காலம் மனிதனை எப்படி மாற்றுகிறது? பல விஷயங்களை நினைத்து பார்த்தால் நமக்கே அதிர்ச்சியாக இருக்கும். இப்படி ஒரு மாற்றம் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த சம்பவங்கள் இங்கே.
எனக்கு பணத்தின் மீதான ஆசை அதிகம். பேராசை கிடையாது. என் கழுத்தின் மீது பல வருடங்களாக, அதாவது இளமை பருவத்திலிருந்தே, கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சிக்கலிலிருந்து நான் தப்ப வேண்டுமென்றால் எனக்கு நிறைய பணம் வேண்டும். அப்புறம் மேலும் சில `விஷயங்கள்` நடக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால்தான் நான் தப்பிக்க முடியும் என்பதால் இந்த ஆசை.
தற்போது காலம் கடந்துவிட்டது. இனி அதை பற்றி பேசி புண்ணியமில்லை. ஆனால் இந்த பணத்திற்கான தேடலில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்.
25 வருடங்களுக்கு முன் லாட்டரியும் இருந்தது, எனக்கும் ஷேர் மார்க்கெட் பரிச்சியமாகி இருந்தது. இரண்டில் ஏதாவது ஓன்று என்னை கோடீஸ்வரனாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும் எனக்காக செலவு செய்வதிலும் கூட ரொம்பவே கஞ்சத்தனமாக இருந்தேன். பணம் வந்த பிறகு மொத்தமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம் என்று திட்டம். கனவு காணும் உரிமை மட்டும்தான் மனிதனுக்கு இருக்கிறது, அதற்கு அப்ரூவல் கொடுப்பவர் வேறு ஒருவர் என்பதை ரொம்ப தாமதமாக உணர்ந்தேன்.
இப்படி கஞ்சனாக இருந்து மிச்சமாகிய பணத்தை உப்புமா கம்பெனிகளின் ஷேர்களை அனுபவமின்றி வாங்கி குவித்தேன். இப்போது அந்த ஷேர்களை எடைக்கு போட்டால் 50 ரூபாய் கூட தேறாது.
அப்போது வந்து கொண்டிருந்தே தமிழ்நாடு பம்பர் லாட்டரிகளை வியாபாரியாக இருந்தும் தொழில் தர்மத்தை மீறி விற்காமலும் வைத்து பார்த்தேன். அதாவது ஒழுங்காக வந்து கொண்டிருந்த பணத்தை உதாசீனப்படுத்தினேன். இப்போது அவற்றை நினைத்து பார்த்தால் கண்களில் ஏதோ ஓன்று வருகிறது. அதன்பின் என் கணக்குகள் என்னை கை கழுவிவிட நான் ஜெயிலுக்கு போனேன். அங்கே சில அனுபவங்கள்.
நான் முதலில் இருந்த பிளாக்கில் சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். அங்கே நான் இருந்த 8 மாதங்களில் பெரும்பாலும் மோர் சோறு அல்லது தண்ணி ஊற்றி சாப்பிடுவதுதான் நிலைமை. இதில் காலை பட்டினி வேறு. இடையில் சிறை கிச்சனுக்கு போய் காசு கொடுத்து மதியம் மட்டும் ரொட்டி வாங்கி வந்தாலும், அதற்கு மாசம் 300 ரூபாய் என்பதால் பட்ஜெட்டும் இடித்தது. அந்த ரொட்டியும் அப்பளத்தை விட கொஞ்சம் மொத்தமாக இருக்கும். எனவே அது பசியை தீர்க்காது. இப்படியும் 8 மாதம் எனக்கு சிறை வாழ்க்கை ஓடியது.
அதன் பிறகு அங்கேயே வேறு பிளாக்குக்கு மாறினேன். அதை சிறை என்று சொன்னால் எனக்கே சிரிப்பு வரும். எனவே அதை மென்ஸ் ஹாஸ்டல் என்று சொல்லலாம். இங்கே பெரும்பாலும் போதை பொருள் குற்றவாளிகள். இலங்கை தமிழர்கள். இவர்களுக்கு பெயில் கிடையாது என்பதாலும் நீண்ட காலம் இருக்கப்போவதால் மனத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால் இவர்களுக்கு நிறையவே சுதந்திரம்.
