!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, May 15, 2022

உப்புமா கொள்ளையர்கள்

சென்னையில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலையில் போலீசார் மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்துவிட்டார்களாம்.  சட்டசபையில் முதல்வரே இதற்கு பாராட்டு தெரிவித்துவிட்டார். இது எப்பேர்ப்பட்ட சாதனை? ஆனால் செய்திகளை படித்தால் எனக்கு அப்படி தெரியவில்லை.

நிஜத்தில் இது ஒரு உப்புமா கொள்ளையர்களின் கதை. அதாவது முன் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளின் வேலை. போலீசார் தங்கள் திறமைகளை `காட்டி`க் கொள்ள  உதவும் ஒரு கிரைம்.

 

இவர்கள் குற்றத்தை செய்துவிட்டு கொல்லப்பட்ட நபரின் காரிலேயே  தப்பிக்க முயற்சித்திருக்கிறாரகள். அத்துடன் குற்றவாளிகள் அவர்களுடைய மொபைலையே பயன்படுத்தி கொண்டிருந்திருக்கக்கூடும்.

இப்போது குற்றம் புகாராக பதிவானவுடன் முதலில் காரை தேடுகிறார்கள், கார் டிரைவரை தேடுகிறார்கள், டிரைவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது அவர் ஆந்திராவில் இருப்பதாக சிக்னல் காட்டும்போது, ஒன்னும் ஒன்னும்  இரண்டு என கணக்கு தெளிவாகிவிடுகிறது.

இதை சவுக்கு சங்கர் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் இது ஒரு கான்ஸ்டேபிள் புலனாய்வு செய்துவிடக்கூடிய வழக்கு. அதற்குத்தான் இவ்வளவு பில்டப்.

இதேபோல் இன்னொரு வழக்கையும் இதற்குமுன் படித்திருக்கிறேன். வேளேச்சேரி என நினைக்கிறேன். அங்கே ரயில் டிக்கட் கவுண்டர் ஊழியரை கட்டிபோட்டுவிட்டு கொள்ளையர்கள் பணத்தை திருடிவிட்டதாக புகார். அந்த புத்திசாலி ரயில்வே ஊழியருக்கு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இருக்கும் என்பதுகூட தெரியவில்லை.

புகார் வந்தவுடன் ரயில்வே போலீசார் கேமராவை ஆராய்ந்திருக்கிறார்கள். கொள்ளையர்கள் யாரும் வந்தமாதிரி அதில் பதிவாகவில்லை. அந்த ஊழியருடைய மனைவி மட்டும் வந்து போயிருக்கிறார். போகும்போது ஒரு பையை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்.

சந்தேகப்பட்டு அந்த ஊழியரை முறையாக விசாரிக்க, கணவனும் மனைவியும் சேர்ந்து நடத்திய கொள்ளை நாடகம் என புரிந்துபோனது. 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார் என ரயில்வே போலீஸ் தற்பெருமை அடித்துக்கொண்டது.

அப்போது தென்மண்டல ரயில்வே டி ஐ ஜி இவர்களுக்கு இப்படி விரைவாக துப்பு துலக்கிய போலீசாருக்கு 150 ரூபாய் பரிசு வழங்கியதாகவும் செய்தி படித்தேன்.

உண்மையில் இந்தியாவில் எல்லா போலீசும் இப்படிதான்.  இது போன்ற உப்புமா கொள்ளையர்களைத்தான் 6 மணிநேரத்தில் பிடிப்பார்கள். குற்றவாளிகள் விரைவாக பிடிபட்டனர் என்றால் அதுவும் போலீசின் பிரஸ்மீட் என்றால் நீங்கள் புரிந்துகொள்ளலாம், அங்கே குற்றவாளி தன்னுடைய விசிட்டிங்கார்டை போட்டுவிட்டு போயிருக்கிறான் என்று.

ஆனால் உண்மையான கொள்ளையர்களை பிடிக்க இவர்கள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே பிடித்தாலும் உடனடியாக கைது செய்யப்பட்டதை கணக்கில் காட்டவும் மாட்டார்கள், பிரஸ் மீட் நிச்சயம் இருக்காது.

