கலைஞருக்கு பேனா நினைவுத்தூண் வைக்கவிருக்கும் செய்திகளை படிக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால் அரசியலை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். சாதனைத்தலைவன் என சொல்லும் அளவுக்கு அவர் என்ன சாதித்தார் என தெரியவில்லை. ஒருவேளை எப்போதாவது நான் அசந்து தூங்கிய சமயம் அவர் எதையாவது சாதித்துவிட்டாரா என ஒரு சந்தேகம்.
இப்போதுதான் கூகிள் அங்கிள் இருக்கிறாரே, அவரிடம் கேட்டால் தகவலை கொட்டிவிடுவார் என்பதால் அவரிடமே கேட்டேன். அதில் ஒரு உருப்படியான சாதனை தகவல் கிடைத்தது. ஆனால் அதேசமயம் மேலும் பல தகவலை கவனிக்க நேரிட, இவர் சாதனை தலைவர் அல்ல, இவர் ஒரு நிலைவித்வான் தலைவர் என்பதும் புரிந்தது.
சவுக்கு சங்கர்தான் ஒரு பேட்டியில் சொன்னார். தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சி திடீரென ரத்தாகும்போது, வேறு வழியில்லாத நிலையில், நிலையத்திலேயே இருக்கும் தவில், நாதஸ்வரம், கடம் என யாராவது ஒரு வித்வான்களை வாசிக்க செய்து அந்த நேரத்தை ஒப்பேத்துவார்களாம். இவர்களுக்கு நிலைவித்வான்கள் என பெயராம்.
கலைஞர் கடந்துவந்த பாதையையும் அவருடைய அரசியலையும் கவனித்தால், அதாவது விருப்பு வெறுப்பு இன்றி போஸ்ட்மார்ட்டம் செய்தால், இவரும் இந்த பட்டபெயருக்கு பொருத்தமானவர் என்பது உங்களுக்கு புரியும்.
அவரை புகழ்ந்து பேசுபவர்கள், அவர் இதை செய்தார் அதை செய்தார் என தம்பட்டமடிப்பவர்கள், இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் அவரை நம்பவில்லை என்ற கேள்விக்கு சரியான பதிலை சொல்லமாட்டார்கள்.
எனவே அதுபோன்ற விவாதத்திற்க்குள் போகாமல் வெறும் புள்ளவிவரங்களை மட்டும் கவனித்து அவருடைய சாதனைகளை பார்ப்போம். விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், கிரிக்கெட்டில் சாதனைகளை அளவிட சில புள்ளிவிவரங்களை பயன்படுத்துவார்கள். அதே அடிப்படையை இங்கேயும் பயன்படுத்தி, சில புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
கலைஞர் குறித்து முதல் சாதனையாக நான் கவனித்து, அவர் தமிழகத்தில் நீண்ட நாட்கள் (மொத்தமாக) முதல்வராக இருந்திருக்கிறாராம். அதாவது 6863 நாட்கள் இருந்திருக்கிறார். இது ஒரு புள்ளிவிவரம். புள்ளிவிவரம் பொய் சொல்லாது. ஆனால் புள்ளிவிவரம் என்பது புடலங்காய் போன்றது. அதை வைத்துக்கொண்டு பொரியல் செய்யபோகிறீர்களா கூட்டு வைக்கப்போகிறீர்களா என்பது உங்கள் விருப்பம். நீங்கள் திமுக அனுதாபியாக இருந்தால் இந்த புள்ளிவிவரத்தை அப்படியே சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். ஆனால் நிஜத்தை புரிந்துகொள்ள இன்னும் பிரித்து மேயவேண்டும்.
கலைஞர் 67ல் முதல்வரானதிலிருந்து 2010ல் அவர் ஒய்வு எடுத்துவிட்டார் என்று மொத்த நாட்களை கணக்கு போட்டு பார்த்தால், கிட்டத்தட்ட இது பாதிக்கும் கீழேதான் வருகிறது. சரி, இங்கே சராசரிக்கும் கீழே பாஸ் என்றே சொல்லி பெருமைப்பட்டாலும், அவர் ஒரு கட்சியின் தலைவர் ஆயிற்றே, இங்கே அவர் எப்படி விளையாடினர் என்பது முக்கியமில்லை, அவருடைய தலைமையில் அணி ஜெயித்ததா என்பதுதானே கேள்வி.
