!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, August 20, 2011

காங்கிரஸ் - அன்னா ஹசாரே. ஜெயிக்கப்போவது யாரு?


காங்கிரசுக்கும் அன்னா ஹசாரே டீமுக்குமான மோதல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இனி நிமிடத்துக்கு ஒரு செய்தி வரும். `காங்கிரஸ் பணிந்தது` என்றோ அல்லது `அன்னாவின் சாயம் வெளுத்தது` என்றோ பலவிதமான அர்த்தங்கள் அதற்கு கொடுக்கப்படும்.  உண்மையில் இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தையும்,  இனி  என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவு ஆராயலாம்.

அன்னா ஹசாரேவையும் அவருடைய போராட்டத்தையும் அலசும் முன் இந்த உதாரணத்துக்கு போய் வருவோம். ஏனென்றால் சில விஷயங்களை உதாரணங்களோடு சொன்னால்தான் புரியும்.


கடந்த பதிவில் ஒரு நண்பர் (பின்னூட்டத்தில்) கோவில்களில் பிச்சைக்காரர்கள் பெருத்ததற்கான காரணத்தை மிகச் சரியாக சொல்லி இருந்தார். என்னுடைய கருத்தும் அதுதான். அதேசமயம் அந்த பதிவும், பின்னூட்டமும் பிச்சைகாரர்களுடனான எனது அனுபவத்தை ஞாபகப்படுத்தியது.

கடலூரில் எனக்கு கடை பாடலீஸ்வரர் கோவில் தெருவிலேயே இருக்கிறது. எனவே பிச்சைகாரர்களுக்கு பஞ்சமில்லை. என்னதான் (ஒரு காலத்தில்) இதை தர்மமாக நினைத்து பிச்சை போட்டாலும், சில சமயம் எண்ணிக்கை அதிகமாகும் போது வெறுப்பு வந்துவிடும்.

மனமுவந்து பிச்சை போட்ட நிலை மாறி பின்னர் வேண்ட வெறுப்பாக போடும் சூழ்நிலையும் வந்தது. இதற்கு பல காரணத்தை சொல்லலாம். பிச்சைக்காரர்கள், அலிகள், ஆடி மாத கோவில் வசூல், அப்புறம் உண்டியல் ஏந்தும் சில கம்யுனிஸ்ட்டுகள் என வசூல் பல வகைகளில் இருந்ததால் ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து இதை நான் நிறுத்திவிட்டேன். இந்த தலைவலி கடை வியாபாரிகளுக்கு மட்டும்தான் புரியும்.

இருந்தாலும் வியாபாரிகள் கொஞ்சம் அனுசரித்து போகவேண்டுமல்லவா? எனவே சில சமயம் விருப்பமில்லாமலும் கொடுக்கவேண்டி இருக்கும். கடையில் வாடிக்கையாளர்கள் இருக்கும் போது பிச்சைக்காரர்கள் வந்தால் அந்த நேரத்தில் இல்லை என்று சொல்லமுடியாது. இமேஜ் பாதிக்கும்.

ஒரு சமயம் நான் `இல்லை` என்று சொல்லி ஒரு பிச்சைக்காரரை திருப்பி அனுப்ப, அந்த நேரம் அங்கே இருந்த வாடிக்கையாளர் ஒருவர் அவரை அழைத்து தர்மம் போட்டார். இது எனக்கு ஒரு வகையில் அவமானம். ஒருவேளை அந்த வாடிக்கையாளர் பிச்சைக்காரரை அன்று அப்போதுதான் பார்த்திருப்பார். எனவே புண்ணியம் செய்யவேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படியா? அவர் அன்று எனக்கு எத்தனையாவது ஆளோ? இதையெல்லாம் அந்த வாடிக்கையாளருக்கு சொல்லி புரியவைக்க முடியுமா?

வியாபாரிகளுக்கும் இமேஜ் முக்கியம். என்னைப்பற்றிய தப்பான அபிப்ராயத்திற்கு, அதாவது நான் மனித நேயம் இல்லாதவன் என்ற எண்ணம் எனது வாடிக்கையாளர்களில் சிலருக்கு வந்தாலும் அவர்களுடைய வியாபாரம் போய்விடும். யாரவது சிலருக்கு புரியவைத்தாலும், தினசரி பலவிதமான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலையில் தினசரி ஒருவருக்கு தன்னிலை விளக்கமா கொடுக்கமுடியும்? எனவே நாலு பேர் மத்தியில் வேறு வழியில்லாமல் என்னுடைய கருத்துக்கு நேர் எதிராக பிச்சை போட வேண்டி இருக்கும்.

