தினம் செய்திகளை இணையத்திலும், டிவியிலும் கேட்டாலும், தமிழ் நாட்டின் அடுத்த கட்ட செய்திகள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதாவது பரபரப்பான செய்தி தலைப்பு செய்தியாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி பல செய்திகள் இருக்கும். அது கவனத்துக்கு வராமலேயே போகிவிடும்.
எனவே மற்ற செய்திகளையும் கவனிக்க ஜூவி வாங்கப் போனேன். சில வாரங்களாக வாங்கவில்லை. அங்கே 9 ம் தேதி போட்ட இதழ் எனக்கு 14 ந்தேதி கிடைத்தது. வழக்கமாக மற்ற மாநிலங்களில் இதன் விலை 1 ரூபாய் அதிகம் (11). இவர் 12 ரூபாய் வாங்குகிறார். அது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இந்த முறை எனக்கு வேறு ஒரு சந்தேகம் வந்துவிட்டது.
அனேகமாக இந்த இதழ் 6 ந்தேதி வெளியாகி இருக்கும். சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு தினம் டிரெயின் இருக்கிறது. 34 மணி நேரப் பயணம். இரண்டு நாள் கூடுதலாக போட்டாலும், 4 நாளில் வந்து விடலாம். ஏன் இவ்வளவு தாமதம்? கேள்வி என்னை குடைந்தது.
ஒருவேளை அடுத்த இதழ் வந்து காலி ஆகிவிட்டதா? அதற்கும் வாய்ப்பில்லை. காரணம் அங்கே நிறைய இதழ்கள் இருந்தன. ஒவ்வொரு இதழிலும் 5 க்கும் மேற்பட்ட இதழ்கள் இருந்தன. என்னதான் ஒரு ரூபாய் கூடுதல் லாபம் பார்த்தாலும், இரண்டு புத்தகம் மீந்தாலே உங்களுக்கு லாபம் போய்விடும். அதற்கும் மேல் என்றால் நஷ்டம்தான். அப்படி இருக்கையில் எந்த வியாபாரியும் இவ்வளவு ஸ்டாக் வைக்கமாட்டார்கள்.
அப்போதுதான் எனக்கு இந்த சந்தேகம் வந்தது. தமிழ்நாட்டில் விற்பனையாகாமல் ரிடர்ன் ஆகும் புத்தகங்களும் இருக்கும். அதற்கு மதிப்பில்லை. அதை 2 ரூபாய்க்கு விற்றாலும் லாபம்தான். இப்படி ரிடர்ன் ஆகும் புத்தகங்களை வெளி மாநிலங்களுக்கு குறைந்த விலையில் விநியோகஸ்தர்கள் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது. அதுதான் இங்கே வருகிறது. அதனால்தான் இந்த தாமதம்.
இவர்களுக்கும் 2 அல்லது 3 ரூபாய்க்கு புத்தகம் கிடைப்பதால், பாதி புத்தகங்கள் விற்றாலே லாபம்தான். அதனால்தான் ஸ்டாக் நிறைய இருக்கிறது. இதுதான் நான் கண்ட காட்சிக்கு லாஜிக்கான பதிலாக இருக்கிறது. ஆக 3 ரூபாய் புத்தகத்துக்கு நான் 12 ரூபாய் கொடுத்திருக்கிறேன்.
எப்படி எல்லாம் நம்பள ஏமாத்தறாங்க!
இனி புத்தகம் தொடர்பான சில அனுபவங்கள்
எவ்வளவோ புத்தகங்கள் படித்திருப்போம், அதில் சில மட்டும் நம் மனதில் ஆர்வமாக பத்திந்துவிடும். அப்படி என் மனதில் பதிந்த கதை Kane And Able. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதியது. அவருடைய கதையில் ட்விஸ்ட் அருமையாக இருக்கும். இந்த கதையில் அது மனதிலேயே பதிந்து போனது.
