!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, November 14, 2011

கூடங்குளம்: கேள்விகள் அங்கே, பதில் இங்கே.


சிறை தொடர்பான இரண்டு செய்திகள் பற்றி பதிவு எழுத நினைத்தால் வழக்கம் போல் ஏதோ ஓன்று நம் சிந்தனையை ஆக்கிரமித்து அது குறித்த பதிவில் போய் முடிகிறது. இந்த முறை மீண்டும் கூடங்குளமே என் சிந்தனை ஆக்கிரமித்திருக்கிறது.

முக்கியமாக நான் அதற்கு ஆதரவாளனாக இருப்பதால் (கவனிக்கவும், வேறு வழி இல்லாத நிலையில்) அதிகம் படிப்பது அதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைதான். அவர்கள் ஏதாவது ஆதாரமான கருத்தை முன் வைக்கிறார்களா என்று கவனிப்பேன்.

ஆனால் வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல இவர்கள் சில வார்த்தைகளையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். விபத்து நடந்தால் இதில் பாதிப்பு அதிகம் என்பது கிட்டத்தட்ட் பேப்பர் படிக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் எதிர்ப்பாளர்களோ விபத்து நடக்கப் போகிறது என்று முடிவே செய்துவிட்டார்கள்.

மக்கள் எதிர்கிறார்களே என்று கைவிடவும் முடியாத நிலை. தற்போதைய நிலை அப்படியே தொடர்ந்தால் எரிபொருள் பற்றாகுறை ஏற்பட்டு, பூமி மேலும் வெப்பமாகி அப்போது இந்த உலகம் சந்திக்கும் பிரச்சினைகள் மிகக் கடுமையாக இருக்கும். எனவே அந்த ரிஸ்க்குக்கு இந்த அணுஉலை ரிஸ்க் பரவாயில்லை என்று அரசுகள் நினைக்கின்றன. பெரும்பாலான நாடுகள் இந்த கோட்பாடை நம்புவதால் நாமும் அதை நம்பித்தான் ஆக வேண்டும் . 

இந்த புவி வெப்பமாகும் பிரச்சினை ஒரு சீரியசான ஒன்றாக இருப்பதால்தான் உலக நாடுகள் அதற்காக தனி உச்சி மாநாடுகளையே நடத்தி தீர்வுகளை தேடிக் கொண்டிருகின்றன. தொழில் வளர்ச்சிதான் அதற்கு முக்கிய காரணம் என்பதால் தற்போதைக்கு `வளரும் நாடுகள்தான் அதிக காரணம்` என்று ஒரு (அபத்தமான) குற்றச்சாட்டு. ஏற்கனவே வளர்ந்த நாடுகள் தங்களின் `வளர்ச்சிக்காக (தெரியாமல்தான்) சுற்றுசூழலை கெடுத்துவிட்டு இப்போது எங்களை குறை சொல்வது ஏன்?` என்பது வளரும் நாடுகளின் (நியாயமான) வாதம். இதில் ஏதோ ஒரு வகையான காம்ப்ரமைஸ் ஆகி அல்லது ஆகாமல் உலகம் ஓடிகொண்டிருகிறது.

இங்கே எனக்கொரு ஆசை. நாளைக்கே திடீரென்று ஒருவர் நம்ம (மூலிகை பெட்ரோல்) ராமர் பிள்ளையைப்போல் ஏதோ ஒரு டெக்னாலஜியை (உண்மையிலேயே) கண்டுபிடித்து நம் வயிற்றில் பாலை வார்த்தால், இந்த அணு உலை சர்ச்சைக்கு சுபம் போட்டு அணு உலைகளை மூடிவிடலாம். ஆனால் அது சாத்தியமாகும் வரை நாம் பிராக்ட்டிகலாகத்தான் முடிவெடுக்க வேண்டும்.

