவுலகில் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்த இடைக்கால பதிவு.

சமீபத்தில் என்னுடைய பழைய பதிவு ஓன்று ஒரே நாளில் அதிகம் படிக்கப்பட்டது. அப்படி என்ன அதில் எழுதி இருக்கிறேன் என்ற ஆர்வம் ஏற்பட, மீண்டும் படித்தேன். சில குறைகள் தென்பட்டது. திருத்தினேன்.

அதாவது ஏற்கனவே நான் சொன்ன ஒரு விஷயம் தற்போது அபத்தமாக தெரிய, அதை திருத்திவிட்டேன். அது தேர்தலுக்கு முன் எழுதப்பட்டது. அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் பொருத்தமாக இருந்திருக்கும். தற்போது அதை படித்தால் அபத்தமாக இருக்கும். `சவுக்கு` சங்கர் தளத்தில் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பதாலும், சில கட்டுரைகள் நிறையவே வெளிச்சத்தை காட்டியதாலும் இந்த மாற்றம்.

நாம் கொண்டிருக்கும் எந்த ஒரு கருத்தும் காலப் போக்கில் மாறக் கூடியவை. வாதங்கள் முறையாக இருந்தால் அதை ஏற்றுக் கொண்டு என் கருத்தை மாற்றிக் கொள்ள நான் தயங்கியதில்லை. ஒருவரை எனக்கு பிடிக்கும் என்று சொல்வோம். அந்த வார்த்தைகள் அந்த காலத்தை பிரிதிபலிப்பவை. அந்த சமயம் அவருடைய நடத்தைகள் நமக்கு பிடித்திருக்கும், எனவே சொல்லி இருப்போம். அதன் பின் அவருடைய சுயரூபம் நமக்கு தெரியவந்தால், அதனடிப்படையில் நாம் நம் கருத்தை மாற்றிகொள்வோம்.

அதேசமயம் சில தியரிகளும் இருக்கின்றன. கடலூரில் நான் பேச்சலராக இருந்த போது ஒரு ஐயர் ஓட்டலில் காலை டிபன் முடிப்பது வழக்கம். அவ்வளவு ருசியாக இருக்கும். பின்னர் கால ஓட்டத்தில் அங்கே விலையும் ஏறியது, சுவையும் மாறியது. மாஸ்டர் மாறி இருக்கலாம் அல்லது நிர்வாகம் மாறி தரம் குறைந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கு பழகிப் போன மனம் அவ்வளவு சீக்கிரம் மாற்றத்தை ஏற்கவில்லை. எனவே திட்டிக் கொண்டே அங்கேயே சாப்பிடுவது வழக்கம். அதேசமயம் வேறு ஓட்டல்கள் எதுவும் (அருகில்) தரமாக இல்லை என்பதும் ஒரு காரணம்.

இதே தியரிதான் நாம் வாசிக்கும் பத்திரிக்கைகள் விஷயத்திலும். எனவே சில பத்திரிகைகள் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் இந்த தியரியின் பாதிப்பால்தான்.

டாக்டரா, வியாபாரியா?

சமீபத்தில் எனக்கு ஜலதோஷம் பிடிக்க, பக்கத்தில் இருந்த ஆஸ்பிடலுக்கு (நங்கநல்லூர்) போனேன். இங்கே சில வருடங்களுக்கு முன், ஒரு பேஷண்டுக்கு கொடுக்கப்பட்ட மருந்து அவருக்கு அலர்ஜி ஆகி, அந்த பெண் இறந்து விட்டார். இது பத்திரிக்கைகளில் பரபரப்பாக அடிபட்டது.

பத்த்ரிக்கைகளில் கிடைத்த நெகடிவ் பப்ளிசிடியின் பாதிப்பால், `உங்களுக்கு அலர்ஜி இருந்தால் தெரிவியுங்கள்` என்ற போஸ்டர் மூலமாக மட்டுமின்றி, பல முறை நேரடியாகவும் கேட்கப்பட்டது. சரி, அனுபவம் பேசுகிறது, இது நல்லதுக்குத்தான் என்று நினைத்தேன்.

