!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, May 9, 2022

புல்லட் டிரைன் - 3

அந்த காலத்தில் ஒரு அந்தணர் இருந்தார். அவருக்கு சிவனுக்கு கோவில் கட்டவேண்டும் என ஆசை. ஆனால் கையில் பணமில்லை. இதுபோன்ற நபர்கள் கற்பனையிலேயே தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். எனவே அவர் மனசுக்குள் கோவில் கட்டினாராம்.

அதேநேரம் ஒரு மன்னர் ஆடம்பரமாக சிவனுக்கு கோவில் கட்ட, இரண்டுக்கும் கும்பாபிஷேகம் ஒரே நாளில் வந்தது. சிவன், பணத்தைவிட பக்திதான் பெரிது என மன்னனை புறக்கணித்து இந்த மனக்கோவிலுக்கு வந்ததாக ஒரு கதை.

இனி இந்த கதை நமக்கு தேவையில்லை. நானும் அந்த அந்தணரை போல கற்பனையில் நிழல் ரயில்வே அமைச்சராக மாறி எந்த ஆணியை பிடுங்காலம், எங்கே புதிதாக ஆணி அடிக்கலாம் என யோசித்தேன்.

ரயில்வேவை எப்படி தனியாருக்கு விடுவது என சிந்தித்தபோது நிறைய தலைவலிகள்தான் வந்தது. பஸ் ஓட்டுவதைபோல் இது அவ்வளவு எளிதாக  இல்லை. அங்கே பர்மிஷன் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம். இங்கே ஏகப்பட்ட சிக்கல்.

இந்த பதிவை எழுத ஆரம்பித்த பிறகுதான் இது குறித்து நிறைய செய்திகளை படித்தேன். பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள் என தெரிகிறது. அதாவது புள்ளி வைத்துவிட்டார்கள், ஆனால் எப்படி கோலம் போடுவது என்பதுதான் ரயில்வே அமைச்சருக்கு தெரியவில்லை. இவர்கள் போடும் கண்டிஷன் முறையால் தனியார் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.   

ஒரு ரயிலில் குறைந்தது 16 பெட்டி இருக்கவேண்டும்; ரயில்வேயிடம்தான் பெட்டியை லீசுக்கு எடுக்க வேண்டும்; எடுத்தால் 5 வருடம் மொத்தமாகத்தான் எடுக்க வேண்டும் என நிபந்தனை நீள்கிறது.

சரவணபவன் ஓட்டல்களை போல் 2 இட்லி 22 சட்னி என அவசியமில்லாத சட்னி வைத்து ஐம்பது ரூபாய்க்கு பில் போடுவதைபோல் இருக்கிறது இந்த நிபந்தனைகள். அதிக பெட்டிகள் இருந்தால் லாபம் அதிகம் என்றாலும், கண்டிஷன் என்றால் எவனும் வரமாட்டான்.

இங்கே ரயில் பெட்டியை சில வருடங்கள் ரயில்வே கொடுக்கலாம். அதன்பிறகு பெட்டி டாடா நானோ மாதிரி வேணுமா அல்லது ரோல்ஸ் ராய் மாதிரியா என கேட்டு செஞ்சு கொடுக்கலாம், அல்லது நீங்களே செய்துக் கொள்ளுங்கள் என விட்டுவிடலாம்.

வருவாய் பகிர்வு மற்றும் இதற்கு அதற்கு என பல கட்டணங்கள் என செய்திகள் சொல்கிறது. இதில் வருவாய் பகிர்வு என்பது மிகவும் அபத்தமான முறை. டிக்கெட் கட்டணத்தில் 30 -50 சதவிகிதம் வருவாய் பகிர்வு என்றால், தனியார் துறையினர் இங்கே அரசின் தலையில் மிக ஈசியாய் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

அதாவது டிக்கட் விலை 500 ரூபாய் என்றால் அரசுக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்பதால், டிக்கட் விலை 100, இதர சர்விஸ் சார்ஜ் 400 என மாற்றிவிடுவார்கள். அரசுக்கு இந்த 100 ல் தான் வருவாய் பகிர்வு கிடைக்கும். எனவே ஒரு பெட்டிக்கு மாசம் இவ்வளவு துட்டு என்பதுதான் சரியாக இருக்கும். 

அதேசமயம் என்னதான் அம்பானியாக / அதானியாக இருந்தாலும், இது புது துறை என்பதால் இங்கே தொழிலை புரிந்து கொண்டு விரிவுபடுத்த காலம் தேவை. அதிலும் இந்த தனியார் ரயில்வே பல வகைகளில் அரசின் உதவியை சார்ந்திருக்கும்.

நாளை புதிய அரசு வந்து, அவர்களுக்கு பிடிக்காத நபர்களுக்கு, `நைட் 12 மணிக்கு பிரைம் டைம்ல உங்களுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன்` என குண்டை தூக்கிப்போடலாம். உங்களுக்கு தேவையான முக்கியமான சேவைகளை மிகவும் தாமதமாக வழங்கலாம். எனவே 5 வருட ஒப்பந்தம் என்றால் எந்த நாயும் உள்ளே வராது.

