!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, November 27, 2020

1ஜி vs 2ஜி



நான் போடும் அரசியல் கணக்குகள் சரியாக பலிப்பதில்லை, இருந்தாலும் நம்மாலும் சும்மா இருக்க முடியவில்லை. தினம் சில விஷயங்கள் அதாவது அரசியல் சூழ்நிலைகளை கவனிக்கும்போது, அடடா இது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். இது அந்த வகை.

இந்த முறை திமுக காங்கிரசுக்கு தொகுதிகளை குறைத்து ஒதுக்கும் என்று ஒரு செய்தி. காங்கிரசுக்கு மேலே கீழே என எங்கேயும் கவர்ச்சியான, உறுதியான தலைமை இல்லாததால் அவர்களின் வெற்றி வாய்ப்பு குறையும். அவர்களுக்கு கூடுதலாக இடம் கொடுத்தாலும், அதில் கால்வாசி கூட அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள், அது இந்த கூட்டணியை பலவீனப்படுத்தும் என நக்கீரனில் ஒரு கட்டுரை.

பிஹாரில் காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் அங்கே கதை மாறி இருக்கும். அதே கதை தமிழகத்திலும் நடக்கலாம். எனவே நானும் இதை வழிமொழிகிறேன்.

ஆனால் இங்கே இன்னொரு மிகப்பெரிய கணக்கு இருக்கிறது அதை ஸ்டாலின் கவனிக்கவில்லை. தமிழகத்தில் வாக்குகளை சேகரிப்பது மற்றும் வாக்குகளை `வாங்குவது`என இரண்டு விதமான அரசியல் வந்துவிட்டது. இதில் கண்ணுக்கு தெரியாத மற்ற மோசடிகள் வேறு.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஊழல் செய்வதை பற்றியோ, அதைப்பற்றிய செய்தி வருவதை பற்றியோ யாருக்கும் பயம் கிடையாது. தேர்தல் மோசடிகளும் அதே கதைதான். இந்த இரண்டு விஷயத்தையும் திமுக ஆரம்பித்து வைத்தாலும், அவர்களின் குட்டி (அதிமுக) பல மடங்கு வேகமாக போய் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் காங்கிரசை விட பிஜேபிக்கு ஓட்டு வங்கி குறைவு. இருந்தாலும் அவர்களிடம் தற்போது அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் பலமே தனி. அதை உணர்ந்ததால் எடப்பாடி இருக்கிறார், மேலும் இருக்கக்கூடும்.

ஆனால் பிஜேபிக்கு அதிமுக மீது தனிப்பற்று இருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு பார்லிமென்டில் மெஜாரிட்டி இருந்தாலும் ராஜ்யசபா என்பது இப்படியும் அப்படியும் இருப்பதால் அது மத்தியில் ஆட்சியில் இருக்கும் எல்லா அரசுகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது.  அங்கே பல சட்டங்களை நிறைவேற்ற இப்படி மாநிலங்களில் ஒரு துணை தேவை. அது யாராக இருந்தாலும் சரி.

இங்கேதான் காங்கிரஸ் திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. அவர்களை முன்பே கழட்டிவிட்டு, எதிர்காலத்தில் நாங்களும் தயார் என்ற சிக்னலை பிஜேபிக்கு கொடுத்திருந்தால், அது வேறு சில கணக்குகளில் உதவியாக இருந்திருக்கும்.

உதாரணத்திற்கு அதிமுகவிற்கு திமுகதான் எதிரி. எனவே இவர்களை தோற்கடிக்க அனைத்து தில்லாலங்கடி வேலையும் அதிமுக செய்யும். இங்கே பிஜேபிக்கு அந்த நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் யார் ஜெயித்தாலும்  (வழக்குகளின் உதவியோடு) நாளை  நம் பக்கம் இருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தால் அனாவசியமாக அதிமுகவின் முறைகேடுகளை ஆதரிக்க வேண்டியதில்லை.

தற்போது காங்கிரஸ் திமுகவுடன் இருப்பதால், அது பிஜேபியின் ஜென்ம வைரியாகவும் இருப்பதால், இவர்கள் ஜெயித்தால் கூட்டணி நிர்பந்தம் காரணமாக இவர்களும் ராஜ்யசபையில் எதிர் அணியில் இருப்பார்கள் என்பதால் பிஜேபியும் இந்த திமுக கூட்டணியை  ஸாரி, அவர்களின் பார்வையில், காங்கிரஸ் கூட்டணியை  ஜெயிக்கவிடாது. இதற்காக அதிமுகவின் அனைத்து முறைகேடுகளை கண்டுகொள்ளாது. ஏற்கனவே அவர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்

பிஹாரில் நிதிஷ்குமார் ஓரளவு நேர்மையானவர் என பெயர் எடுத்தவர். அவர் தேர்தல் மோசடிகளில் ஈடுபடமாட்டார். தமிழ்நாட்டில் இவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். இவர்கள் எப்படி ஓட்டை வாங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே நேரத்தில் திமுக இரண்டு எதிரிகளோடு மோதுகிறது. அவர்கள் இருவருமே தங்கள் எதிரிகளை தலை எடுக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை ஸ்டாலின் தவிர்த்திருக்க வேண்டும் 

அதிலும் மோடி, எடப்பாடி போன்றவர்கள் 1ஜி வகையறா. இங்கே ஸ்டாலின் 2ஜி என்றால் ராகுல் காந்தி 4ஜி. அவர்களிடம் இவர்களின் மோதல் எடுபடுமா?

