இந்த வாரம் செய்திகளில் அங்கே இங்கே என மேய்ந்ததில் கவனித்தவை இவை.
துருக்கி பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால், `பாய்காட் துருக்கி` என ஒரு நடவடிக்கை இந்திய தேசபக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்காக நம்ம ஆட்கள் செய்யும் அளப்பறைகள்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் அங்கே இருக்கும் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் ரொம்பவே கொழுப்பு உள்ளவர்கள் என இங்கே வட இந்திய மீடியாவில் வரும் கருத்தை கவனித்திருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவிலும் இந்த இந்தி பெல்ட் அல்லது இந்தி பேசும் மக்களும் அப்படித்தான் போலிருக்கிறது. பல வீடியோக்களை கவனித்தால் நமக்கே கோபம் வரும்.
பாகிஸ்தானுக்கு இந்த முறை சில எல்லைகளை தாண்டி போய் தக்க பாடம் புகட்டியாகிவிட்டது. தனிநபர்கள் ஆபத்தாக மாறினால் அவர்களை என்கவுண்டர் போட்டு கதையை முடிக்க முடியும். ஆனால் ஒரு நாட்டை வேரோடு அழிப்பது என்பது நடக்காத காரியம். எனவே இனி அவர்கள் மெல்ல மெல்ல திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் மற்ற வேலைகளை கவனிக்க வேண்டியதுதான்.
ஆனால் இந்த வடஇந்திய கொழுப்பு பிடித்த நபர்கள் சும்மா இருப்பதில்லை. பிரபல சேனலாக இருக்கட்டும் அல்லது யூடூபராக இருக்கட்டும், எந்த வீடியோவை பார்த்தாலும் `நாங்க அந்த ஆணியை புடிங்கிட்டோம் இங்கே ஆணியை அடிச்சிட்டோம்னு` ஓவராக சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுல நம்ம ஊர் சில மேஜர்களும் அடக்கம்.
எதிரி நமக்கு சமமாக அல்லது நம்மைவிட பலமாக இருந்தால் அந்த வெற்றி ஒரு கவுரவத்தை தரும், ஆனால் வாயால் வடை சுடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் பாகிஸ்தானை அடிப்பதெல்லாம் ஒரு வெற்றியா? சீண்டினார்கள், ஒரு தட்டு தட்டியாகிவிட்டது. அவ்வளவுதான். இங்கே எதற்கு இந்த அலப்பறை. நான் பாகிஸ்தான் யூடியூபர் வீடியோக்களை நிறைய கவனிப்பேன். அங்கேயும் ஓரளவு நிதானமான குரல்கள் இருக்கின்றது. அவர்களை இப்படி மட்டம் தட்டுவதன் மூலம் அடுத்த தலைமுறையையும் நாம் வெறுப்போடு வளர்க்கிறோம். இது தேவையா?
அநேகமாக இதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் மிகவும் பிரபலமான பேட்ஸ்மேன்கள் இருவர் சொற்ப ரன்னில் அவுட்டாகி, 50 ரன்னில் 4 விக்கெட் என்றால் வரும் ஒரு பதபதைப்பை பாகிஸ்தான் ஆரம்பத்தில் காட்டிவிட்டது. ரஃபேல் மற்றும் வேறு சில விமானங்கள் டக் அவுட் ஆகிவிட்டதால் வந்த பதைபதைப்பு அது.
ஆனால் இந்தியா பெரிய நாடு அல்லவா. அடுத்து கைவசம் இருந்த மற்ற பிளேயர்களை களம் இறக்க இப்போது பாகிஸ்தானுக்கு ஜுரம் வந்தது. அதன்பின் பிரம்மாஸ் பாய, அது லொகேஷன் தெரியாம எங்கேயோ போய் விழுந்து அவங்களுடைய தண்ணி டேங்கில் ஓட்டை விழ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினால் அந்த 'துன்பச்செயல்' நடக்க அமெரிக்காவுக்கும் வேர்க்க ஆரம்பித்தது. அதன்பின் நடந்தது வரலாறு எனவே அது வேண்டாம்.
