என்னய்யா தலைப்பு இது என்று கேள்வி கேட்காதீர்கள். இங்கே இந்த இரண்டு பேர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் அல்லது காவல்துறை அவர்களை அணுகும் விதத்தில் ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது. அதற்காகத்தான் இந்த தலைப்பு.
முதலில் சவுக்கு சங்கர். இவர் கடந்த வருடம் ஐபிஸ் அருண் அவர்களை பற்றி, அவர் பெண் காவலர்களை தவறாக பயன்படுத்துகிறார் என ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அந்த வீடியோ எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மீது வழக்கு தேவை என்பதை நானும் உணர்ந்தேன். அவர்மீது உடனடியாக வழக்கும் பதியப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் போடப்பட்ட விதம் அயோக்கியத்தனம் என்ற அளவுக்கு இருந்தது.
கஞ்சா வழக்கு போட்டார்கள். முக்கியமாக சங்கர் பெண் காவலர்களை இழிவுபடுத்தியதில், இந்த பெண் காவலர்களுக்கு சூடு, சுரணை, மானம், ரோஷம் என எல்லாம் ஒரே நேரத்தில் பொங்கியது. வழக்கு கொடுத்தார்கள். ஆனால் எல்லா பெண் காவலர்களுக்கு ஒரே நேரத்தில் பொங்கவில்லை என்பதுதான் இங்கே முரண்பாடு.
ஒருவருக்கு திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு ஒரு ஊரில் பொங்கியது என்றால், இன்னொருவருக்கு செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு வேறு ஒரு ஊரில். அடுத்து புதன், வியாழன் என வரிசையாக இந்த பெண் காவலர்கள் வேறு வேறு ஊரில் புகார் கொடுக்க, பல வழக்குகள் சங்கர் மீது பாய்ந்தது. இது வரை எல்லாம் சரி.
ஆனால் இந்த புகார்கள் காவல்துறைக்கு போய், அது நீதிமன்றத்தில் வழக்காக பதிவாகும்போது, அங்கே நீதிபதி, `இதே புகார் வேறு ஒரு இடத்தில பதிவாகிவிட்டது. நீங்கள் அங்கேயே உங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்` என சொல்லி, `நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இப்படி ஒரே குற்றத்தை பல்வேறு இடங்களில் பதிந்தால் அது எங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்` என எதார்த்தத்தையும் பேசியிருக்கலாம்.
அதைத்தான் இந்த நீதிபதிகள் செய்யமாட்டார்கள். வழக்குகள் நிறைய தேங்கிக்கிடக்கின்றன என மேடைகளில் பேசுவார்கள். அதேசமயம் போலீசாரின் இந்த அயோக்யத்தனத்துக்கு மறைமுகமாக நீதிபதிகள் துணை போவார்கள். இங்கே நோக்கம் சங்கரை பல நீதிமன்றங்களுக்கு, வழக்கையே நடத்தாமல், வெறும் பெயில் வாய்தா என அலைக்கழிக்க வேண்டும். இதுதான் காவல்துறையின் நோக்கம். அதற்காகத்தான் இப்படி ஒரே குற்றத்துக்காக பல நீதிமன்றங்களில் பல வழக்குகள்.
இதுவரை நடந்தது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் ஞானசேகரன் வழக்கில் நடக்க போவதே வேறு. அதைத்தான் நாம் இங்கே வருத்தத்தோடு, வயித்தெரிச்சலோடு கவனிக்க வேண்டும்.
இங்கே இந்த ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இவன் மேலும் பல முறை இதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ தொடர்ந்து செய்திருக்கிறான்/இருப்பான். இதில் சமீபத்தில் நடந்த ஒரு கொடுமை புகாராக பதிவாகிவிட்டது.
இங்கேதான் போலீசின் அயோக்கியத்தனம் ஆரம்பிக்கும். அல்லது போலீசார் பல வழக்குகளை அரைவேக்காட்டுத்தனமாக நடத்தும் செயல் ஆரம்பிக்கும்.
சவுக்கு சங்கருக்கு ஒரு குற்றம் ஆனால் பல வழக்குகள். ஞானசேகரன் பல பாலியல் வன்கொடுமைகளை செய்திருக்கிறான். இதை நிச்சயம் பல குற்றங்களாக நியாயமாக பிரிக்கவேண்டும். ஆனால் போலீசார் வேண்டுமென்றே இவற்றை ஒரே வழக்காக கொண்டுவருவார்கள்.
அதாவது ஒரு குற்றம் நடந்துவிட்டது, புகாரும் வந்துவிட்டது. இந்த குற்றத்தை மட்டும் வழக்காக பதிவு செய்து உடனடியாக சார்ஜ்ஷீட் போடமாட்டார்கள். போட்டால், வழக்கு விரைவாக நீதிமன்றத்துக்கு வந்து, அந்த பெண் விசாரிக்கப்படுவார்.