வரலாற்றில் முதல் தலைமுறை வெற்றியாளர்கள் என்று உண்டு. அந்த வெற்றி பெற்ற மனிதர் எந்த பின்புலமும் இல்லாமல் வந்து வெற்றிகொடி நாட்டியிருப்பார். கபில்தேவ், கவாஸ்கர், அமிதாப் பச்சன், ரஜினி என எந்த துறை எடுத்தாலும் இப்படி பலர் இருப்பார்கள்.

இவர்கள்தான் திறமைசாலிகளாச்சே அந்த திறமையை அப்படியே தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே?  

அவர்கள் அனுபவங்கள் மூலம் அறிவை பெற்றவர்கள். இந்த வாரிசுகள், உயில் வழியாக அவர்களின் சொத்து மற்றும் அறிவு நமக்கு வந்துவிடும் என நினைப்பவர்கள். எனவே இந்த 1ஜி  களுடன் இவர்கள் மோதி ஜெயிப்பது சிரமம்தான்.

Thursday, March 26, 2020

கோரோனோ



நம் நாட்டு நிர்வாகிகளை என்னவென்று சொல்ல, ஒரு பக்கம் பால், மளிகை கடை திறந்திருக்கும் என்று அறிவிப்பு. இன்னொரு பக்கம் `யாரும் வெளியே போககூடாது` என்று மிரட்டல். ஊர் சுத்த நினைப்பவர்கள் இதில் எதாவது ஒரு காரணத்தை சொன்னால் போதும். அல்லது நிஜமாகவே பொருள் வாங்க போகிறவர்கள் போலீசிடம் உதை வாங்க வேண்டும். இப்போது நாம் என்ன செய்வது? 

அதே சமயம் ரேஷன் கடைகளில் பணமாம். அரிசி மற்றும் மற்ற இத்யாதிகளும் இலவசமாகவே கிடைக்குமாம்! கொடுமை. நம்ம ஆட்கள் இலவசம் என்றால் `கோரோனோ ஒரு 5 கிலோ கொடுங்கள்` என்று கேட்டு வாங்குபவர்கள் ஆயிற்றே? இனி அங்கே கூட்டம் கூடும். அங்கே யாருக்காவது கோரோனோ இருந்தால் திண்டாட்டம்தான். 

இதில் தமிழக அரசின் செயல் படுமுட்டாள்தனம். வீடு தேடி போய் டோக்கன் கொடுப்பார்களாம். அப்படியே எந்த தேதியில் உங்களுக்கு ரேஷன் கடையில் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்களாம். அப்போது போய் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். என்ன கொடுமை சரவணன் இது? 

வீடு போய் தேடி டோக்கன் கொடுக்கும் நாய்கள் அதற்கு பதில் பணமே கொடுத்துவிடலாமே? எதற்கு இரண்டு வேலை? 

விஜய் மல்லையாவை நம்பி 5000 கோடி கொடுப்பவர்கள் உள்ளூர் செல்லையாவை நம்பி 1000-2000 கொடுக்க கூடாதா! பிராடு நடக்கும் என்று பயமா? சொல்லிவிடுங்கள் ஊழியர்களிடம். பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு, ஒரு மீட்டர் தூரத்தில் அந்த நபருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று. நாளை புகார் வந்தால் மாட்டிக் கொள்வார். 

இப்படி சிலர் வீடு தேடி போவதும், ஒரு ஏரியாவை சேர்ந்த 100 பேர் ரேஷன் கடைகளில் கூடுவதும், இதில் எது சிறந்தது? 

பாண்டிச்சேரி கதை வேறுவிதமாக இருக்கிறது. பணம் வங்கியில் போடப்படுமாம். ஏழை என்றாலே பெரும்பாலும் ஏ டி எமில் பணம் எடுக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். வண்டி இல்லாதவர்களாக இருப்பார்கள். வங்கிக்கு எப்படி போவது? சிக்கல்தான். 

ரேஷன் பொருட்கள் கதையும் இப்படித்தான். நாம் போகும்போது `இன்று உங்க ஏரியா இன்று இல்லை` என்று பதில் வரும். சக்கரை இருக்கும், அரிசி இருக்காது. இதை கண்டுபிடித்து எல்லாவற்றையும் வாங்குவதற்கு நாம் 10 முறை போக வேண்டும். ஏழைகள் மட்டும் ரேஷன் வாங்கும்போதே அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். இனி எல்லோரும் வருவார்கள் என்றால்? இதில் பந்த் எங்கே? 

பிரச்சினை என்னவென்றால் இக்கட்டான நேரங்களில் செயல்படும் முறை வித்தியாசமாக, அது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்காமல் இருக்க வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாது. 

தனியார்காரன், `உனக்கு என்ன வேண்டும் என்று சொல், நான் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்` என்று சொல்ல, அரசோ `உனக்கு எது வேண்டுமானாலும் என்னை தேடி வந்து என் காலில் விழு` என்று சொல்கிறது. 

இங்கே அகமதாபாத்தில் பல வியாபாரம் மொபைலில் நடக்கிறது. ஆட்டோவை கடையாக மாற்றி மெக்கானிக் ஷாப் /சோடா கடை /பங்க் கடை என பலவிதம். மினி வேன்களில் ஐஸ்கிரீம் கடை கூட. இந்த கடைகளை வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு ஒட்டிக்கொண்டு போகலாம். அல்லது அங்கேயே விட்டுவிட்டும் போகலாம். 

இப்போதைக்கு நமக்கு தேவை பால்/மளிகை மற்றும் ATM சேவைதான். இந்த கான்செப்டை இங்கே புகுத்தி இவற்றை மொபைல் கடையாக மாற்றி ஒவ்வொரு ஏரியாவிலும் தினம் 1மணி நேரம் இந்த சேவைகள் கிடைக்கும் என்று சொல்லி கடையை அவர்கள் ஏரியாவிலேயே நிறுத்திவிட வேண்டியதுதான். பிரச்சினை தீர்ந்தது.

