மீண்டும் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை படிக்கும்போது என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. நான் தமிழன் என்றும் அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்படவேண்டும் போலிருக்கிறது.
செத்துப்போன அந்த மீனவனுக்காக நான் வருத்தப்படவில்லை. ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக நினைத்து கொள்வோம். அது பிரச்னையில்லை. இன்னொரு சுனாமி வந்தாலும் வரட்டும். அது ஒட்டுமொத்தமாக தமிழக மீனவர்களை வாரிக்கொண்டு போகட்டும். ஒரு நாள் முழுக்க அவர்களுக்காக ஒப்பாரி வைத்துவிட்டு நாம் அதையும் மறந்துவிடலாம். ஆனால் இந்த மீனவர்களின் சாவு அந்த வகையை சேர்ந்ததா? இங்கே செத்துப்போனது ஒரு மனிதனின் உயிர் அல்ல, இந்தியாவின் மானம் என்பது ஏன் இந்த மானம் கெட்ட மத்திய மாநில அரசுகளுக்கு உரைக்க மாட்டேங்குது?
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசின் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்தியாவை சுற்றிய அனைத்து அண்டை நாடுகளும் நம்மிடம் கருத்து வேறுபாடு கொண்டிருக்க, யாரையும் பகைத்துகொள்ள முடியாத நிலைமை. ஒரு எதிரியை உருவாக்குவது பிரச்சினை இல்லை. ஆனால் அந்த எதிரியும் நமது இன்னொரு எதிரியும் கூட்டு சேர்ந்தால் அவர்களின் பலம் அதிகரிக்கும். இதை உணர்ந்துதான் நாம் நடைமுறை வாழ்க்கையில் கூட அவசரப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. எனவே இலங்கை விஷயத்தில் இந்தியா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது.
ஆனால், ஒரு இந்திய பிரஜையை இன்னொரு நாட்டு ராணுவம் சுட்டு கொன்றால், இங்கே இந்தியா அடக்கி வாசிக்கவேண்டிய அவசியம் இல்லையே. இது இந்தியாவின் பலவீனத்தை அல்லவா காட்டுகிறது. `இது போன்ற அத்து மீறல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது. விளைவுகள் கடுமையாக இருக்கும்` என்று எச்சரிக்க வேண்டாமா? இங்கே மத்திய அரசும் சொரணை அற்ற அரசாக தெரிந்தாலும், அவர்களுக்கு பல மாநில பிரச்சினைகளில் இதுவும் ஓன்று. எனவே, தமிழக அரசுதான் தமிழர்களின் மரியாதையை காப்பாற்ற, மத்திய அரசை கடுமையாக எச்சரித்து, தேவையான, உறுதியான நடவடிக்கையை எடுக்க வைக்கவேண்டும். ஆனால் திமுக ஆட்சியின் இதுநாள் வரையிலான வரலாறை பார்த்தால், பதவியை தவிர வேறு எதைபற்றியும் சிந்திக்காதவர்கள் இவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒருவன் தவறு செய்தால், அதற்கான தண்டனையை அவன் அனுபவித்தால் தான் அவன் திருந்துவான். எனவே, சுயநலத்துக்காக தமிழனின் மானத்தை காற்றில் பறக்கவிடும் இந்த அரசியல்வாதிகளை மக்கள் தேர்தலில் தண்டிக்காத வரையில் அவர்களும் திருந்தப் போவதில்லை, நாமும் தமிழர் என்று சொல்லிகொள்ளவும் முடியாது, தலை நிமிர்ந்து நடக்கவும் முடியாது.
1 comments:
நன்றி நண்பரே..
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
Post a Comment