இந்த வாரம் எனக்கு கோபத்தை வரவழைத்தது சில கிறிஸ்துவ பிரச்சாரகர்களின் செயல்கள். ஒரு பள்ளிக் கூடத்தின் முன் சிறுவர்களிடம் மத புத்தகங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மதப் புத்தகங்களை விநியோகிப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறுவர்களிடம் இதை விநியோகிப்பதை நான் நேரடியாக பார்த்தது இப்போதுதான்.
ஆன்மீகத்தை பொறுத்த வரையில் நான் மதில் மேல் பூனை. நிச்சயம் தீவிர மத ஆர்வம் கிடையாது. ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் ஈடுபாடு காட்டி தீக்கதிரை சந்தா கட்டி வாங்கியும் படித்திருக்கிறேன், அப்படியே அந்த கட்சியின் ஒரு மாநில மாநாட்டில் தொண்டனாகவும் போயிருக்கிறேன். எனவே நாத்திகனாகத்தான் இருந்தேன். இருந்தாலும் கடலில் மூழ்குபவன் அந்த கடைசி நேர பயத்தில் `இறைவா` என்று கத்துவதில்லையா, அதுபோல் வந்ததுதான் பக்தி. அதன் பிறகு இப்படியும் அப்படியும் தடுமாறி நான் இப்போது எந்த பக்கம் என்றே தெரியாத நிலை.
அதே சமயம் இது மத ஆர்வத்தினாலோ அல்லது எது உயர்ந்த மதம் என்ற ஆராய்ச்சிக்கான பதிவோ இல்லை. நான் கண்ட ஒரு காட்சி லாஜிக்கோடு ஒட்டாமல் அயோக்கியத்தனம் என்ற எல்லையையும் தொடுவதால்தான் இந்த பதிவு.