இந்த வடஇந்திய சேனல்களின்/யூடுபர்களின் ஆவேச வசனங்களுக்கு இன்னொரு காரணமும் இருக்ககூடும். தற்போது யூடுப் வந்து அது நல்ல வருமானத்தை கொடுப்பதால் அந்த வருமானத்துக்கு ஆசைப்பட்டு, தேசபக்தியை ஓவரா சக்கரை போட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். கவனிக்கவும் ஆபாசமும் தேசபக்தியும் நிச்சயமான பார்வையாளர்களை /வருமானத்தை கொடுப்பவை என்பதால் சகட்டுமேனிக்கு பல வீடியோக்கள் வருகின்றன. அவையெல்லாம் இந்தியாவின் பெருமையை பேசுகிறேன் என்று பாகிஸ்தானை கடுமையாக மட்டம்தட்டி போடப்பட்டவை. இது மிகவும் ஆபத்தானது. இவை நாகரிகத்தின் எல்லையை மீறுகின்றன.
நான் பிரதமராக இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகளில், சில மாதங்களுக்கு, யுத்த செய்தியை வீடியோ போட்டால் அந்த வீடியோக்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என யூடியூபுக்கு உத்தரவு போட்டுவிடுவேன். அதுக்கப்புறம் இந்த தேசபக்தியை காசாக்கிற நாய்ங்க எதுவும் வீடியோ போடாது.
இனி துருக்கி விஷயத்துக்கு வருவோம்.
எனக்கு துருக்கியை ஓரளவுக்கு பிடிக்கும். காரணம் மலேசியா, இந்தோனேசியா போன்று, இவர்களும் ஜனநாயகத்தில், மதச்சார்பின்மையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நாடு ஐரோப்பிய எல்லையில் இருப்பதால் அந்த காற்று இவர்கள் மீது பட்டு ஓரளவு தெளிந்திருக்கிறார்கள். மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் நார்மலாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய பக்கத்துக்கு வீட்டுக்காரன் வேறு மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக இருப்பதால், அதை பார்த்து இவர்களும் திருந்தியிருக்கிறார்கள்.
ஆனால் எந்த ஒரு முஸ்லீம் நாடும் சுற்றிலும் முஸ்லீம் நாடுகளால் சூழப்பட்டிருந்தால் அவர்கள் அவ்வளவு சீக்கிரம் திருந்துவதில்லை. அதாவது ஒரு அக்ரஹாரத்தில் வசிக்கும் பிராமணன் எப்போதும் நான் உசத்தி என்ற இறுமாப்பில் இருப்பான். ஆனால் அதே பிராமணன் ஒரு பல சமூகம் கொண்ட நகரங்களில் வாழும்போது மிக விரைவாக மாறிவிடுவான். காரணம் அக்ரஹாரத்தில் நாலாப்பக்கத்திலும் அவாட்களாக இருக்கும்போது அங்கே நீங்கள் சீர்த்திருத்தம் பேசினால் சுற்றி இருப்பவர்கள் உங்களை கிண்டல் செய்து மட்டம் தட்டி உங்களை அவர்கள் வட்டத்துக்கு இழுத்துவிடுவார்கள்.
நகரங்களில் இப்படி அகம்பாவத்தோடு இருந்தால் சுற்றி இருப்பவர்கள் உங்களை உதாசீனப்படுத்திவிடுவார்கள். எனவே நீங்கள் எந்த இடத்தில இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சிந்தனை மாறும். அந்த வகையில் துருக்கியும் ஒரு நாகரிகமான நாடுதான்.