கேள்விகள் அங்கே பதில் இங்கே 

வேறு சில பதிவுகளில் அணு உலைகளுக்கு எதிரான வாதங்களை படித்தேன். நியாயமாக பார்த்தால் நான் அதை மறுத்து அங்கே பின்னூட்டம் இட்டிருக்க வேண்டும். ஆனால் எனக்கும் சில `நேர` நெருக்கடிகள் இருப்பதால், அங்கே அது ஒரு விவாதமாக மாறிப்போனால் மற்ற பதிவர்களைப் போல் என்னால் வேகமாக பதிலளிக்க முடியாது. எனவே அந்த வாதங்களுக்கெல்லாம் ஒரு பதிவாகவே பதில் போடுவோம் என்று விட்டுவிட்டேன். அதோடு இங்கே வாசகர்கள்தான் ஜூரிக்கள் எனவே பலதரப்பட்ட வாதங்களை கவனித்து நீங்களே முடிவெடுங்கள்.

30 ஆணடுகளாக அமெரிக்காவில் புது அணு உலைகள் இல்லையாம்.

உண்மைதான். ஆனால் இதையே வேறுவிதமாகவும் பார்க்கலாம். எனக்கு ஷேர் மார்கெட் இன்ட்ரஸ்ட் இருந்துது. ஒரு சமயம் புரோக்கர் ஆபீஸில் மானிட்டரை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்ப ஒரு ஷேர் ப்ளுவில் காட்ட, அங்கிருந்த நண்பர் ஒருவர் என்னிடம்,  `அந்த ஷேர் ஏறப்போவுது, நீங்களும் வாங்குங்க` என்றார். நான் டிரேடிங் ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டேன். எனவே நிச்சயம் அவர் அன்று அந்த ஷேரை வாங்கவில்லை என்பது எனக்கு தெரியும். எனவே, `நீங்க வாங்காம என்ன மட்டும் வாங்க சொல்றீங்க?`என்று திருப்பி கேட்டேன்.

அதற்கு அவர், `நான் போன வாரமே 1000 ஷேர் வாங்கிட்டேன். அதுக்கு மேல ரிஸ்க் எடுக்கக் கூடாது` என்றார்.

அவரும் வாங்கி இருக்கிறார் என்பது தெரிந்த பிறகுதான் நானும் வாங்கினேன். அவருடைய ஆலோசனை சரியோ தவறோ, நிச்சயம் அவர் ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. இங்கே தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், ஷேர் மார்கெட் என்பதே ரிஸ்க் எடுக்கும் துறை என்றாலும் அங்கேயும் ரிஸ்க் எடுக்க ஒரு அளவு இருக்கிறது. பல துறைகளில் உங்கள் முதலீட்டை பிரிக்க வேண்டும். அதுதான் ஷேர் புரோக்கர்கள் உங்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்.

இதே தியரிதான் அமெரிக்காவுக்கும். அவர்கள் செய்யாத ஒரு காரியத்தை நம்மை செய்ய சொல்லவில்லை. அவர்களுடைய எனெர்ஜி பட்ஜெட்டில் அணு மின்சாரத்துக்காக 20 சதவிகிதம் அளவுக்கு ரிஸ்க் எடுத்தால் போதும் என்று நிறுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

ஐ நா உறுப்பு நாடுகள் 192 ல் ௦ 30 நாடுகள் மட்டுமே அணு உலைகளை வைத்திருக்கிறதாம்.

தெரியாமத்தான் கேக்கிறேன், இது என்ன லாலிபாப்பா, கேட்பவர்களுக்கெல்லாம் கொடுப்பதற்கு? இது ஒரு அபாயகரமான தொழில்நுட்பம். சிறிய நாடுகள், ஸ்திரமற்ற நாடுகள், நம்ப முடியாத நாடுகள் (தொழில் நுட்பத்தை விற்பார்கள்) மற்றும் அணு குண்டை விரும்பும் நாடுகளுக்கு தரமுடியாது. எனவேதான் முக்கியமான நாடுகள் NSG என்று ஒரு க்ரூப்பை அமைத்துக் கொண்டு இந்த தொழில்நுட்பத்தையும், யுரேனியத்தையும் யாருக்கு அளிக்க வேண்டும் என்பதை கடுமையாக கண்காணிக்கின்றன. இந்தியா  அதில் விதிவிலக்கு பெறுவதற்கே கடுமையாக போராட வேண்டி இருந்தது. (இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சு எழுதுங்க அருள்)     

இந்தியாவும், அமெரிக்காவும் ஆரம்பத்தில் நிர்ணயித்த  இலக்கை அவர்களால் அடைய முடியவில்லையாம்.

