ஏதாவது சில விஷயங்கள் தீடீரென்று நம் ஆர்வத்தை தூண்டிவிடும். அதுகுறித்த செய்திகளை அதிகம் படிப்போம். இந்த வாரம் அப்படி கவனித்தது QR கோட் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களைத்தான்.
ஜப்பானில் சரக்குகளை தரம் பிரிக்க/கையாள இந்த QR முறையை ஒரு நிறுவனம் பின்பற்ற, பின்னர் அது இப்படி விரிவடைத்திருக்கிறது. QR கோட், பணப்பரிமாற்றம் மற்றும் பல விஷயங்களை மிக சுலபமாக முடித்துவிடுவதால் அது தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது.
இதில் கிரிப்டோ வேறு வகை. இங்கே அகமதாபாத்தில் சிறு வயதில் பால் வாங்க போகும்போது, அப்போது சில்லறை தட்டுப்பாடு நிறைய இருந்ததால், சில்லறைக்கு பதில் அவர்கள் கடை பெயர் அச்சடித்த டோக்கன் தருவார்கள். 50 காசு 25 காசு என அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அது அவர்களிடம் மட்டும் செல்லுபடியாகும்.
இப்படி உள்ளூர் பிரச்சினைகளில் நம் வசதிக்காக சில நடைமுறைகளை மனிதர்கள் உருவாக்குவார்கள். அப்படி வந்த சில விஷயங்கள் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறும். இதில் QR கோட் வரவேற்கத்தக்க ஓன்று. ஆனால் கிரிப்டோ?
கிரிப்டோ குறித்து படிக்கும்போது எனக்கு பல சொந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. அதில் பல டேஜாவு வகை. அந்த அனுபவங்களுடன் இதை பொருத்தி பார்த்தால் இதுவும் அதே அடிப்படையில் போகக்கூடும்.
கரன்சிக்கு ஒரு சிறந்த மாற்றாம்; திருடு போகும் வாய்ப்பு இல்லையாம்; சுலபமானது என்று பல காரணங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.
ஆனால் தற்போது இன்டர்நெட்டின் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகை, UPI என பல விஷயங்கள் வந்துவிட்ட நிலையில், கிரிப்டோ அவசியமே இல்லாத ஓன்று. இருந்தும் மக்கள் அதன் மீது மோகம் கொண்டு அலைவதின் காரணம் புதிர்தான்.
இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவ்வப்போது சில புது வரவுகள் வரும் பின்னர் அது காணாமல் போகும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம். பேஜர் போய் ஆண்ட்ராய்டு வந்து பின்னர் அதை ஸ்மார்ட்போன் ஒழித்தது.
தற்போது இன்னொன்றையும் நான் கவனிக்கிறேன். வங்கிகளுக்கு போய் பணம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தநிலையில் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. தெருவுக்கு நாலு ஏடிஎம்கள்கள் என உருவானது. அதே பல ஏடிஎம்கள்கள் தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.
PAYTM/GPAY போன்ற UPI வரவுகள் பணபரிமாற்றத்தை மேலும் சுலபமாக்கிவிட்டதால் ஏடிஎம்கள் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஏடிஎம்கள்கள் இருக்கும். ஆனால் வரும் காலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடுவிழா கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேதான் கிரிப்டோவிலும் நடக்கக்கூடும்.
இனி சில அனுபவங்களை பார்ப்போம். 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தபோது இப்படித்தான் பல ஷேர்களை தாறுமாறாக ஏற்றினார்கள். 10 ரூ ஷேர் 5000 போன கதையெல்லாம் நடந்தது. என் கெட்டநேரம் நான் அப்போதுதான் ஷேர்மார்கெட்டில் நுழைகிறேன்.
பொதுவாக ஷேர்களுக்குத்தான் PE/Ratio வைப்பார்கள். அந்த நேரத்தில் படுபாவிகள் அப்போதிருந்த மியூட்சுவல் பண்ட்களுக்கு கூட PE/Ratio வைத்து அதையும் விலை ஏற்றி ஏமாந்தவன் தலையில் கட்டினார்கள். ஏகப்பட்ட பென்னி ஸ்டாக் தாறுமாறாக ஏறி ஆப்ரேட்டர்களுக்கு பணமழையையும் ஏமாந்த சோணகிரிகளுக்கு அல்வாவையும் கொடுத்தது.