மளிகை கடை கூட நிறைய இருக்கும். ஒரு மணி நேரம் அவர்களுக்கு அனுமதி தரலாம். மற்ற இரண்டுக்கும் இது அவசியம். இல்லையென்றால் இந்த பந்தின் அர்த்தமே நிறைவேறாது. 




Thursday, March 5, 2020

LOST AND FOUND



இங்கே A T M ல் பணம் எடுக்கப்போனேன். அங்கே ஏற்கனவ மிஷினில் ஒரு கார்ட் இருந்தது. யாரோ எடுக்க மறந்துவிட்டார்கள். இந்த A T Mக்கு செக்கூரிட்டி யாரும் இல்லை. நான் அக்கறையாக அதை பக்கத்தில் இருந்த மெடிக்கலில் கொடுக்க... அவர் என்னிடம் மேலும் 20 கார்ட்டுகளை எடுத்துக் காட்டினார். `இப்படித்தான் கொடுத்துட்டு போறாங்க, ஆனால் யாரும் வந்து கேட்பதில்லை` என்றார்.

உண்மையில் இதை மறந்தவர், வேறு எங்கோ தேடிக்கொண்டிருப்பார். இந்த கடைக்காரருக்கோ அல்லது எனக்கோ இதை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. S B I கார்டு. முகேஷ் அம்பானினு பேர் போட்டிருந்தா நான் லீவு போட்டுட்டு மும்பை போயிருப்பேன். ஆனா நீரவ் குமார்னு பேர்.

அந்த இருபது கார்டுகளை பார்த்ததும், நானே கொடுத்துவிடுகிறேன் என்று கார்டை நானே வைத்துக் கொண்டேன். பல கோடிகளை கொண்ட பெட்டி ஆனால்  சாவி என்னிடம் இல்லை என்றால் எப்படி இருக்கும், அப்படி இருக்கிறது என் நிலைமை. அருகிலுள்ள கிளையில் கொடுத்துவிடலாம் என்று இருக்கிறேன். ஒரு வேளை இந்த நபர் வேறு ஊராக இருந்தால், அவர் அங்கே புகார் செய்வார். கார்ட்  இந்த கிளையில். அவருக்கு கிடைக்குமா? பதில் இல்லை.

பல வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில நாவல்.படித்தேன்.  60-70 களில் எழுதப்பட்டது. அதில் ஒரு தகவல். lost and found என்று துறை அல்லது சேவை மையம். எந்த நாடு என்பது நினைவில்லை. வழியில் ஏதாவது பொருள் கிடைத்தால் அதை இங்கே வந்து கொடுத்துவிட வேண்டும். தொலைத்தவரும் அவர் தேடியது போக, இங்கே வந்தும் கேட்டுப்பார்க்கலாம். யாரவது கொடுத்திருந்தால் கிடைத்துவிடும். 

உருப்படியான ஐடியா. வழக்கம்போல் இது நம் நாட்டு மக்களுக்கு வராது. வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்.

இப்போது இணையம் வந்து உலகத்தை ரொம்பவே சுருக்கிவிட்டது. இனி தேடல் நம் கையில்தான். இப்போது கற்பனை செய்து பாருங்கள். இதற்கென்று ஒரு இணையம். நான் அதில் ATM CARD FOUND - Ahmadabad/ctm/axisbankatm/name-niravkumar-given nearby medical shop என்று மெசேஜ் போட்டுவிடலாம்.

தொலைத்தவர்கள் இந்த தளத்துக்கு வந்து அவர்கள் தொலைத்த ஏரியா அல்லது பொருள் டைப் செய்து தேடினால் கிடைக்கும் அளவுக்கு செய்யலாம்.

தொலைத்தவர் மறுநாள் கடைக்கு வந்து கேட்க,  அந்த கடைக்காரர் `ஒரு ஜென்டில்மேன் நேத்து இந்த கார்ட் கொடுத்தார், அப்படியே 100 ரூபாய் சர்விஸ் சார்ஜ் கேட்டார் என்று சொல்ல, அதற்கு இவர் `புதுசா கார்ட் வாங்கணும்னா பேங்க்காரன் 300 சார்ஜ் பண்ணுவான். நீங்க அந்த நல்ல மனுஷனுக்கு 150  ரூபாயே கொடுங்கன்னு` சொன்னா எப்படி இருக்கும்.

நானும் நல்லது செஞ்சா பணம் கிடைக்குதப்பான்னு என்னை சுத்தி இருக்கிற எல்லா மனுஷனையும் நல்லவனா மாத்திடுவேன். நாடும் வளம் பெறும்.

சரி உண்மையிலேயே அப்படி ஒரு தளம் இருக்குதான்னு நெட்ல பார்த்தா...இணையத்தில் இதுபோல் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் பதிவு செய்ய சொல்கிறார்கள். ஒரு டேக் வாங்கி நாம அதுல இணைச்சுக்கணுமாம். இணைச்சா அது தொலைந்த இடத்தை காட்டுமாம். அப்படியே எடுத்த மனுஷனுக்கு புத்திமதி சொல்லி அதை திருப்பி கொடுக்க சொல்லுமாம்.😃😃😃

இதுக்கு கட்டணம் 300-1700 (இந்தியாவில்). இந்த காசுக்கு புது A T M வாங்கிடலாம். அது சரி நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ பொருட்களை தொலைக்கிறோம். எல்லாவற்றுக்குமா டேக்?  அவர்கள் வியாபாரிகள் அதற்கு தகுந்தாற்போல் யோசிக்கிறார்கள். சராசரி மனிதர்களுக்கு எளிமையான தீர்வு தேவை.