ஆரம்பகட்டத்தில் 6 மாதம் - 1 வருடம் சோதனை ஓட்டம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். சரிப்பட்டால் ஓட்டுவார்கள் இல்லையென்றால் கிளம்புவார்கள். இங்கே இன்னொரு சிக்கல் என்னவென்றால் டிராவல் பஸ் போல் ஏகப்பட்டபேரை களத்தில் இறக்குவதும் பலனளிக்காது.

இங்கே எந்த தனியார் களத்தில் இருந்தாலும் அவர்கள் ஒரு பிராண்ட்  உருவாக்க நினைப்பார்கள். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். பொதுவாக ஊருக்குள் இருக்கும் ஓட்டல்களில் உணவு ஓரளவு தரமாக இருக்கும். காரணம் அவர்கள் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைப்பார்கள். ஆனால் பஸ் நிலையங்களில் இருக்கும் கடைகளை கவனியுங்கள். அங்கே தரமும் இருக்காது விலையும் தாறுமாறாக இருக்கும். இங்கே பஸ் நிலையங்களில் சாப்பிடுபவர்கள் வெளியூர்காரர்கள். அவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்காது.

அப்படி ஒரு நிலைமை தேவை எனும்போது, இங்கே 5-10 தனியார் ரயில்வே மட்டுமே அனுமதி என இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தரமான சேவையின் மூலம் பிராண்ட் உருவாக்கி மக்களை கவரமுடியும்.

தனியார் துறை குதிரையைப்போலத்தான், வேகம் இருக்கும், அதற்காக கடிவாளம் இல்லாத  குதிரை மீது சவாரி செய்யமுடியுமா? எனவே இங்கேயும் ஒரு கடிவாளம் தேவை. அதற்கு என்ன செய்யலாம்? பிக் பாஸ் பார்முலாவை இங்கே அறிமுகப்படுத்தலாம்.

ஒரு வருடம் கழித்து மக்களிடையே (ஓட்டெடுப்பு) கருத்து கேட்டு விலையிலும் சேவையிலும் யார்  மோசமாக இருக்கிறார்களோ அவர்களை எலிமினேட் செய்யலாம். அல்லது அவர்களுக்கு மேலும் ரயில்தடம் வழங்கப்படாது எனவும், அவர்கள் குறைகளை சரி செய்யாவிட்டால் அடுத்த முறை எலிமினேஷன்தான் என கழுத்தில் கத்தியை வைக்கலாம்.

இப்படி வருடம் ஒருவர் எலிமினேட் என்றால் 5 ஆண்டுகளில் 5 பேர் காலி. இனி மீதி இருப்பவர்கள் தரமானவராக இருப்பார்கள் என நம்பலாம். அதோடு நிற்காமல் வருடா வருடம் ஒரு வைல்ட்கார்டாக யாரையாவது போட்டு, இந்த வருடமும் எலிமினேஷன் உண்டு என குண்டை தூக்கி போடலாம். இது அவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கும்.

இங்கே நமக்கு இன்னொரு அனுபவமும் இருக்கிறது. தொழிலில் குறைந்த லாபத்தில் வியாபாரம் செய்து வாடிக்கையாளரை தக்க வைப்பது நல்ல வியாபாரமுறை. ஆனால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்கிக்கொண்டு போட்டியாளர்களை ஒழித்தது.

அதுபோல் நடக்காமல் இருக்க, ஒரு நிறுவனம் நஷ்டத்தை காட்டினால் அவர்களுக்கு மேலும் வழித்தடம் கிடையாது, அதுமட்டுமின்றி இந்த நிலைமை தொடர்ந்தால் கொடுக்கப்பட்ட வழிகளும் லாபகரமாக ஓட்டும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என கண்டிஷன் வைக்கலாம்.  இது மொள்ளமாரிகளுக்கு ஆப்பு வைத்துவிடும். அப்படியும் அவர்கள் ஏதாவது செய்வார்கள். அதற்கும் ஒரு வழி நாம்  கண்டுபிடிப்போம்.     

தற்போதைய சூழ்நிலையில் ரயில்வே சினிமா தியேட்டர் போல் இருக்கிறது. இங்கே 300 ரூபாயில் ஒரு குடும்பம், ஒரு படம்தான் பார்க்கலாம். தனியார் உள்ளே வந்தால் அது மக்களுக்கு டிவி போல் ஆகிவிடும். 300 ரூபாயில் 30 படம் பார்க்கலாம்.

நான் இங்கே சொல்லவருவது 30 படம் பார்ப்பதை அல்ல. ஒரு டிரைனில் 1000 பேர் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சந்தை. இதை முறையான மார்க்கெட்டிங் உத்தியாக பயன்படுத்தி விளம்பரங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் சம்பாதிப்பார்கள். அவர்கள் அப்படி சம்பாதிக்க வேண்டுமென்றால் மக்கள் இவர்கள் ரயிலில் வரவேண்டும். அதனால் மக்களுக்கு கட்டணத்தில் கணிசமாக குறையும் வாய்ப்பிருக்கிறது.

மேலே சொன்னது சில உதாரணங்கள். இன்னும் நிறைய நடக்கலாம். சாத்தியங்கள் தெரிகிறது.

மேலும் வரும்..   

0 comments:

Post a Comment