தொடர் குற்றவாளிகள் பெரும்பாலும் கொள்ளையடித்ததில் ஒரு பகுதி விற்று செலவு செய்திருப்பார்கள், மீதி நகைகளை பல பகுதிகளாக பிரித்து புதையல் வைப்பார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு ரெகவரி தேடிப்போக வேண்டும். திருட்டு நகையை வாங்கிய வியாபாரி இங்கே கணக்கில் வராமல் இருக்க, அவர்கள் வீட்டில் தேவையான அளவு `காபி` குடிக்க வேண்டும்.

ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டான் என தெரிந்தாலே மேலே உள்ள அதிகாரிகள் `என்னய்யா நல்ல கலக்க்ஷன் போலிருக்கு, இந்த பக்கம் கொஞ்சம் கவனி` என பிரஷர் வரும். இது ஒரு தலைவலி.

சமீபத்தில்  சவுக்கு சங்கர் ஒரு  தகவலை சொன்னார். பொன். மாணிக்கவேல் ஒரு குற்றவாளியை ரெகவரிக்காக நானே அழைத்துபோகிறேன் என கொண்டுபோனாராம். வழக்கமாக இதற்கெல்லாம் அதிகாரிகள் போகமாட்டார்கள். இவர் வாலண்டரியாய் போய் ரெகவரியை அவரே வைத்துக்கொண்டாராம்.

இங்கே வருவாய் பகிர்வு இருந்தாலும் பரவாயில்லை, வருவாயே போய்விட்டது என்ற நிலைமை கீழ்மட்ட போலீசாருக்கு. அப்படி இருக்கிறது தமிழ்நாடு போலீஸ். 

நேபாளத்தை சேர்ந்த இந்த கொள்ளையர்கள் இங்கே எதையும் விற்கவும் இல்லை, புதையலும் போடவில்லை. எனவே நகை பணம் என எதிலும் கைவைக்கமுடியாது. எல்லாத்தையுமே கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். போலீசாருக்கு இங்கே வடை போச்சே வருமானம் போச்சே என்ற  நிலைமை. எனவே இதுபோன்ற குற்றங்களில் போலீசாருக்கு கிடைக்கும் குறைந்தபட்ச லாபம் ஒரு பிரஸ் மீட் வைத்து  நாங்கள் திறமைசாலி என காட்டிக்கொள்வதுதான். அதுதான் நடந்திருக்கிறது.

மேலே சொன்ன சம்பவத்தை தவிர்த்து சமீபகாலமாக வரும் செய்திகளில் பெரும்பாலும் இவர் மீது 11 வழக்குகள் இருக்கிறது அவர் மீது அத்தனை, என பல குற்றவாளிகளின் சாதனை தெரிகிறது. அந்த தொடர் குற்றவாளிகள் கைது செயப்பட்டவுடன் போலீசாருக்கு வருமானத்தை வாரி தந்துவிடுவதால், அது ஒரு செய்திக் குறிப்பாகத்தான் பத்திரிகையில் வரும். பிரஸ்மீட் இருக்காது. சில செய்திகளில் குற்றவாளிகளின் முகத்தையும் மறைத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு ஒரு நன்றி விசுவாசம். 

பான்கார்டை ஆதாருடன் இணையுங்கள் அந்த கார்டை இத்தோடு இணையுங்கள் என கழுத்தில் கத்தி வைக்கும் அரசு, குற்ற செயல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் என ஏன் கட்டாயப்படுத்துவதில்லை? அப்படி  செய்தால் ஒரு நபர் கைது செய்யப்படும்போது இந்தியா முழுக்க உள்ள அவருடைய ஜாதகம் போலீசாருக்கு  உடனடியாக தெரிந்துவிடும்.

10 வருடம் முன்பு நான் ஜெயிலில் இருந்தபோது சில கைதிகள் ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால், மற்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு `நான் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு புழலில் இருக்கிறேன்` என தகவல் சொல்வார்கள். அந்த கைதிகளுக்கு அதில் ஒரு லாபம் இருக்கிறது, அதனால்தான் உடனடியாக தகவல் சொல்வார்கள்.

அதாவது இப்படிப்பட்ட தகவல்கள் அந்த போலீசாருக்கு தெரியாது. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் திறமையாக இந்திய போலீஸ் இருக்கிறது. இதை இவர்கள் சரி  செய்யமுடியும். ஆனால் செய்யமாட்டார்கள்.

