மீண்டும் ஒரு (புதுக்கோட்டை) இடைத்தேர்தல். மறுபடியும் அரசுக்கு தண்டச் செலவு. இடைத்தேர்தல்கள் ஒரு ஆட்சியின் தலைவிதியை மாற்றாதவரை, இவை தேவையே இல்லை. சிக்கனம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய அரசுக்கு இது மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை. தெரிந்திருக்கும். ஆனால் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது பற்றி பேசுவார்கள்..பேசுவார்கள்...இன்னும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இந்த அனாவசியமான, சம்பிரதாயமான இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் ஒதுங்கிவிட்டன. இருப்பது தேமுதிக மட்டுமே. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் பண மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து போராடுவது சிரமம் என்று புறக்கணித்த கட்சிகள் சமாளித்தாலும், எதற்கு (லாபமில்லாத) செலவு செய்வானேன் என்பதுதான் முக்கியமான காரணம்.
இங்கே இரண்டு கெட்ட செய்திகள் இருக்கிறது. ஒரு ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் எப்படியும் ஜெயிக்க முடியும் என்பதை, ஏற்கனவே ஆண்ட ஒரு கட்சி ஒப்புக் கொள்கிறது. இது ஒரு கன்பெஷன்.
அதேசமயம் தோல்வியை கண்டு அஞ்சாமல், `செலவாகுமே, யார் செலவு செய்வது?` என்ற கவலையில் அரசியல் கட்சிகள் தேர்தலையே புறக்கணிக்கும் அளவுக்கு நமது தேர்தல் முறையும் வந்துவிட்டது.
இதுதான் அபாயகரமான சூழ்நிலை. வேட்பாளர் தேர்வில் கூட, நல்ல மனிதரா என்ற தகுதியை விட, `இவர் செலவு செய்வாரா, தாக்குப் பிடிப்பாரா என்ற கேள்விதான் இப்போது அலசப்படுகிறது.
இப்படி அரசியலின் அதிகாரவர்க்கத்திற்கு நுழையும் முதல் படியிலேயே ஒருவனிடம், `உன்னிடம் பணம் இருக்கிறதா? இருந்தால்தான் உனக்கு சீட் கொடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்` என்று சொன்னால், அதன் பிறகு அந்த மனிதன் எதைத் தேடி ஓடுவான்?
இப்படி பணம்தான் செலவு செய்து ஜெயித்த பின், `நான் போட்ட பணத்தை மட்டும் `எடுக்கிறேன்`` என்று ஒரு எம் எல் ஏ சொன்னால், இதற்கு நாம் என்ன பதில் சொல்வது?
Gray Area
இன்றைய ஊழல்களுக்கு மூல காரணம் இப்படி ஒரு நிர்பந்தம் இருப்பதுதான். இதற்கு ஒரு தீர்வு வந்தால் ஊழல்கள் பெருமளவு கட்டுக்குள் வந்துவிடும். தேர்தல் செலவுக்காக அரசு நிதி ஒதுக்குவதுதான் ஒரே வழி என்று பலர் சொன்னாலும், இன்னமும் அது விவாத அளவிலேயே இருக்கிறது.
ஊழலுக்கான அஸ்திவாரம் எங்கே போடப்படுகிறது என்பது தெரிந்துவிட்டது. நல்ல வேட்பாளர் கூட தேர்தலில் கொஞ்சம் செலவு செய்தாக வேண்டும் என்பதை கிட்டத்தட்ட எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அதற்கான தீர்வை மட்டும் நம்மால் இன்னும் எட்ட முடியவில்லை.
இருப்பது நான்கு வழிகள்தான். இதுவரை நாடு சந்தித்த அனுபவத்திலிருந்து, அந்த நான்கில் எவையெல்லாம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என ஆராய்ந்து நிராகரித்தால், மிச்சம் இருப்பவைதானே தீர்வாக இருக்க முடியும்?
1) மக்களிடம் நிதி வசூல் செய்வது
இது உலகளாவிய நடைமுறை என்றாலும், இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியப்படாது. ஏழை மக்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்பது ஒரு பக்கம். இன்னொருபக்கம் இங்கே அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டதால், மக்களிடமும் அது ஒரு சலிப்பை உருவாக்கி இருக்கும்.
2) பணக்காரகளிடம் கை ஏந்துவது.
கொடுப்பார்கள். ஆனால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவர்கள் சில சலுகைகளை எதிர்பார்பார்கள். அதுவே ஊழல் என்பதால், எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடுவானேன் என்று இன்றைய அரசியல்வாதிகள் நேரடியாகவே ஊழலில் இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இது கேயாஸ் தியரியைப் போல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
3) வேட்பாளர் அல்லது அவருக்காக கட்சி செலவு செய்வது
இரண்டுமே ஆபத்து. செலவு செய்யும் வேட்பாளர், போட்ட பணத்தை `எடுக்கிறார்`. அப்படி தவறு செய்ய ஆரம்பிப்பவர், பின்னர் ருசி கண்ட பூனையாகி, புகுந்து விளையாட ஆரம்பிக்கிறார்.
அல்லது வேட்பாளருக்காக கட்சி தலைமை செலவு செய்தால், இங்கே `கர்ணன் தியரி` அமலுக்கு வருகிறது. மகாபாரதத்தில் கர்ணனின் விசுவாசம் போற்றப்படுகிறது. இது காவியத்தில் மட்டுமில்லை நிஜத்திலும் நாம் எல்லோரும் அப்படித்தான். நமக்கு யாராவது உதவி செய்தால் நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டவராகிவிடுகிறோம்.