உண்மைதான். ஆனால் காரணம் என்ன? அமெரிக்காவில் three mile island மற்றும் வேறு சில விபத்திற்கு பிறகு இதன் அபாயம் உணரப்பட்டாலும், இதை கைவிடவும் முடியவில்லை என்பதுதான் நிஜம். அதாவது அதன் சார்பு நிலைக்கு ஒரு லிமிட் வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான்.  

இந்தியாவை பொறுத்த வரையில் 1970 ல் ஒரு இலக்கை நிர்ணயித்தாலும் அதன் பிறகு 1974 ல் இந்தியா அணுகுண்டை வெடித்ததால் இந்தியாவுக்கு எந்த நாடும் உதவ முன்வரவில்லை. ரஷ்யா கூட ஓரளவுதான் உதவ முடிந்தது. அது உடைந்து அதன் பொருளாதாரம் தடுமாற ஆரம்பித்த பிறகு அதனாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை. எனவே அந்த இலக்கை அடைய சாத்தியமே இல்லை.        

அணுசக்தி துறையில் அதன் முதலீட்டுக்கு தகுந்த ரிடர்ன் கிடையாது என்று ஒரு குற்றச்சாட்டு. அதாவது பல ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்த பிறகு அது வெறும் 3 சதவிகிதம் மின்சாரம்தான் தருகிறதாம்.

இதற்கான காரணத்தை கண்டுபிடிப்பது மிகவும் ஈசி. ஆனால் சொல்ல மாட்டார்கள். உண்மை இதுதான். 

தற்போது போக்குவரத்து துறையில் நல்ல லாபம் இருக்கிறது என்று நீங்கள் கணிக்கிறீர்கள். எனவே 100 பஸ்களை வாங்கி விடுகிறீர்கள். ஆனால் வாங்கிய பின் உங்களுக்கு நேரம் சரியில்லை. உங்களுக்கு பல ரூட்கள் மறுக்கப்படுகிறது. முக்கியமாக உங்களுக்கு எரி பொருளே தர மறுக்கிறார்கள். எனவே பல வண்டிகள் ஓடாமல் நிற்கிறது. ஓடும் வண்டிகளும் முழு திறனில் பயன்படுத்த முடியவில்லை. இப்போது உங்களுக்கு ரிடர்ன் எப்படி கிடைக்கும். அதேதான் இந்திய அணுசக்தி துறைக்கும்.

புதுவரவு 

சில நாட்களுக்கு முன் ஜப்பான் போயிருந்தேன். இணையம் மூலமாகத்தான்.அங்கே பல பத்திரிகைகளில் அணுசக்தி குறித்து சமீபத்திய நிலவரங்களை தேடியதில் சில விஷயங்களை கவனித்தேன். அங்கே புது அணு உலைகள் வர வாய்ப்பே இல்லை. ஆனால் இருக்கும் அணு உலைகளை கைவிடவும் வாய்ப்பில்லை. சில நாட்களுக்கு முன் ஒரு அணுமின் நிலையம் பாதுகாப்புக்கான பரிசோதனைகள் முடிந்த பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறதாம். அத்துடன் ஜப்பான் நாட்டின் GDP 1 .3 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். (நாமோ 8 சதவிகித வளர்ச்சியை காட்டிகொண்டிருக்கிறோம்)

அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜப்பான் (தென் கொரியாவும்) வியட்நாமில் அணுஉலைகளை அமைக்கப் போகிறதாம். இது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம். ஆனால் இந்த விபத்துக்கு பிறகு, ஜப்பானின் முடிவிலும் மாற்றமில்லை வியட்நாமின் முடிவிலும் மாற்றமில்லை. மீண்டும் தங்கள் ஒப்பந்தத்தை தொடர முடிவெடுத்திருக்கிறார்கள். இதை ஜப்பான் டைம்ஸ் பத்திரிகை தன்னுடைய தலையங்கத்தில் கண்டித்திருந்தாலும், நிஜம் எப்படி சுடுகிறது பார்த்தீர்களா?

