சமீபத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காவலர்களால் தாக்கப்பட்டார். வழக்கம்போல் இங்கே தாக்கப்பட்டவர் அப்பாவி தாக்கியவர்கள் குற்றவாளி என்ற பொதுமனப்பான்மை வெளிப்படுகிறது. ஆனால் நான் எப்போதும் வித்தியாசமானவன். தொடர்ந்து செய்திகளை கவனித்துவருவதால் பல விஷயங்களில் எனக்கு மாற்று பார்வை உண்டு. டேட்டா அனலைஸ்ட் என்று சொல்வார்களே அதுபோல் நான் நியூஸ் அனலைஸ்ட் ஆகிவிட்டேன் என எனக்கு ஒரு நம்பிக்கை.
தற்போது வரும் செய்திகளை மேம்போக்காக பார்த்தால் போலீசார் குற்றவாளி என முடிவு செய்துவிடலாம். ஆனால் நாம் கொஞ்சம் எதார்த்தமாக பார்ப்போம்.
இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி பொதுவாக போலீசாரின் மரியாதை பெருமளவு குறைந்திருக்கிறது. அதிலும் வழக்கறிஞ்சர்கள் போலீசாரை சுத்தமாக மதிப்பதில்லை என்பதுதான்.
அந்த இளைஞனின் பேட்டியையும் பார்த்தேன். வருத்தமாக இருந்தது. அதேசமயம் அங்கங்கே சுருதி இல்லாததும் தெரிந்தது. அதேசமயம் இவ்வளவு அப்பாவியான, பலவீனமானவர்களை போலீசார் இப்படி தாக்கமாட்டார்கள். இங்கே உண்மை இப்படியும் அப்படியுமாக இருக்கிறது.
இவர் பாதி உண்மையை சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் மொபைல் கேமராவை ஆண் செய்தபோதே இந்த பையன் கொஞ்சம் விவரமானவன் என தெரிகிறது. ஆனால் நான் ரொம்ப அப்பாவி என முகத்தையும் நம்பும் அளவுக்கு வைத்துக்கொண்டு பேட்டி கொடுத்திருக்கிறான். இங்கே யாரை நம்புவது?
கடந்த வருடம் ஒரு சம்பவம். ஒரு இளம் பெண் காரில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தார். போலீசார் தடுத்து அபராதம் விதிக்க, அவர் தனது அம்மாவுக்கு போன் செய்து வரவழைத்தார்.
அவர் ஹைகோர்ட்டில் பெரிய்ய வக்கீலாம். வந்தவர் போலீசாரை தாறுமாறாக கெட்ட வார்த்தைகளில் திட்டினார். `எப்படி ஒரு வழக்கறிஞ்சரின் காரை தடுக்கலாம்? எல்லோரையும் ஏன் பிடிக்கவில்லை?` என அவர் எகிறியது இன்னும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
நாட்டின் எல்லை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அனைவரையும் சோதிப்பது அவசியம். ஆனால் உள்நாட்டில் சோதனைகள் இப்படி குத்துமதிப்பாகத்தான் இருக்கும். சில இடங்களில் பணக்காரர் தப்பித்துவிடுவார், சில இடங்களில் ஏழைகள். ஆனால் `அவனை ஏன் பிடிக்கல, இவனை ஏன் கேள்வி கேக்கல?` என்று வாதம் செய்யும் அற்பமான அறிவாளிகளை என்ன செய்வது? அதுவும் வழக்கறிஞர்கள் என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற இறுமாப்பு இவர்களுக்கு நிறையவே வந்துவிட்டது.
நாம் கவனித்தது இந்த சம்பவத்தை மட்டும். போலீசாரிடம் கேட்டால் இன்னும் பல கதைகள் கிடைக்கும். அதுவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்னும் மோசம்.
இங்கே போலீசார் சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். இருந்தாலும் அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்துவது என்பது வேறு, பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துவது என்பது வேறு. முன்னது நிச்சயம் செய்யவேண்டிய ஓன்று. இரண்டாவது தவிர்க்கப் படவேண்டிய ஓன்று.
ஒரு அனுபவம். ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். பல விஷயங்களை பேசும்போது முன்னேறிய மனிதர்கள் பற்றிய விவாதம் வந்தது. அந்த வீட்டு பெண்ணின் ஒரு உறவினர் முன்னேறிவிட்டார். `திறமைசாலிகள் எப்படியும் முன்னே வந்துவிடுகிறார்கள். பலர் வெறும் வேலை செய்வதிலேயே வாழ்க்கையை தொலைத்துவிடுகிறாரகள்` என பேசினார்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் முதன்மையானவர் சட்டென்று கிளம்பி வெளியே சென்றுவிட்டார். அவர் இன்னும் சில படிகள் கூட மேலே ஏறவில்லை. எனவே அவருக்கு கோவம். விருந்தினர் மத்தியில் தன்னை குறை சொல்கிறாள் என அவருக்கு வருத்தம். இது வருத்தமாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. கோபமாக மாறினால் என்னவாக ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.
இதுதான் எதார்த்தம். என்னதான் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டும் விதம் நாகரிகமாக இருக்கவேண்டும். அதுவும் பொதுவெளியில் போலீசாரை அவமானப்படுத்தினால் அது இப்படித்தான் போய் முடியும்.
நிகழ்கால வழக்கறிஞர்கள் செய்யும் அடாவடித்தனத்தை பார்த்து, எதிர்கால வழக்கறிஞர்களும் துணிந்துவிட்டார்கள். அதிகாரவர்க்கம் அத்துமீறும் போது அதை துணிச்சலுடன் எதிர்க்க வழக்கறிஞர்களுக்கு துணிச்சலும் ஆவேசமும் தேவைதான். ஆனால் அது அகங்காரம் ஆணவம் என்ற அளவுக்கு இவர்களுக்கு போய்விட்டதாக எனக்கு தெரிகிறது.
போலீசார் வழக்கு பதிவு செய்யலாமே என பலர் உபதேசம் செய்வதை நான் கவனிக்கிறேன். இங்கே நம்மைவிட போலீசாருக்கு நன்றாகவே தெரியும், இந்திய நீதிமன்றங்கள் எதற்கும் லாயக்கில்லாத ஓன்று. எனவே இங்கே வழக்கு போடுவதால் எந்த பயனும் இல்லை.
இங்கே துரதிருஷ்டம் என்னவென்றால், போலீசார் தங்கள் வீரத்தை பலமானவர்கள் மீது காட்டியிருக்க வேண்டும். அதாவது அந்த வழக்கறிஞர் பெண்மணியின் பேச்சில் ஆணவம் தெரிந்தது, அங்கே தூக்கிப்போட்டு மிதித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு அதிகப்பிரசங்கி அப்பாவி இளைஞனிடம் காட்டியிருப்பதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஓன்று.