!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, January 23, 2025

ஒரு நல்லவரும் ஒரு கெட்டவனும்


முதலில் நல்லவரை பார்த்துவிடுவோம். இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன். சமீபத்திய ஒரு மேடை பேச்சில் நீதிபதிகளையும், அவர்களது தீர்ப்புகளையும் விமர்ச்சிப்பது தவறில்லை, தாராளமாக அதை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். இவரது மடியில் கனமில்லை. எனவே இப்படி ஒரு துணிச்சலான கருத்து. சரி ஏதோ சில நல்லவர்களாவது நீதித்துறையில் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுவோம்.

ஆனால் நம் நாட்டில் நல்லவர்கள் என ஒரு வித்தியாசமான புது வகை ரகம் உருவாகியிருக்கிறது. இவர்களின் தியரி அல்லது கொள்கை என்னவென்று பார்த்தால் அது நமக்கு மயக்கத்தை தரும். இவரும் அப்படி இருப்பாரோ என ஒரு சந்தேகம்.

சிறையில் ஒரு காவலர் இருந்தார். ஒரு முறை அவரிடம் பேசும்போது சொன்னார், `நான் யாரிடமும் காசு (லஞ்சம்) வாங்கமாட்டேன்;அவர்களாக கொடுத்தால் வாங்கிக்கொள்வேன்`என்று. அதாவது லஞ்சம் வாங்குவது தப்பு, ஆனால் அவர்களாக கொடுத்தால் அது சரி. இது அவருடைய கொள்கை.

இன்னொரு காவலர் வேறு ரகம். `இந்த பணம் செரிக்காதுங்க. அதனால நான் வீட்டுக்கு இந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகமாட்டேன். வழியிலேயே செலவு பண்ணிவிடுவேன்` என்பார். அதாவது லஞ்சப்பணம் வீட்டுக்கு போனாதான் தப்பு. இவருக்கு இப்படி ஒரு கொள்கை.

இந்த ஜி ஆர் சுவாமிநாதனும் அப்படி ஏதாவது ஒரு வித்தியாசமான கொள்கை வைத்திருக்கலாம். அதாவது அவரிடம் யாராவது போய் `அய்யா ஒரு ஜட்ஜ்மென்ட் வேனும் எவ்வளவு செலவாகும்னு சொன்னா பார்க்கலாம்` என கேட்டால், நான் யாரிடமும் கை நீட்டுவதில்லை, ஆனால் யார் யார் எவ்வளவு வாங்கறாங்கன்னு எனக்கு தெரியும். அவங்க பேரையும் அவங்களோட ரேட்டையும் சொல்றேன், போய் வாங்கிக்க` என்று வழி சொல்லும் நபராகவும் இருக்கலாம்.

அதாவது `நான் நேர்மையானவன். அதேசமயம் எனது சக நீதிபதிகளின் வருமானத்தில் நான் குறுக்கிடமாட்டேன்` என்ற உயர்ந்த கொள்கை உடையவராக இருக்கலாம். நீதித்துறையின் அமர்வுகளில் 4 க்கு 1 என்று தீர்ப்பு வந்தால், அந்த ஒரு நீதிபதியின் கருத்துக்கு ஒரு மரியாதையும் கிடையாது. அதேபோல் நீதிமன்றங்களில் யாரோ ஒரு நீதிபதி இப்படி மேடையில் பேசுவதால்/ நேர்மையாக இருப்பதால் ஒரு புண்ணியமும் இல்லை. சக நீதிபதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அவசியம் ஏற்பட்டால் அவர்களை போட்டுக்கொடுத்து நீதித்துறையை சுத்தம் செய்யவேண்டும். அதை செய்ய இங்கே யாரும் தயாரில்லை. இப்படி அவ்வப்போது மேடை வசனங்கள் மட்டும் நமக்கு கிடைக்கும்.

இதேமாதிரி வித்தியாசமான சில நேர்மையாளர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களையும் பார்ப்போம்.