ஜப்பானை விடுங்கள், ஒரு வியாபாரி தன்னுடைய பொருளை தள்ளப் பார்கிறான் என்று விட்டுவிடுவோம். ஆனால் வியட்நாமுக்கு ஏன் இந்த ஆசை? அவர்களுக்கு இந்த விபத்தை பற்றி தெரியாதா? அல்லது அவர்கள் பேப்பர் படிப்பதில்லையா? அதுவும் ஒரு வளரும் நாடு. எனவே அவர்களுக்கும் பல நிர்பந்தங்கள் என்பதுதான் உண்மை. வியட்நாம் மட்டுமில்லை துருக்கியும் ஜோர்டானும் கூட அணு உலைகளை அமைப்பதில் ஆர்வமாக இருக்கிறார்களாம். (இந்த நாடுகளை பற்றி நான் முழுமையாக ஆராயவில்லை. ஆனால் செய்தி உண்மை)

ஜப்பானை போன்ற பணக்கார நாடுகளே, அதாவது அவர்களின் வளர்ச்சி தேய்மானத்தில் இருக்கும் நிலையிலும், பழைய அணு உலைகளை கைவிட மறுக்கின்றன. இந்த லட்சணத்தில் வறுமையை ஒழிக்க வளர்ச்சியை காட்ட வேண்டிய வளரும் நாடுகள் எப்படி கைவிட முடியும்?

நீங்கள் கூடங்குளத்தில் வசித்தால்.....

இப்போது நம்மை மடக்க இப்படித்தான் கேள்வி கேட்கப்படுகிறது. அரசியல்வாதியை விமர்ச்சித்தால் `நீ அரசியல்வாதியாக இருந்து பார்` என்றும், சினிமாவை விமர்ச்சித்தால் `நீ சினிமா எடுத்துப்பார்` என்றும் பதிலளித்தால் எப்படி அபத்தமாக இருக்குமோ அது போன்றதுதான் இதுவும். வாழ்க்கை ஒரு மனிதனுக்கு வேர்களை அதன் போக்கில் எங்கெங்கோ பதிந்து விடுகிறது. இப்போது அதை அப்படியே பிடுங்கி எடுத்து கூடங்குளத்தில் போய் நடவா முடியும்.

களத்தில் இருப்பவனுக்கும், பார்வையாளனாக இருந்து கருத்து சொல்பவனுக்கும் வித்தியாசம் இருப்பது உண்மைதான். இருந்தாலும் நம்மிடம் சொல்லப்படும் பலவிதமான கருத்துகளை படித்து அதில் எது சரி என கருத்து சொல்லும் உரிமையும் மற்றவர்களுக்கு இருக்கிறது. இதை ஆதரிப்பதன் காரணம், இந்தியா ஒரு ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தாலும், நமக்கு முன் பலர் இந்த பாதையில் போய்கொண்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை  உணர்ந்ததால்தான்.


8 comments:

Robin said...

Good Post!

வவ்வால் said...

//புது அணு உலைகள் வர வாய்ப்பே இல்லை. ஆனால் இருக்கும் அணு உலைகளை கைவிடவும் வாய்ப்பில்லை. சில நாட்களுக்கு முன் ஒரு அணுமின் நிலையம் பாதுகாப்புக்கான பரிசோதனைகள் முடிந்த பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறதாம்.//

ஜப்பான் அப்படி செய்கிறதுனா , என்ன காரணம் , அவங்ககிட்டே இயற்கை வளம் இல்லை. மேலும் மிக அதிகம் கடன் வைத்திருக்கும் நாடு. 70% காடு இருந்தும் மரம் வெட்டுவதில்லை, இறக்குமதி செய்வார்கள். ஜப்பானுக்கு வேறு வழி இல்லை , நமக்கு அப்படி அல்ல. மாற்று வழிகளை நடை முறைப்படுத்தலாம்.