இரண்டு கதாநாயகர்கள். இருவரும் வேறு வேறு தளத்தில் இருக்கிறார்கள். பின்னர் வாழ்கை இவர்களை இணைக்கும் போது சூழ்நிலை இருவரையும் எதிரிகளாக்கி விடுகிறது. இதில் ஒருவர் தன் எதிரியை அழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். கடைசியில் அந்த எதிரி இறந்து போன பிறகுதான் தெரிகிறது. இவருக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவியவரே அவர்தான் என்று. தான் இறந்த பிறகுதான் இந்த உண்மை சொல்லப்பட வேண்டும் என்று அவர் உயில் எழுதிவிட்டார்.
யாருக்கு கோவில் கட்ட வேண்டுமோ அவரை இவர் எதிரியாக நினைத்து அழிக்க பார்த்திருக்கிறார். இங்கே இறந்து போன நபருக்கு ஒரே பட்டப் பெயர்தான் பொருந்தும்: The Perfect Gentleman
ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் கூட அதை சொல்லிக் காட்டி பிரதிபலன் எதிர்பார்க்கும் சூழ்நிலையில், ஒருவருக்கு உதவி செய்ததை கடைசிவரை சொல்லாமல், அதுவும் அந்த நபர் தன்னை அழிக்கும் முயற்சியில் இருக்கும் போது, தன்னை காப்பாற்றிக்கொள்ள கூட அந்த உண்மையை சொல்லாதவரை என்னவென்று சொல்வது? இது கதைதான், இருந்தாலும் நிஜத்தில் இப்படி மனிதர்கள் இருக்கலாம்.
இந்த கதை தற்போது எனக்கு நினைவு வந்ததன் காரணம் பதிவுலகம் சம்பந்தப்பட்டதுதான். நானும் முகம் தெரியாத சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவருக்கு என நன்றி.
இதுவும் ஜெப்ரி ஆர்ச்சர் கதைதான்.
சமீபத்தில் எனக்கு தலைக்கனம் அதிகமாகிவிட்டது. அதை குறைக்க பார்பர் ஷாப் போனேன். காத்திருந்தேன். குஜராத்தி பேப்பரும் இங்கிலீஷ் பேப்பரும் இருந்தது. இங்கே இவர்களுக்கு ஆங்கில மோகம் குறைவு. எனவே இது ஆச்சர்யம். இங்கிலீஷ் பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஒருவேளை இங்கிலீஷ் படிப்பாரோ என்ற சந்தேகத்தில் நான் பேப்பர் கொடுக்கவில்லை. ஆனால் வந்த வேலை முடிந்தும் அவர் அங்கேயே உட்கார்ந்திருந்தார். இப்போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டதால், அதில் சில பக்கங்களை அவரிடம் நீட்டினேன். `இல்லை படிங்க` என்று மறுத்தார்.
சும்மாதானே இருக்கோம்ன்னு நானும் நிதானமா படிச்சிட்டு, என்னை கூப்பிடும் போது பேப்பரை வைத்தேன். இப்போது அவர் பேப்பரை எடுத்து கொண்டு கிளம்பினார். நான் ' ஙே' என விழித்தேன்.
அடக் கடவுளே! இது அவர் பேப்பரா. மனுஷங்க திடீர்ன்னு திடீர்னு நம்மை டச் பண்ணிடறாங்க.
இதேபோல் ஆர்ச்சர் ஒரு சிறுகதை எழுதி இருந்தார். அது கொஞ்சம் மாறி இருக்கும்.
6 comments:
சிவானந்தம்,
ஆங்கில பேப்பர் படிக்க கொடுத்தவர் நல்ல மனிதர் என நினைக்கிறேன், பொறுமையாக இருந்துள்ளார்.
குமுதம், விகடன் பதிப்பகங்கள் ரிடர்ன் எடுப்பதேயில்லை, மேலும் ,குறிப்பாக இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் நடத்துபவர்கள் ,ரிடர்ன் எடுப்பதில்லை.