நம்மை தூக்கிவிட்டவர் ஏதாவது தவறு செயும்போது, அதை கண்டிக்க முடியாத நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம். ஓன்று அவருக்கு விசுவாசமாக இருப்போம். அல்லது தர்மசங்கடத்தில் மவுனமாகிவிடுவோம். இதுதான் பெரும்பாலும் நடக்கும். எனவே ஒரு கட்சித் தலைமை நல்ல வேட்பாளரையே நிறுத்தினாலும், அவருக்காக கட்சி செலவு செய்யும்பட்சத்தில், அந்த வேட்பாளருடைய சுதந்திரம் பறிபோய் விடுகிறது. இப்படிப்பட்ட நல்ல வேட்பாளர்களால் எந்த நன்மையையும் கிடையாது.
போணியாகாத ஒரு மாற்று
இதற்கும் ஒரு மாற்றை உருவாக்கினார்கள். தொழில் அதிபர்கள் ஒரு நிதியம் உருவாக்கி அதில் சேர்ந்த பணத்தை கட்சிகளுக்கு கொடுப்பது என்று ஒரு நடைமுறை வந்தது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.
அவர்கள் கொடுத்தது யானைக்கு சோளப்பொறி என்ற வகையில் இருந்திருக்கலாம். அதைவிட இது சில அரசியல் கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளி வர்க்கத்தை எப்போது எதிர்ப்பவை. வேறு சில கட்சிகளுக்கும் சில சமயம் அரசியல் ரீதியாக தொழில் அதிபர்களை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம். இந்த நிலையில் அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்குவதில் இவர்களுக்கு தர்மசங்கடம். டாட்டா நிறுவனம் கொடுத்த நிதியை கம்யூனிஸ்ட்களும், மம்தா பானர்ஜியும் வாங்க மறுத்ததாக நினைவு.
சரி, எவ்வளவு தரலாம்?
கணிப்பது சிரமம். இப்போது தேர்தல் செலவு என்பது திருமண செலவை போல் ஆகிவிட்டது. அவரவர் தகுதி மற்றும் பந்தாவை பொறுத்து அது செய்யப்படுகிறது. ஆனால் குறைந்தபட்ச சாத்திய செலவு என ஒரு தொகையை கணிக்கலாமே. அந்த வகையில் ஒரு தொகுதிக்கு ஒரு கோடி என 234 கோடி ஒதுக்கலாம். அதை 5 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு பெற்றவர்களுக்கு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிடலாம்.
இரண்டு கழகங்களும் இலவசம் என்ற பெயரில் கொடுக்கும் பொருட்களுக்காக செலவிடப்படும் தொகையே எங்கேயோ போகும். அப்படி இருக்கையில் இது ஒன்றும் பெரிய செலவல்ல.
இது தேர்தல் கால செலவு மட்டுமே. ஒரு கட்சியை நிர்வாக ரீதியாக தொடர்ந்து நடத்தவும் செலவாகும். எனவே இந்த இரண்டில் ஒன்றையாவது அரசு ஏற்கலாம்.
இதன் நேரடி லாபம் என்ன?
அரசு நிதி உதவி செய்யும் பட்சத்தில், கட்சிகள் வேட்பாளரின் தகுதியை மட்டும் பார்க்கும். செலவு செய்வாரா என்ற கேள்வி எழாது. ஒருவேளை பிரதான கட்சிகள் பணபலம் பொருந்திய வேட்பாளர்களையே நிறுத்தினாலும், மற்ற கட்சிகள் இந்த அரசு நிதி உதவியுடன், கொஞ்சம் சுயபலத்துடனும் நல்ல வேட்பாளர்களை நிறுத்தலாம். இது மக்களுக்கு ஒரு மாற்றத்துக்கான வாய்ப்பை கொடுக்கும். பெரிய கட்சிகளுக்கு ஒரு நிர்பந்தத்தையும் உருவாக்கும்.
இதுமட்டும் நடந்துவிட்டால் ஊழல் குறைந்துவிடுமா?
இப்போதைக்கு இப்படி ஒரு அபத்தமான அமைப்பை வைத்துக் கொண்டு அப்படி ஆசைப்படுவது பேராசை. ஆனால் இது நடந்தால் நிச்சயம் அது சாத்தியமான ஆசையாகிவிடும்.
2 comments:
ayyaa , pathivu mikanandraaha ullathu.
" keyas " theory endraal enna?
@ABUBAKKAR K M
எங்கோ நடக்கும் ஒரு சம்பவம் வேறு ஒரு இடத்தில் சில விளைவுகளை ஏற்படுத்தும்.
சிறையில் ஒருவர் எஸ் டி டி பூத் நடத்தி வந்தார். ஒரு நாள் மாட்டிக் கொண்டார். தவறு செய்தவர் அவர். ஆனால் அவர் மட்டுமின்றி , புது (சிறிய கேஸ்) ஆட்களான எங்களையும் வேறு பிளாக்குக்கு மாற்றினார்கள். அதாவது புதுக் கைதிகள் செலவு செய்ய தயாராய் இருப்பதால்தான் இவர்கள் போன் வியாபாரம் செய்கிறார்களாம். எனவே புதுக் கைதிகளே அந்த பிளாக்கில் இருக்கக் கூடாது என மாற்றிவிட்டார்கள். அதாவது தவறு செய்தவர் ஒருத்தர். தண்டனையோ தவறு செய்யாத எங்களுக்கும். இதுதான் கேயாஸ் தியரி.
Post a Comment