அன்னா ஹசாரே விஷயத்திலும் பல பேர் இதுபோன்ற நிர்பந்தத்தில்தான் சிக்கி இருகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு, பாராளுமன்ற நடைமுறைகளை உதாசீனப்படுத்தும் அன்னாவின் தீவிரவாத போக்கில் உடன்பாடு இருக்காது. ஆனால் அவரை எதிர்த்தால், காங்கிரசை ஆதரிப்பதாகவும், ஊழலை எதிர்ப்பதில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகவேண்டி இருக்கும். எனவே இந்த அரசியல் கட்சிகளும் அன்னாவை ஆதரிக்க வேண்டியிருக்கும்; குறைந்தபட்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கும்.

மக்களை பொறுத்தவரையில் இது ஒரு ஊழலுக்கு எதிராரான போராட்டம் என்ற உண்மையான அக்கறையோடும் சிலர் ஆதரிக்கலாம். வேறு சிலர் இது ஒரு ஜாலி அவுட்டிங் எனவும் போராட கிளம்பியிருக்கலாம்.

பிஜேபியோ ஊழல் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து காங்கிரசை எதிர்க்க முடியாது. ஏனென்றால் அதன் ஜாதகமும் அப்படி. அதேபோல் காங்கிரசை பிடிக்காத பலர், அதனுடன் போராடி சலித்துப்போன சிலர் என பல பேர் காங்கிரஸ் மீது வெறுப்பில் இருகிறார்கள். எனவே காங்கிரசுக்கு தலைவலி கொடுக்க அன்னா தலையெடுத்ததும், இவர்களெல்லாம் அவரை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் கலைஞர் ஆட்சி மீது உருவாகி இருந்த வெறுப்பு எப்படி அம்மா ஆதரவு அலையாக மாறியதோ அதே நிலைமைதான் டெல்லியிலும். ஜெயலலிதா அரசியல் கட்சி என்ற கட்டமைப்போடு இருந்ததால் அவர் ஜெயித்தார். ஆனால் அண்னா...?  பார்ப்போம்.

அதேசமயம், அன்னா மீதான குற்றச்சாட்டுகளை நான் நம்பவில்லை. லாஜிக்படி பார்த்தால், ஒருவன் திருடனாக இருந்தால், மற்றவர்கள் திருடுவதை பார்த்தாலும் சத்தம் போடமாட்டான். சத்தம் போட்டு கூட்டம் கூடினால் நாமும் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் அவனுக்கும் இருக்கும். எனவே அன்னா மீதான குற்றச்சாட்டுகள் மிகச் சாதாரணமான ஒன்றாகத்தான் இருக்கும். அல்லது unintentional ஆக நடந்து இருக்கும்.

ஆனால் ஹசாரேவை எனக்கு பிடிக்காமல் போனதன் காரணம், அவருடைய சாத்தியமில்லாத கோரிக்கைகள்தான். போராட்டம், மிரட்டல், பிளாக்மெயில் போன்றவை நல்ல நோக்கங்களை நிறைவேற்றக்கூட சில சமயம் பயன்படுத்தலாம். எனவே ஆரம்பத்தில் அன்னா போன்றோரின் போராட்டம் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் லோக்பால் மசோதாவை சாத்தியமாக்கும் என்பதால் இது தேவைதான் என்று நானும் நினைத்தேன். ஆனால் அதற்காக நான் பிடித்த முயலுக்கு மூனுகால்தான் என்று கொஞ்சம் கூட இறங்கி வராமல் பிடிவாதம் பிடிப்பதை பார்க்கும் போதுதான், இவர் யதார்த்தத்தை உணராத மனிதர் என்பது தெரிகிறது.

இனி இந்த பிரச்சினையை சில கேள்விகளாக பிரித்துப் பார்ப்போம்.

1 ) இந்த லோக்பால் தேவையா?

வரட்டும். நல்லதுதான். வலையை நாலாபக்கமும் போட்டுவைத்தால், ஊழல்வாதிகள் ஏதாவது ஒன்றில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும்.

2 ) காங்கிரஸ் கொண்டு வந்திருக்கும் இந்த லோக்பால் மசோதா பலவீனமானது.