நீங்கள் வாங்கும் கடைக்காரர் இன்னொரு ஏஜெண்டிடம் வாங்குபவராக இருக்கும், அவர் ஒருவாரம் வைத்திருந்துவிட்டு இவருக்கு அனுப்பி இருக்கலாம்.
இணையத்தில் படித்துவிடுங்கல், அதான் உடனேவும், எளிதாகவும் இருக்கும்.
வாங்க வவ்வால்,
//குமுதம், விகடன் பதிப்பகங்கள் ரிடர்ன் எடுப்பதேயில்லை, மேலும் ,குறிப்பாக இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் நடத்துபவர்கள் ,ரிடர்ன் எடுப்பதில்லை.//
எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருந்தது. எனவேதான் விநியோகஸ்தர் என குறிப்பிட்டேன். அவர்களுக்கு இதற்கான சாத்தியம் இருக்கிறது.
//இணையத்தில் படித்துவிடுங்கல், அதான் உடனேவும், எளிதாகவும் இருக்கும்.//
நான் தொடர்ந்து வாங்குவதில்லை. ஒரு வாரம் டைம்ஸ் ஃஆப் இந்தியா, அடுத்த வாரம் இது என்று இருப்பதால் இந்த பிரச்சினை. இணையம், டைம்ஸ், ஜூவி என எல்லா செலவையும் பார்த்தால், அதுவும் ஒரு பட்ஜெட் ஆகிவிடும் என்பதால், இப்படியும் அப்படியுமாக இருக்கிறேன்.
மிகச் சரியான தகவல்களை தொடக்கத்தில் சொல்லி இருக்குறீங்க. பல பத்திரிக்கையில் தனி இதழ்களில் அற்புதமான தகவல்களை பலமுறை படித்துள்ளேன். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு சேராத அளவுக்கு வெளியிட்டு இருப்பார்கள். இதை ஒவ்வொரு வாரமும் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் முடியல.
உங்க எழுத்து ரொம்ப தீர்க்கமா யோசிக்க வைக்குது.
வாங்க ஜோதிஜி,
//உங்க எழுத்து ரொம்ப தீர்க்கமா யோசிக்க வைக்குது//
நீங்களே ஒரு எழுத்தாளர். உங்களிடமிருந்தே பாராட்டு என்றால் அது டபுள் பிரமோஷன் மாதிரி. சந்தோசம்.
சில சமயம் பத்திரிகைகளின் மீது கோபம் வந்தாலும், அவர்களும் நமக்கு ஆசிரியர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. என்னுடைய எழுத்து நன்றாக இருக்கிறது என்றால், அந்த பெருமை பத்திரிக்கைகளுக்குதான் போய் சேரும்.
பரவாயில்லை சார். நீங்கள் படிக்கும் வரை பொறுத்து கொண்டார்.. இங்கு பொது நிலையத்திற்கு படிக்க சென்றால் பத்து பக்க பேப்பரை பதினைந்து பேர் படித்து கொண்டு இருக்கின்றனர். என்றாவது நான்கு பக்கம் சேர்த்து படித்து கொண்டுஇருதால் எவனாவது இங்கிதம் தெரியாமல் நடுவில் ஒரு பக்கத்தை பிடித்து இழுக்கிரான் புடுங்குறான் இவங்கள என்ன செய்ரது.
வாங்க ஆரிப்,
நூலங்கங்களில் நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன். நான் எப்போது சிங்கிள் பேப்பராகத்தான் படிப்பேன். நூலகங்களில் அப்படி படித்தால்தான் பலரும் படிக்க முடியும்.
ஆனால் பல விஷயங்களில் மனிதன் இப்படித்தான். இப்படிபட்டவர்கள் மற்றவர்களிடம் அனுபவப்ப்படும்போது தானாக திருந்துவார்கள். ஒருவேளை நாமும் அப்படி திருந்திய மனிதர்களாக இருக்கலாம்.
Post a Comment