Sunday, March 1, 2020

கடவுள் இருக்கிறார்

கடவுள் இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை, இங்கே ஒருவர் உறுதியாக சொல்கிறார்.

இனி இந்த வெற்றி பெற்ற மனிதரின் கதைக்குள் போவோம். இங்கே C T M என்ற பகுதியில் ஹைவேயில் ஒரு சின்ன நடைபாதை கோவில். மெலடி மாதா என்று பெயர். இதன் வரலாறு தெரியவில்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் போல் சமகாலத்தில் தீடீர் பிரபலம் ஆகியிருக்கிறார்.

விசாரித்ததில் மூலம் தெரியவில்லை. பூஜாரி எல்லாம் கிடையாது. நிர்வகிக்கிறார் ஒருவர். காலை மாலை இரண்டுவேளை பூஜை மட்டும் போலிருக்கிறது. மற்றநேரங்களில் நீங்கள் மாதாவிடம் நேரிடையாக பேசவேண்டும்.

கோவில் என்றால் இதர பொருட்கள் விற்க வேண்டுமல்லவா, அந்த கடையும் இவருடையதே. நாம் தேங்காய் உடைப்போம், இங்கே தேங்காய் வாங்கி அதை அப்படியே எரிக்கிறார்கள். அதன் மூலம் திருஷ்டி போகுமாம். அந்த விற்பனையும் இவரே.

பக்தர்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்பிக்கை வருகிறது. ஆனால் நமக்கு காங்கிரசையும் பிஜேபியையும் பார்த்தபிறகு கெஜ்ரிவால் கூட அற்புதமான மனிதராக தோன்றுவார். இது அந்த வகையாக இருக்க கூடும்.

ஒரு காலத்தில் சைக்கிளில் வந்த நிர்வாகி, தற்போது புல்லட் வைத்திருக்கிறார். செழுமை நிறையவே தெரிகிறது. இனி சிலர் என் கணவர்/பையன் கோவில் வைத்திருக்கிறார், நல்ல வருமானம் என்று  பெருமைபட்டுக் கொள்ளும் காலமும் வரும்.

பக்தர்களுக்கு கடவுள் இருக்கிறாரரோ இல்லையோ, இவரை பொறுத்த வரையில் கடவுள் இருக்கிறார். அதை இவர் அடித்து சொல்வார். கடவுளே காப்பாத்து என்று நாம் இங்கே புலம்பி கொண்டிருக்க, அவர் கடவுளையே வியாபாரமாக்கி தன்னை காப்பாற்றிக் கொள்கிறார். இவரல்லவா வெற்றி பெற்ற மனிதர்.

இந்த மாதாவை பற்றி ஒரு பதிவு எழுதுவோம் என நினைத்து அந்த வழியாக போனேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் நடக்கும்போதே உள்ளே எட்டி பார்த்தேன். அப்படி பார்த்துக்கொண்டே நடக்கும்போது ஒருவர் என் கையில் ஸ்வீட் (பிரசாதம்)  வைத்துவிட்டார். அட ஆண்டவா.... கோவிலுக்கு உள்ளே போகவேண்டும் என நினைத்ததற்கே ஸ்வீட்டா, உள்ளே போயிருந்தால்... நினைக்கவே சுகமாக இருந்தது.

ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை.

கடலூரில் பிரச்சினைகள் தலைதூக்கி எனக்கு மன அழுத்தம் அதிகமானபோது, கடவுள் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அப்போது அருகிலிருந்த பாடலீஸ்வரரிடம் சரணடைந்தேன். சில வருடங்கள் அவரையே சுற்றி வர, தீடிரென்று மின்னலடித்தது. ஒரு காஜல் அகர்வால் என்  கடையை தாண்டிப்போனார். 

வேலை இல்லாத நேரத்தில் அந்த தேவதை எங்கே போகிறார் என நோட்டம் விட்டேன். அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி போவதை கண்டேன். அதன்பிறகுதான் எனக்கு ஞானோதயம் வந்தது. கடவுள் ஒருவரே, பாடலீஸ்வரரும் அவரே ஆஞ்சநேயரும் அவரே என்று புரிந்து கொண்டு ரூட்டை இங்கே மாற்றினேன்.

இங்கே பாடலீஸ்வரருக்கு கோவம், `ஒரு பெண்ணுக்காக என்னை மறந்தாயா` என்று. அந்த பக்கம் `நீ என்ன பார்க்க வரலைன்னு தெரியும் என்று ஆஞ்சநேயர். இருவரும் கைகொடுக்கவில்லை. கடைசியில் நான் ஜெயிலுக்கு போக வேண்டியதாயிற்று. அதுவும் தோல்வி.

இங்கே அகமதாபாத் வந்த பிறகு பல வருடங்களாக நாகர்வேல் அனுமானிடம் தஞ்சம். அவரும் கவனிப்பதுபோல் தெரியவில்லை. இருந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு என ஃ பைலை அவர் எடுக்கும் நேரத்தில் நான் இப்படி மெலடிமாதா பக்கம் திரும்பினால் அவருக்கு கோபம் வருமா?

இது அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாகிவிடும்.

ஒரே குழப்பம், என்ன செய்வது?

Tuesday, February 25, 2020

தமிழ்மணம் - மீண்டும் அதே தவறு


சில புதிய தமிழ் திரட்டிகள் வருவது போல் தெரிகிறது. அதில் ஒன்றை கவனித்தேன்.

தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவர்களின் வாழ்க்கையில்  மறக்க முடியாத ஓன்று. இது எளிமையாக இருந்தது மட்டுமின்றி நீண்டகாலம் தாக்குபிடித்ததுதும் கூட. ஆனால்  லாபமற்ற சேவைகள் கடைசியில் காணாமல் போவதுபோல் இதற்கும் முடிவு வந்தது.