ஆனால் மெடிக்கலில் டாக்டர் எழுதிய மாத்திரைகளை வாங்கும் போதுதான் ஷாக் அடித்தது. மதிப்பு 850 ரூபாய். டாக்டர் சம்பிரதாய டெஸ்ட்தான் (ஸ்டெதாஸ்கோப்) செய்தார். வேறு எந்த லேப் டெஸ்டும் கிடையாது. அப்படி இருக்கில் சாதாரண ஜலதோஷத்துக்கு இவ்வளவு ரூபாய்க்கு மாத்திரையா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவே மருந்து வாங்கவில்லை.

ஒரு வேளை என்னிடம் சத்து குறைவாக இருந்து, நோயின் தன்மை அதிகமாக இருந்து அதற்காகவும் எழுதி இருக்கலாம் என்று சமாதானமானேன். இருந்தாலும் வாய் சும்மா இல்லாமல் இதை நான் அக்கம் பக்கம் பேச ஆரம்பிக்க, பல கதைகள், அதாவது புலம்பல்கள் காதில் விழுந்தது. ஒருவர் `இவர் மெடிக்கலும் ஆரம்பிச்ச் பிறகு இன்னும் மோசம்` என்றார்.

இருந்தாலும் அவசரப்பட்டு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பதாலும், நானும் இதை ஊர்ஜத்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், உடனடியாக வேறு ஒரு டாக்டரை பார்த்தேன். இந்த டாக்டரிடம் அதே வார்த்தைகளைதான் சொன்னேன். அவரும் அதே டெஸ்ட்தான் எடுத்தார். ஆனால் அவர் எழுதிக் கொடுத்த மாத்திரையின் மதிப்பு 100 ரூபாய். அதிலேயே ஜலதோஷம் ஓடிவிட்டது. இதை என்னவென்று சொல்வது?

வியாதிகளில் ஆபத்தில்லாத, ஆரம்பக்கட்டம், தீவிரம் என்று பல விதம் இருக்கிறது. மருந்தை மட்டும் எழுதிகொடுத்து, `இதிலேயே குணமாகிவிடும். அப்படியும் ஆகவில்லை என்றால், டெஸ்ட் எடுத்து பார்ப்போம்` என்று சொல்லும் நல்ல டாக்டர்களும் உண்டு. இரண்டாவதாக பார்த்த டாக்டரும் அதைத்தான் சொன்னார். உடல்நலம் முக்கியமானதுதான், அதற்காக எல்லாவற்றையும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது நல்லதல்ல. ஏழைகளுக்கு அது அனாவசிய செலவு.

இந்த சம்பவம் கடலூரில் நான் கண்ட இன்னொரு சம்பவத்தை நினைவுபடுத்தி விட்டது. அங்கே ஒரு சைக்கிள் கடையில் பஞ்சர் ஓட்ட வந்தார் ஒருவர். அதில் ஏற்கனவே பல பஞ்சர் ஒட்டப்பட்டிருக்க, `டியுப் மாத்தனுமா?` என்று கடைகாரரிடம் அவர் கேட்டிருக்கிறார். `இன்னும் ரெண்டு, மூணு பஞ்சர் தாங்கும். அப்புறம் மாத்திக்கலாம்` என்று சொல்லி இருக்கிறார் அவர்.

காலம் மாறியது. இப்போது அந்த சைக்கிள் கடைக்காரர் கொஞ்சம் முன்னேறிவிட்டார். அதாவது அவரும் டியுப், டயர் விற்க ஆரம்பித்துவிட்டார். இப்போதும் அதே சம்பவம். ஆனால் இந்த முறை `டியுப் அடி வாங்கிடிச்சு. மாத்திடுங்க` என்றார். பழைய சம்பவத்தை சைக்கிள் கடைக்காரர் மறந்திருக்கலாம். ஆனால் இவர் மறக்கவில்லை.

இருவரும் நண்பர்கள் போலிருக்கிறது, எனவே அதை நினைவுபடுத்தி, `ஏண்டா, அன்னிக்கும் இதே மாதிரிதான் டியுப் இருந்தது. அப்ப வேணாம்ன்னு சொன்னவன், இப்ப நீ டியுப் விக்க ஆரம்பிச்ச உடனே, `டியுப் மாத்திடு`ன்னு சொல்ற. நீ வியாபாரி ஆயிட்டடா` என்று சொல்லி கலாய்த்தார்.