தொடர் குற்றவாளிகளை போல் இவர்கள் அடிக்கடி சண்டை போட மாட்டார்கள் என்பதாலும் இந்த சுதந்திரம். இங்கே இருந்தவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் வசதியானவர்கள். இதன் காரணமாக இந்த பிளாக் ஒரு ஹாஸ்டலை போல் சுத்தமாக சுகாதாரமாக இருந்தது. ஏதோ என்னுடைய அதிர்ஷடம் இங்கே வந்து சேர்ந்தேன். இங்கே எனக்கு சிறை வாழ்க்கை கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.
முதலில் இருந்த பிளாக்கில் அப்பர் மிடில் கிளாஸாக இருந்தவன்,இந்த பிளாக்கில் அப்படியே தலைகீழ். எல்லோரும் கொஞ்சம் வசதியாக இருக்க நான் மட்டும் படஜெட் பத்மநாபனாக இருந்தேன்.
இப்படி என் வாழ்க்கை பல மாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஒரு முறை குளிப்பதற்காக பாத்ரூம் போனேன். அது பிளாக்கை தள்ளி வெளியே இருந்தது. 5-6 பாத்ரூம் இருக்கும். வெளியே துணி துவைப்பதற்கு விசாலமான இடம். இப்படி நான் போனபோது வழியில் 2000 ரூபாய் கிடந்தது. (2000 அல்லது அதற்கும்மேல் சரியாக நினைவில்லை.)
அதை கொண்டு வந்து நான் இருந்த செல்லின் நிர்வாகியிடம் (இலங்கை தமிழர்) கொடுத்து `யாரோ கீழே போட்டுவிட்டார்கள். யார் என்று விசாரித்து கொடுத்துவிடுங்கள்` என்றும் சொல்லிவிட்டேன். அப்போது நான் இருந்த மனநிலையில் இயல்பாக நான் செய்த விஷயம். இதில் எனக்கு விசேஷமாக எதுவும் தெரியவில்லை.
அதன்பின் மற்றவர்கள் என்னை பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. வித்தியாசத்தை நான் வெளிப்படையாகவே உணர்ந்தேன். ஒருவர் என்னிடம் `உங்களையெல்லாம் யார் ஜெயில்ல போட்டது?` என்று ஆச்சர்யமாக கேட்டார். இன்னொருவர் `சிவா அண்ணனிடம் இந்த பணம் கிடைத்ததால்தான் திருப்பி கொடுத்தார். வேறு யாராவது இருந்தால் கொடுத்திருக்கமாட்டார்கள்` என்றார்.
அப்போதுதான் என்னுடைய செயலின் பாதிப்பு தெரிந்தது. நான் அங்கே `தனி ஒருவன்` அல்லது `ஆயிரத்தில் ஒருவனாக` இருந்தேன். மறுநாள் சிறையில் சிலர் ஸ்பெஷலாக வரவழைத்து குடிக்கும் டீ எனக்கு கிடைத்தது. மரியாதையாம்! சிறையில் அந்த டீ அவ்வளவு சுவையாக இருக்கும்.
சிறையில் பணம் இல்லாமல் பலர் கஷ்டப்படும் நிலையில், நானே மாதம் ரூ.1000 என்ற பட்ஜெட்டில் என் சிறை வாழக்கையை ஒட்டிக்கொண்டிருக்க, இந்த பணத்தை நானே வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வாசித்து வந்ததால் அந்த எண்ணம் எனக்கு வரவில்லை. நான் இயல்பாக அப்போது நடந்து கொண்டேன். இதையே வேறு மொழியில் சொல்லவேண்டுமென்றால் என்னை தேடி வரும் பணத்தை நான் உதாசீனப்படுத்தியிருக்கிறேன்.
இதன்பின் சிறையில் பொழுதுபோகாமல், அரசியலையும் தொடர்ந்து (சிறையிலும்) வாசித்து கொண்டிருந்தபோது சில அரசியல் நிகழ்வுகள் என்னை கோபப்படுத்தியது. அப்படி ஒரு சம்பவம் என்னை கோவப்படுத்த, சிறையிலிருந்தே மத்திய அரசை விமரிசித்து தினமலருக்கு (இது உங்கள் இடம்) ஒரு கடிதம் எழுதினேன். நல்லவேளை மாநில அரசை விமர்ச்சிக்கவில்லை. அது பிரசுரமாக.. அப்படியே மேலும் சில என தொடர்ந்தது.