பதிவர்கள் கூட லாபம்/அங்கீகாரம் என எதிர்பார்த்துதான் வருகிறார்கள். அவர்கள் எண்ணங்கள் நிறைவேறி அல்லது நிறைவேறாமல் தங்களுடைய பாதைகளை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்மணம் நின்றபோது அது வலித்தது.

புதிய எழுத்தாளர்களுக்கு தமிழ்மணம் ஒரு அருமையான தளம் அமைத்து கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தையும், செம்மைப்படுத்திக் கொள்ள வாய்ப்பையும் அளித்திருந்தது. அது தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்பு.

குறைந்த பட்சம், `இதுதான் பிரச்சினை..இதை சமாளித்து நடத்த விருப்பமுள்ளவர்கள் நடத்தலாம்` என்று மற்றவர்களுக்கு வழி விட்டிருக்கலாம். அதையும் இவர்கள் செய்யவில்லை. கடைசியில் இவர்களும் ஒரு `அ அ` வாக இருக்கிறார்கள்.

தற்போது புதிதாய் முயற்சி செய்யும் நண்பர்களும் அதே தவறைதான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. வாழ்த்துவோம், வரவேற்போம். ஆனால் நிர்வாக செலவுக்கு வழி?

இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதில் பணம் வசூலிக்கும் முறைக்கும் ஏதாவது சுலபமானதாக ஓன்று இருக்கும். அதை இவர்கள் முயற்சிக்க வேண்டும்.

பதிவுகளை பதிய விரும்புபவர்கள்,ரூ 100 க்கு ரீசார்ஜ் செய்தால் 10 பதிவுகள் பதியலாம்.ரூ 1000 வருடம் கொடுத்தால் தினம் 2ஜிபி.. சாரி தினம் 2 பதிவு போடலாம் என்று பணம் கேட்கலாம். அநேகமாக பதிவர்கள் கொடுப்பார்கள்.

வாசிப்பவர்களுக்கு மாதம் ரூ 35 அல்லது 49 என கட்டணம் வைக்கலாம். அமேசான் 10 ரூபாய்க்கு படிக்க புக் தர்றான். பத்தே போதும் என்றால் paytm நம்பர் கொடுத்து வசூல் பண்ணலாம். வந்தவரை லாபம். கடந்த காலங்களில் பதிவர் கூட்டம் நடந்த போது இதை பற்றி விவாதித்திருக்க வேண்டும்

இன்னொரு வழியும் இருக்கிறது. ஒரு காலத்தில் லைப்ரரியில் புத்தகம் படிக்கும்போது சில புத்தகங்கள் இருக்கும். விலை போட்டிருக்கும். கடைகளில் கிடைக்காது. யாராவது ஒரு புரவலர்/ நிறுவனம் பணம் கொடுக்கும். அவர்களின் விளம்பரம் மட்டும் அந்த புத்தகங்களில் வரும்.

அதேபோல் இந்த திரட்டிகள் நிறுவனங்களை அணுகலாம். அவர்கள் அளிக்கும் நிதிக்கு பதிலாக அவர்களின் விளம்பரம் பதிவுகளில் வெளியிடப்படும் என கேன்வாஸ் செய்யலாம். அது html கோடாக இல்லாமல் இமேஜாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு போராட்டத்தில் பெரும்பாலான பதிவர்கள் இப்படி போட்டோ போட்டிருக்கிறார்கள்.

இந்த முறை ஒரு மாற்றமாக, அந்த இமேஜை பதிவுக்குள்ளேயே இணைப்போம் என்றும், கூடவே, பதிவை எழுதுபவர்கள், `இந்த வாரம் இந்த பதிவை உங்களுக்கு வழங்குவது சுடர்மணி பனியன் ஜட்டிகள்..ஒரு முறை அணிந்து பாருங்கள், உலகத்தையே மறந்து விடுவீர்கள்.` (வேறு ஸ்பான்சர் இருந்தால் அவர்களையும் சேர்த்து) என்று எழுதிவிட்டுத்தான் பதிவை தொடங்க வேண்டும்  என்று பதிவர்களுக்கு சொல்லிவிட வேண்டும்.

அப்படியும் யாரும் மசியவில்லையா, இன்னொருவர் இருக்கிறார். சரவணா ஸ்டோர் ஓனர். விளம்பரங்களில் நடித்தவர் இப்போது சினிமாவிலும் என்று கேள்வி. அவரிடம் போய் `வெளியாகும் உங்களின் அத்தனை படத்திற்கும் எங்கள் பதிவர்கள் அற்புதமான பாசிட்டிவ் விமர்சனம் எழுதுவார்கள். அப்படி எழுதாதவர்களை நாங்கள் எங்கள் திரட்டியிலிருந்தே தூக்கி விடுவோம் என்று மிரட்டியிருக்கிறோம் என்று சொல்லுங்கள். மனிதர் பணத்தை பையில் போட்டு தருவார்.

நிறைய வழி இருக்கிறது.

இங்கே நகைசுவைக்காக சில விஷயங்களை சொல்லி இருந்தாலும் திரட்டி நடத்த விரும்புபவர்கள், அல்லது பதிவர் சங்கம் நடத்துபவர்கள் இந்த வாய்ப்புகளை முயற்சிக்கலாம்.

கடைசியாக, 

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தது போல், ஐடியா கொடுத்த என்னிடமே யாரும் பணம் கேட்க கூடாது. எனக்கு மட்டும் லைஃ டைம் உறுப்பினர் வசதியை இலவசமாய் கொடுத்துவிட வேண்டும்.                                                

Monday, February 24, 2020

அற்புதமான அறிவாளிகள்- பகுதி 2



சமீபகாலமாக கவனித்த சில `அறிவாளிகள்` சம்பவம்.