`அப்போது ஒரு போன் வந்தது, அதில் ஒரு சார் பேசினார்` என்று அந்த பெண் சொன்னால், `யார் அந்த சார்?` என்று நீதிபதியும் கேள்வி எழுப்பவேண்டியிருக்கும். போலீசாரும் அந்த சாரையும் வேறுவழியில்லாமல் உள்ளே இழுக்க வேண்டியிருக்கும். அதை இவர்களால் செய்யமுடியாது. எனவே இவர்கள் இங்கே ஒரு உத்தியை கடைபிடிப்பார்கள். முடிந்தவரை விசாரணையையும் அதன்பின் வழக்கையும் வருடக்கணக்கில் இழுக்க, ஞானசேகரன் செய்திருக்கக்கூடிய எல்லா பாலியல் வன்கொடுமைகளையும் ஒரே வழக்குக்குள் இழுப்பார்கள்.
இங்கே இந்த சமீபத்திய குற்றத்தில் பாதிக்கப்பட்ட ஓர் பெண், காதலன் என இரு சாட்சிகள். அந்த பக்கம் ஞானசேகரன், அவனுடைய சார் மற்றும் இவனுக்கு உடந்தையாக இருந்திருக்கக்கூடிய அவனின் மனைவி மற்றும் சிலர் என 10 சாட்சிகள் இருக்கலாம். இப்போது போலீசார் என்ன செய்வார்கள் என்றால் விசாரணையை நிதானமாக ஆரம்பிப்பார்கள்.
இங்கே குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் போன் சோதிக்கப்படும். அதில் பல பெண்களின் வீடியோ இருக்கிறது என்ற தகவல் பத்திரிகையாளர்களுக்கு சொல்லப்படும் அல்லது வேண்டுமென்ற கசியவிடப்படும். 50 வீடியோக்கள் என தோராய தகவல். அடுத்து 10 நாள் ரெஸ்டுக்கு பிறகு அவரின் வீடு சோதனையிடப்படும். இங்கேயும் அவருடைய லேப்டாப்பில் பல முக்கியமான அசிங்கமான விடியோக்கள் வெளிவந்தது என்று சொல்லப்படும். இவையெல்லாம் உண்மைதான். ஆனால் இந்த தகவல் கசியவிடப்படுவதில் போலீசாருக்கு ஒரு லாபம் இருக்கிறது. அதற்காகத்தான் இந்த கசியவிடுதல். இங்கே நீங்கள் நினைத்ததையெல்லாம் போலீசார் சொல்வதால் அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
அதன்பிறகு, இதுதான் சாக்கு என்று, இவன் பல பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் எல்லோரையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என சொல்லி அந்த வீடியோவில் இருக்கும் 50 பெண்களை தேடி ஒரு பாதயாத்திரை ஆரம்பிப்பார்கள்.
இந்த பெண் தவிர்த்து இரண்டாவது வீடியோவில் இன்னொரு பெண் என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண்ணை புகார் கொடுக்க சொல்வார்கள். அந்த பெண், `ஏற்கனவே ஒரு பெண் தைரியமாக புகார் கொடுத்துவிட்டார். அந்த வழக்கை மட்டும் நடத்தி 10 வருஷம் தண்டனை வாங்கி கொடுங்கள். அது போதும்` என்று சொன்னால், போலீசார் விடமாட்டார்கள். `அப்போது அந்த பெண்ணுக்கு மட்டும்தான் நியாயம் கிடைக்கும். உனக்கு கிடைக்காது` என்று தத்துவம் பேசுவார்கள்.
இங்கே எல்லா பெண்களும் புகார் கொடுப்பதால் தண்டனை 1 வன்கொடுமைக்கு 10 வருடம் என்ற கணக்கில் 500 வருடம் என்ற தீர்ப்பு வரப்போவதில்லை. அதிகபட்சம் ஆயுள் தண்டனைதான்.
ஒருவேளை ஏதோ ஒரு பயத்தில் சமீபத்திய பெண் சாட்சி சொல்லாமல் பல்டி அடிக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை, இருந்தாலும் ஒரு எதார்த்தத்துக்கு அப்படி யோசித்தாலும் இன்னும் 2-3 பெண்களை இந்த வழக்கில் சேர்த்தாலே போதும். வழக்கு பலமாகிவிடும்.
ஆனால் போலீசார் 50 பெண்களையும் சென்று பார்த்து புகார் கொடுங்கள் என்று வற்புறுத்துவார்கள். இந்த 50 பெண்களை கண்டுபிடித்து என்ன நடந்தது என்று விசாரணையை முடிப்பதற்கே சில ஆண்டுகளை இழுத்துவிடுவார்கள். அதன்பின் குறைந்தது 20 பேரையாவது உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என உத்தரவாதம் கொடுத்து அவர்களையும் உள்ளே இழுத்துவிடுவார்கள்.