அந்த நேரத்தில் இன்னொரு மோசடியும் நடந்தது. புற்றீசல்போல் நிறைய புது வெளியீடுகள் வந்தன. வாரம் 10 பொது வெளியீடு வரும். தற்போது அதன் பேர் IPO. தெருக்களில்/பங்கு தரகர் அலுவலகத்தில் இதற்காகவே நிறைய விண்ணப்பங்கள் இருக்கும். அதில் நிறைய எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வேன்.
கம்பெனி 2 வது வருடமே லாபத்துக்கு வந்துவிடுமாம். வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்குதாம். உற்பத்தியான உடனே அவர்கள் வாங்கி கொள்வார்களாம். இப்படி நிறைய கதை விட்ட வெளியீடுகள் வந்து பின்னர் காணாமல் போனது. தற்போது நிறைய கிரிப்டோ வருவதை பார்த்தால் அதே நிலைமைதான் வரும் என நினைக்கிறன்.
அடுத்து ரியல் எஸ்டேட் பூம் வந்தது. எல்லா பூமிலும் ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இது தியரி. ஆனால் இவர்களை பார்த்து ஆட்டுமந்தைகளை போல் பலர் வந்து விழுவார்கள். அவர்களில் 10-20 தப்பித்தால் அதிர்ஷ்டம். மற்றவர்கள் இப்போதும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். நல்ல விலை வந்தால் கொடுத்துடுவேன் என்பார்கள். அதுவே அவர்களுக்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்.
அப்போதைய விலை ஏற்றம் இயற்கையான ஓன்று. அரசு தாராளமயமாக்களை கொண்டுவந்ததால், நிறைய உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்களை தொடங்கின. கூடவே மக்கள் தொகை பெருக்கமும் கொரோனவை போல் வேகமாக இருந்தது. தொழில் தொடங்க இடம், மக்களுக்கு வீடு என்ற தேவை எல்லாம் சேர்ந்து விலை தாறுமாறாக ஏறியது. தற்போது அதுவும் கொரோனவைபோல் சமநிலைக்கு வந்துவிட்டது.
மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலும் நிறைய மோசடிகள், கணக்கில் வராத கருப்பு பணம் என விளையாட ஆரம்பித்ததால், அரசு பல வகைகளில் கடிவாளம் போட ஆரம்பிக்க, அங்கேயும் மந்தநிலை வந்தது.
கிட்டத்தட்ட அதேதான் கிரிப்டோவிலும் நடக்கும். தற்போது சில நாடுகள் கடிவாளம் போட ஆரம்பித்துவிட்டன. இந்தியாவும் விரைவில் அந்த வேலையை ஆரம்பிக்கும். எந்த ஆட்டுமந்தை மனப்பான்மை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக இருந்ததோ, அதே ரிவர்ஸ் மனப்பான்மை இங்கே விலை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.
இங்கே இன்னொரு தியரி சொல்வார்கள். ஒரு பொருள் நிறையவே விலை குறைந்தால் வாங்குவது நல்லது என மூளை சலவை செய்வார்கள். இந்த விஷயத்தில் நிபுணர்கள் மட்டுமே இதை சரியாக கணிக்கமுடியும். ஷேர் மார்க்கெட்டில் கொசுவை பூனை, புலி அளவுக்கு அல்ல, யானை அளவுக்கு ஏற்றிவைப்பார்கள். அது புலி அளவுக்கு வந்தாலே விலை வீழ்ச்சி என சாதாரண மனிதன் தலையில் கட்டுவார்கள். எனவே கவனம் தேவை.
ஷேர் மார்கெட்டிலாவது கொசுவை யானையாக்குவார்கள். ஆனால் பிட்காயின் தற்போதைய விலையை எதனுடன் ஒப்பிடுவது. 1டாலருக்கும் கீழே இருந்தது தற்போது அதிகபட்சம் 47 லட்சம் போயிருக்கிறது. இது என்ன லாஜிக்கோ. இதற்கு சப்போர்ட் பிரைஸ் என எப்படி நிர்ணயிப்பது?
இன்னும் சில காலங்களில் `என்கிட்டே கிரிப்டோ இருக்கு, நல்ல விலை வந்தா சொல்லுங்க` என புலம்பும் மனிதர்களை நாம் காணக்கூடும்.
0 comments:
Post a Comment