கிரிக்கெட்டில் தோனிதான் டாப் என இருந்தநிலையில் விராட்கோலி அதையும் தாண்டியிருக்கிறார் என்று ஓர் புள்ளிவிவரம் சொல்ல, எப்படி என்று கவனித்தால், தோனியின் வெற்றி சதவிகிதம் 53 என்றால் விராட் கோலி சதவிகிதம் 63.
ரன்னே எடுக்காமல், மேட்சை ஜெயிக்காமல், `நான் பேட்டை அப்படி சுத்தினேன், வெயிலில் அசராமல் இரண்டு நாட்கள் தொடர்ந்து களத்தில் இருந்து எல்லா போலரையும் சமாளித்தேன்` என்ற கதை இங்கே எடுபடாது.
நீங்கள் 100 பந்தை சந்தித்தால் டெஸ்ட்டுக்கே குறைந்தது 50 ரன் எடுத்தால்தான் சராசரி என சொல்லலாம். 20-20 என்றால் கதையே வேறு. இல்லையென்றால் வேடிக்கை பார்ப்பவர்கள் `இந்த ஆள் அவுட்டாகி ஆகி வேறு யாரையாவது அனுப்பவேண்டும்` என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.
அதுவே கேப்டனாக இருந்தால் , நீங்கள் ரன்னே எடுக்காவிட்டாலும் அணியை ஜெயிக்கவைத்தால் அதுவேபோதும். அந்த வகையில் கேப்டனாக கலைஞரின் வெற்றி சதவிகிதம் மிகவும் சொற்பம்தான்.
கலைஞர் 69 ல் இருந்து 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். 67ல் அவர் தலைமையில் கட்சி இல்லை. 69ல் முதல்வரானதும் அண்ணாவின் மரணத்தால். எனவே அதை தவிர்த்து பார்த்தால், அவர் தலைமையில் 10 முறை தேர்தலை சந்தித்திருக்கிறார். அதில் 4 முறை மட்டுமே வெற்றி. இது 40 சதவிகிதம்.
சரி பார்டர்ல பாஸ் என நினைத்தாலும் அதிலும் சில ஓட்டைகள். 71 தேர்தலில் வெற்றி எம் ஜி ஆர் அவருடன் இருந்தார் என்பதால், அதையும் கழித்தால் 10/3 தான் அவருடைய வெற்றி.
89ல் கிடைத்த வெற்றி அதிமுக இரு அணியாக இருந்ததால், 96 வெற்றி ஜெயலலிதா ஆணவத்தால் தன் தலையிலேயே மண் அள்ளி போட்டுக்கொண்டதால், 2006 தான் ஓரளவு உருப்படியான வெற்றி என்று சொல்லலாம்.
ஆனால் அப்போதும் விஜயகாந்த் தனியாக நின்று ஓட்டை பிரித்தார். அதேசமயம் ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என தெரிந்தும் மக்களுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது. இருந்தும் மக்களுக்கு கலைஞர் மீது நம்பிக்கை வராமல் சந்தேகத்தோடுதான் ஓட்டுபோட்டிருக்கிறார்கள். அது குறை பிரசவமாகி மைனாரிட்டி அரசாக இருந்துது. ஆக மொத்தத்தில் எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் கூப்பிடு அந்த நிலை வித்வானை என கலைஞரை தற்காலிக ஏற்பாடாகதான் உட்கார வைத்திருக்கிறார்கள்.
இந்த கணக்கை எல்லாம் பார்த்து டக்ஒர்த் லீவிஸ் அடிப்படையில் தோராயமாக கணக்கு போட்டு பார்த்தால், அவருடைய வெற்றி சதவிகிதம் 25 சதவீதத்திற்கும் கீழேதான் இருக்கும்.