இந்த சமயத்தில் சிறையில் ஒரு வயதானவர் வந்தார். அவர் மீது மிசா (குண்டர் சட்டம்) போடப்பட்டிருந்தது. வசதியானவர். பிள்ளைகள் நல்ல நிலையில் சாப்ட்வெர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னார். அவரை பார்த்தால் குற்றவாளியைப்போல் தெரியவில்லை. இருந்தாலும் எங்கேயோ பிரச்சினை. ஏதோ பிரஷர் வந்து இவர் மீது குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.
குண்டர் சட்டம் போட வேண்டுமென்றால் யாரிடமாவது கத்தியை காட்டி மிரட்டி இருக்க வேண்டும். தமிழ்நாடு போலீசுக்கு திரைக்கதை நன்றாக அமைக்க தெரியும். எனவே ரோட்டோர டீக்கடையில் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு கதையை தயார் செய்து அதை காட்டி குண்டர் சட்டம் போட்டுவிட்டார்கள்.
சிறையில் பல கைதிகளின் சார்ஜ் சீட் படித்து பார்த்து, அது குறித்து கைதிகளிடம் பேசியிருக்கிறேன். பல வழக்குகள் இப்படித்தான் புனையப்படுகிறது. ஓன்று, வேண்டாதவர்களை உள்ளே தள்ள. இரண்டு, பல குற்றவாளிகள் வழக்கை இழுப்பது சாட்சிகளை மிரட்டுவது என தில்லாலங்கடி வேலை பார்த்து வழக்குகளிருந்து தப்பிவிடுவதால், இது போன்ற பொய் வழக்குகள்.
இங்கே எல்லாமே போலிசின் செட்டப் என்பதால், சாட்சிகள் பயப்படுவதில்லை. நடக்காத ஒன்றை நான் என் மூன்று கண்ணால் பார்த்தேன் என்று இந்த சாட்சிகள் சொல்ல, அவர்களுக்கு தண்டனை உறுதியாகிவிடும். அல்லது போலீஸ் மற்றும் குற்றவாளிகளின் `கெட் டு கெதர்` நல்லபடியாக இருந்தால், அந்த கேஸ் அவ்வளவுதான். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.
குண்டர் சட்டம் போடப்பட்டு 3-4 மாதத்தில் போர்ட் என ஒரு நீதிபதிகள் குழு வசம் இந்த குண்டர் சட்ட வழக்குகள் மறு பரிசீலனைக்கு வரும். இங்கே விசாரிப்பவர் ஒரு நீதிபதியா அல்லது பெஞ்சா என தெரியவில்லை. இங்கே பெரும்பாலான கேஸ்கள் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படும்.
பத்திரிகையாளர்களிடம் `நாங்கள் குற்றவாளிகளை 23 1/2 மணி நேரத்தில் பிடித்தோம். இவர்கள் இதற்கு முன் பல குற்றங்களை செய்திருக்கிறார்கள்` என பந்தாவாக போட்டோ செஷன் வைத்து போஸ் கொடுக்கும் இந்த போலீசார், நீதிபதிகளிடம் எதுவும் சொல்வதில்லை.
நீதிபதி என்ன விவரம் தெரியாதவரா, போலீசார் மைண்ட் வாய்ஸில் சொல்வதை பாக்கெட்டில் போட்டு கொண்டு பெயில் கொடுத்து விடுவார். நான் சிறையில் இருந்த வரை 10-ல் 8 கேஸ்கள் இப்படி குண்டர் சட்டத்தை உடைத்து கொண்டு பெயிலில் போய் விடுவார்கள். அப்புறம் என்ன வெண்டக்காய்க்கு இந்த குண்டர் சட்டம் என்றே தெரியவில்லை. இந்த காமெடி இன்னும் தொடர்கிறது.
