!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, February 11, 2023

நானொரு முட்டாளுங்க...



சமீபத்திய நீதித்துறை செய்திகளை படித்தால் எனக்கு இந்த சிந்தனைதான் வருகிறது. எவ்வளவு அற்புதமாக பிஜேபியும் நீதித்துறை கனவான்களும் நம் காதில் பூ சுற்றியிருக்கிறார்கள்.

அவ்வப்போது நீங்கள் ஒரு செய்தியை படித்திருக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் கவனித்திருக்கலாம். மத்திய சட்ட அமைச்சர் `நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் நடைமுறை சரியில்லை, எனவே இதை மாற்றவேண்டும்` என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அதாவது சொல்லுவார், வருத்தப்படுவார், ஆவேசப்படுவார், ஆதங்கப்படுவார். அவ்வளவுதான்.. அதைத்தாண்டி எதையும் செய்யமாட்டார். ஏனென்றால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லையாம்.

இங்கே என்னுடைய கருத்து என்னவென்றால் ஜனநாயக நாட்டில் கடைசி வார்த்தை என்பது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கவேண்டும்.

சில சமயம் சர்வாதிகாரிகள் வரலாம். ஆனால் ஜனநாயகம் அவர்களை விரைவில் அல்லது கொஞ்சம் தாமதமாகவாது வீட்டுக்கு அனுப்பிவிடும். எனவே அதுதான் நல்லது. அந்த வகையில் சட்ட அமைச்சர் கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் இங்கே நடப்பதே வேறு. அதுதான் பிரச்சினை.   

இனி இந்த விஷயத்தை பார்ப்போம். இங்கே மத்திய சட்ட அமைச்சரை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. அவருடைய தலைவர் அப்படி. தெளிவாக சொல்லவேண்டுமென்றால், மோடியால், அதாவது இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதரால், நீதித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர முடியவில்லையாம். அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. அதை அவர்கள் அவ்வப்போது இப்படி அமைச்சர்கள் மூலம் பொதுவெளியில் பேசி நம் காதில் போடுகிறார்கள். ஆனால் எதார்த்தம் என்ன?

உண்மையில் பிஜேபி தற்போதைய கொலிஜியம் நடைமுறையைத்தான் விரும்புகிறது. இதுதான் அவர்களுக்கு வசதி. இங்கே நீதித்துறை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, அது சுதந்திரமாக செயல்படுகிறது என காட்டிக்கொள்ளலாம். அதேசமயம் தீர்ப்புகள் பெரும்பாலும் இவர்களுக்கு சாதகமாக, சில இடங்களில் நியாயமாகவும் இருக்கும். அதாவது பிஜேபிக்கு ஆதரவான என்று இருந்தாலும் அது நியாயம் என நான் நம்பும் தீர்ப்புகளை சொல்கிறேன். சில இடங்களில் சிக்கலான தீர்ப்புகளில், நீதிமன்றம் சுதந்திரமாக இருக்கிறது எங்களுக்கு எதுவுமே தெரியாது என சொல்லவும் ஒரு வாய்ப்பு. அப்படி இருக்கையில் எதற்கு இந்த புலம்பல்? 

இனி சில நடைமுறைகளை பார்ப்போம். தெருவில் ஒரு பிளாட்பார கடை. ஏதோ ஒரு வியாபாரம். உள்ளூர் அல்லது டிராபிக் போலீசுக்கு அவ்வப்போது மாமூல் கொடுக்கவேண்டும். இப்போது அங்கே வியாபாரம் நன்றாக போகிறது என்று போலீசாருக்கு தெரிகிறது. அல்லது அங்கே இன்ஸ்பெக்டருக்கு திடீர் செலவு வந்துவிட்டது. என்ன செய்வார்? அந்த கடைக்காரரிடம் சென்று `என்னய்யா இந்த இடத்துல டிராபிக் ஜாம் அதிகமா இருக்குன்னு கம்பளைண்ட் வருது` என்று ஒரு ஜெர்க் கொடுப்பார். கடைக்காரருக்கு புரிந்துவிடும். அவரும் கவனிக்கவேண்டியதை கவனிக்க, அதன் பின் டிராபிக்கும் இருக்கும், கூடவே அந்த கடையும் இருக்கும். இது தெரிந்த கதை.