நான் இரண்டாவதாக பார்த்த டாக்டர் மெடிக்கல் வைத்திருக்கவில்லை. எனவேதான் இவர் நல்ல டாக்டராக இருக்காரோ என்ற சந்தேகம் வந்தது. எனவே மெடிக்கல் வைத்துள்ள இன்னொரு டாக்டரை பார்ப்போமா என்ற எண்ணமும் வந்தது. `அப்புறம் மருந்து செலவை விட டாக்டருக்கு கொடுக்கும் கன்சல்டிங் பீஸ் அதிகமாகிவிடும். வேண்டாம்` என்று ஆறாவது அறிவு கட்டளையிட, இந்த ஆராய்ச்சியை அத்துடன் முடித்துக் கொண்டேன்.

இந்த `அலர்ஜி` டாக்டர், டாக்டராக இல்லாமல் ஒரு வியாபாரியாகத்தான் மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த டாக்டரைபற்றி பலருடைய விமர்சனங்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அதேசமயம் இந்த ஒரு அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா டாக்டரையும் குறை சொல்ல முடியாது. சேம்பல் பத்தாது. இன்னொரு முறை வியாதி வந்தால் இதேபோல் மெடிக்கல் வைத்திருக்கும் வேறு ஒரு டாக்டரிடமும், மெடிக்கல் இல்லாத ஒருவரிடமும் பரிசோதித்து அவர்களை டெஸ்ட் பண்ணவேண்டும். அல்லது உங்களிடம் ஏதாவது அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்.

ஆனால் ஓன்று மட்டும் நிஜம். அதாவது டாக்டர்கள் வியாபாரிகள் ஆகி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு போய், இப்போது வியாபாரிகள்தான் டாக்டராக இருக்கிறார்கள் என்ற சொல்லும் நிலை வரும் போலிருக்கிறது.

14 comments:

ராஜ நடராஜன் said...

தலைவலி,காய்ச்சல் போன்றவை பல காரணங்கள்,கால மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படும் சாதாரண உடல் நோய்களே.இந்திய ஜனநாயக அடிப்படையில் குறைந்த விலைக்கே வைத்தியம்,மருந்துகள் செய்யலாம்.

ஆனால் பிரச்சினையின் மையம் போட்ட பணத்தை திரும்ப எடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் போது சமூக சேவை எண்ணங்கள் பின் தள்ளப்பட்டு சுயநலம் முந்திக்கொள்கிறது.

மருத்துவர்கள்,காவல்துறை,அரசு ஊழியர்கள்,வழக்கறிஞர்கள் என்று பல துறைகளில் இருப்பவர்கள் சமூக கட்டமைப்பில் ஓரளவுக்கு நடுநிலை வருமானக் கோட்டுக்குள் இருப்பவர்கள்.பேராசைகளை பின் தள்ளுவது மட்டுமே இவர்களுக்கு மதிப்புக்குரிய அங்கீகாரத்தை சமூகம் தரும்.

Radhakrishnan said...

தங்களின் அனுபவமும், தங்கள் நண்பரின் அனுபவமும் உலகைப் பற்றிய விசயங்களை தெளிவு படுத்துகின்றன.

'தொழில்' என வரும்போது அங்கே வியாபார நோக்கம் இருக்கும்.

'சேவை' என வரும்போது அங்கே வியாபார நோக்கம் அடிபட்டு விடும்.

மருத்துவர் மருத்துவ தொழில் செய்கிறார். மருத்துவ சேவை அருகிப் போன காலம் இது.

கூகிள் கூடத்தான் இந்த வலைப்பூ சேவை செய்து வருகிறது. :)

Vetirmagal said...

It is absolute shame, that doctors, have their pharmacy flourish by prescribing a list of medications. At he drop of a hat , we compare with western countries,. Why dont they follow similar practices here.

The doctor is supposed to explain the medication, and its effect,and why he is prescribing them. Very few do it.

The more the medications for a simple illness, the more the side effects. Does the doctor/businessman care?
If they are doing business, I wonder whether they abstained from taking the Hippocrates oath?

The old fashioned patient - General practitioner relations hip needs to be established again. So that the Doctors care for their patients and not use them as banks for their millions.

சிவானந்தம் said...

வாங்க நடராஜன் சார்,

ஜலதோஷம் பற்றி ஒரு கிண்டல் உண்டு. அதாவது டாகடரிடம் போனால் ஒரு வாரத்தில் குணமாகும், போகாவிட்டால் 7 நாளில் குணமாகும் என்று. அதாவது அது தானாக வந்து தானாகவே போய்விடும் என்று. இதற்கெல்லாம் வீட்டு (பாட்டி) வைத்தியமே போதும். இருந்தாலும் இந்த முறை சரி, மருந்து எடுத்துக் கொள்வோம் என்று தோன்றியதால் போனேன். எனவே இந்த அனுபவம். எல்லாம் நல்லதற்கே.