இங்கே நான் சொல்ல வந்த பெரியவர் குண்டர் சட்டத்தை உடைக்க வக்கீல்களிடம் பேசி இருக்கிறார். இதை உடைக்க உளி மற்றும் சுத்தியல் வாங்க வேண்டும் என கொட்டேஷன் கொடுத்திருக்கிறார்கள். பீஸ் எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் `மத்திய அரசுக்கே அறிவுரை சொல்ற ஒரு அறிவாளி நம்ம பிளாக்குல இருக்கிறரர்` என என்னை நோக்கி யாரோ கை காட்டிவிட்டார்கள். அப்படித்தான் அவர் என்னிடம் வந்தார்.
நான் சார்ஜ் ஷீட்டையும் படித்தேன், அவர் சொன்ன விளக்கத்தையும் கேட்டேன். `நான் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறேன். என் பிள்ளைகள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நான் இந்த ரவுடித்தனம் செய்வேனா?` என்று கேள்வி கேட்டு மேலும் சில விளக்கங்களை பெட்டிஷனாக எழுதி கொடுத்தேன். அது காக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையாகிவிட்டது.
நீதிபதிகளுக்கு தெரியும் எது பொய் கேஸ் எது உண்மை என்று. இருந்தாலும் அவர்களுக்கும் பல `விஷயங்கள்` தேவை அல்லவா. அதை இப்படி பெயில் கொடுப்பதிலும், வழக்கை இழுக்கடிக்க குற்றவாளிகளுக்கு உதவுவதன் மூலம் பெற்று விடுகிறார்கள். இங்கே சில விதிவிலக்குகளும் உண்டு.
பொதுவாக வீட்டில் படைத்தால், காக்காய்க்கு சோறு வைப்பார்கள். காரணம் புண்ணியமாம்! இன்னொரு காரணம் அது கொஞ்சமாய் சாப்பிடும். ஒருவேளை அது எனக்கு ஃபுல் மீல்ஸ் வேணும் என்று கேட்டு நிறைய வாங்கி சாப்பிட்டால் என்னவாகும். அதன்பின் நாம் காக்கையை கூப்பிடமாட்டோம். அதாவது நாம் புண்ணியம் செய்யவேண்டும், ஆனால் அது நம் கையை கொஞ்சமாக கடிக்க வேண்டும். இதுதான் மனிதன் காக்கையை தேர்ந்தெடுத்தன் காரணம் (என்று நான் நினைக்கிறேன்).
நீதிபதிகளும் அப்படிதான். காசேதான் கடவுளடா என்ற பாட்டைத்தான் விரும்பி கேட்பார்கள். அதேசமயம் இப்படி திடீர் என சில சின்ன புண்ணியங்களும் கிடைக்கும். `என்னடா இந்த ஆள் ஒரிஜினல் வக்கீல் மூலம் வராமல் ஒரு டுபாகூர் வக்கீல் மூலம் பெட்டிஷன் கொடுக்கிறாரே, இவரிடம் எதுவும் தேறாது` என நினைத்தார்களோ அல்லது காக்கைக்கு சோறு வைப்பது போல், இந்த வழக்கு பொய் என்பது நன்றாகவே தெரிகிறது, இதை ரத்து செய்து புண்ணியம் தேடலாம் என்றும் நினைத்திருக்கலாம். அந்த வகையில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
அவர் சந்தோஷமாக என்னிடம் வந்தார். `உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?` என்று கேட்டார். நான் அப்போதும் உத்தமபுத்திரனாக இருந்தேன். `எனக்கு எதுவும் வேண்டாம். வேறு யாராவது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்` என்றேன். அவர் என்னை மேலேயும் கிழேயுமாக ஒரு முறை பார்த்தார். பலர் என்னை அப்படி பார்த்திருக்கிறார்கள். இது எனக்கு அடிக்கடி நடக்கும். நான் ஒரு டிபெக்டிவ் பிராடக்ட். ஒன்னும் பண்ண முடியாது.
இருந்தாலும் `ஏதாவது கேளுங்க` என்று அவர் வற்புறுத்த, அந்த சமயத்தில் சிறையில் என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது. ஊருக்கு தகவல் சொல்லி வர லேட்டாகும் என்பதால், அதை மட்டும் கேட்டேன். அவரும் வாங்கி கொடுத்ததாக ஞாபகம். அப்படியே அவருக்கு மனுவில் வந்த பிஸ்கட் பழம் என அவற்றையும் கொடுத்தார்.
