!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, January 7, 2022

இங்கே முதலீடு தேவை
சீமானை பற்றி பதிவு எழுதியதால் அவர் குறித்த செய்திகளை இந்த வாரம் அதிகமாக கவனித்தேன். சிந்தனை இப்படியும் அப்படியுமாக ஓடியது. அதில் ஒரு எதார்த்தம் அப்பட்டமாக தெரிந்தது. அது கொஞ்சம் கவலைப்படவேண்டிய விஷயம்.

தற்போது அவருக்கு சொத்தோ அல்லது வேறு நிரந்தர வருமானமோ இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் அவர் ஒரு கட்சியின் தலைவர். இடைவிடாது பிரச்சாரம் அல்லது கட்சி வேலை என ஏதாவது செய்துகொண்டிருக்கிறார்; செய்தாக வேண்டும். இதற்கான செலவை கட்சி நிதியிலிருந்து செலவழிக்கலாம். ஆனால் குடும்பம், குழந்தைகள் என இருக்கிறதே, அதற்கான செலவுகள் இருக்குமே, அதற்கு என்ன செய்வது?

மனைவிக்கு மல்லிகை பூவோ, குழந்தைக்கு பிஸ்கட்டோ வாங்க வேண்டும் என்றால் அதற்கு கட்சி நிதியிலிருந்தே செலவு செய்தால் விமர்ச்சனம் வரும். அல்லது `உனக்கு பூ வாங்க வேண்டும், அதற்கு பணம் கொடு` என்று மனைவியிடம் கேட்கதான் முடியுமா?

ஆக நிச்சயம் அவர் தற்போது ஒரு  உளவியல் சிக்கலில் இருப்பதுபோல் தோன்றுகிறது. `நாட்டை அடைய துடிக்கும் எனக்கு,  ஒரு வீடு இல்லை என்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று பிழை` என்று கொஞ்சம் அதிகப்படியாக பேசியிருக்கலாம். அதேசமயம் இந்த வார்த்தைகளை அவர் பேசியபோது அவருடைய முகபாவனையை நீங்கள் கவனித்திருந்தால் அதில் ஒரு இயலாமை இருந்ததை கவனித்திருக்கலாம்.

பல வீடுகளில் இது நடக்கும். கணவனையோ, மாமியாரையோ திட்டமுடியாத பெண்கள் வீட்டில்  சாமானை கழுவும்போது சத்தம் அபாரமாக இருக்கும். பிள்ளைகளை அற்ப காரணங்களுக்காக  அடிப்பார்கள். இவையெல்லாம் இயலாமையின் வெளிப்பாடு. மனஅழுத்தத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகளை கவனித்தால்  இப்படி எதாவது ஒரு வகையில் இருக்கும். சீமான் பொது மேடையில் செருப்பை தூக்கி காட்டியபோது இவருக்கும் அப்படி எதாவது மனஉளைச்சல் வந்துவிட்டதா என ஒரு சந்தேகம். 

உடம்பில் பலம் இருக்கும் மனிதனை விட பாக்கெட்டில் பணம் இருக்கும் மனிதன் கொஞ்சம் அதிக தெம்போடு இருப்பான். பணம் உள்ளவனைத்தான் இந்த உலகமும் மதிக்கும். இதுதான் எதார்த்தம். சீமானின் வாழ்க்கை முறையை கவனிக்கும்போது அவரிடம் பணம் இல்லை. அந்த இயலாமை காரணமான கோபம் அவருடைய வார்த்தைகளில் செயலில் தெரிகிறது.

இங்கே மீடியாவில் காட்டப்படும் சொத்துக்கள் அவருடைய மனைவி மற்றும் மாமியாருடையது. இதற்கான நிதியை இவர் கொடுத்திருந்தால் இவர் மீது பழிபோடுவதில் அர்த்தம் இருக்கும். அப்படி ஒரு தகவலும் தெரியவில்லை. 

தனக்கு வீடு இல்லை என்பவர் மனைவியின் சொத்தை விற்று வாங்கலாமே என்பதுதான் கேள்வி. ஆனால் அது தன்மானத்துக்கு இழுக்கு அல்லவா. நம் சொத்து என்பது வேறு மனைவியின் சொத்து என்பது வேறு. இது எதார்த்தம் புரியாதவர்களின் வாதம்.

இங்கே நாம் ஒரு எதார்த்தத்தை கவனிக்க வேண்டும். சேவை எப்போதும் இலவசமாக கிடைக்காது.  நாட்டுக்கு ராணுவத்தினர்/ஆசிரியர்கள் சேவை செய்கிறரர்கள். அதாவது அவர்கள் அப்படி சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் சம்பளம் கிடைக்கிறது. அவ்வளவு ஏன், என்ஜிஓ என பலர் சமூக சேவை செய்கிறார்கள். 10 பேருக்கு நல்லது செய்கிறேன் என்று 12 பேரிடம் வசூலிப்பார்கள். அந்த 2, நிர்வாக செலவு என சம்பளமாக /கிம்பளமாக போய்விடும்.