உண்மைதான். வேறு எப்படி இருக்கும்? அன்னாவின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், ஓரளவு பலமான மசோதாவை காங்கிரசால் தற்போது கொண்டுவரவும் முடியாது.

வியாபாரத்தில் ஒரு பொருளை நீங்கள் 100 ரூபாய்க்கு விற்கவேண்டும் என்று முடிவு செய்தால், அதன் விலையை 200 ஆக நிர்ணயிக்க வேண்டும். அதுதான் இன்றைய வியாபார தந்திரம். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் விலை கிடைக்கும். அரசியலிலும் அதே நிலைதான். எனவே காங்கிரசும் அந்த தியரியின்படி கொஞ்சம் பலவீனமான சட்டத்தை தாக்கல் செய்திருக்கிறது. இந்த சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது, காங்கிரசின் கூட்டணிக் கட்சிகள், பிஜேபி மற்றும் பல உதிரி கட்சிகள் எல்லாம் அவர்கள் சார்பாக சில சீர்திருத்தங்களை முன் வைப்பார்கள்.

`நாங்கள் முழுமையாக ஆராய்ந்து இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். எனவே உங்கள் கோரிக்கையை ஏற்கமுடியாது` என்றெல்லாம் சொல்ல முடியாது. அதுவும் மைனாரிட்டி காங்கிரஸ் அரசு நிச்சயம் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் மற்ற கட்சிகள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களை சந்திக்கும். எனவே எதிர்க்கட்சிகளும் ஜெயித்ததாக காட்டிக்கொள்ள அவர்களுக்காகவும் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தில் இப்படி அனைவரையும் வெற்றி பெற வைத்தால்தான் பல சட்டங்களை நிறைவேற்ற முடியும். 

அதேபோல் இந்த அன்னா டீமுடனான பேச்சு வார்த்தையிலும் சில விஷயங்களை விட்டுக் கொடுக்கவேண்டி இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எந்த ஒரு அரசும் அதற்கு தகுந்தாற்போல் திட்டமிடும்.

3 ) பிரதமரையும், மேல்மட்ட நீதிபதிகளையும் இந்த மசோதாவில் கொண்டுவர மறுப்பது ஏன்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும்போது அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

பத்திரிக்கைகளை தொடர்ந்து படியுங்கள். பல துறைகளின் செயல்பாடுகளையும் கவனியுங்கள். பலருக்கு கொம்பு முளைத்திருப்பது தெரியவரும். அவற்றை எல்லாம் விலாவரியாக பக்கம் பக்கமாக எழுத முடியாது. சூழ்நிலைகள் மற்றும் அந்தத் துறைக்கான நிர்பந்தங்களின் அடிப்படையில் சிலருக்கு சில விலக்குகள் தரவேண்டி இருக்கும்.    

4 ) இது இரண்டாவது சுதந்திரபோராம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தை இதைவிட மோசமாக யாராலும் கேவலப்படுத்த முடியாது. அன்று விடுதலை போராட்டத்திற்கு கிளம்பியவர்கள் `நான் வராவிட்டால் அடுத்து பிள்ளையை அனுப்பிவை` என்று சொல்லிவிட்டு போயிருப்பார்கள். அந்த அளவுக்கு உயிருக்கு உத்தரவாதமில்லாத போராட்டம் அது. ஆனால் இப்போதைய போராட்டத்தில் லத்திசார்ஜுக்கு மேல் போக வாய்ப்பில்லை.

அதுசரி, யாரிடம் நாம் அடிமையாக இருக்கிறோம் சுதந்திரப் போர் நடத்துவதற்கு? காங்கிரசிடமா? நமது பிரதமர் ஊழல்வாதியோ அல்லது கையாலாகாதவரோ,ஆனால் அவர் நம் நாட்டின் அடிப்படை ஜனநாயகத்தை மீறியா பதவியில் இருக்கிறார்? அவரை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் நினைத்தால் அது என்ன முடியாத ஒன்றா? இந்தியாவில் ஊழல் எந்த அளவு ஊறிபோயிருக்கிறதோ அதைவிட பலமாக ஜனநாயகம் வேரூன்றி விட்டது. மோசடிகள் மூலம் இங்கே யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது. அதுவும் மத்திய அரசை பொறுத்தவரையில் கடுகளவும் வாய்ப்பு இல்லை.