ராதிகா சரத்குமார். சமீபத்தில் ஏதோ மீ டு விஷயம் ஓன்று பற்றி எரிந்தபோது `கேரளாவில், பல வருடங்களுக்கு முன், நடிகைகள் கேரவனில் உடை மாற்றுவதை பிரபல நடிகர்கள் ரகசியமாக கேமரா வைத்து படம் பிடித்து அவர்களுக்குள் பகிர்ந்து பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் சினிமாவிலும், டிவி சீரியலிலும் பிசியாக இருந்ததால் சொல்ல மறந்துவிட்டேன். இப்போதுதான் ஞாபகம் வந்தது, சொன்னேன்` என்றார். அதாவது நடந்த ஒரு அநியாயத்தை, அவருடைய சினிமா கேரியர் முடிந்தபிறகு, சொல்லிவிட்டார். இப்படி ஒரு நியாயம் இவருக்கு.

இது லேட்டஸ்ட். இந்த நேர்மையாளரின் பெயர் சங்ககிரி ராஜ்குமார். இவர்தான் பிரபாகரனும் சீமானும் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தாராம். அதை இப்போது சொல்கிறார். ஏன் இப்போது?

அண்ணன் பக்கத்து வீட்டு பெண் மீது கை வைத்தார், சரி அண்ணன் என்று பொறுத்துக்கொண்டேன். எதிர்த்த வீட்டு பெண் மீது கை வைத்தார், இப்போதும் பொறுத்துக்கொண்டேன். ஆனால் என் வீட்டிலேயே (பெரியார்) கை வைக்க ஆரம்பித்துவிட்டார். இனியும் பொறுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று ஒரு சப்பை வாதம். அயோக்கியனின் முகத்திரையை கிழிக்க நேரம் காலம் பார்க்கும் இது போன்ற கழிசடைகளை என்றுமே நம்பக்கூடாது. இவர்கள் அவர்களைவிட மோசமானவர்கள்.

இந்த ராஜ்குமாரின் சில பேட்டிகளை கவனித்தால் பல விஷயங்கள் நெருடுகிறது. அதாவது இவர் சொன்னது உண்மை. ஆனால் இவரும் சீமானை போல் ஓசி சாப்பாட்டுக்கு அலைபவராக இருப்பாரோ என ஒரு சந்தேகம். காரணம், இவர் வார்த்தைகளின்படி பார்த்தால் இவர் மக்கள் தொலைக்காட்சியில் வேலை பார்த்திருக்கிறார். இதன் அர்த்தம் இவர் ஒரு மிடில் கிளாஸ். சம்பளம் வீட்டுக்கு போனால்தான் சாப்பாடு என்ற நிலைமை. ஆனால் இந்த பேட்டிகளில் நான் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளுக்கு போனபோது அங்குள்ள இலங்கை தமிழர்கள் சீமான் மீது நல்ல மரியாதையை வைத்திருந்தார்கள் என்பதை நான் கவனித்தேன் என்றும் சொன்னார்.

இப்போது எனக்கு எழும் கேள்வி என்னவென்றால், இவர் வெளிநாடுகளுக்கு என்ன காரணத்துக்காக சென்றார் அல்லது யாருடைய காசில் சென்றார். இதற்கு பதில் இல்லை. சுற்றுலா செல்லும் அளவுக்கு வசதியானவராக தெரியவில்லை. இவர் எடுத்த சினிமாவில் வெளிநாட்டில் ஏதாவது ஒரு காட்சி எடுத்தாரா என்றும் தெரியவில்லை.

அநேகமாக `எனக்கு அண்ணன் பிரபாகரனை தெரியும்` என்று உதார் விட்டு சீமான் இலங்கை தமிழர்களின் காசுகளில் சொகுசாக குடும்பம் நடத்துவது போல், இந்த சங்ககிரி ராஜ்குமாரும் `எனக்கு சின்ன அண்ணன் சீமானை தெரியும்` என்று ஒரு காலத்தில் இந்த இலங்கை தமிழர்களிடம் உதார் விட்டிருக்கலாம். அவர்களும் இவர் சின்ன அண்ணனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர், எனவே இவருக்கும் ஒரு டிக்கட் போட்டு வெளிநாடுகளில் இவருக்கு விருந்து வைத்திருக்கலாம்.