எங்கே நாம் செய்த வேலைக்கு (சற்று கூடுதலாகவே) கூலி வாங்கிக்கொள்கிறோமோ அங்கே அதை சேவை என சொல்லக்கூடாது. ஆனால் அப்படி சொல்லிக்கொள்வதில் இவர்களுக்கு பெருமை. ப்ரீபெய்ட் சர்வீஸ் என்று சொல்வார்களே அதுபோல் இவர்களுடையது வெல் பெய்டு சர்விஸ் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளுக்கு அப்படி எதுவும் கிடைப்பதில்லை.
 
இங்கே பதிவுலகில் ஒரு பதிவர் சத்தமே இல்லாமல் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து பொது சேவை செய்தார்; பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இப்போது என்னவாயிற்று? இதுதான் நிஜம். சேவை செய்ய பணம் கொடுப்பது மட்டுமில்லை, அதற்காக நாம் நேரம் ஒதுக்குகிறோமே, அதற்கும் ஒரு விலை உண்டு. அதுவும் குடும்பம், கடமை என உள்ளவர்களுக்கு இது மேலும் கடினம். அது கிடைக்காதபட்சத்தில் இப்படித்தான் போய் முடியும்.

அரசியல்வாதிகளுக்கோ இது இன்னும் ஒரு படி மேல். நீங்கள் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள் என்றால் ஏழைகள்தான் உதவிக்கு  உங்களை நாடி வருவார்கள். பணக்காரர்கள் அவர்களாகவே பார்த்துக்கொள்வார்கள். இப்படி வரும் ஏழைகளிடம் பணமும் இருக்காது. அவர்களுக்கு காபியே நீங்கள்தான் வாங்கி கொடுக்க வேண்டும்.

கொடுக்காவிட்டால், `ஏழைகளுக்கு பத்து காசு செலவு செய்யமாட்டான், இவனுக்கு நான் ஒட்டு போடணுமா?` என கேட்பார்கள். ஆக உங்களுக்கே பால் வாங்க காசில்லை என்ற நிலையில், இது அவர்களுக்கு கூடுதல் தலைவலி. இங்கே ஊழல் செய்து, அந்த பணத்தில் மக்களுக்கு 100 ரூபாயை கொடுப்பவன் நல்லவனாகிவிடுவான். அது இதைவிட பெரிய கொடுமை.

தற்போது சீமானுக்கு கூட்டம் கூடுகிறது, ஆனால் அது ஓட்டாக மாறுவதில்லை.  நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அங்கே பலனும் வேண்டும் கூடவே பணமும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று சுவைக்காது. 

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். திருமணமானவர்களுக்கு 6 மாதம் ஹனிமூன். தொழில் செய்பவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு லாபம் வராது அதன் பின் வரும் என்பதும் ஒரு நிலை. அதேபோல் அரசியல் தலைவர்களுக்கு 10 ஆண்டுகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள காலஅவகாசம் இருக்கும். இவர் இந்த வாசற்படியையும் தாண்டிவிட்டார். இனி அவர் தனித்து நிற்பதும் சிரமம், கூட்டணி அமைப்பதும், ஒரு கூட்டணியில் சரணடைவதும் சிரமம். இதன்காரணமாக நிதி கொடுப்பவர்களும் களைத்து போயிருப்பார்கள். எனவே அங்கேயும் ஏதாவது `குறை` வந்திருக்கலாம். 
   
சரி,  இப்போது தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு என்ன செய்கிறார்? நிதி எந்த வகையில் வந்தாலும் அதை தன்னுடைய தனிப்பட்ட/ குடும்ப செலவுக்காக அவர் பயன்படுத்த முடியுமா? அந்த தவறை ஓரளவு செய்தாலும், இது எவ்வளவு நாள் தாங்கும்? வாழ்க்கை முழுக்க இப்படி தொணடர்களை நம்பியோ அல்லது குற்றஉணர்ச்சியோடு ஒரு மனிதன் வாழமுடியுமா? 

ஆக மொத்தத்தில் இங்கே அரசியல்வாதிகள் ஜாப் செக்யூரிட்டி என்ற நிலை இல்லாமல் வாழ்கிறார்கள். இதுதான் நிஜம். ஆரம்பத்தில் அட்டகாசமாக கனவுகளோடும், வாய்சவடாலோடும் ஆரம்பிக்கும் இந்த பயணம், பின்னர் களைத்துப்போய்  தடுமாறும்போது ஊழல் அரசியல்வாதிகள்/தொழிலதிபர்கள் கை கொடுக்க, கடைசியில் இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். அரசியல்வாதிகளின் இந்த அடிப்படை பிரச்சினையை தீர்க்காதவரையில் இந்தியாவில் ஊழல் ஒழியப்போவதில்லை.
 
இங்கே என்ன செய்யவேண்டும்.