கிரிக்கெட்டில் இதையும் கவனிக்கவேண்டும். எந்த ஒரு போட்டியிலும் தொடர்ந்து பல போட்டிகள் நடக்கும். ஒரு போட்டியில் அலட்சியமாக, மழை காரணமாக அல்லது அதிர்ஷ்டம் இல்லாமல் நீங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் தொடர்ந்து பல போட்டிகள் இருப்பதால் அவற்றில் உங்கள் குறைகளை உணர்ந்து சரி செய்து, எதிரியின் பலம் அறிந்து விளையாடி ஜெயிப்பவன்தான் திறமைசாலி. அவர்களுக்குத்தான் உலகக்கோப்பை கிடைக்கும். இங்கே கலைஞர் தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்திருக்கிறார். பெரும்பாலும் தோல்வி, ஜெயித்தவையும் இழுபறித்தான்.
அதுமட்டுமின்றி கிரிக்கெட்டில் இன்னொரு பெருமையும் உண்டு. சொந்த நாட்டில் ஜெயிப்பது வேறு, அந்நிய மண்ணில் ஜெயிப்பது வேறு. நாம் அதிகம் விளையாடாத பிட்சில், அந்நிய கிளைமேட்டில் ஜெயிப்பது பெருமைக்குரியது. அதுதான் திறமையின் உண்மையான அடையாளம்.
அதேபோல் ஒரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்துகொண்டே ஜெயித்தால் (முழு சட்டமன்றம்), மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என அர்த்தம். கலைஞர் அந்த சாதனையையும் செய்யவில்லை. ஒரு முறை அவருடைய ஆட்சியை பார்த்த மக்கள், வேண்டாம் சாமி என அவரை வீட்டுக்குத்தான் அனுப்பியிருக்கிறார்கள். இதுதான் எதார்த்தம்.
மேலே சொன்னது புள்ளிவிவர வரலாறு. அரசியலை கவனிக்கும் எல்லோருக்கும் தெரியும். இதை இங்கே எழுதுவது டீக்கடைக்காரனுக்கு டீ வாங்கி கொடுப்பதை போன்றது. இருந்தாலும் சாதனையின் எந்த அளவுகோலையும் தொடாத ஒரு மனிதரை, ஸாரி, தலைவரை இவர்கள் இப்படி புகழ்வதை பார்த்தாலே கடுப்பாகிறது. இதில் பேனா சிலை வேறு. அந்த கடுப்பில்தான் இதை யாராவது ஒரு உளுத்தம்பருப்பாவது படிப்பார் என எழுதிவைக்கிறேன்.
ஒருவேளை அந்த கன்றாவியும் நடந்துவிட்டால், மஹாராஷ்டிராவில், ஏதோ ஒரு உள்ளடிவேலைக்காக, தேவேந்த்ரா பட்னாவிஸ் அஜித் பவாருடன் சேர்ந்து ஒரு நாள் முதல்வராகி என்னமோ ரகசியமாக செய்தார். அதேபோல் சீமானையும் ஏதாவது செய்து ஒருநாள் முதல்வராக்கி அதை இடித்து தள்ளவேண்டியதுதான். இங்கே முக்கியமாக கவனிக்கவும் ஒரு நாள் முதல்வர். அவ்வளவுதான்.
2 comments:
அரசியலில் மட்டுமல்ல. எழுத்தாளர் என்ற வகையிலும் இவர் சராசரிக்கும் கீழாகத்தான்! பல கதைகள் ஆபாசக் களஞ்சியம்! பேனா ஒன்றுதான் குறைச்சல்!
பந்து,
உண்மைதான். அண்ணாவுடன் இருந்த, வளர்ந்த பெரும்பாலான தலைவர்கள் அவரை விட்டு விலகியதே அவருடைய தரம் தெரிந்ததினால்தான். இருந்தாலும் மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள், புரிந்துகொண்டார்கள். மறுபடியும் வாய்ப்பு கொடுத்தார்கள், புரிந்துகொண்டார்கள். அதன்பின் ஒதுக்கியே விட்டார்கள்.
சிவானந்தம்
Post a Comment