///பேராசைகளை பின் தள்ளுவது மட்டுமே இவர்களுக்கு மதிப்புக்குரிய அங்கீகாரத்தை சமூகம் தரும்.///

நல்ல வார்த்தைகள்தான். ஆனால் இவர்கள் உணரவேண்டுமே!

சிவானந்தம் said...

வாங்க ராதாகிருஷ்ணன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

///மருத்துவர் மருத்துவ தொழில் செய்கிறார்.///

சரியான வார்த்தை. அவர் தொழில் செய்கிறார். ஒரு மருத்துவர் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டால் நிச்சயம் காணாமல் போய்விடுவார். எனவே அவர் கொஞ்சம் வியாபாரியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்த வியாபாரிகளிடமும் ஒரு நேர்மை இருக்கும். நமது வாடிக்கையாளர்கள் தொடரவேண்டும் என்பதிலும், அவர்கள் நம்மை பற்றி நெகடிவ் பப்ளிசிட்டி செய்யக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள். இவரிடம் அந்த சென்சும் இல்லை.

//கூகிள் கூடத்தான் இந்த வலைப்பூ சேவை செய்து வருகிறது///

இதை ஏன் நீங்கள் இழுத்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த சேவையில் அவர்களுக்கு லாபம் இருந்தாலும், நமக்கு அது வழங்கும் சேவை தரமானதுதானே?

வவ்வால் said...

சிவானந்தம்,

நல்ல அனுபவம், நல்ல பதிவு !

அந்த 7 நாட்கள் காமெடி சொல்லலாம்னு பார்த்தேன் , நீங்களே சொல்லிட்டிங்க.

மருந்தகம் வைத்து இல்லை என்றாலும் பல மருத்துவர்கள் ஏதேனும் மருந்தகத்துடன் தொடர்பு வைத்திருப்பார்கள், அவர்கள், கமிஷன், மேலும் மருத்துவருக்கு சில அன்பளிப்புகள் செய்வார்கள். ஏன் மருத்துவரின் பரிந்துரைக் காகிதத்தில் பாருங்க ,அடியில் அன்பு மெடிக்கல்ஸ் போல ஏதோ ஒரு பேருப்போட்டு விளம்பரம் இருக்கும். உபயதாரர் மருந்துக்கடைக்காரர் தான். பிரதி உபகாரமா மருத்துவர் நிறைய எழுதி தள்ளுவார் :-))

ஒரு சில நல்ல மருத்துவர்களே தேவைக்கும், நோய்க்கும் பரிந்துரைப்பார்கள். உங்க நம்பர் 2 மருத்துவர் அப்படிப்பட்ட நல்லவராக இருக்கலாம்.

மருத்துவர்கள் கேட்கும் கட்டணம், எழுதும் மருந்து எல்லாம் அவரின் பொருளாதார தேவை, அவருக்கு இருக்கும் கடன் ஆகியவற்றைப்பொருத்து. வங்கிக்கு தவணைக்கட்ட நோயாளியிடம் தவணையில் வசூலித்து விடுகிறார்கள் பெரும்பாலான மருத்துவர்கள்.

நர்ஸ் : டாக்டர் அந்த பேஷண்டுக்கு எவ்ளோ பில் போடனும்.

டாக்: ஏ.சி மெக்கானிக் சர்வீஸ் செய்ய எவ்வளோ கேட்டார் ?

நர்ஸ்:1500 ரூ,

டாக்; அப்போ 1500 ரூ அந்த பேஷண்ட் கிட்டே வாங்கிடு !!!

இப்படி ஒரு ஜோக் எப்போவொ படிச்சேன். இப்போ ஜோக் எல்லாம் நிஜமா நடக்குது :-))

சிவானந்தம் said...

வாங்க வெற்றிமகள். உங்கள் கருத்துக்கு நன்றி.

