!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, January 9, 2011

பொய் - சிறுகதை

அந்த ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் தேடி அமர்ந்தான்.காலையில் சாப்பிடாததால் பசி அதிகமாயிருந்த்தது.

எல்லாம் நேற்று நண்பர்களுடன் சினிமாவுக்கு போனதால் வந்த வினை. `ஆபீஸில் ஓவர்டைம், வர லேட்டாகும்`  என்று ஜனனியிடம்  பொய் சொல்லியிருந்தான். ஆனால், சினிமாவில் ஊன்றி போனவன், கால் வந்ததை கவனிக்கவில்லை. ஆபீஸுக்கு அவள் எதேச்சையாக போன் போட... குட்டு வெளிப்பட்டுவிட்டது.

`இந்த சின்ன விஷயத்துகெல்லாம் பொய் சொல்றீங்களே! அப்ப நீங்க எவ்ளோ விஷயத்தை என்கிட்டே மறச்சிருப்பீங்க?` - இதுதான் சண்டைக்கு காரணம்.

இரவு ஆரம்பித்த சண்டை மறுநாள் காலையும் தொடர்ந்தது. இன்று மனைவியுடன் கோவிலுக்கு போவதாக பிளான். ஆனால்  கோபத்தில் சாப்பிடாமல்,  எதுவும் சொல்லாமலேயே ஆபிசுக்கு கிளம்பினான். லஞ்ச் பேக்கையும் எடுக்கவில்லை
      
 `உங்களுக்கு என்ன சார் வேணும் ?` - எதிரே சர்வர்.

பசி வயித்தை கிள்ளியது. `ஒரு சிக்கன் பிரியாணிப்பா.`

எதிரே ஒரு வயதான பெரியவரும், ஒரு சிறுவனும் அமர்ந்திருந்தார்கள். பேரனாயிருப்பான். வறுமை உடலிலும், உடையிலும் தெரிந்தது.

`தாத்தா, எனக்கும் பிரியாணி சொல்லு தாத்தா.`

`டேய், சும்மா இருடா. நான் காசு கொண்டுவரல` என்று பேரனை அதட்டிவிட்டு, சர்வரை பார்த்து `எங்களுக்கு ரெண்டு தயிர் சாதம் போதும்ப்பா` என்றார்.

பேரன் கேட்டு வாங்கிகொடுக்க முடியாத குற்ற உணர்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அந்த சிறுவனின் முகமும் வாடிப்போயிருந்தது.

ரகுவுக்கு தான் வறுமையில் உழன்ற காலங்கள் நினைவுக்கு வந்தன.  

`மூணு சிக்கன் பிரியாணிப்பா; தயிர்சாதம் வேணாம்` -ஆர்டரை மாற்றினான்

புரிந்து கொண்ட அந்த பெரியவர், `தம்பி, அதெல்லாம் வேணாங்க. சின்ன பையன்... அவன் அப்படித்தான்.` என்று சமாளித்தார்.

`இன்னிக்கி எனக்கு பிறந்த நாள். பிரண்ட்சை எல்லாம் வரசொல்லியிருந்தேன். இன்னும் காணோம். அந்த விருந்ததான் நான் உங்களுக்கு தரேன். கூச்சப்படாம சாப்பிடுங்க.

அந்த பெரியவர் சமாதானமாகாமல் தயக்கத்துடனேயே சாப்பிட்டார்.

அந்த சிறுவனின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த பெரியவரும் போகும்போது நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்.

மனம் சற்றே லேசாயிருந்தாலும்,  சாயங்காலம் வீட்டுக்கு போகும்போது குற்ற உணர்ச்சி தலைதூக்கியது. `மதியம் ஜனனி சாபிட்டாளா... அவளை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து சென்றிருக்க வேண்டும்` - நினைத்துக்கொண்டே வீடு திரும்பினான்.

அவன் நினைத்த மாதிரியே மதிய உணவு அப்படியே இருந்தது.

`ஜனனி... வா சாப்பிடலாம். மத்தியானமும் நான் சாப்பிடல...`  -சமாதானகொடியை தூக்கினான்.

அங்கேயும் கோபம் குறைந்திருந்தது.

`தேவையில்லாத பொய் சொல்றதாலதான் பிரச்சினையே உருவாவுது`

 பெண்கள் வாய் சும்மா இருக்காதோ! என்று நினைத்தவன்,  சட்டென்று சொன்னனான், ``நான் பொய் சொல்லுவேன்; இன்னைக்கும் ஒரு பொய் சொன்னேன்.``    
`                       ௦௦
`நான் பொய் சொல்லுவேன்!` என்று உறுதியாய் சொன்ன கணவனை ஆச்சரியமாக பார்த்தாள். இது அவருடைய இயற்கையான குணம் இல்லையே! கணவனை கேள்விக்குறியோடு  பார்த்தாள்.

மதியம் நடந்ததை அவளிடம் விவரித்தவன், `எனக்கு இன்னைக்கி பிறந்த நாள்ன்னு அந்த பெரியவர் கிட்ட பொய் சொன்னேன்` என்றவன், `காலையில நான் உனக்கு பிறந்த நாள் சொல்லல இல்ல... சாரி டியர்... ஹேப்பி பர்த்டே டு யூ...` வாழ்த்தினான்.     .

முறைத்தவள், `நீங்க மறுபடியும் பொய் சொல்றீங்க... `மதியம் சாப்பிடல்லே`ன்னு சொன்னதும் பொய்தானே!` என்றாள்  

ஆனால் இந்த பொய்களுக்காக அவள் கோபப்படவில்லை.


0 comments:

Post a Comment