கீழ உள்ளவற்றைப்பார்க்கவும்.

//Japan has the world's highest gross sovereign debt amounting at 225% of GDP or US$10.55 trillion.//

http://en.wikipedia.org/wiki/Economy_of_Japan

//Natural resources: negligible mineral resources, fish
note: with virtually no energy natural resources, Japan is the world's largest importer of coal and liquefied natural gas, as well as the second largest importer of oil//

http://www.indexmundi.com/japan/natural_resources.html

எனது இந்த பதிவுகளையும் படிக்கவும்.

கூடன் குளம் பற்றிய ஒரு மாற்றுப்பார்வை


அணு உலைப்பாதுகாப்பானதா?


மாற்று எரிச்சக்தி-சூரிய சக்தி

Anonymous said...

Your posting about Koodankulam project is useless.This shows your low level knowledge.

சிவானந்தம் said...

@Robin

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராபின்.

@ Mohandivya

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்திவ்யா.

சிவானந்தம் said...

@ வவ்வால்

வாங்க வவ்வால்.

உங்கள் கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் சுருக்கமாக பதில் சொல்ல முடியாது. எனவே அடுத்த பதிவில் பார்ப்போம். நமது அரசையும் குறை சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன.எரிபொருள் துறையில் நாம் கவனமாக, சிக்கனமாக இல்லை எனபதும் உண்மை. மரபு சாரா துறையை இன்னும் சற்று தீவிரமாக கவனித்தால் அதன் சதவிகிதத்தை அதிகரிக்க முடியும் என்பதும் உண்மை.. இருந்தாலும் நமது 100 சதவிகித தேவையை பூர்த்தி செய்ய அதனால் முடியாது என்பதும் உண்மை. எனவே எல்லாம் கலந்ததுதான் இருக்க வேண்டும்.

உங்கள் பதிவுகளையும் படித்தேன். டெக்னாலஜியும், புள்ளி விவரத்தையும் போட்டு மிரட்டறீங்க? முழுசா படிச்சிட்டு கருத்து சொல்றேன்.

நிவாஸ் said...

//களத்தில் இருப்பவனுக்கும், பார்வையாளனாக இருந்து கருத்து சொல்பவனுக்கும் வித்தியாசம் இருப்பது உண்மைதான்//


இங்கு பிரச்சனையே இதுதான், களத்தில் நிற்பவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்த 13000 கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருவார வருமானம் ஆகுமா? இல்லை ஒருமாத வருமானம் ஆகுமா?

சரி இதுவரை செய்யப் பட்ட ஊழல்களில் ஒரு 4% அல்லது 5% இருக்குமா?

மக்களுக்காக செய்யப் படும் திட்டம் மக்களே வேண்டாம் என்று சொல்லும்போது இத்தனை பிரச்சனை ஏன்?

இதற்க்கு முன் பலர் அந்த அபாய பாதையில் செல்கிறார்கள் என்றாலும் இவர்களும் செல்லவேண்டிய அவசியம் என்ன? நீங்கள் சென்றுதான் ஆகவேண்டும் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது இந்த அரசுக்கு?

இன்னும் இதோடு மேலும் மூன்று உலைகள் நிறுவப்பட உள்ளது அதே கூடங்குளத்தில்.

சிவானந்தம் said...

//Your posting about Koodankulam project is useless.This shows your low level knowledge.///

Welcome anonymous. you seem to have high level knowledge. will you please enlighten me. But I wish you must come with convincing argument.

சிவானந்தம் said...

வாங்க நிவாஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அதேசமயம் மன்னிக்கவும். வவ்வால் மற்றும் உங்களின் கருத்துகெல்லாம் நான் அடுத்த பதிவில் பதிலளிக்கிறேன். ஆனால் உங்களின் ஒரு கருத்தில் நான் உடன்படுகிறேன். நாட்டு நலனுக்காகத்தான் இந்த ரிஸ்க் என்றாலும் தமிழகம் அதை விகிதாசாரப்படி எடுப்பதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் அதிகப்படியான மின் உலைகள் அமைப்பதை நானும் எதிர்கிறேன்.

Post a Comment