பிரச்சினை என்னவென்றால் தமிழ்நாட்டில் எப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு அந்த இடத்தை பிடிக்க நடிகர் விஜய் உட்பட பலர் முயற்சி செய்கிறார்களோ, அதேபோல் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு தலைமை தேவைப்படுகிறது.
கிறிஸ்துவர்களுக்கு அமெரிக்கா இருக்கிறது. இந்து, புத்த மத நாடுகளுக்கு பிரச்சினை இல்லை. ஜனநாயகம் சகிப்புத்தன்மை எல்லாம் இங்கே இருப்பதால் நமக்கு கிறிஸ்துவ நாடுகளுடன் பெரிய முரண்பாடோ அச்சமோ இல்லை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு அது இருக்கிறது. ஆனால் தலைமை இல்லை.
சவூதி அரேபியா, ஈரான் என பலர் வந்து முயற்சி செய்து ஒதுங்கிவிட்டார்கள். இப்படி யாராரோ வந்து காணாமல் போனதால் துருக்கிக்கு அந்த இடத்தை பிடிக்க ஆசை.
முஸ்லிகளுக்கு எங்கேயாவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து கருத்து சொல்வதும், தலையிடுவதும் என துருக்கி ஏதோ ஒரு அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அதில் இஸ்ரேல்-காஸா போர் வந்து மாட்டிக்கொள்ள, துருக்கிக்கு மேலும் நெருக்கடி.
நேட்டோ உறுப்பினர் என்பதால் துருக்கியால் இஸ்ரேலை ஒன்னும் செய்யமுடியாது. இஸ்ரேல் அமெரிக்காவின் அறிவிக்கப்படாத 51 வது மாநிலம் என்பது துருக்கிக்கு நன்றாகவே தெரியும். எனவே இஸ்ரேல் விஷயத்தில் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்ததால் இஸ்லாமிய உலகில் துருக்கிக்கு அந்த அளவுக்கு மரியாதை இல்லை. கிட்டத்தட்ட இஸ்லாமிய நாடுகள் பிஜேபி -அதிமுக கூட்டணி போல் இருக்கிறது. இங்கே யாரு தலை என்றே தெரியல.
இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பாகிஸ்தான் போர் சூழல் வந்ததால் ஒரு இஸ்லாமிய நாட்டுக்கு நான் கை கொடுத்தேன் பார் என மார்தட்டிக்கொள்ளும் சூழலாகவும் இஸ்லாமியர்களின் ரட்சகனாகவும் காட்டிக்கொள்ள துருக்கி முயற்சிக்கிறது.
இன்னொரு பக்கம் சவுதிக்கு எதிராகவும் அரசியல், ஈரானுக்கு எதிராகவும் அரசியல் என இருப்பதால் தன்னுடைய கூட்டணிக்கும் நாலு பேர் தேவை என துருக்கி எதிர்பார்க்கிறது, அதில் மலேசியா, இந்தோனேசியா என ஒத்த கருத்துள்ள நாடுகள் சேர்ந்தாலும், அவர்களுக்கு பலமான ராணுவம் இல்லை, மற்றும் தூரத்தில் இருப்பதால் அவசரத்துக்கு அவர்களால் கை கொடுக்கமுடியாது. ஆனால் பாகிஸ்தான் நெருக்கத்தில் இருப்பதாலும், அணு ஆயுதம் இருப்பதாலும், பாகிஸ்தான் இந்த கூட்டணிக்கு தேவை என துருக்கி நினைக்கிறது.
ஆனால் பாகிஸ்தான் என்ற நாடு எதிலேயும் சேர்த்துக்கொள்ள முடியாத ஏகாம்பரம் என்பதை துருக்கி விரைவில் உணரும். காரணம் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை துருக்கி வழங்கலாம். அது யுத்த காலங்களில் மட்டும் பயன்படும். ஆனால் வாழ்கையை ஓட்ட பணம் வேண்டும். அதை சவூதி உட்பட்ட அரபு நாடுகள்தான் கொடுக்கும்.