நான் லாட்டரி வியாபாரம் செய்யும்போது மத்திய அரசு லாட்டரியை தடை செய்ய யோசிப்பதாகவும் அதற்காக மக்களின் கருத்தை கேட்டது. எனக்கு தெரியும் லாட்டரி குடியைவிட மோசமானது என்று. அதேசமயம் தடை செய்துவிட்டால் எனக்கு வருமானம் என்ன ஆவது. எனவே நான் அமைதியாக இருந்தேன்.

இதே சூழ்நிலைதான் இங்கே போலீசாருக்கும். தற்போது ஒரு நபர் ஒரு வழக்கில் பிடிபட்டு, இவர்கள் இணையத்தில் சரிபார்க்கும்போது அவர் மீது பல வழக்குகள் இருக்கின்றன என தெரிந்துவிட்டால், இதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அது சிக்கலில் மாட்டிவிடும். அதாவது பெயில் மறுக்கப்படலாம்.

தொடர்ந்து பெயில் மறுக்கப்படும்போது ஒரு கட்டத்தில் குற்றவாளி பொறுமையிழந்து, `அய்யா நான் 200 பவுன் ரெகவரி கொடுத்தேன், இன்னும் நிறைய கொடுத்தேன், போலீஸ் பாதியை சுட்டுட்டாங்கனு` நீதிமன்றத்தில் போட்டுக்கொடுத்துவிடுவார். அதாவது என் தாலியை நீ அறுத்தால் உன் வண்டவாளத்தை நான் அறுத்துடுவேன் என்பது கைதிகளின் நீதி.

எனவே இங்கே குற்றவாளிகளை கைது செய்யப்படவேண்டும், அதேசமயம் அவர்களுக்கு விரைவில் பெயிலும் கிடைக்கவேண்டும் என்பதுதான் போலீசின் கொள்கை. பத்திரிகையாளர்களுக்கு இவர்கள் மீது 15 வழக்குகள் இருக்கிறது இரண்டு முறை குண்டர் சட்டத்தில் இருந்தார் என்று விலாவரியாக செய்தி அனுப்புவார்கள். ஆனால் நீதிமன்றத்தில் அவர்கள் கொடுக்கும் தகவலில் இது சுருக்கமாக முழு தகவலும் இல்லாமல் இருக்கும்.

நீதிபதி நினைத்தால் மேலும் விவரம் கேட்டு உண்மையை கண்டுபிடிக்கலாம். ஆனால் பாவம் அவருக்கும் பிள்ளைகுட்டிகள் இருக்கும். வெளியில் கிடைக்கும் `காபி` சுவையாக இருக்கும். எனவே போலீசார் சொல்வதை மட்டும் கேட்டு பெயில் கொடுத்துவிடுவார். 

ஒருவேளை `என்ன சார், ஏற்கனவே நிறைய கேஸ் அந்த ஆள் மேல இருக்கு, அவன் திருந்தவே மாட்டான். அவனுக்கு  ஏன் பெயில் கொடுத்தீங்கன்னு?` நீதிபதியை கேட்டால், `அப்படியா போலீஸ் இதப்பத்தி ஒன்னும் சொல்லலியே, `அப்ஜக்ஷன் இருக்கான்`னு கேட்டேன் `இல்லன்னாங்க அதனால் கொடுத்தேன்`ன்னு சமாளிக்கலாம்.

இதுவே இதற்கென ஒரு இணையதளம் இருந்து, நீதிபதியே அந்த கைதியின் ஆதார் எண்ணை இணையத்தில் சரிபார்க்கும்போது அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என தெரிந்தால், அதன்பிறகு அந்த கைதிக்கு பெயில் கொடுக்கமுடியாது. இது நீதிபதி, போலீசார், வக்கீல் என எல்லோருடைய வருமானத்தையும் பதம் பார்த்துவிடும். இந்த மும்மூர்த்திகளின் வருமானம் போய்விடும் என்பதைவிட, கிரிமினல்கள் உள்ளே போய்விட்டால் அது அரசியல்வாதிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும்.

இந்தியாவில் புல்லட் டிரைன் வேகமாக பறக்கலாம், 8 வழிப்பாதையில் கார்கள் ராக்கெட் வேகத்தில் கூட ஓடலாம், ஆனால் நீதிமன்றங்களில் மட்டும் எந்த சீர்திருத்தமும் வராது. அது வரும் ஆனால் வராது என்ற வகை. வேற என்ன சொல்றது?

0 comments:

Post a Comment