!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, April 23, 2012

பணக்கார பிரபு யாரும் இல்லையா?

திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவியது இன்றைய கல்வி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இதில் பணம் நோக்கமாக இல்லை. தான் வெற்றியாளனாக வர வேண்டும் என்ற வெறி மாணவர்களுக்கு வராமல் ஆசிரியர்களுக்கு வர, அதையும் அவர்கள் குறுக்கு வழியில் அடைய முயற்சித்திருக்கிறார்கள். இதுதான் செய்தி.

இது ஒரு போலித்தனமான பெருமை என்றாலும், இந்த வியாதி பலரை பிடித்து ஆட்டுவதும் நிஜம். அரசியல்வாதிகள் பணம் கொடுத்து கூட்டத்தை காட்டுகிறார்கள். நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே படங்களை ஓட்டி, தங்களை வெற்றி வீரராக காட்டிக் கொள்கிறார்கள். இதெல்லாம் எந்த வகை? இதில் பெருமை மட்டுமில்லை, சில லாபமும் இருக்கிறது. 

ரஜினியின் சந்திரமுகி கூட 800 நாட்கள் தொடர்ந்து `ஓடி` சாதனை படைத்ததாம்! ஆனால் அது சாதனைக்காகவே ஓட்டப்பட்டது என்று எப்போதோ படித்தேன். இத்தனைக்கும் அவர் வெற்றியாளர். அவருக்கும் இது போன்ற போலித்தனம் தேவைபடுகிறது.

Tuesday, April 17, 2012

ஒரு முட்டாளும், ஒரு அப்பாவியும்..

சில நாட்களுக்கு முன் கவனித்த செய்தி இது. பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் IPL மேட்ச் பார்க்க ஃப்ரீ டிக்கெட் கேட்டதாகவும், அதற்கு இவர்கள் மறுத்ததால் மைதானத்தை சுத்தம் செய்ய மறுத்ததாகவும் டைம்ஸ் நவ் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பபட்டடது.

அது தொடர்பான விவாதத்தில், அர்னாப் ஏதோ ஒரு செக்க்ஷ்னை சொல்லி, `இப்படி கேட்பது குற்றமாகும்` என மிரட்ட, அந்த பக்கம் இருந்த அரசியல்வாதி (துணை மேயர்), அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். கூடவே, `பத்திரிகையாளர்களும் கவர் வாங்குவதில்லையா?` என அவர்களையும் வம்புக்கு இழுத்தார்.

ஒரு பக்கம் சட்டத்தின் மீது பயமின்மை, இன்னொரு பக்கம் தான் செய்யும் தவறை நியாயபடுத்த, `நீ மட்டும் யோக்கியமா?` என கேள்வி. இதுதான் இன்றைய அரசியல் என்பதை இந்த பேட்டி நிரூபித்தது. .

Tuesday, April 10, 2012

இந்திய ராணுவமும் அதன் உளுத்துப் போன கொள்கைகளும்!

சமீபத்தில் NDTV யில் ராணுவம் குறித்த ஒரு டாக் ஷோ பார்த்தேன். பல கருத்துக்கள் பேசப்பட்டன. காஷ்மீரில் ஒரு பகுதிக்கு சரக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் மகனை பறி கொடுத்தவர் பேசினார். இந்தியாவில் மட்டும்தான் ஒரு இஞ்சின் மட்டுமே கொண்ட ஹெலிகாப்டர் சேவையில் இருந்ததாம். அதில் இவர் மகன் பலியாகி இருக்கிறார். `நாட்டுக்காக உயிர் கொடுப்பது வேறு. ஆனால் தகுதி அற்ற தளவாடங்களின் மூலம் ஏற்படும் விபத்தால் யாரும் பலியாகக் கூடாது` என்றார்.

அடுத்து கவனித்தது, போபார்ஸ் சிண்ட்ரோம். இந்த ஊழல் மீடியாவில் கடுமையாக கிழிக்கப்பட்டதால், பல ராணுவ அதிகாரிகள், அவ்வளவு சீக்கிரத்தில் முடிவெடுப்பதில்லையாம். இந்த புதுத் தலைவலி தற்போது ராணுவத்தை ஆட்டிப் படைக்கிறது. இதனால் ஒரு பக்கம் ஆயுத பற்றாகுறை இருக்க, இன்னொரு பக்கம் அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பிய கொடுமையும் நடந்திருக்கிறது.