ஒருவேளை காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று இந்த அன்னாவும் அவர் பின்னால் ஓடும் கூட்டமும் நினைத்தால், அதற்காக ரத்தம் சிந்தவோ அல்லது காந்தியை போல் நீண்ட கால போராட்டமோ நடத்த வேண்டியதில்லை. இன்னும் 3 வருடம் பொறுத்தால் போதும், தேர்தல் வந்துவிடும். அந்த தேர்தலில் பங்கு கொண்டு காங்கிரசுக்கு எதிராக பலமான பிரச்சாரத்தை செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் `மக்கள் எங்கள் பக்கம்` என்ற இவர்களின் வண்டவாளம் அப்போது தண்டவாளம் ஏறிவிடும்.

அன்னா ஹசாரேவின் பேச்சை டிவியில் கேட்டிருக்கிறேன். கடைசியாக திஹார் ஜெயிலிருந்து அவர் பேசி வெளியான வீடியோவையும் பார்த்தேன். ஒரு அரசியல் தலைவருக்குண்டான தகுதியோ அல்லது தனது நோக்கத்தை தெளிவாக எடுத்துவைக்கும் வாதத் திறமையோ அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதரின் பேச்சாக இல்லாமல், ஒரு வெகுளித்தனமான மனிதரின் பேச்சாகத்தான் இருக்கிறது.


இவர் பிரபலமானதற்கு இரண்டே காரணம்தான். ஓன்று, ஒரு படத்தில் வடிவேலு கடவுளை காட்டுகிறேன் என்று அழைத்துப் போய், `எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்`ன்னு பிட்டு போடுவார். தன் மனைவி பத்தினிதான் என்பதை நிருபிக்க மக்களும் வேறு வழியில்லாமல் கடவுள் தெரிவதாக சொல்வார்கள்.  அதேபோல் `ஊழலை எதிர்ப்பவர்கள் அன்னாவை ஆதரிக்கிறார்கள்` என்ற ஒரு பிட்டை சிலர் (எலக்ட்ரானிக் மீடியா) போட்டுவிட்டார்கள். எனவே மக்களுக்கும் வேறு வழி இல்லை. அவரை ஆதரிக்காவிட்டால் நம்மை தேசவிரோதி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

இரண்டு, தற்போது வெளிப்பட்டிருக்கும் பல்வேறு ஊழல்களால் மக்களுக்கு காங்கிரஸ் மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம் அதற்கு மாற்றாக எதுவும் தெரியாததால், அன்னா ஹசாரே எனும் சோளக்காட்டு பொம்மையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இதுதான் நிஜம்.


19 comments:

ஆர்வா said...

அருமையான வாதக்கருத்துக்கள்...

சிவானந்தம் said...

