நம் நாட்டு நிர்வாகிகளை என்னவென்று சொல்ல, ஒரு பக்கம் பால், மளிகை கடை திறந்திருக்கும் என்று அறிவிப்பு. இன்னொரு பக்கம் `யாரும் வெளியே போககூடாது` என்று மிரட்டல். ஊர் சுத்த நினைப்பவர்கள் இதில் எதாவது ஒரு காரணத்தை சொன்னால் போதும். அல்லது நிஜமாகவே பொருள் வாங்க போகிறவர்கள் போலீசிடம் உதை வாங்க வேண்டும். இப்போது நாம் என்ன செய்வது?
அதே சமயம் ரேஷன் கடைகளில் பணமாம். அரிசி மற்றும் மற்ற இத்யாதிகளும் இலவசமாகவே கிடைக்குமாம்! கொடுமை. நம்ம ஆட்கள் இலவசம் என்றால் `கோரோனோ ஒரு 5 கிலோ கொடுங்கள்` என்று கேட்டு வாங்குபவர்கள் ஆயிற்றே? இனி அங்கே கூட்டம் கூடும். அங்கே யாருக்காவது கோரோனோ இருந்தால் திண்டாட்டம்தான்.
இதில் தமிழக அரசின் செயல் படுமுட்டாள்தனம். வீடு தேடி போய் டோக்கன் கொடுப்பார்களாம். அப்படியே எந்த தேதியில் உங்களுக்கு ரேஷன் கடையில் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்களாம். அப்போது போய் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். என்ன கொடுமை சரவணன் இது?
வீடு போய் தேடி டோக்கன் கொடுக்கும் நாய்கள் அதற்கு பதில் பணமே கொடுத்துவிடலாமே? எதற்கு இரண்டு வேலை?
விஜய் மல்லையாவை நம்பி 5000 கோடி கொடுப்பவர்கள் உள்ளூர் செல்லையாவை நம்பி 1000-2000 கொடுக்க கூடாதா! பிராடு நடக்கும் என்று பயமா? சொல்லிவிடுங்கள் ஊழியர்களிடம். பணத்தை கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு, ஒரு மீட்டர் தூரத்தில் அந்த நபருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று. நாளை புகார் வந்தால் மாட்டிக் கொள்வார்.
இப்படி சிலர் வீடு தேடி போவதும், ஒரு ஏரியாவை சேர்ந்த 100 பேர் ரேஷன் கடைகளில் கூடுவதும், இதில் எது சிறந்தது?
பாண்டிச்சேரி கதை வேறுவிதமாக இருக்கிறது. பணம் வங்கியில் போடப்படுமாம். ஏழை என்றாலே பெரும்பாலும் ஏ டி எமில் பணம் எடுக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். வண்டி இல்லாதவர்களாக இருப்பார்கள். வங்கிக்கு எப்படி போவது? சிக்கல்தான்.
ரேஷன் பொருட்கள் கதையும் இப்படித்தான். நாம் போகும்போது `இன்று உங்க ஏரியா இன்று இல்லை` என்று பதில் வரும். சக்கரை இருக்கும், அரிசி இருக்காது. இதை கண்டுபிடித்து எல்லாவற்றையும் வாங்குவதற்கு நாம் 10 முறை போக வேண்டும். ஏழைகள் மட்டும் ரேஷன் வாங்கும்போதே அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். இனி எல்லோரும் வருவார்கள் என்றால்? இதில் பந்த் எங்கே?
பிரச்சினை என்னவென்றால் இக்கட்டான நேரங்களில் செயல்படும் முறை வித்தியாசமாக, அது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்காமல் இருக்க வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாது.
தனியார்காரன், `உனக்கு என்ன வேண்டும் என்று சொல், நான் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்` என்று சொல்ல, அரசோ `உனக்கு எது வேண்டுமானாலும் என்னை தேடி வந்து என் காலில் விழு` என்று சொல்கிறது.
இங்கே அகமதாபாத்தில் பல வியாபாரம் மொபைலில் நடக்கிறது. ஆட்டோவை கடையாக மாற்றி மெக்கானிக் ஷாப் /சோடா கடை /பங்க் கடை என பலவிதம். மினி வேன்களில் ஐஸ்கிரீம் கடை கூட. இந்த கடைகளை வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு ஒட்டிக்கொண்டு போகலாம். அல்லது அங்கேயே விட்டுவிட்டும் போகலாம்.
இப்போதைக்கு நமக்கு தேவை பால்/மளிகை மற்றும் ATM சேவைதான். இந்த கான்செப்டை இங்கே புகுத்தி இவற்றை மொபைல் கடையாக மாற்றி ஒவ்வொரு ஏரியாவிலும் தினம் 1மணி நேரம் இந்த சேவைகள் கிடைக்கும் என்று சொல்லி கடையை அவர்கள் ஏரியாவிலேயே நிறுத்திவிட வேண்டியதுதான். பிரச்சினை தீர்ந்தது.
மளிகை கடை கூட நிறைய இருக்கும். ஒரு மணி நேரம் அவர்களுக்கு அனுமதி தரலாம். மற்ற இரண்டுக்கும் இது அவசியம். இல்லையென்றால் இந்த பந்தின் அர்த்தமே நிறைவேறாது.