தற்போது அரசு பல்வேறு இடங்களில் எதிர்கால நோக்கில் முதலீடு செய்கிறது. நன்கு படிக்கும் மாணவனுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அந்த மாணவன் படித்து பட்டம் பெற்று நாட்டுக்கு நன்மை செய்வான் என நம்பிக்கை. ஆனால் அதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் வேலை தேடுவார்கள் அல்லது ஓட்டு போடுவதால் என்ன பயன் என வியாக்கினம் பேசுவார்கள். ஆனாலும் அரசு நிச்சயம் மாணவர்கள் மீது முதலீடு செய்யும். அது கடமை. 

இதேதான் விளையாட்டு துறையிலும் நடக்கிறது. தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பலவேறு வகைகளில் உதவி செய்கிறது. அவர்கள் விளையாட்டில் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே உதவி செய்யமுடியுமா? இங்கே 10 பேருக்கு கொடுப்போம் அதில் ஒருவன் சாதித்தாலே அது நல்ல அறுவடைதான்.

அரசியலிலும் அதேபாணியை கடைபிடிக்க வேண்டியதுதான். ஒட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் முதல் 5-7 அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு அரசே கவரவமான மாத சம்பளம்  கொடுக்கலாம். தற்போது எதிர்க்கட்சி தலைவரை மட்டும் அரசு அங்கீகரிக்கறது. ஆனால்  இப்படி மேலும் 5 கட்சிகளை ஓரளவாவது ஆதரிக்க வேண்டும். இது ஒரு நல்ல முதலீடாக மாறலாம்.

`அரசியல்வாதிகள் நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு எதற்கு பணம்` என கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் நேர்மையான அரசியல்வாதிகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் நமக்கான தேவைக்காக மட்டும் கை நீட்டுவோம் என சிம்பிளாக ஆரம்பிக்கும் இந்த தவறுதான் கடைசியில் அவர்களை மெல்ல மெல்ல ஊழல் பெருச்சாலிகளாக மாற்றிவிடுகிறது. எனவே அவர்களின் அடிப்படை தேவையை ஓரளவு அரசு கொடுக்குமேயானால் இது ஓரளவுக்காவது நேர்மையான அரசியல்வாதிகளை தடுமாறவிடாமல் தடுக்கும்.

அதேசமயம் சீமான்  சிறந்த நிர்வாகியாகவோ உருப்படியான தலைவராகவோ எனக்கு தோன்றவில்லை. இவர் வைகோ நம்பர் 2. தானாகவே காணாமல் போய்விடுவார்.

நமக்கு பிடிக்குதோ இல்லையோ, மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை முதல்வர் என மரியாதை தருகிறோம். அதேபோல் ஓரளவு வாக்கு வாங்கும் அரசியல்கட்சிகளுக்கும் பொருளாதார உதவிகளை அளித்து  அரசு அங்கீகரிக்க வேண்டும். அரசியல்கட்சிகள் ஏன் தடம் மாறுகின்றன என யோசித்தபோது வந்த யோசனை இது.

அரசியல்வாதிகள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்பட ஆரம்பித்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இது போன்ற முதலீடுகளும் நாட்டுக்கு தேவை.

4 comments:

bandhu said...

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எல்லோரும் ஒரு வேலைக்கு போய் நன்றாக சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும். அரசியல்வாதி மட்டும் எந்த சம்பளமும் இல்லாமல் லஞ்சமும் வாங்காமல் நேர்மையாக சேவை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?

அமெரிக்காவில் incometax கட்டும்போது அந்த form இல் ஒரு கட்டம் கொடுத்திருப்பார்கள். அதை நாம் டிக் மார்க் வைத்தால் நாம் காட்டும் பணத்தில் ஒரு சிறு தொகை தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அந்த பணம் எந்த அளவு உதவுகிறது என்று தெரியவில்லை. ஆனாலும் அது ஒரு நல்ல தொடக்கம்.

அதே போல் நம் ஊரிலும் செய்யவேண்டும்!

KILLERGEE Devakottai said...

நல்லதொரு அலசல் நண்பரே...

ரா.சிவானந்தம் said...

வாங்க பந்து,

//அமெரிக்காவில் incometax கட்டும்போது அந்த form இல் ஒரு கட்டம் கொடுத்திருப்பார்கள். அதை நாம் டிக் மார்க் வைத்தால் நாம் காட்டும் பணத்தில் ஒரு சிறு தொகை தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அந்த பணம் எந்த அளவு உதவுகிறது என்று தெரியவில்லை. ஆனாலும் அது ஒரு நல்ல தொடக்கம்.//

இந்தியாவிலும் தேர்தல் பத்திரம் என ஏதோ கொண்டுவந்தார்கள். அதில் லாட்டரி மார்ட்டின் பிஜேபிக்கு மட்டும் 100 கோடி கொடுத்தாராம். ஆக சீர்திருத்தங்கள் கொட்டுவந்தாலும் அதிலும் தங்கள் எது வசதி என பார்த்துதான் செய்வார்கள். இதையே தேர்தல் பத்திரம் மூலம் கிடைக்கும் நிதியில், ஒரு கட்சி வாங்கும் ஓட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பிரித்து கொடுத்தால் அது இன்னும் நியாயமாய் இருக்கும்.

ரா.சிவானந்தம் said...

கில்லர்ஜி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

Post a Comment