@ கவிதைக்காதலன்

```அருமையான வாதக்கருத்துக்கள்...```

நன்றி நண்பரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணா ஹஜாரே பத்தி நான் படித்த கட்டுரைகளில் மிக அருமையான கட்டுரை. இதை என் பஸ்ஸில் பகிர்ந்து கொள்கிறேன் அய்யா.

சிவானந்தம் said...

@ அருள்

வாங்க அருள். நம்ம சிந்தனை இந்த விஷயத்துல ஒரே அலைவரிசைல இருக்கு.

சிவானந்தம் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

////அண்ணா ஹஜாரே பத்தி நான் படித்த கட்டுரைகளில் மிக அருமையான கட்டுரை. இதை என் பஸ்ஸில் பகிர்ந்து கொள்கிறேன் அய்யா.////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்களின் ஆதரவுக்கும் நன்றி.

திட்டக்கூடிய அளவுக்கு அண்ணா ஹஜாரே மோசமானவராகவும் இல்லை (அதிகப்பட்சம் அவர் விளம்பரபிரியராக இருக்கலாம்) , அதேசமயம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் அளவுக்கு அவர் பெரிய சிந்தனாவாதியோ, தலைவரோ இல்லை. ஆனால் அதை சொல்லும் நேரம் இது இல்லை என்பதால் பலர் மெளனமாக இருகிறார்கள்.

செல்வா said...

அன்னா ஹாசாரே பற்றி தெளிவான நடு நிலையான பதிவு. மிக்க நன்றிங்க :)

எனக்கு இந்தப் பதிவு சிறந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்..
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

settaikkaran said...

நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்து எழுதப்பட்ட சிறப்பான இடுகை. அருமை!

சிவானந்தம் said...

@ செல்வா

////அன்னா ஹாசாரே பற்றி தெளிவான நடு நிலையான பதிவு. மிக்க நன்றிங்க :)////

வாங்க செல்வா. உங்க கருத்துக்கு நன்றி!

///எனக்கு இந்தப் பதிவு சிறந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.///

என்னது பயனுள்ளதாக இருந்ததா? ஏதோ ஒரு ப்லோவுல அந்த வார்த்தையை போட்டுட்டேன். அதுக்காக கிண்டலா?

பயனுள்ள பதிவு கொடுக்கிறவர் வந்தேமாதரம் சசிகுமார்தான். அவருடைய தளத்துல மட்டும்தான் அந்த வார்த்தையை யூஸ் பண்ணனும்.

சிவானந்தம் said...

@ரத்னவேல்

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்..

வணக்கம் ரத்னவேல் சார். உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

கடைக்கு வெள்ளை அடிச்சிட்ட மாதிரி இருக்குது!வாழ்த்துக்கள்.

சார்வாகன் said...

அருமையான் நடுநிலையான அலசல்,
ஊழல் என்பதை எவ்வளவு கடுமையான் சட்டத்தினாலும் ஒழிக்க‌ முடியாது.ஒவ்வொருவருமே நியாயமாக் நடப்பேன் என்ற நிலை வந்தால் மட்டுமே ஊழலற்ற சமுதாயம் வரலாம்.ஒரு பதவியில் உள்ள சக்தி வாய்ந்த மனிதர் மீது புகார் கொடுத்துவிட்டு பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று யோசித்தாலே இச்சடங்களின் பலன் புரிந்து விடும்.ஏதோ ஆளும்,எதிர்க் கட்சி சண்டைகளில் கொஞ்சம் ஊழல்கள் பற்றி அறிய முடிகிறது."அன்னா " எல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அவரை ஊடகங்கள் காட்டுவதை நிறுத்தி விட்டால் எல்லாரும் மறந்து விடுவார்கள்.
நன்றி

சிவானந்தம் said...

@ சேட்டைக்காரன்

///நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்து எழுதப்பட்ட சிறப்பான இடுகை. அருமை!///

வாங்க சேட்டைக்காரரே! உங்க பதிவை படிச்ச பிறகுதான் எனக்கு இந்த பதிவு போடணும்னு தோணுச்சி. சேட்டைன்னு பேரு வச்சிக்குனு, நாகேஷ் படத்தை போட்டுகுனு இப்படி ஒரு சீரியசான பதிவு உங்ககிட்டே இருந்து வரும்னு நான் எதிர்பார்க்கல. உங்களுடைய பதிவும் மிக அருமை.

சிவானந்தம் said...

@ ராஜ நடராஜன்

///கடைக்கு வெள்ளை அடிச்சிட்ட மாதிரி இருக்குது!வாழ்த்துக்கள்.///

வாங்க நடராஜன் சார். நாம அடிக்கிற வெள்ளை எல்லாம் பிளாக்கர் தர்றதுதான்.

சிவானந்தம் said...

@ ஆற்றல் அரசு

///அருமையான் நடுநிலையான அலசல்///

நன்றி நண்பரே!

/// ஊழல் என்பதை எவ்வளவு கடுமையான் சட்டத்தினாலும் ஒழிக்க‌ முடியாது.//