ஒருவேளை பணம் கேட்டிருந்தால், 1000-5000 கிடைத்திருக்கக்கூடும். கவனிக்கவும், கொஞ்சமாகவே இருந்தாலும், பணம் என்னை தேடி வருகிறது. நான் அதை உதாசீனப்படுத்துகிறேன். விதி வலியது அல்லவா, அதான்.
இது நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பின் வாழ்கை கதற கதற பல அனுபவங்களை கொடுத்தது. பணம் எனக்கு கண்களில் தண்ணியை மட்டும் காட்டவில்லை, பெட்ரோல், டீசல், எல் பில் ஜி என எல்லாவற்றையும் காட்டிவிட்டது. எந்த சின்ன தொகையை நான் அலட்சியமாக உதறினேனோ, அதுவே ஒரு கட்டத்தில் எனக்கு பெருந்தொகையாக மாறிபோனது.
ஒருவேளை நான் பணத்துக்கு மரியாதை கொடுக்கவில்லை, அதனால்தான் இப்படி நடக்கிறதோ என்ற எண்ணம் எனக்குள் கேள்வியாக மாறியது. இனி அதை மதிக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.
இப்படிப்பட்ட மனநிலையில் நான் ஒரு நாள் இங்கே அகமதாபாத்தில் வாக்கிங் போய் கொண்டிருந்தேன். (இடத்தை சொல்லமாட்டேன். பின்னர் இன்னொரு பதிவுக்கு அது தேவைப்படும்.) எனக்கு முன்னே இருவர் பைக்கில் போய் கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்தவர், அவர் சட்டையில் இருந்து எதையோ எடுக்க, அதிலிருந்து 200 ரூபாய் கீழே விழுந்தது. அவர் கவனிக்காமல் போய்விட்டார்.
நான் கவனித்து விட, விரைவாக போய் எடுத்துவிட்டேன். அப்போது `சாயப், மேனே பெஹலே தேக்கா` என்று குரல். திரும்பி பார்த்தால், 3 வீலரில் ஒரு பிச்சைக்காரன். அவர்தான் முதலில் பார்த்தாராம்.
ப்ரோட்டோகால்படி பார்த்தால், எனக்கு முன்னால் அந்த பிச்சைக்காரன்தான் இருந்தான். எனவே அவனுக்குத்தான் சொந்தம். எழுந்து வந்து எடுக்கமுடியவில்லை. நிஜமாகவே ஊனமுற்றவர்.
வழக்கமாக இவர்களை உட்காரவைத்து யாராவது ஒருவர் வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். இவர் தனியாகவே இருந்தார். என்னைப்போலவே சிங்கிள் போலிருக்கிறது. அதுமட்டுமின்றி ஸெல்ப் மேட் பில்லியனர் என்பதுபோல் இவர் ஸெல்ப் மேட் பிச்சைக்காரர்.இந்த இரண்டு காரணங்களுக்காக நான் அந்த பணத்தை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி என்னை `சார்` ன்னு சொன்னான். அந்த மரியாதைக்காவது நான் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது. எனக்குள் ஒருவன் காணாமல் போய்விட்டான். அதே சமயம் பணத்தை முறைகேடாக அடையும் அளவுக்கு நான் மாறவில்லை. என்னை தேடிவரும் வரும் பணத்தை உதாசீனப்படுத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் வந்துவிட்டது.
எனவே நான் `யோவ்... நீ அபிஷியல் பிச்சைக்காரன், நான் அன் அபிஷியல்.. அவ்வளவுதான்` என்று மைண்ட் வாய்ஸில் சொல்லிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அந்த பிச்சைக்காரனுக்கு பணம் போனதைவிட, இப்படி ஒரு டீசண்டான பிச்சைக்காரனை பார்த்தது அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
மேலுலகத்திலிருந்து யாரவது பார்ப்பார்கள். அடடா இந்த ஆளுக்கு பணத்தோட அருமை தெரிஞ்சி போச்சி, இனிமே இவனுக்கு கொடுக்கலாம் நினைப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு மாற்றத்தையும் காணோம். ஒரு வேளை நான் இருக்கற ஏரியா பக்கம் கடவுள் ரவுண்ட்ஸ் வரலியோ? எப்படி இந்த மெசேஜை அவருக்கு பாஸ் பண்றது?
அதே சமயம் அந்த பிச்சைக்காரன் ஏதாவது சாபம் விட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.