இது வோடபோன் கதை. திவாலாகப் போகிறதாம். எவ்வளவோ கோடி கட்ட வேண்டுமாம்! பக்கத்தில் நிறைய சைபர் இருப்பதால் மயக்கம் வருகிறது.

ஒரு மாணவன் பெயிலானால் அவனை மக்கு என்று சொல்லலாம். பெரும்பாலான மாணவர்கள் பெயில் என்றால்? சந்தைக்கு வந்த 90 சதவிகித மொபைல் இன்று காணாமல் போய்விட்டன. இங்கே எங்கேயோ அரசின் கொள்கை கணக்கு தப்பு என்றுதான் நினைக்கிறேன்.

சரி, ஒரு வேளை அவ்வளவு பணம் இல்லை என்றால் வோடபோன் என்ன செய்யும்? அவங்க நாட்டுக்கு போய் சின்னக்கவுண்டர் சுகன்யா செஞ்ச மாதிரி எல்லாருக்கும் சாப்பாடு போட்டு பிச்சை எடுத்து கடனை அடைப்பங்களா! நிச்சயம் கிடையாது. மஞ்ச கடுதாசி கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ல போட்டுகுனு போய்க்கினே இருப்பான் வோடபோன்காரன் . இதுதான் நடக்கப்போவுது.

வோடோபோனோ அல்லது ஆதித்ய பிர்லாவோ கவர்ன்மென்டை ஏமாற்றுபவர்களாக அல்லது நிர்வாக திறமை இல்லாதவர்களாகவோ தெரியவில்லை. அதற்கு பதிலா ஏதாவது ஸ்கீம் கொடுத்து அவர்களை காப்பாற்றலாம்.

இது தொடர்பா எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் ஒரு செய்தி படித்தேன்.

It (vodafone) has said it cannot immediately pay the $3.9 billion it owes and its ability to survive was contingent on the government agreeing a flexible payment schedule.

With 13,000 direct employees and loans from banks of about $3.8 billion,

கவர்மென்டுக்கே பணம் கட்ட முடியலை, இதுல இந்த லோன் என்னவாகும்?

இன்னொரு விஜய் மல்லையா?

கண்ணா உனக்கு இரண்டு லட்டு 

இனி உள்ளூர் அறிவாளிகள் கதை

இங்கே ஒரு நண்பர் வீட்டுக்கு பைப் மூலம் கேஸ் வாங்குகிறார். எவ்வளவு என்று கேட்டால் இரண்டு மாதத்துக்கு 200-300 ஆகும் என்கிறார். நம்ப முடியாமல் கேட்டால், பில் காட்டுகிறேன் என்கிறார். உண்மையாகத்தான் இருக்கக்கூடும். இருப்பினும் பலர் சந்தேகத்தோடு வாங்குவதில்லை.

இப்படி பைப் மூலம் கேஸ் கொடுக்க ஆரம்பித்தால், அட்லீஸ்ட் அரை பர்சென்ட் டிராபிக் குறையும். இடைநிலை கமிஷன் பெருமளவு தவிர்க்கப்படுவதால் விலையும்  கணிசமாக குறையும்.

ஆனால் இதை மக்களிடம் முறையாக மார்க்கெட் செய்வதில்லை. இது வாங்கிவிட்டால் மானிய விலை கேஸ் நின்றுவிடும் என்று சிலருக்கு பயம்.

இதில் இன்னொரு காமெடியையும் நான் கேள்விப்பட்டேன். ஒருவர் பைப்லைன் கேஸ் வாங்குகிறார்.அதேசமயம் எல்பிஜி கேசும் வாங்கி அதையும் பிளாக்கில் விற்கிறார்.

இரண்டும் கொடுப்பது ஒருவகை அரைவேக்காட்டுத்தனம். இன்னொருபக்கம் மக்களுக்கு இது தெரியாமல் பைப் கேஸ் வாங்குவது இல்லை.  இது எப்படி இருக்கு?

என்னதான் செய்வது?

சமீபத்தில் ஒரு (அகமதாபாத்) விஷேஷம். உள்ளூர் டைப் சாப்பாடு. அதாவது ஒரு தட்டை எடுத்தால் அதுதான் கணக்கு. Rs.150-200

நம் தமிழ் விசேஷங்களில் இலை போட்டால் அனைத்தையும் வைத்துவிடுவார்கள். பல சமயம் குழந்தைகள் கூட தனியாக என ஆடம் பிடிக்கும். இதில் பல விதங்களில் சாப்பாடு விரயமாகும். இந்த பஃபே சிஸ்டம் இதற்கு சரியான மாற்று என நினைத்தால் அங்கேயும் தலைவலி.

அதே மனிதர்கள். அதேபோல் குழந்தைகள். வீட்டில் `கொஞ்சமா சாப்பிட்டு அப்புறம் வைச்சிக்கோ` என்று இருப்பவர்கள், இங்கே அடுத்தவன் பணம்தானே என்று தாராளமாக இருக்கிறார்கள். அந்த தட்டுகளில் மீந்த உணவுகளை பார்க்கும்போது இதற்கு என்னதான் தீர்வு என்றே புரியவில்லை?                           


Tuesday, February 18, 2020

அற்புதமான அறிவாளிகள்


சமீபத்தில் சில செய்திகளை படித்தபோது இந்தியா எப்பேற்பட்ட அற்புதமான அறிவாளிகளை கொண்ட நாடு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

இது அதில் ஓன்று.  இந்தியா சீனாவிலிருந்து இந்தியர்களை விசேஷ விமானம் மூலம் அழைத்து வந்திருக்கிறது.  நல்லதுதான். ஆனால் ஒரு விஷயம்  இடித்தது. நான் இது தொடர்பாக இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது  இன்னொரு செய்தியையும் கவனித்தேன். வழக்கமாக எங்கேயும் நடப்பதுதான். அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை பதுங்குவது.