இதைத்தான் பிஜேபி அரசும் சட்ட அமைச்சர் மூலம் அடிக்கடி செய்கிறது. அதாவது அவர்களுக்கு ஏதோ ஓன்று தேவை. அது அவர்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பாக இருக்கலாம் அல்லது அவர்கள் ஆட்களுக்கு ஐகோர்ட்களில் நீதிபதி பதவியாக இருக்கலாம். அப்படி அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டவுடன் சட்ட அமைச்சரின் இந்த கொலிஜியம் முனகல் முடிவுக்கு வந்துவிடும். மறுபடியும் எப்போது தேவையோ அப்போது ஆரம்பிப்பார்கள். இதுதான் நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது.

கொஞ்ச நாட்களாக இந்த கிரண் ரிஜ்ஜு அடிக்கடி மேடைகளில் கொலிஜிம் முறை சரியில்லை என புலம்பும்போதே நினைத்தேன், ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்று. நான் எதிர்பார்த்தது ஏதோ ஒன்றில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு என்று. ஆனால் அதில் ஓன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு (விக்டோரியா கவுரி) நீதிபதி போலிருக்கிறது. வேறு என்ன பேரம் படிந்ததோ தெரியவில்லை.

எனவே தற்போதைக்கு இந்த முனகல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் இன்னொரு தகவல் என்னவென்றால் இது 2 ஆண்டு பதவியாம். இந்த இரண்டு ஆண்டுகளில் இவருடைய திறமை கணிக்கப்பட்டு அதன்பிறகுதான் இந்த பதவி நிரந்தரமாகுமாம். நம்நாட்டில் திறமை எப்படி அளவிடப்படுகிறது என்பது நமக்கு தெரியும், எனவே அதைப்பற்றி பேசி இனி புண்ணியமில்லை.

சரி, ஒருவேளை இந்த கொலிஜியம் நடைமுறைக்கு முடிவுகட்டி, பழையமுறை வந்தால் எப்படி இருக்கும?

இங்கே சட்ட அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய குழுதான் நீதிபதிகளை, தலைமை நீதிபதியை முடிவு செய்யும். அப்படி ஒரு நிலைமையை பிஜேபி விரும்புமா?

தலைமை நீதிபதியும் இரண்டு அரசியல் கட்சிகளையும் பகைத்துக்கொள்ள விரும்பாமல் நடுநிலை அல்லது நியாயமான நிலைதான் எடுப்பார். இது பிஜேபிக்கு தலைவலியை கொடுக்கும். முக்கியமாக அந்த சூழ்நிலையில் பிஜேபி தன்னுடைய ஆட்களை இப்படி புகுத்த முடியாதே. எனவே இதுதான் பிஜேபிக்கு வசதி. ஆனால் வெளியில் வேறு மாதிரியாக நடிக்கிறார்கள்.

ஒரு வசனம் உண்டு. `வேணாம் வேணாம்னு சொல்லிக்கொண்டே ஒரு பெண் கதவை தாழ்ப்பாள் போட்டாலாம்` என்று. அதுதான் தற்போதைய பிஜேபி. வெளியில் வேண்டாம் வேண்டாம் என சொல்லிக்கொண்டே உள்ளுக்குள் இந்த சுகத்தை அனுபவிக்கிறார்கள்.

இங்கே இன்னொரு விஷயமும் உண்டு. அமைச்சரின் இந்த கொலிஜியம் பேச்சை நீதிபதிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்  என பிஜேபிக்கு தெரியும். எனவே அதற்கும் ஒரு வழி இருந்தது.

அதாவது உச்ச நீதிமன்றத்திலும் சில நீதிபதிகளுக்கு நியமன பரிந்துரையை இந்த கொலிஜியம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே செய்திருக்கிறது. அந்த பைலை மத்திய அரசு எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிட்டது. 

இதற்கு முன் சில வாரங்களிலேயே பரிந்துரையை ஏற்றுக்கொள்ளும் அரசு இந்த முறை மவுனமாக இருக்க, கோபமான இந்த தைரியமான உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசின் வழக்கறிஞரை கூப்பிட்டு `கண்டம்ப்ட் அது இது` என உதார் விட்டிருக்கிறார்கள் ஆனால் பிஜிபியா கொக்கா, `என் ஆளுக்கு இங்கே பதவி, உன் ஆளுக்கு அங்கே` என வேறு எங்கேயோ அடிக்க, திரைமறைவு டீலிங் முடிந்தபிறகுதான் நிலைமை சீராகி, இரண்டு இடங்களிலும் பதவி ஏற்பு நடந்திருக்கிறது.

இதையெல்லாம் படித்தபிறகு நமக்கு தெரியவருவது என்னவென்றால்... எதுவும் சொல்வதற்கில்லை... தலைப்பை நாமெல்லாம் முட்டாளுங்க என மாற்றி படிக்கவும்.   

0 comments:

Post a Comment