இப்போது இங்கே 1 பெண்ணுக்கே இரண்டு பக்கமும் சேர்த்து 10 சாட்சிகள் என்றால், 20 பேருக்கு மொத்தம் 200 சாட்சிகள் வரும் என்றா நினைக்கிறீர்கள். அதுவும் கிடையாது. மற்ற பெண்கள் இவனுக்கு பயந்துபோய் `பணிந்து`போயிருக்கிறார்கள். எனவே மற்ற பெண்கள் இவனது மிரட்டலுக்கு பயந்து வேறு பலரையும் போய் `பார்த்திருக்க`கூடிய வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் அவர்களும் `பெரிய` மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும். இப்படி இதில் எத்தனை சார் உள்ளே வருவாரோ தெரியாது.
அப்படி அவர்களும் வழக்கின் உள்ளே வந்தால் இங்கே இன்னும் நிறைய சிக்கல் ஆரம்பிக்கும். பாபநாசம் படம் பார்த்திருப்பீர்கள். அந்த கதை இங்கே ஆரம்பிக்கும். அந்த பெரிய மனிதர்கள், `இந்த பெண் பொய் சொல்கிறார். நான் அந்த பெண்ணை பார்த்ததே இல்லை. சொல்லப்போனால் நான் அன்று ஊரிலேயே இல்லை. ஒரு சாமியாரின் சொற்பொழிவுக்கு போயிருந்தேன், சினிமா பார்த்தேன், ஓட்டலில் சாப்பிட்டேன் என்று பக்காவாக அந்த நிகழ்ச்சிக்கான ரசீதோடு, தடுமாறாத 10 சாட்சிகளோடும் களத்தில் இறங்குவார்கள்.
இங்கேயும் 10 பெரிய மனிதர்கள், அவர்களுக்கு ஆதரவாக 100 சாட்சிகள் என கணக்கு போட்டால் இந்த கேஸ் என்னவாகும்? போலீசார் எதற்காக எல்லாரையும் உள்ளே இழுக்கிறார்கள் என்ற விவரம் இப்போது உங்களுக்கு புரியும். இங்கே 300 சாட்சிகளும் கூப்பிட்ட தேதியில் வருவார்கள் என்றா நினைக்கிறீர்கள்.
எதிர்தரப்பு சாட்சிகள் முறை வைத்து ஆளுக்கு 2 வாய்தா வாங்குவார்கள். ஒரு வாய்தா என்பது நீதிமன்றத்தில் யாராலும் புரிந்து கொள்ளமுடியாத ஓன்று. ஒரு சாட்சி இன்று பல் சுளுக்கி கொண்டதால் வரவில்லை என்று சொன்னால், 15 நாள் கழித்தும் விசாரணையை ஆரம்பிக்கலாம். அல்லது நீதிபதி போலீசாரை பார்த்து `என்னையா கேசை இழுக்கனும்னு முடிவு பண்ணிடீங்களா, அப்ப அடுத்த விசாரணை 2 மாதம் கழித்து` என்று சொல்லி போலீசாரை குஷிப்படுத்தலாம்.
இப்படி ஒரு சாட்சியே விசாரணையை 2 மாதம் இழுக்க முடியும் என்றால், போலீஸ் தரப்பின் 100-200 சாட்சிகள் சேர்ந்து இந்த வழக்கை எத்தனை வருடம் இழுக்க முடியும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.
பொள்ளாச்சி காசி விவகாரத்திலும் இதேதான் நடந்துகொண்டிருக்கும். எப்படியும் அம்புகளுக்கு தண்டனை கிடைக்கும். ஆனால் மற்ற பெரிய கைகளை காப்பாற்றியாக வேண்டும். அதற்காக முடிந்தவரை காவல்துறை விசாரணையை தாமதப்படுத்தும், அதன்பின் சார்ஜ்ஷீட் தாக்கல் செய்யும்போது, 20 பெண்கள் , அந்த பெண்களின் 20 ஆண் நண்பர்கள், இன்ன பிற சாட்சிகள் 100 பேர் என, `சாப்பாட்டில் கல் என கவுண்டமணி ஒரு செங்கல்லை தூக்கி சாப்பாட்டில் வைத்ததை போல்` இந்தாங்க 10,000 பக்க சார்ஜ்ஷீட் என நீதிபதியிடம் கொடுத்து அவரை மிரளவைக்கப் போகிறார்கள். அவரும் போலீசாரின் பரந்த உள்ளத்தை புரிந்துகொண்டு நிதானமாக வாய்த்தாக்களை கொடுத்துக்கொண்டு வழக்கை இழுக்க போகிறார்.
நாமும் வேறு வழியில்லாமல் போலீசாரின் இந்த அயோக்கியத்தனத்தை வருத்தத்தோடு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
0 comments:
Post a Comment