அதாவது கோரோனோ பீதியால் நோய் பரவிய அந்த சில வாரங்களில் எல்லோரும் மாஸ்க் வேண்டும் என நாயாய் அலைந்திருக்கிறார்கள்.

இங்கேயிருந்து காலியாக போன விமானத்தில் நம்மிடம் இருந்த மாஸ்குகளை முடிந்தவரை கொண்டுபோய் கொடுத்திருக்கலாம். ஆனால் நம் ஆட்கள் செய்யவில்லை. நான்கு நாள் கழித்து, நம் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார். `இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். தேவைப்பட்ட உதவிகளை செய்கிறோம்` என்று கடிதமும் எழுதுகிறார். உதவி என்பது இப்படி கேட்டு செய்வதா ?

சீனா இந்தியாவைவிட பலமானதுதான். இந்த உதவியும் சாதாரமானதுதான். இந்த நேரத்தில் அவர்களுக்கு இது அவசியம் தேவை. கொண்டுபோய் கொடுத்திருக்கலாம்.

நமது நண்பர் ஒருவர் வேலையைவிட்டு நின்று விட்டார். முதலாளிக்கும் கோவம் வரும் என்பதை இவர் உணரவில்லை. தொழிலாளிக்கும் ரோஷம் உண்டு என்பதை முதலாளி உணரவில்லை. வேறு இடத்துக்கு வேலைக்குப்போன  சில மாதங்களிலேயே இவருடைய வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. புது முதலாளி இவரை பற்றி தெரியாததால் அவ்வளவாக உதவவில்லை. மருத்துவ செலவு கண் பிதுங்கியது.

பழைய முதலாளி இதை கேள்விப்பட்டு வந்தார். நலம் விசாரித்தவர், அவரை தனியே அழைத்துப்போய், சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் பாக்கட்டில் கொஞ்சம் பணத்தை வைத்து `செலவுக்கு வைத்துக்கொள்` என்று சொல்லிவிட்டார். இதை அவரால் மறுக்கமுடியாது.

இதுவே நாலுபேர் மத்தியில் `உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் சொல்` என்றால், இவர் கேட்டிருப்பாரா? அவரிடம் வேலை செய்யாத நிலையில் நிச்சயம் மறுத்திருப்பார். அது அவருக்கு கவுரவமாக இருந்திருக்கும். அவ்வளவுதான். (பின்னர் இவர் மீண்டும் அங்கேயே வேலைக்கு போய்விட்டார்.)

உதவி செய்யும் மனிதர்கள் இப்படித்தான். இவர்கள் கேட்டு செய்யமாட்டார்கள். அதுவும் நாலுபேர் மத்தியில் நிச்சயம் கேட்கமாட்டார்கள்.

ஆனால் நம்ம மோடிஜி எது செஞ்சாலும் நாலுபேர்  பார்க்கற மாதிரி செய்யறவர்.

இதே கதைதான் பாகிஸ்தானுக்கும், நம் ஆட்களை அழைத்து வந்தாகிவிட்டது. பாகிஸ்தான் அப்படி செய்யவில்லை. ஏதாவது காரணம் இருக்கலாம். சீனாவில் உள்ள  பாகிஸ்தானிகள் இணையத்தில் இதை குறிப்பிட்டு கதறும்போது மனது நெருடுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அனைத்து அண்டை நாடுகளையும் கேட்டதாம். அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இந்தியாவை ஜன்ம எதிரியாக பார்க்கும் பாகிஸ்தான் இந்திய உதவியை  ஏற்குமா?

இங்கே வார்த்தைகளும் நோக்கமும்தான் முக்கியம். `நாம இந்த வாரம் புல்லா காஷ்மீர்ல சண்டை போடுவோம், அது வேறே. இது மனித நேய உதவி. நாங்க அவங்களை அழைத்து வந்து, சரியானதும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுகிறோம்` என்று இம்ரான்கானிடம் பஞ்ச் டயலாக் பேசியிருக்கலாம்.

இந்த பக்கம், சீனாவிடம் `உனக்கு பேஷண்டுகளை கவனிக்கவே நேரம் பத்தாது. இதுல இவங்களை எப்படி கவனிப்பாய் ? எனவே விதிமுறைகளை பார்க்காமல் அனுப்பிவை` என்று  அங்கே  கொஞ்சம் செண்டிமெண்ட் காட்டியிருக்கலாம்.

சந்தேகம்தான். ஆனால் நாம் சிலருக்கு உதவ வேண்டும் என முயற்சித்தால் எதுவும் சாத்தியம். பெரும்பாலான உடைந்துபோன உறவுகள் இக்கட்டான நேரத்தில் உதவுவதன் மூலம் இணைந்திருக்கின்றன.
                   

Thursday, February 13, 2020

அதிர்ஷ்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்


அதிர்ஷ்டம். இதை சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலங்களில் தன்னம்பிக்கை நிறைய இருந்ததால் அதை மூட நம்பிக்கை என்று இருந்தேன். ஆனால்  அதன்பின் பல சூழ்நிலைகள் அதை நம்ப வைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் போதும். அப்போது லாட்டரி வியாபாரம். இது நம்பகமான துறை இல்லை என்பதால் இதை நம்பி எதுவும் செய்ய முடியாது.  நிச்சயமற்ற நிலைமை. நானும் டிபரஷன் மனநிலைக்கு வந்திருந்தேன். நமக்கே லாட்டரி விழுந்தால் செட்டில் ஆகிவிடலாம் என்று குறுக்குபுத்தியில் இருந்தேன். அப்போதெல்லாம் டிக்கெட் விற்காவிட்டால்  மதியம் 3 மணிக்குள் திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் பல சமயம் செய்வதில்லை. நானே வைத்து பார்ப்பேன். தினம் 500, 1000 நஷ்டம் வரும். இப்போது அதை நினைத்தால் கண்ணில்  ரத்தம் வருகிறது