கட்டுப்படுத்தலாம். நீங்கள் சொன்னதுபோல் மக்களிடமும் அதற்கான ஒத்துழைப்பு வேணும்.

///"அன்னா " எல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அவரை ஊடகங்கள் காட்டுவதை நிறுத்தி விட்டால் எல்லாரும் மறந்து விடுவார்கள்.///

இந்தியாவில் ஊடங்கங்களின் பலம் அந்தளுவுக்கு வலுவாக இருக்கிறது. தரமான படம் இல்லைஎன்றால் சுமாரான படம் கூட பிச்சிக்கிட்டு ஓடுமே. அதுபோல்தான் இதுவும். ஒரு தரமான தலைவர் நமக்கு இல்லாததால் பத்திரிக்கைகள் இவரை தூக்கிப் பிடிக்கின்றன.

KOMATHI JOBS said...

Nice, Interesting Post!

வெட்டிப்பேச்சு said...

//அதுசரி, யாரிடம் நாம் அடிமையாக இருக்கிறோம் சுதந்திரப் போர் நடத்துவதற்கு? காங்கிரசிடமா? நமது பிரதமர் ஊழல்வாதியோ அல்லது கையாலாகாதவரோ,ஆனால் அவர் நம் நாட்டின் அடிப்படை ஜனநாயகத்தை மீறியா பதவியில் இருக்கிறார்? //

வாக்களித்தபின் வாய்பேசக் கூடாது என்பது அடிமைத்தனம் இல்லையா..?

எனினும் பதிவு நன்றாயிருந்தது.

சிவானந்தம் said...

@ வெட்டிப்பேச்சு

///வாக்களித்தபின் வாய்பேசக் கூடாது என்பது அடிமைத்தனம் இல்லையா..?///


இங்கே பேச்சுரிமை யாருக்கில்லை? உங்களுக்கா, பத்திரிக்கைகளுக்கா அல்லது எதிர்கட்சிகளுக்கா? தெளிவாக சொல்லுங்கள்.

என்னதான் ஜனநாயகமாக இருந்தாலும் நாம் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுத்து விட்டோம் என்ற காரணத்திற்காக ஐந்தாண்டுகாலம் அதை ஜீரணிக்க வேண்டியதில்லை. அரசு தவறான பாதையில் போவதாக நினைத்தால் போரரட்டங்கள் மூலம் அதை தூக்கி எறியலாம். ஆனால் இப்போதைய போராட்டம் அப்படிப்பட்டதல்ல. ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்றாலும், அதற்காக ஜனநாயக, பாராளுமன்ற நடைமுறைகளை மதிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மிரட்டல் பாணியில் செயல்படும் முறைதான் அவரை விமர்சிக்க வைக்கிறது.


என்னுடைய கருத்து என்னவென்றால், தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.

///எனினும் பதிவு நன்றாயிருந்தது.///

நன்றி நண்பரே!

வெட்டிப்பேச்சு said...

வாய் பேசக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொண்டீர்.?

நமது கருத்துக்களுக்கு வரவேற்பில்லையே..! தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்யும் செயலை கேள்வி கேட்கக் கூடாதென்கின்றனரே..! சட்டமாக்குவது அவரது பொறுப்பு என்பதை மறுக்கவில்லை.. ஆனால் நாட்டிற்கு தற்போதைய தேவையான சட்டத்தை இயற்றச் சொல்ல நமக்கு உரிமையில்லை என்கின்றனரே!..உண்மையைச் சொல்லுங்கள், ஒரு சாதாரணமானவனிலிருந்து மேல்தட்டுவரை ஸ்பெக்ட்ரம் நிகழ்வு பாதிக்காதா? இவர்களை யார் கேள்வி கேட்பது? ஊழலை செய்தது நிரூபனமானால் 4 மாதங்கள் தண்டனையாம் ஆனால் புகார் அளித்தவர் நிரூபிக்கத்தவறினால் 4 ஆண்டுகள் அவருக்கு தண்டனையாம்..? இது என்னய்யா நியாயம்.?

ஆட்சியைத் தூக்கியெறிய இந்தப் போராட்டமில்லை. இந்த ஆட்சி போனாலும் வரும் ஆட்சியிலும் இந்தச் சட்டம் நிறைவேற இதை விட வலிமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கலாம். ஏனெனில் இதைப் பொறுத்தவரை எல்லா அரசியல் வாதிகளும் மாட்டுத் தரக்ரைப்போல துண்டுக்கடியில் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது வெளிவந்திருக்கும் ஊழல் செய்திகளும் , கருப்புப் பண நிகழ்வுகளுமே போராட்டத்தினை நிர்ணயித்தது. சுயம்பு போல தானே எழும்பியதுதான் இந்த நிகழ்வு. போதும் போதும் என மக்கள் நினைத்ததால் இந்த விளைவு. போராட்டக் காரர்கள் யாரும் அரசியலை விரும்பவில்லை ஆனால் கட்சிக்காரர்கள் இதிலும் அரசியல் லாபம் பார்க்க விழைகின்றனர்.

இது கொடுமை..ஊழல் பணம் ஒவ்வொருவரது உழைப்பல்லவா? எத்துனை காலம் தான் பொறுப்பர்.?

எனினும். நன்றி அண்பரே..

Post a Comment