எனவே அவர்களால் சவுதியையோ மற்றவர்களையோ பகைத்துக்கொள்ள முடியாது. சவூதி, ஈரானை எதிர்த்துதான் துருக்கியின் அரசியல் இருக்கிறது. எனவே இங்கே துருக்கியின் கனவுகளுக்கு பாகிஸ்தான் எந்த வகையிலும் உதவமுடியாது.
இஸ்லாமிய அரசியல் என்பது மிகவும் குழப்பமானது. அவர்கள் அமெரிக்காவை கடுமையாக எதிர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா சுமாரான எண்ணிக்கையில் ராணுவ தளம் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சவூதி, துருக்கி, ஈரான் என பல இஸ்லாமிய நாடுகள் தங்கள் எல்லையில் மிகப்பெரிய அளவில் மதில் சுவர் எழுப்பி சக இஸ்லாமிய நாடுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். அந்த லட்சணத்தில் இருக்கிறது இவர்களின் இஸ்லாமிய ஒற்றுமை. அப்படியென்றால் இஸ்லாமிய நாடுகளின் எதிரி யார்? ரொம்ப குழப்பமா இருக்கா? வேண்டாம்.. தாண்டிப் போய்விடுவோம்.
துருக்கி இந்தியாவை எதிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதை நம்ம ஊர் அறிவுஜிவிகள் சொல்லமாட்டார்கள்.
என்னதான் துருக்கி சவூதி மற்றும் ஈரானுடன் நார்மல் உறவில் இருந்தாலும் அவர்களுக்குள் யார் பெரியண்ணன் என்ற ஈகோ இருக்கிறது. இதில் இந்தியா சவுதி மற்றும் ஈரானுடன் நல்ல உறவில் இருக்கிறது. அதற்கு காரணம் இந்தியர்கள் கணிசமாக சவுதியில் இருக்கிறார்கள், மற்றும் சவூதி, ஈரானிடம் நாம் எண்ணெய் வாங்குகிறோம் என நடைமுறையில் பல காரணங்கள் இருக்கின்றன.
இங்கே கவனிக்க வேண்டியது, துருக்கியின் போட்டியாளரான சவூதி மற்றும் ஈரானுடன் நமக்கு நல்லுறவு இருக்கிறது. இதை துருக்கியால் ஜீரணிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி துருக்கியின் அந்த பக்கம் கிரீஸ் என்ற கிறிஸ்துவ நாடு இருக்கிறது. அவர்களுடனும் துருக்கிக்கு வாய்க்கால் தகராறு இருக்கிறது. அந்த கிரீஸுடன் இந்தியா நட்புறவு கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் கடந்த வருடம் மோடி அங்கே போனபோது அவருக்கு அந்த நாட்டின் ஒரு உயர்ந்த விருதை கொடுத்தார்கள். எந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருந்தால் இப்படி ஒரு விருதை இந்திய பிரதமருக்கு கொடுப்பார்கள் என்பதை நாமே புரிந்துகொள்ளவேண்டும். அந்த கடுப்பு வேறு துருக்கிக்கு.
இப்படி ஒரு பக்கம் காசாவில் பட்ட அவமானத்தை துடைக்க வேண்டும், துருக்கியின் எதிரிகளுடன் கூடி குலாவும் இந்தியாவையும் மட்டம் தட்ட வேண்டும் என சில நெருக்கடிகள் இருந்ததால் துருக்கி இப்படி செய்திருக்கும் என நான் நினைக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் துருக்கி தன்னை போலவே பாகிஸ்தானை ஒரு ஜனநாயக நாடாக மாற்றினால் சந்தோசம். அல்லது ஆற்றில் அடித்து கொண்டு போகும் நபரை காப்பாற்றுகிறேன் என ஆழம் தெரியாமல் காலைவிட்டு இவர்களும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதை துருக்கி உணரவேண்டும்.
0 comments:
Post a Comment