இப்படி பல  நாட்கள்,மாதங்கள் நஷ்டங்களை  சந்தித்த பிறகு ஒரு நாள் இரவு 7 மணிக்கு 100 ரூபாய் அளவுக்கு டிக்கட் மீந்துவிட்டது. வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். இவர் தினம் வாங்குபவர் இல்லை. என்ன பண பிரச்சினையோ, `ஏதாவது லாட்டரி இருக்கா, அதுதான் என் பிரச்சினை தீர்க்கும்` என்று சொல்லி கேட்டார். 

அப்போது ஒரு தில்லுமுல்லு நடந்து கொண்டிருந்தது. லாட்டரி ரிசல்ட் மறுநாள்தான் பேப்பரில் வரும். சிலர் முன் கூட்டியே பரிசு விழுந்த நம்பரை மதியம் 4 மணிக்கே போன் மூலம் வாங்கிவிடுவார்கள். இதற்கென்று சிலர் இருந்தார்கள். பல கடைக்காரர்களுக்கு இது தெரியாது. பரிசு விழுந்த டிக்கட்களை இந்த திருட்டு கும்பல் கடைக்காரர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பிடித்த நம்பரை வாங்குவது போல் வாங்கிவிடுவார்கள்.

இது பின்னர் எங்களுக்கு தெரிய வந்ததால் 4 மணிக்கு மேல் டிக்கட் வாங்குபவர்களை கவனிப்போம். சந்தேகம் என்றால் விற்கவே மாட்டோம்.

இவர் அப்படிப்பட்டவர் இல்லை. நான் அப்போது இருந்த வெறுப்பில் `இருக்கு, ஆனா மொத்தமா வாங்கணும்..` என்று கண்டிஷன் போட்டேன். அத்துடன் அசல் வந்தால் போதும் என்று 30+10 பர்சென்ட் தள்ளுபடியெல்லாம் கொடுத்து அந்த 100 டிக்கட்டை 60 ரூபாய்க்குத்தான் அவரிடம் விற்றேன். விதி அப்போதே என்னை பார்த்து சிரித்திருக்கிறது. நான்தான் உணரவில்லை.

மறுநாள் அந்த லாட்டரியில் அவர் 60,000 பரிசு பெற்றார். 20 வருடத்துக்கு முன் பெரியதொகை. ஒரு வாரத்துக்கு சிவா புராணம்தான். அந்த சிவாவை (பாடலீஸ்வரர்) பார்த்துவிட்டு இந்த சிவாவை பார்த்தேன், கைமேல் பலன் என்று எனக்கு மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தார்.

எனக்கு தனியாக இதில் பாதி அல்லது கொஞ்சம் குறைவாக போனஸாக கிடைக்கும்.  ஆனால் அங்கேயும் விதி விளையாடியது. அப்போது  சில வியாபாரிகள் போனஸை மட்டும் தனியாக விற்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்தார்கள். அந்த வகையில் நான் போனஸை வேறு ஒருவரிடம் விற்க, அவர் `சிவா நீயும் நானும் ஷேர்`  என்று என்னையும் அதில் இழுத்திருந்தார். எனவே அந்த போனஸில் பாதி கிடைத்தது.  இல்லையென்றால் நான் அன்றே ஹார்ட் அட்டாக் வந்து செத்திருப்பேன். வலையுலகம் ஒரு பிரபல பதிவரை இழந்திருக்கும்.

அந்த பரிசு பெற்ற நபர் எனக்கு 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வாரத்துக்கு இலவச டீயூம்  வாங்கி கொடுத்தார். கூடவே `சிவா உன்னை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்` என்றும் சொன்னார்.

`நீங்களாவது இந்த ஜென்மத்துல மறக்க மாட்டீர்கள்,  நான் உங்களை அடுத்த ஜென்மத்துலேயும் மறக்கமாட்டேன்` என்று பல்லை கடித்தேன். எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் இது ஓன்று. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்  

அரவிந்த் கெஜ்ரிவால்

அதே கதைதான். பொருளாதார மந்தம், ஜி எஸ் டி தலைவலிகள் பத்தாது என்று என் ஆர் சி மற்றும் சி ஏ  ஏ பிரச்சினையும் சேர்ந்து கொள்ள, காங்கிரஸ் ம்ஹும்... நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்கிக்கொள்ள, அத்தனையும் அவருக்கு சாதகமாக உருவாகி இருக்கிறது.

அத்வானி அவருக்காக ரோடு போட, அதில் அதிர்ஷ்டம் மோடிக்கு வண்டி ஓட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அன்னா ஹசாரே அவர் ஏதோ  கணக்கில் போராட்டத்தை ஆரம்பிக்க, பலனை கெஜ்ரிவால் அறுவடை செய்தார். அத்வானியை போல் இவரும் தற்போது  செய்திகளில் வருவதில்லை.

தமிழகத்தில் அம்மா மண்டையை போட, நினைத்தே பார்க்க முடியாத எடப்பாடி அரியணை ஏறினார். அதுமட்டுமா பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஆள் இல்லாததால், இந்த ஆள் நமக்கு தேவை என அவருக்கு பின்னால் நிற்க...இந்த அதிர்ஷ்டம் காரணமாகவும் அவர் காட்டில் மழை.

இந்த தலைவர்களுக்கு திறமை இருக்கிறது என்பது உண்மையானாலும், அதிர்ஷ்டம் இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதும் உண்மை.