//The doctor is supposed to explain the medication, and its effect,and why he is prescribing them. Very few do it.//

நான் முதலில் பார்த்தவர் பெண். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. உங்களுக்கு ஏதாவது மருந்து ஒத்துக்காம அலர்ஜி ஆகியிருக்கா என்றுதான் சில முறை கேட்டார். இதுதான் அவர் பேசிய வார்த்தைகள். பத்திரிக்கைகள் இந்த ஆஸ்பத்திரியை கடுமையாக விமர்ச்சித்ததால் தான் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இரண்டாவதாக பார்த்த ஆண் டாக்டர் ஓரளவு விசாரித்தார்.

The more the medications for a simple illness, the more the side effects. Does the doctor/businessman care?
If they are doing business, I wonder whether they abstained from taking the Hippocrates oath?

ம்ஹும். இவர்கள் திருந்தமாட்டார்கள். ஏதாவது ஒரு முன்னணி பத்திரிகை இதில் மேலும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து ஒரு கவர் ஸ்டோரி போட்டால் கொஞ்சம் அடங்குவார்கள்.

The old fashioned patient - General practitioner relations hip needs to be established again. So that the Doctors care for their patients and not use them as banks for their millions.

சேவை என்று சொல்லகூடிய கல்வியே இன்று வியாபாரமாகிவிட்டது. எனவே இனி பழங்கதையை எதிர்பார்க்க முடியாது. இன்று டாக்டராக இருப்பது பெருமையல்ல. கூடவே சகல வசதிகளுடன் கிளினிக் இருந்தால்தான் மரியாதை. அப்படி ஆன பிறகு அவர் டாக்டராகவா இருப்பார்?

குறுந்தொழில் போல் வெறும் கன்சல்டிங் டாக்டர் என்ற துறை உருவாக்கி அவர்களுக்கு ஏதாவது வரிச்சலுகை கொடுத்தால் ஒருவேளை அவர்கள் டாக்டராக இருக்கலாம்.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்.

டாக்டர்கள் பற்றி நிறைய ஜோக் படித்திருக்கிறேன். இது அனுபவம்.

இன்னொரு நண்பர் `நல்ல லாபகரமான தொழில் சொல்லுங்க` என்று ஐடியா கேட்டார். அதற்கு வேறு ஒருவர் சொன்ன சில தொழில்களில் மெடிக்கலும் ஓன்று. இது எப்படி இருக்கு? அதனாலத்தான் மெடிக்கல் வைத்திருப்பவர்கள் டாக்டர்கள காக்கா பிடிகிறாங்க. ஏன் காக்கா பிடிக்கிறாங்கன்னு டாக்டர்கள் ஆராய, அப்புறம் அவங்களும் மெடிக்கல் ஆரம்பிக்கிறாங்க. அப்படியே கதை போகும்...

குலவுசனப்பிரியன் said...

உங்களுக்கு எழுத்து மடை திறந்த வெள்ளம் போல கொட்டுகிறது. ஆங்கிலமும் தரமாக இருக்கிறது. பட்டறிவாலேயே படிப்பைவிட நல்ல புலமை கிட்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

ஆனால் பல இடுகைகள் படிப்பதற்கு ஆயாசமாக இருக்கின்றன. நான் புலம்பி எழுதியக்கடிதங்களை நினைவுபடுத்தும் எழுத்துக்கள்.

சொல் சுருக்கம் இருந்தால் மனதில் படியும்படி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

பகிர்தலுக்கு நன்றி.

சிவானந்தம் said...

@ குலவுசனப்பிரியன் said...

சுருக்கமாக எழுதுவது ஒரு கலை. நானும் முடிந்தவரை அப்படிதான் எழுத முயற்சிக்கிறேன். இருந்தாலும் அது இயற்கை கொடுக்கும் வரம். சிலருக்கு அது வழிகாட்டிகளின் மூலம் வரலாம்.

உங்களின் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

Vetirmagal said...

சேவை செய்யும் டாக்டர்களும் இருக்கிறார்கள். ஆனால் வெளிச்சத்தில் இல்லை.
மக்களும் பகட்டான டாக்டர்கள் , மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்
எல்லாம் மாறுவது போல இதுவும் ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை;-)

Unknown said...

உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது

சிவானந்தம் said...

வாங்க ஆரிப். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

Siva,

I have same kind of experience in Pondicherry. The doctor 1 who i met is very famous in the city for Chest diseases. He is also having his own medical he charged me heavily for nothing. Then i did the same as you did. They are also asking money according to our profession too...

P.Kumar

Post a Comment