இப்படி சீமானின் பெயரை பயன்படுத்தி இவரும் ஒரு வெளிநாட்டு பயணத்தை பார்த்துவிட்டதால், அந்த நன்றி விசுவாசத்துக்காக இவர் சீமானின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றாமல் அமைதி காத்திருக்கலாம்.

இதில் செங்கோட்டையன் எனும் புது ரகம் ஓன்று இருக்கிறது. அவர் வாயை திறந்தால் எது உண்மை என்பது தெரிந்துவிடும். ஆனால் அவரும் இந்த சின்ன அண்ணனால் ஏதாவது பயன் அடைந்திருப்பார் போலிருக்கிறது. எனவே வாயை மூடிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை உண்மையை சொல்வதற்கு நல்லநாள் பார்த்துக்கொண்டிருப்பார். என்ன ஜென்மங்களோ.      

என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவையெல்லாம் ஒரு அனுமானம்தான். ஆனால் ஒரு பொய்யை  அது அயோக்கியத்தனம் என்று தெரிந்த பிறகும் அதை வெளிப்படுத்துவதற்கு நேரம் காலம் பார்க்கும் மனிதர்கள் என்றுமே நல்லவர்களாக இருக்கமுடியாது.

இங்கே இந்த மோசடியை சீமான் திட்டமிட்டு செய்யவில்லை. அது எதிர்பாராமல் யாரோ ஒரு தம்பி ஆர்வக்கோளாறில் செய்திருக்கிறார். ஆனால் அது பரபரப்பாகி விமர்சனங்கள் வரும்போது. இது உண்மையான புகைப்படம் இல்லை;எடிட் செயப்பட்டது. நான் அண்ணனை சந்தித்தபோது புகைப்படம் எடுக்கும் சூழ்நிலை இல்லை, அல்லது அப்போது எடுக்கப்பட்ட புகைபடம் யார் கையில் இருக்கிறது என்று தெரியவில்லை` என்று ஒரு விளக்கம் அளித்திருந்தால் அது ஒரு நல்ல தலைவனுக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கே இவர் ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சிக்கிறார் என்றால், அந்த உண்மை சம்பவம் (சீமான் பிரபாகரனை சந்தித்தது) நடக்கவே இல்லை என்றுதான் அர்த்தம்.

இங்கே அந்த புகைப்படத்தை பார்த்ததும் இது போலியாக இருக்கும் என்ற உணர்வு எனக்கு அப்போதே வந்தது என்று சொன்னேன் அல்லவா. அது இப்போது உண்மையாகிவிட்டது. அதேபோல் என்னுடைய உள்ளுணர்வு  வேறு ஒன்றையும் சொல்கிறது. அது நடக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதி வைக்கிறேன்.

கயல்விழி - சீமான் எதிர்காலத்தில் பிரியக்கூடும். இந்த தகவலை கயல்விழி அவர்களே சில வருடங்களுக்கு முன் ஒரு மேடையில் ஜாடைமாடையாக அவர் அதிருப்தியில் இருப்பதை அவரை அறியாமல் சொல்லிவிட்டார்.

`மாமா நல்லவர் மாமா நல்லவர்` என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன் என்று கயல்விழி ஒரு மேடையில் சொன்னார். இதற்கு ஒரே அர்த்தம்தான் இருக்கிறது. சீமான் நல்லவர் என்று, சீமானின் அப்பாவை தவிர, சீமான் குடும்பத்தினர் யாரும் சொல்லத்தயாரில்லை. எனவே வேறு வழியில்லாமல் இப்படி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு  அவர் வாழ்ந்துவருகிறார்.

சுடுகாடு வழியாக தனியாக நடந்து போகிறவன் ` நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று கத்திகொண்டே நடந்தால்` அவன் பயந்துவிட்டான் என்று அர்த்தம். அதேதான் இங்கேயும். கயல்விழி வெறுத்துவிட்டார் என்பது அவருடைய வார்த்தைகளே சொல்கிறது. 

0 comments:

Post a Comment